புனித வார வழிபாட்டு ஒழுங்குகளும் பாடல்களும்
ஆண்டவருடைய இரவு விருந்து - புனித வியாழன்
மக்கள், பணியாளர்கள், பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் ஆகியோரின் பாடல் இநநாள்களின் கொண்டாட்டத்தில் சிறப்பிடம் பெறுகின்றது. ஏனெனில் பாடங்கள் பாடப்படும்பொழுது அவை தமக்கு உரிய சிறப்பைப் பெறுகின்றன.
எனவே அருள்நெறியாளர்கள் தங்களால் இயன்றவரையில் கொண்டாட்டங்களின் பொருள், அமைப்புமுறை பற்றியும் கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் செயல்முறை, பயனுள்ள பங்கேற்பு ஆகியன பற்றியும் அவர்களுக்கு விளக்கம் தருவது கடமை ஆகும்.
திருப்பலியில் மட்டும் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கலாம். நோயாளிகளுக்கு இந்நாளில் எந்த நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.
இந்நாளின் இயல்புக்கு ஏற்றவாறு பீடம் மலர்களால் எளிமையாக அணிசெய்யப்படலாம். நற்கருணைப் பேழை முழுவதும் வெறுமையாய் இருக்க வேண்டும். ஆனால் இன்றும் மறு நாளும் அருள்பணியாளர்களுக்கும் மக்களுக்கும் போதிய அளவு அப்பங்கள் இதே திருப்பலியில் அர்ச்சிக்கப்பட வேண்டும்.
இசைப் பெட்டியும் பிற இசைக் கருவிகளும் பாடலைத் தொடரத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம்.
முன்னுரை
இன்று புனித வாரத்தின் பெரிய வியாழனாகும் - ஆண்டவர் இயேசுவின் திருவிருந்து கொண்டாட்டமாகும். இன்று தான் இயேசு குருத்துவத்தையும் நற்கருணையையும் ஏற்படுத்திய நாளாகும். இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி 'உங்களுக்கு நான் அன்பு செய்தது போல நீங்களும் ஒருவர் மற்றவரை அன்புசெய்ய வேண்டும்' என்றும், 'இதை என் நினைவாய் செய்யுங்கள்' என்று தனது பணியின் அர்த்தத்தையும் அதை நிறைவேற்றவேண்டும் என்பதன் தார்மிககடமையையும் நினைவுறுத்துகின்றார். 'இது என் உடல், இது என் இரத்தம்' என்று தன்னை உடலாக இரத்தமாக இவ்வுலகிற்கு கொடுக்கும் நற்கருணையாக வாழ்ந்துகொண்டிருக்கும் இயேசு பலியாகவும், பலிப்பீடமாகவும், பலிப்பொருளாகவும் மாறுகின்றார். 'மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக முதன்முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து, தம் நினைவாக நாங்களும் பலி செலுத்த வேண்டுமென்று கற்பித்தார்' என்று இன்றைய வழிபாட்டின் தொடக்கவுரை எமக்கு நினைவூட்டுவதுபோல, குருவும் ஆசிரியருமாகிய இயேசுவைத் தவிர எமக்கு வாழ்வு இல்லை என்பதை உணர்ந்துகொள்வோம். நாளும் உட்கொள்ளும் நற்கருணை எமது ஆன்மிக உணவாக அமையட்டும். நற்கருணையின்றி திரு அவை இல்லை, திரு அவையின்றி நற்கருணை இல்லை என தமது திரு நிலைப் பணியினை செவ்வனே ஆற்றுகின்ற அனைத்து குருக்களுக்காகவும் இப்பலியிலே மன்றாடிக்கொள்வோம்.
வருகைப் பல்லவி : காண். கலா 6:14
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ளவேண்டும்; அவரிலேதான் நமக்கு மீட்பும் உயிரும் உயிர்ப்பும் உண்டு; அவராலே தான் நாம் இரட்சனியமும் விடுதலையும் அடைந்தோம் - 3
திருக்குழும மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் சாவுக்குத் தம்மைக் கையளிக்கும் வேளையில் நிலைத்து நிற்கும் அன்பின் புதிய பலியையும் திருவிருந்தையும் தமது திரு அவைக்கு அளித்தார்; அதனால் இப்புனிதமிக்க திரு உணவில் அடிக்கடி பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்விலிருந்து அன்பின் முழுமையையும் வாழ்வின் நிறைவையும் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.
