Saturday, 2 March 2024

தவக்காலம் -மூன்றாம் ஞாயிறு - 03-03-2024



திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு வாரத்துற்குள்ளே நுழைகின்றோம். எமது தவ முயற்சிகள், தியாகங்கள் மேலும் எமது செபங்கள் வழியாக நாம் இறைவனோடு இன்னும் மிக நெருக்கமாக பயணிக்க இத்தவக்காலம் எமக்கு உதவுகின்றது.

இன்றைய இறைவார்த்தைகள், மனித வாழ்வுக்குத் தேவையான ஒழுக்கம் நிறைந்த கடமைகளையும், பொறுப்புக்களையும் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன: 'என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்' என்பதை இறைவனின் உள்ளார்ந்த உணார்வுகளாக முதலாம் இறைவார்த்தை எடுத்தியம்புகின்றது. 'சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம்' என்பதை இத்தவக்காலத்தில் எமது அழைப்பாக இருக்க வேண்டும் என்று புனித பவுல் எடுத்தியம்புகின்றார். யோவான் நற்செய்தியிலே உள்ளம் எனும் கோவிலில் குடியிருப்பது இறைவனே, அதை இறைவனுக்குரியதாய் உருவாக்கவே நாம் உழைக்கவேண்டும் என்று தெளிவுபடுத்துகின்றார். அன்பும், நிறை மகிழ்ச்சியும், நம்பிக்கையும், இரக்கமும், மன்னிப்பும் இவையனைத்தும் உள்ளத்தில் இருந்தே ஊற்றெடுக்கவேண்டும். சட்டங்களை மதித்து, கடமைகளை நிறைவேற்றி பொறுப்புக்களை செவ்வனே செயற்படுத்த எம்மை உருவாக்கிக்கொள்ளவேண்டும். இதுவே இன்றைய அழைப்பாகும். 

நாமும் நல்லவற்றை சிந்திப்போம், உண்மையைப் பேசுவோம், உறவுகளை உயிராய் நேசிப்போம், மன்னிப்போம்,  இரக்கத்தாலும், பண்பினாலும், இறை சித்தம் நிறைவேற்றுவோம், அன்பினால் அனைத்தையும் வெல்லுவோம். இச்சிந்தனைகளோடு தொடரும் பலியில் இணைந்துகொள்வோம்.  


வருகைப் பல்லவி         காண். திபா 24:15-16 

என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன, ஏனெனில் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும். ஏனெனில் நான் ஆதரவற்றவன்; ஏழை.

அல்லது       காண். எசே 36:23-26

நான் உங்களில் என் தூய்மையை நிலை நாட்டும்போது பல நாடுகளிலிருந்து உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். உங்கள் எல்லாக் குற்றங்களிலிருந்தும் நீங்கள் தூய்மையாவீர்கள். புதிய ஆவியை உங்களுக்குக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, இரக்கப் பெருக்கத்துக்கும் முழுமையான நன்மைக்கும் காரணரே, பாவிகளின் உண்ணா நோன்புகள், இறைவேண்டல்கள், இரக்கச் செயல்கள் ஆகியவற்றின் வழியாக எங்களுக்குப் பாவ மன்னிப்பை வழங்குகின்றீர்; எங்களது தாழ்ச்சிமிக்க பாவ அறிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கி மனச்சான்றினால் நொறுங்குண்ட எங்கள் உள்ளங்களை உமது இரக்கத்தால் என்றும் உயர்த்துவீராக. உம்மோடு.


1ம் இறைவாக்கு

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17

திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப்பெற்றது.

பதிலுரைப் பாடல்             திபா 19

பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.

2ம் இறைவாக்கு  

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 22-25

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே பறைசாற்றுகிறோம். அவரது சிலுவை யூதருக்குத் தடைக்கல்; அழைக்கப்பட்டவருக்கோ கடவுளின் ஞானம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி      யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

நற்செய்தி இறைவாக்கு

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25: இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்.

