Saturday, 16 March 2024

தவக்கால ஐந்தாம் ஞாயிறு 17/03/2024



திருப்பலி முன்னுரை

இறை அன்பில் இணைந்து அவர் பலியில் கலந்து அவரது வாழ்வோடு உறவாட வந்திருக்கும் என் இனிய உறவுகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் அன்பின் பெயரால் அழைத்து நிற்கின்றோம். அன்னையாம் திரு அவை இன்று எம்மை தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வாரத்திற்கு அழைக்கின்றாள். 

புனித வாரத்தை அண்மித்திருக்கின்ற நாம், இயேசுவின் பாஸ்கா மறை நிகழ்வை மிகச் சிறப்பாக கொண்டாட எம்மை அக ஆயத்தம் செய்கின்றோம். பாவங்களுக்காக பரிகாரம் தேடுகின்றோம், முழுமையான பாவசங்கீர்த்தனம் செய்கின்றோம், தவ ஒறுத்தல் மேற்கொள்கின்றோம் இன்னும் திரு யாத்திரைகள் செய்து எமது பழைய நிலைகளைக் களைந்து புதிய மனிதனுக்குரிய இயல்பை அணிந்துகொள்கின்றோம். இவைகள் எம்மை புதிய வாழ்வுக்குள் அழைத்துச் செல்கின்றன. 

புதிய உடன்படிக்கை வழியாக கடவுளோடு ஒன்றித்திருக்க இன்றைய வாசகங்கள் எம்மை அழைத்து நிற்கின்றன. 'நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்' எனும் வார்த்தைகள் எம்மை தேர்ந்தெடுத்த இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு மனிதனின் தியாகமும் அர்ப்பணமும் அவனது வாழ்வின் தூய்மைக்கான வழிகளே. இதையே இன்றைய நற்செய்தி இறைவாக்கு எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றது. 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்' எனும் இயேசுவின் வார்த்தைகள் அழகானவை எம்மைச் சிந்திக்கத் தூண்டுபவை. 

எனவே, எமக்கு முன் நிற்கும் எமது தடைகளைத் தாண்டி நாம் செல்லவேண்டிய இலக்கை அடைய முயல்வோம். எமது ஆன்மாவை காயப்படுத்தும் உலகத்தின் அந்தரங்கங்களுக்குள்ளே வீழ்ந்திடாமல், இயேசுவை கரம்பற்றி துணிந்து செல்வோம். உலகிலே நடந்தேறிக்கொண்டிருக்கும் வன்முறைகள் நீங்கவும், எமது திரு அவை சந்திக்கும் சமகால துன்புறுத்தல்கள் அகற்றப்படவும், கடத்தல்கள், கொலைகள், போர் வன்முறைகள் நிறுத்தப்படவும் இப்பலியிலே உருக்கமாக மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி

காண். திபா 42:1-2 கடவுளே, எனக்கு நீதி வழங்கும்; இறைப்பற்றில்லாப் பிற இனத்தாரோடு என் வழக்குக்காக வாதிடும். தீயவரும் வஞ்சகருமான மனிதரிடமிருந்து என்னை விடுவித்தருளும். ஏனெனில் நீரே என் கடவுள், என் ஆற்றல்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே எங்கள் இறைவா, உம் திருமகன் உலகை அன்பு செய்து சாவுக்குத் தம்மையே கையளித்தார்; உமது உதவியால் அதே அன்பில் நாங்களும் விரைந்து முன்னேறிச் செல்ல அருள்புரிவீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

புதிய உடன்படிக்கை செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34

பதிலுரைப் பாடல் திபா 51: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 10ய)

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

இரண்டாம் இறைவாக்கு

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

நற்செய்திக்கு முன் வசனம் யோவா 12: 26

'எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்,' என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி இறைவாக்கு

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33

அல்லது

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-45

  • 'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.


விசுவாசிகள் மன்றாட்டு 

குரு. 'தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். ' என்று கூறும் இயேசு பிறருக்காக வாழவும், பிறரின் தேவையில் எம்மை இணைத்துக்கொள்ளவும் அழைக்கின்றார். இவ்வுலகம் வேண்டிநிற்கும் தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம். 