- 'உன்னதங்களிலே' பாடப்படும்; அப்பொழுது மணிகள் ஒலிக்கும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பில் 'உன்னதங்களிலே' பாடும்வரை மணிகள் ஒலிக்காது.
முதலாம் இறைவாக்கு: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14
பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.
திருப்பாடல் : 116
திருக்கிண்ணத்தை கையிலேந்தி
இறைபுகழ் நாம் கூறுவது
கிறிஸ்துவின் திரு இரத்தத்திலே
பங்கு கொள்வதாம்
1. இறைவன் எனக்கு செய்த அனைத்து
ஈடில்லாத நன்மைகளுக்காய் - 2
நான் என்ன கைமாறு செய்திடுவேன்
2. மீட்புக்காக நன்றிகூறி
திருக்கிண்ணத்தை கையிலேந்தி
ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்
3. ஆண்டவரே நான் உமது
அடியேன் நல் ஊழியனே – 2
நீர் எனது கட்டுக்களை அவிழ்த்து விட்டீர்
4. புகழ்ச்சி நிறை பலியுமக்குப்
புண்ணியனே நான் செலுத்தி – 2
உமது பெயர் கூவி எந்தன் பொருத்தனை தருவேன்
2ம் இறைவாக்கு :-
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26 -
அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: யோவா 13: 34
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி இறைவாக்கு: யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15 - இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
- மறையுரை
- 'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படுவதில்லை.
முன்னுரை
இப்பொழுது பாதம் கழுவும் சடங்கு ஆரம்பமாகின்றது. 'இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.' இப்புனித செயல், பணிவிடை பெறவன்று, பணிவிடை புரியவே வந்தேன் என்பதன் உள் அர்த்தத்தை எண்பிக்கின்றது. குருத்துவ அருட்சாதனத்தின் அடிநாதமாகிய இச்செயல் அதன் வழிநடக்கின்ற அனைத்து குருக்களின் தார்மிக அழைத்தலை உணர்த்துகின்றது. பக்தியோடு இச்சடங்கில் பங்கேற்போம்.
பாடல்
உங்களுக்கன்பு நான் செய்தது போலவே
அன்பொருவருக்கொருவர் செய்வீர் - 2
சரணம்
1. தாம் உலகில் நின்று தந்தையிடம் செல்லும்
நேரம் வந்ததை அறிந்த இயேசு
தம்மவர்மேல் அன்புகூர்ந்திருந்த அவர்
இறுதிவரையும் அன்பு கூர்ந்தார்
2. பாஸ்கா விழாவிற்கு சீடருடன் இயேசு
பந்தி இரவில் அமர்ந்தபோது
எழுந்து சீடர்களின் பாதம் கழுவி
துணியினால் அவர் துடைத்தாரே
3. போதகர் ஆண்டவர் ஆகிய நானே
சாதனை இன்றுங்களுக்களித்தேன்
நீங்களும் ஒருவர் ஒருவர் பாதங்கள்
கழுவவேண்டுமெனப்பணித்தேன்
4. உங்களுக்கே ஒரு புதிய கட்டளை
இன்று நான் கொடுக்கிறேன் இதோ
உங்களுக்கன்பு நான் செய்தது போலவே
அன்பொருவருக்கொருவர் செய்வீர்
5. இத்தகைய அன்பு கொண்டிருந்தாலோ நீங்கள்
என் சீடரென்றெல்லோரும் அறிவர்
இவ்வாறு அன்புடன் அன்றிரவே – தம்
சீடருக்கே இயேசு பணித்தார்
6. சாகுமுன் எமக்குச் சாதகமாகவே
சோதர அன்பினையே புகட்டி
நற்கருணை மூலம் அற்புதமாய் அதை
தற்பர அன்புடன் இணைத்தாரே
நம்பிக்கையாளர் மன்றாட்டு
குரு: 'ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்று இயேசு எம்மை அவர் சீடராக மாற அழைக்கின்றார். சீடத்துவ வாழ்வின் உயிர்நாடி, நம் ஆண்டவர் இயேசுவிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுப்போம்.
