Saturday, 24 February 2024

தவக்காலம் -இரண்டாம் ஞாயிறு - 25-02-2024

 


முன்னுரை

புலர்ந்திடும் இப்புதிய காலைப் பொழுதினில் இறை பலிசெலுத்தவும், இறை உறவை வளர்க்கவும் கூடி வந்திருக்கும் என் அன்பு உள்ளங்களே! இயேசுவின் பெயரால் உங்களை நாம் வரவேற்கின்றோம். இன்று திரு அவை தாயானவள் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்க அழைக்கின்றாள். 

தவக்காலத்தின் இரண்டாவது ஞாயிறு வாரம் மிகவும் பெறுமதியான ஒரு செய்தியை எமக்கு தருகின்றது. சோதனைகள், துன்பங்கள், கண்ணீர் மேலும் போராட்டங்கள் அனைத்தின் வழியாக இறைவனில் வைத்திருக்கும் நம்பிக்கை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை முதல் இறைவார்த்தை வலியுறுத்துகின்றது. ஈசாக்கைப் பலியிட துணிந்த ஆபிரகாமின் இறை விசுவாசம் வியக்கத்தக்கதே. எமக்கென்று நாம் சேர்த்துவைத்திருக்கும் அனைத்தையும் இழக்க துணிவது, தெளிவான ஆன்மிகப் பயணத்திற்கான முதல் படியாகும். இன்றைய நற்செய்தி இறைவார்த்தையிலே இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் நோக்கம் தெளிவுபடுத்தப்படுகின்றது. 

பாடுகளும் மரணமும் இயேசுவுக்கு முன்பேயுள்ள சவால்களாகும். ஆனால், இதை விளங்க மறுத்தது அப்போஸ்தலர்களின் வாழ்வும், அவர்களின் தேவையுமே. இன்றைய நாளுக்குரிய எமது அழைப்பும் இதுவாகவே அமைகின்றது. எமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இத்தவக்காலம் ஒரு தெளிவான பயணம், பாவத்திற்கு விலை போகாது, இயேசுவின் இரத்தத்தால் எம்மை முழுமையாகக் கழுவி தூய்மையாக்கும் பரிகாரப் பயணம். பிறரையும் எம்மைப் போல் ஏற்றுக்கொண்டு, அன்பு செய்து, மன்னித்து வாழ அழைக்கும் கல்வாரிப்பயணம். எமக்கு முன்னுள்ள அனைத்து குப்பைகளையும் அகற்றிவிட்டு, தூய மனதோடு இயேசுவின் சிலுவை வழி செல்லும் தியாகப் பயணம். இப்பயணத்திலே ஆபிரகாமைப் போல நிறை விசுவாசம்கொண்டு பயணிக்கவும், இயேசுவைப் போல, வாழ்வின் நோக்கம் தவறாமல் சிலுவை நோக்கிப் பயணிக்கவும் வரம் வேண்டி இப்பலியிலே இணைந்திடுவோம். 


வருகைப் பல்லவி            காண். திபா 28:8-9

என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; உமது பார்க்க விரும்பினேன்; ஆண்டவரே, உமது முகத்தை முகத்தைப் பார்க்க விரும்பினேன்; அண்ட என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும்.

அல்லது         காண். திபா 24: 6,2,22

ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினை ந்தருளும்; எ ங் கள் பகைவர்கள் எ ங் களை ஒரு-போதும் அடக்கி ஆளவிடாதேயும். இஸ்ரயேலின் கடவுளே, எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் அன்புத் திருமகனுக்கு நாங்கள் செவிசாய்க்க எங்களுக்குக் கட்டளையிட்டு உமது வார்த்தையினால் எங்கள் உள்ளத்துக்கு ஊட்டம் அளிக்கத் திருவுளம் கொண்டீNர் அகவொளியால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு உமது மாட்சியைக் கண்டு மகிழ்வோமாக. உம்மோடு.