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் துன்புறும் திரு அவை மீண்டும் சந்திக்கும் நெருக்கடிகள், துன்பங்கள், வீழ்ச்சிகள், வேதனைகள், உயிர் இழப்புக்கள் மத்தியில் இயேசுவின் அன்பும், இரக்கமும், மன்னிப்பும் இத்திரு அவையை ஆண்டு நடத்தவும், பாவிகள் மனந்திரும்பவும் இவ் இறையரசைக் கட்டியெழுப்ப அனைவரும் உழைக்கவும் வரம்வேண்டி, ...

2. எமது பங்கு திரு அவைக்காக மன்றாடுவோம்.

எமது விசுவாசத்திற்கு எதிராக எம்மை திசைதிருப்பும் அனைத்து போலியான கொள்கைகளில் இருந்தும் தவறான வழிநடத்துதலில் இருந்தும் நாம் காப்பாற்றப்பட்டு இயேசுவை இலக்காகக் கொண்டு, நேர்மையான உண்மையான எண்ணங்களும் சிந்தனைகளும் சரியான பாதைக்கு வழிவகுத்திட வேண்டுமென்று, ...

3. எமது பெற்றோருக்காக மன்றாடுவோம்.

தாம் பெற்றெடுத்த பிள்ளைகள் இறைவன் கொடுத்த வரம் என்பதை முழுமையாக உணரவும், தமது இயலாமையில், தமது பாவத்தில், தமது பிழையான உணர்வுகளில் புதிய தலைமுறையை உருவாக்க முடியாது என்பதை உணர்வார்களாக. தமது தாழ்ச்சியால், விட்டுக்கொடுப்பால், தெய்வ பக்தியால் தமது பிள்ளைகளின் அழகான உருவாக்கத்தில் தாமும் பங்கெடுக்கின்றனர் என்பதை அறிந்து செயற்பட வரமருளவேண்டுமென்று, ...

4. பல்வேறு நிலைகளால் வருந்துவோருக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா, இன்றைய சூழ்நிலையிலே, வறுமையால் வாடுவோர், அதிக வெப்பதினால் பாதிக்கப்படுவோர், தீராத நோயினால் கஸ்டப்படுவோர் என அனைவரும் உம்மை அதிகமாய் நெருங்கி வாழ வரம்வேண்டுவோம். இவர்களுக்காக உதவும் கரங்கள் பெருகவும், உழைக்கும் கரங்கள் ஆசிர்வதிக்கப்படவும், மேலும் இவர்கள் வாழ்வில் இறை நம்பிக்கையும், தளரா மனமும்கொண்டு வாழ வரமருள வேண்டுமென்று, ...

குரு. நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்று புதிய கட்டளையை எமக்கு பெற்றுத் தரும் இறைவா. இன்று நாம் உமது அன்பின் மக்களாக உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவீராக. எச்சந்தர்ப்பத்திலும் எம்மை விட்டுவிலகிடாமல் என்றும் கூடவே பயணிக்கவேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்தவ நம்பிக்கையின் படிப்பினையால் நீர் நிரப்பியுள்ள உம் அடியார்களுக்கும் எங்களுக்கும் செவிசாய்த்தருளும்; இப்பலியின் பயனாக இவர்களைப் புனிதப்படுத்துவீராக. எங்கள். 

திருவிருந்துப் பல்லவி :

  • இலாசரைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

காண். யோவா 11:26 உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார், என்கிறார் ஆண்டவர்.

  • விபசாரப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

யோவா 8:10-11 'அம்மா, நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?' 'ஒருவரும் இல்லை , ஆண்டவரே.' 'நானும் உம்மைத் தீர்ப்பிட மாட்டேன். இனிப் பாவம் செய்யாதீர்.'

  • வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது:

யோவா 12:24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படி யே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவர், எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: இயேசு கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்கின்ற நாங்கள் அவருடைய உறுப்பினர்களாக என்றும் விளங்குவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தின் கொடையை எதிர்பார்க்கும் உம் மக்களுக்கு ஆசி வழங்கியருளும்; உமது தூண்டுதலால் தாங்கள் விரும்புவதை உமது வள்ளன்மையால் அவர்கள் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...