1. தமது குருத்துவத்தை நினைவுகூர்ந்து கொண்டாடும் அனைத்து திருநிலைப் பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம். இயேசுவை சொந்தமாக்கிகொண்டு, அவர் பணியை சிரமேற்கொண்டு, தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து குருக்களும் இயேசுவின் அழைப்பை ஏற்று இறை மக்களுக்காகவே வாழ்ந்து, இறை அருளை இரஞ்சும் கருவிகளாக திகழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. சீடர்களுக்கு மாதிரிகாட்டி ஆசிரியரும், குருவுமாக திகழும் இறைவா, எமது நாளந்த வாழ்விலே, தாழ்ச்சி எனும் புண்ணியத்தைக் கற்றுக்கொள்ள வரமருளும். எம்மைக் கடந்துசென்ற காலங்களில் இத்திரு அவைக்காக தம்மை அர்ப்பணித்து உயிர் நீத்த அனைத்து பணியாளர்களையும் நன்றியோடு நினைக்கச் செய்தருளும். இவர்களின் விசுவாச வாழ்வு எமக்கு ஒரு சான்றாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எமது திரு அவையில் நற்கருணை மட்டில் வாஞ்சையோடும் தாகத்தோடும் தவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். ஒவ்வொரு திருப்பலியின் போதும் அருட்சாதன முறையில் உட்கொள்ளும் இயேசுவின் உடலும் இரத்தமும் எமது வாழ்வுக்கான அருமருந்தாக அமையவும், எமது நாளாந்த வாழ்வை தாங்கிக் செல்லவும், புனித வாழ்வுக்கு எம்மை அழைத்து நாளும் புதுப்பிக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இன்றைய சூழலில், மிகுந்த அச்சத்தோடும், தீராத நோவுகளோடும், முடிவில்லாத கவலையோடும் வாழும் அனைவரையும் நினைத்துக்கொள்வோம். துன்பங்கள் வாழ்வின் சுமைகளன்று, சவால்கள் அதன் எல்லைகளன்று, மாறாக இயேசுவோடு இணைந்து பயணிக்கும் அருள்கிடைக்கவும், தீமைகளை நாடிச்செல்லாத மனதை உருவாக்கி, இயேசுவின் மனநிலை கொண்டு வாழும் அருள்கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. உலகில் நடந்தேறிக்கொண்டிருக்கும் போர்கள் நிறுத்தப்படவும், ஆட்கடத்தல்கள், கொலைகள் வன்முறைகள் நிறுத்தப்படவும் மன்றாடுவோம். தனி மனித சுயநலத்தால் எமக்கு முன்பே அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகை இறைவன் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டுமென்று மன்றாடுவோம். நாளும் மாண்டுகொண்டிருக்கும் மனித மான்பு காக்கப்படவும், விரும்பித்தேடும் சுதந்திரம் நிலைநாட்டப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: அன்பின் இறைவா, நீர் நல்லவர், எமக்கு வாழ்வு கொடுப்பவர் என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். இன்றைய நாளில் நீர் எமக்கு தந்திருக்கும் இவ்வழகிய அருட்கொடைகளுக்காக நன்றி கூறுகின்றோம். இவைகள் வழியாக இத்திரு அவையை நிலைநாட்ட நாம் உழைப்போமாக. எமது தேவைகள், எமது விண்ணப்பங்கள் இவ்வுலகின் வாழ்வுக்கான அருளையும் ஆசீரையும் உம்மிடமிருந்து பெற்றுக்கொடுப்பதாக. இவற்றை எல்லாம் என்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் உம் திருமகன் இயேசுக் கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.
காணிக்கைப்பாடல்
அன்பிற்கே எம்மை அர்ப்பணித்தோம்
அனைத்தும் பகிர்ந்தே வாழுவோம் - 2
இதுவே எம் காணிக்கை - 4
1. எமது காணிக்கை உமது ஆவியால்
புனிதமாக வேண்டும்
இதனால் அகிலமே வாழ்வின் பாதையை
இன்றே காணவேண்டும்
எங்கள் உழைப்பின் பலன்களும்
நிலத்தின் கொடைகளும்
உமக்கு புகழ்தர உலகம் உயிர்பெற
எம்மையே பலி தந்தோம்
2. அன்பு புரட்சியே வாழ்வின் மலர்ச்சியாய்
மாற்றும் வழியில் இணைந்தோம்
நீதி அமைதியும் மனித நேயமும்
பலியின் பொருளாய் ஏற்றோம்
இந்த ஆழ்ந்த உணர்வினில் நாமும் இணைந்திட
தாழ்வு நீங்கிட வாழ்வு ஓங்கிட
எம்மையே பலி தந்தோம்
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.