1ம் இறைவாக்கு

தொடக்க நூல்: 22: 1-2, 9-13, 15-18

நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி

பதிலுரைப் பாடல்                     திபா 116

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

2ம் இறைவாக்கு  

உரோமையர்: 8: 31டி-34

கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி           மாற் 9: 7

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது:'என் அன்பார்ந்த மைந்தர் இவNர் 

இவருக்குச் செவிசாயுங்கள்.'

நற்செய்தி இறைவாக்கு

மாற்கு: 9: 2-10 என் அன்பார்ந்த மைந்தர் இவரே.


விசுவாகிகள் மன்றாட்டு

குரு: இயேசு தனது பாடுகள் மரணம் நோக்கிப் பயணித்தார். அப்பயணத்திலே எந்தத் தடைகள் வரினும், அதை துணிந்து சென்று முறியடித்தார். அவரிலே எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: நவின உலகிலே பயணிக்கும் எமது திரு அவை சந்திக்கும் சாவாலான நுகர்வுக் கலாசாரத்திற்குள்ளே அகப்பட்டுவிடாமல், அறிவும், ஞானமும் மட்டுமல்ல அதனோடு கூடிய ஆன்மிக அனுபவமும், விவேகமும் திரு நிலையினரின் வாழ்வின் அணிகலன்களாக இருக்கத் தேவையான அருளை அளித்திட வேண்டுமென்று,...

2. எமக்காக மன்றாடுவோம்: கூட்டொருங்கியக்கத் திரு அவையாக பயணிக்கும் எமக்கு, 2025ம் ஆண்டை ஜுபிலியின் ஆண்டாகக் கொண்டாட எம்மை ஆயத்தம்செய்வோம். தூய ஆவியின் வழிநடத்தலில் திருக் குடும்ப உணர்வோடு, புதிய வழிகாட்டலில், புதிய நெறிப்படுத்தலில், புதிய சமுகமாக பயணிக்கத் தேவையான அருளை அளித்திட வேண்டுமென்று,...

3. எமது பங்கின் பிள்ளைகளுக்காக மன்றாடுவோம்: சத்தங்கள் நிறைந்த வேகமான உலகிலே, பொய்யான போக்கிலே சேர்ந்து பயணிக்கும் இக்காலத்திலே, குடும்ப உருவாக்கம் பெற்று மிளிரும் நல்ல தலைமுறை உருவாகவும், தமது வாழ்க்கையிலே எது சரி, எது பிழை என்பதை தெளிவாகக் கண்டுணரும் பாக்கியம் பெற அருள்புரிய வேண்டுமென்று,... 

4. தவ, ஒறுத்தல் முயற்சிகளாலும் செபத்தாலும் தம்மை இறைவனுடன் ஒன்றினைத்து வாழும் அனைவருக்காகாவும் மன்றாடுவோம். இவர்கள் தமது அர்ப்பணத்தால் இவ்வுலகிற்காக வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பின் இறைவா! இத்தவக்காலத்திலே உமது பாடுகளோடு சேர்ந்து பயணிக்கும் எம்மை ஆசீர்வதித்தருளும். உமது பிள்ளைகளாகிய நாம் உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் எமது உள்ளத்தின் காணிக்கைகளை ஏற்று, அதற்குச் செவிசாய்த்தருளும். இவ்விண்ணப்பங்கள் வழியாக நாம் என்றும் உமது வாழ்வோடு ஒன்றித்திருக்க அருள் செய்தருளும். எங்கள் ஆண்டவாராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிப்போக்க உம்மை வேண்டு-கின்றோம்: பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு, உம்மீது நம்பிக்கை கொண்டோரின் உடல்களையும் மனங்களையும் அது புனிதப்படுத்துவதாக. எங்கள்;.

திருவிருந்துப் பல்லவி             மத் 17:5

என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வுலகில் வாழும் நாங்கள் ஏற்கெனவே விண்ணுலக வாழ்வில் பங்குபெற அருள்கூர்ந்தீர்; மாட்சிக்கு உரிய மறைநிகழ்வுகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உமக்குச் செலுத்தும் நிறை நன்றியை ஏற்றுக்கொள்வீராக. எங்கள்;.

மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோரை முடிவில்லா ஆசியால் புனிதப்படுத்தி உம் ஒரே திருமகனின் நற்செய்தியைக் கடைப்பிடிக்கச் செய்தருளும்; அதனால் அவர் தம் திருத்தூதர்களுக்குத் தம்மில் வெளிப்படுத்திய அந்த மாட்சிமீது அவர்கள் என்றும் ஆர்வம் கொள்ளவும் அதை மகிழ்வோடு வந்தடையவும் தகுதி பெறுவார்களாக, எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Saturday, 17 February 2024

தவக்காலம் - முதல் ஞாயிறு - 18-02-2024



முன்னுரை

இறைவனின் அழைப்பை ஏற்று, வாழ்வையே பலியாக ஒப்புக்கொடுக்க கூடிவந்திருக்கும் என் இனிய இறைமக்களே! உங்கள் அனைவரையும் இயேசுவின் இனிய பெயரால் அழைத்து நிற்கின்றோம். தவக்காலத்தின் முதலாம் ஞாயிறு வாரத்திற்குள் கால்பதிக்கும் நாம்,  'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' எனும் இயேசுவின் அழகிய மகுட வாசகத்தோடு எமது தவக்காலத்தை - நற்பது நாள்கள்கொண்ட நீண்ட பயணத்தை ஆரம்பிக்கின்றோம். இப்பயணம் அடிமை வாழ்விலிருந்து விடுதலை வாழ்வுக்கான பயணமாக் பாவ வாழ்விலிருந்து புனித வாழ்வுக்கான பயணமாக, கறைபடிந்த வாழ்விலிருந்து அருள் நிறைந்த வாழ்வுக்கான பயணமாக அமைகின்றது. இயேசுவின் இரத்தத்தோடு மீட்பின் விலையை எமது ஆன்ம வாழ்வுக்கான உயர்ச்சியாகக் கொண்டு தொடங்கும் பயணமாக இது அமைகின்றது. ஆகவே, சோதனைக்கு உட்பட்டு வெற்றிகண்ட இயேசுவோடு சேர்ந்து பயணிப்போம். துன்பங்கள் வழியாகத்தான் துணிவு பெறும் பயணமாக, சுமைகள் வழியாகத்தான் தெளிவுபெறும் பயணமாக, கண்ணீர் வழியாகத்தான் தைரியம்பெறும் பயணமாக இதை மாற்றுவோம். 

உள்ளம் தெளிந்து, பாதை அறிந்து, எமது பாவங்கள் உணர்ந்து, பரிகாரங்கள் பல தேடி இப்பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். எம்மை எல்லாம் படைத்த இறைவன், எம்மேல் கொண்ட அன்பினால் எம்மைக் காத்தருள்வார் எனும் உண்மையை இன்றைய இறைவார்த்தகள் தெளிவுபடுத்துகின்றன. அவரிலே முழு நம்பிக்கை கொண்டவர்களாக தொடரும் இக்கல்வாரிப் பலியில் இறைவரம் கேட்டு மன்றாடுவோம்;.


வருகைப் பல்லவி      காண். திபா 90:15-16

என்னைக் கூவி அழைப்பவருக்கு நான் செவிசாய்ப்பேன்; அவரை விடுவித்துப் பெருமைப் படுத்துவேன். நீடிய ஆயுளால் அவருக்கு நிறைவளிப்பேன்.

  • 'உன்னதங்களிலே' சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, ஆண்டுதோறும் நாங்கள் கடைப்பிடிக்கும் தவக் கால அருளடையாளச் செயல்களால் கிறிஸ்துவின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்வதில் முன்னேற எங்களுக்கு உதவியருளும்; அதனால் அவற்றின் பயன்களை எங்கள் நன்னடத்தையால் அடைவோமாக. உம்மோடு.

1ம் இறைவாக்கு

தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15

வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை.

பதிலுரைப் பாடல்     திபா 25

பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.

2ம் இறைவாக்கு  

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-22

இப்போது உங்களை மீட்கும் திருழுழுக்கிற்கு இந்த நீர் முன்னடையாளமாயிருக்கிறது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி           திபா 95

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நற்செய்தி இறைவாக்கு

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15

இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

  • 'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.