  • முதலாம் ஆண்டுக்கான திருப்பலி இறைவார்த்தையைப் பயன்படுத்தலாம் 


விசுவாகிகள் மன்றாட்டு

குரு: எமது வாழ்வு ஒரு புதிய பாதையிலும், புனித பாதையிலும் பயணிக்கின்றது. இப்பயணத்திலே இயேசுவின் உடனிருப்பு எம்மோடு இருக்கின்றது. எனவே, எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது திரு அவையின் வாழ்வுக்காகவும் அதன் ஆன்மிக வளர்ச்சிக்காகவும் உழைக்கும் அனைத்து பணியாளர்களும் இயேசுவின் தூய மனநிலை கொண்டுவாழவும், அவரையே முழுமையாக பின்பற்றி உலகெங்கும் அறிக்கையிடுகின்ற கருவிகளாக திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று ...  

2. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்வாலும், தியாகத்தாலும், உழைப்பாலும் தங்கள் உணர்வுகளாலும் சான்றுபகரும் அனைவரும் இத்தவக்காலம் கற்றுத்தரும் அனைத்து போதனைகளுக்கும் கிறிஸ்துவின் சிலுவை தரும் அனைத்தும் படிப்பினைகளுக்கும் பிரமாணிக்கமாய் இருந்து செயற்பட அருள்புரிய வேண்டுமென்று ...  

3. இன்றைய சமகால அரசியல் பொருளாதார வாழ்வோடு பயணிக்கும் எமக்கு, கொடுக்கப்படும் கேள்விகளும் பதில்களும் அர்த்தமற்ற நிலைகளையும், பொருத்தமற்ற சூழலையும், எதிர்மறை விமர்சனங்களையும் எம்மேல் திணிக்கின்ற விவாதங்களையுமே எமக்கு தரும்வேளை, நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் தேடிச் செல்லவும், வாழ்வில் இயேசுவை விட்டு பிரிந்திடா வரமருள வேண்டுமென்று ... 

4. எமது சமுகத்திலே காணப்படும் பிரிந்துபோன குடும்பங்கள், நொந்துபோன மற்றும் உடைந்துபோன உறவுகள், விரக்தியின் விளிம்பில் வெளிவரமுடியாமல் முடங்கிப் போனவர்கள் என அனைவரையும் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். மனித உள்ளங்களை அறியும் இறைவன்,  நம்பிக்கையை வெளிச்சத்தை தந்து, வாழ்வின் பாதைகளை தெளிவாக அமைத்து என்றும் முன்னோக்கிச் செல்ல அருள்புரியவேண்டுமென்று ... 

குரு: எம்மை எல்லாம் அன்பு செய்யும் இறைவா! உமது துணை இன்றி நாம் வாழ முடியாது, உமது வழிநடத்துதல் இன்றி நாம் இயங்கமுடியாது. உமது பாதம் நம்பிக்கையோடு நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து, உமது அருளைப் பொழிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிகளால் மன நிறைவு அடைந்து எங்களுக்கு அருள்புரிவீராக் எங்கள் குற்றங்களிலிருந்து எங்களை மன்னிக்க வேண்டுகின்ற நாங்க பிறருடைய குற்றங்களை மன்னிக்க முயல்வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி    காண். யோவா 4:13-14 

  • சமாரியப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவர் நிலைவாழ்வு அடைய அவருக்குள் பொங்கும் நீரூற்று எழும், என்கிறார் ஆண்டவர்.

  • வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது:          திபா 83:4-5

படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக் குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகத்தில் உள்ள மறைபொருள்களின் அச்சாரத்தையும் இவ்வுலகில் ஏற்கெனவே விண்ணக உணவால் வளமையையும் பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் மறைபொருளாக எங்களில் திகழ்வது செயலளவிலும் நிறைவு பெறுவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் இதயங்களை ஆண்டருள உம்மை வேண்டுகின்றோம்: உம் ஊழியர்களுக்குக் கனிவுடன் இந்த அருளை வழங்குவதால் உம் அன்பிலும் பிறரன்பிலும் நிலைத்திருந்து அவர்கள் உம் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றுவார்களாக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...