தொடக்கவுரை: கிறிஸ்துவின் பலியும் அருளடையாளமும்
தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை 1
திருவிருந்து பாடல்
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்
அந்த இயேசுவை உணவாய் உண்போம்
இந்த பாரினில் அவராய் வாழ்வோம் .
1.இருப்பதை பகிர்வதில்
பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை வாழ்வென
ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே .
வீதியில் வாடும் நேரிய மனங்கள்
நீதியில் நிலைத்திடுமே
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம்
நாளைய உலகின் விடியலாகவே !
2.பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே
வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே
இதை உணர்வோம் நம்மை பகிர்வோம்
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !
திருவிருந்துப் பல்லவி 1 கொரி 11:24-25
இவ்வுடல் உங்களுக்காகக் கையளிக்கப்படும்; புதிய உடன்படிக்கையின் இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படுகிறது. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்யுங்கள், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிவீராக் உம் திருமகனின் இரவு விருந்தினால் இவ்வுலகில் ஊட்டம் பெறும் நாங்கள் என்றென்றும் நிறைவு அடையத் தகுதி பெறுவோமாக. எங்கள்.
தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம்
- திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொன்ன பிறகு அருள்பணியாளர் பீடத்துக்கு முன் நின்று தூபக் கலத்தில் சாம்பிராணியிட்டுப் புனிதப்படுத்தி, முழங்காலிட்டு, தூய்மைமிகு நற்கருணைக்கு மும்முறை தூபம் காட்டுகின்றார்.
- எரியும் திரிகளுடனும் தூபத்துடனும் தூய்மைமிகு நற்கருனை கொண்டு செல்லப்படும்.
- கோவிலின் ஒரு பகுதியில் இதற்கென்று தயார் செய்யப்பட்டுள்ள மாற்று இடத்துக்கோ, தகுதியான விதத்தில் அணிசெய்யப்பட்டுள்ள வேறொரு சிற்றாலயத்துக்கோ கோவிலின் வழியாக நற்கருணை கொண்டு செல்லப்படுகின்றது.
- எரியும் திரிகளோடு உள்ள மற்ற இரு பணியாளர்கள் நடுவில் திருச்சிலுவை ஏந்திய பொது நிலைப் பணியாளர் முன்னின்று வழிநடத்துகின்ற பணியாலர் முன்னின்று வழிநடத்துகின்றார்.
- எரியும் திரிகளைக் கொண்டிருப்போர் பின்தொடர்வர். புகையும் தூபக் கலத்தை ஏந்தி நிற்பவர் தூய்மைமிகு நற்கருணையைக் கொண்டு செல்லும் அருள்பணியாளர் முன் செல்வார்.
- அவ்வேளையில் 'பாடுவாய் என் நாவே' அல்லது வேறு நற்கருணைப் பாடல் 'பாடப்படுகின்றது.
- நற்ருணை வைக்கப்படும் இடத்தைப் பவனி அடைந்ததும் அருள்பணியாளர் - தேவையானால் திருத்தொண்டரின் உதவியுடன் - நற்கருணைப் பேழைக்குள் நற்கருணைக் கலத்தை வைக்கின்றார். அதன் கதவு திறந்திருக்கும்.
- பின் முழங்காலிட்டு தூய்மைமிகு நற்கருணைக்குத் தூபம் இடுகின்றார். அப்பொழுது 'மாண்புயர் அல்லது வேறு நற்கருணைப் பாடல் பாடப்படும்.
- பிறகு திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளரே நற்கருணைப் பேழையின் கதவை மூடுகின்றார்.
- பீடம் வெறுமையாக்கப்பட்டு, கூடு மானால், சிலுவைகள் எல்லாம் கோவிலிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகளைத் திரையிட்டு மறைப்பது பொருத்தம் ஆகும்.
முன்னுரை
இப்பொழுது தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம் செய்யப்படுகின்றது. இயேசு தனது தந்தையின் விருப்பத்தை சிரமேற்கொண்டு தனது பாடுகள் மரணத்தில் பங்கேற்கின்றார். இயேசுவின் இந்த பாஸ்கா மறைபொருளை சிந்திக்க அழைக்கும் நேரமிது. விழித்திருந்து செபியுங்கள் என்று எமக்கு அழைப்புவிடுக்கும் இயேசுவின் உணர்வுகளோடு இன்று பயணிப்போம். நற்கருணையாக உடைக்கப்பட்டு இன்று எமக்காக பாடுகளை தாங்கும் இயேசுவில் எம்மையும் இணைத்து இவ்வழிபாட்டில் கலந்துகொள்வோம்.
நற்கருணை பவனிக்கான பாடல்
1. பாடுவாய் என் நாவே மாண்பு
மிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த
வயிற்றுதித்த கனியவர் தாம்
பூதலத்தை மீட்கச் சிந்தும்
விலைமதிப்பில்லாதுயர்ந்த
தேவ இரத்த இரகசியத்தை
எந்தன் நாவே பாடுவாயே
2. அவர் நமக்காய் அளிக்கப்படவே
மாசில்லாத கன்னி நின்று
நமக் கென்றே பிறக்கலானார்
அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான
வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே
வியக்கும் முறையில் முடிக்கலானார்
3. இறுதி உணவை அருந்த இரவில்
சகோதரர்கள் யாவரோடும்
அவரமர்ந்து நியமனத்தின்
உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்
பன்னிரண்டு சீடருக்கு
தம்மைத் தாமே திவ்விய உணவாய்
தம் கையாலே அருளினாரே
பவனி முடிந்த பின்பு
4. மாண்புயர் இவ்வருட் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக
5. பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்க்கும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக, ஆமென்.
பிற்சேர்க்கை
ஆசைமேல் ஆசையாய் இருந்தேன் - இந்த
பாஸ்கா உணவை உண்பதற்கு - நான்
ஆசைமேல் ஆசையாய் இருந்தேன் இந்த
பாஸ்கா உணவை உண்பவத்றகு
1. பாடுகள் துவங்கும் காலமிது - நம்
கண்முன் தெரிகின்றது
பகிர்ந்திடும் விருந்து வேளையிது
இங்கு அன்பு மலர்கின்றது
அன்பில் பிறந்திடும் துன்பங்கள்
மகிமையின் வாசல்கள்
2. உடலின் உழைப்பும் வலிமையையும் - நாம்
பகிர்ந்தே வாழ்ந்திடுவோம்
குருதியில் கலந்த நல்லறங்கள் - நம்
வாழ்வில் நிறைத்திடுவோம்
பகிர்ந்து வாழும் நெஞ்சங்கள்
பலியதன் பீடங்கள்
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காக தருகின்றேன்
மலர்களில் விழுந்து
மணமென நுழைந்து
காற்றினில் கலந்து
கனிவோடு பணிந்து
1. பசி உள்ளோர்க்கு
உணவாக நானிருப்பேன் -உடை
இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன்
விழுந்தவரை தூக்கிடுவேன்-இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
2. இருப்பவர் கொடுப்பதில்
இன்பம் என்ன - கையில்
இருப்பதை கொடுப்பதே இன்பம் என்றாய்
பலியை அல்ல இரக்கத்தையே - என்னில்
விரும்புகின்ற இறைமகனே
உன்னைபோல் நானும் உருவாகிட
காணிக்கை தரும் நேரம்
கடவுளே உன் திரு முன்னே
அன்பென்னும் பலியாக அள்ளி தரும் நேரம்
என்னை படைத்தேன் என்னை படைத்தேன்
இன்றும் என்றும் உந்தன்
உகந்த காணிக்கையாய்
1. வாழும் வாழ்வை பலியாய் தந்தேன்
வரமே தருவாய் நீ
போதும் என்ற மனமே தந்து
பொறுத்துக்கொள்வாய் நீ
என்னன்பு தேவனும் நீ
என் வாழ்வின் ஜீவனும் நீ
2. உள்ளம் விரும்பும் இறைவன் நீரே
உவந்து தர வந்தேன்
மீதி வாழ்வை திருமுன் தந்து
நிம்மதி பெறுகின்றேன்
என்னன்பு தேவனும் நீ
என் வாழ்வின் ஜீவனும் நீ
No comments:
Post a Comment