விசுவாகிகள் மன்றாட்டு

குரு: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை எனும் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, எமது பாதையைசீரமைத்து, உடன்பயணிக்கும் இயேசு விடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1, எமது ஆன்மிகப் பாதையிலே எம்மை தெளிவான பாதைக்கு இட்டுச் செல்ல அரும்பாடுபடும்  அனைத்து மறைபணியாளர்களுக்கும் இறைவன் ஞானம் நிறைந்த வல்லமையையும், அருளையும் அளித்தருள வேண்டுமென்று ...

2. புதிதாக ஆரம்பித்திருக்கும் இத்தவக்காலத்திலே தம்மை முழுமையாக இணைத்து, புதிய உடன்- படிக்கையாம் இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பெற தம்மை அர்ப்பணிக்கும் அனைவரும், இறை மன்னிப்பையும், அவர் இரக்கத்தையும் நிறைவாகப் பெறும் பாக்கியம்பெற அருள்பாலிக்க வேண்டுமென்று 

3. எமது பங்குச் சமூகத்திலே, தடுமாறி, தடம்மாறி, அர்த்தமற்ற வாழ்வோடு பயணிக்கும் பலரினுடைய வாழ்வுக்காகமன்றாடுவோம். இத்தவக்காலத்திலே 

இவர்கள் வாழ்விலே இறைவன் தொடர்ந்தும் பேசவும், இவர்கள் உள்ளம் தேடும் அமைதியும், மகிழ்ச்சியும் இறைவனருளால் நிலையாகக் கிடைக்கப்பெற அருள்புரிய வேண்டுமென்று ...

4. எம்மைச் சுற்றி காணப்படும் அனைத்து தீமைகளிலும் வெற்றிகொண்டு, இயேசுவின் சிலுவையோடு வாழ்வுக்கு அர்த்தம் காணவும், புதிய சமுகம் படைக்கும் உயிர்ப்பின் மக்களாக திகழ வரமருள வேண்டுமென்று ...

குரு: அன்பின் ஆண்டவரே, உமக்கு முன்பாக வீற்றிருக்கும் நாம் அனைவரும் பாவிகள் என்பதை தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றோம். கடவுள் வடிவில் விளங்கிய நீர், எம்மைப் போல அடிமையின், ஏழையின் வடிவை ஏற்று மனிதனாகப் பிறந்து மீட்பைப் பெற்றுக்கொடுத்தீர். நாமும் அதை உணர்ந்து வாழவும், சிலுவை தருகின்ற வெகுமதிகளை ஏற்று வாழவும் எம்மை உருவாக்கியருளும். நாம் உமது பாதம் தந்திருக்கும் இவ்வேண்டுதல்களுக்கு செவிசாய்த்து எமக்கு அதன் அருள்வழங்களைப் பெற்றுத் தருவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்து புனிதமிக்க அருளடையாளக் கொண்டாட்டத்தைத் தொடங்குகின்றோம்; இவற்றைத் தகுந்த முறையில் ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி      மத் 4:4

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாயினின்று புறப்படும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ்கிறார்.

அல்லது  காண். திபா 90:4

ஆண்டவர் தம் தோள் வலிமையினால் உம்மைப் பாதுகாப்பார்; அவருடைய இறக்கைகளின்கீழ் நீர் தஞ்சம் அடைவீர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புத்துயிர் தரும் விண்ணக உணவினால் எங்கள் நம்பிக்கை ஊட்டம் பெறவும் எதிர்நோக்கு வளரவும் அன்பு உறுதி அடையவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உயிருள்ள, உண்மையான உணவாம் கிறிஸ்துவை நாங்கள் ஆர்வத்துடன் நாடக் கற்றுக்கொள்வதோடு உமது வாயினின்று புறப்படும் எல்லா வார்த்தைகளாலும் வாழ்ந்திட ஆற்றல் பெறுவோமாக. எங்கள்.


மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்கள் மீது நிறைவான ஆசி இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் துன்பத்தில் நம்பிக்கை வளர்வதாக் சோதனையில் நற்பண்பு உறுதி பெறுவதாக் நிலையான மீட்பு அருளப்படுவதாக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Monday, 12 February 2024

தவக்காலம் - திருநீற்றுப் புதன் - 14-02-2024


தவக்காலம் - திருநீற்றுப் புதன் - 14-02-2024

முன்னுரை

இறைவனுக்குள்ளே பிரியமுள்ள இறைமக்களே! இன்று திருவழிபாட்டுக் காலத்தின் புதிய வாரமாகிய தவக்காலத்திற்குள்ளே கால்பதிக்கின்றோம். 'இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்' எனும் யோவேல் இறைவாக்கினரின் கூக்குரல் எம்மை ஒரு புதிய வாழ்வின் பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.  தவக்காலம் சிலருக்கு கசப்பாக இருக்கிறது, பலருக்கு அது அருளின் காலமாக இருக்கிறது. சிலர் அதைப் பற்றி சிந்திப்பதே இல்லை ஆனால் பலர் அதை தமது வாழ்வின் அனுபவங்களோடு இறை அனுபவத்தையும் இணைத்துச் சிந்திக்கின்றனர். சிலருக்கு அது ஒரு சடங்காக இருக்கின்றது, ஆனால் பலருக்கு அது தியாகம் நிறைந்த காலமாக இருக்கின்றது.

இன்றைய இறைவார்த்தைகள் எமது ஆன்மீக வாழ்வுக்கான புதிய பாடங்களை கற்றுத்தருகின்றது: இத்தவக்காலம் எம்மை நோன்பிருந்து செபிக்க அழைக்கின்றது. எமது பாவங்களை திரும்பிப் பார்த்து, மனம்வருந்தி அதற்காக பரிகாரம் தேட அழைக்கின்றது. ஆகவே, நாளும் திருப்பலிக்கு செல்லுவோம், முழுமையான சிலுவைப்பாதை செய்வோம், எளிமையாகவும் ஏழ்மையாகவும் வாழ பழகிக்கொள்வோம், கிறிஸ்துவின் பாடுகள் மரணம் உயிர்ப்பைப் பற்றி நாளும் சிந்திப்போம், தவம் செய்வோம், பிறருக்கு நிறைவாய்க் கொடுப்போம், முழுமையான பாவசங்கீர்த்தனம் செய்வோம், திருயாத்திரைகள் செய்வோம், தியாகங்கள் பல புரிவோம். இந்த சிந்தைகளோடு இப்புதிய தவக்காலத்தை ஆரம்பிப்போம், தீமைகளோடு போராடி வாழ்வுக்கான புதிய அர்த்தத்தைக் காண இறையருள் கேட்டு இப்பலியினூடாக மன்றாடுவோம்.


வருகைப் பல்லவி      காண். சாஞா 11:24,25,27

ஆண்டவரே, மனிதர் அனைவர் மீதும் நீர் இரக்கம் காட்டுகின்றீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. மக்கள் மனம் வருந்தும்போது அவர்களுடைய பாவங்களைப் பாராமல் இருக்கின்றீர்; நீர் அவர்களை மன்னிக்கின்றீர். ஏனெனில் நீரே எங்கள் இறைவனாகிய ஆண்டவர்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, புனித நோன்புகளின் வழியாகக் கிறிஸ்தவ வாழ்வின் போராட்டத்தைத் தொடங்க எங்களுக்கு உதவியருளும்; அதனால் ஆன்மீகத் தீமைகளுக்கு எதிராக நாங்கள் போரிட்டு, தன்னடக்கத்தின் உதவியால் காக்கப்படுவோமாக. உம்மோடு.

1ம் இறைவாக்கு

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம்  2: 12-18

நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.

பதிலுரைப் பாடல்   திபா 51

பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.;

2ம் இறைவாக்கு  

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2

கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்..

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி           திபா 95

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.

நற்செய்தி இறைவாக்கு

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும்

உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.


திருநீற்றைப் புனிதப்படுத்துதலும் பூசுதலும்

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தந்தையாம் கடவுளை நோக்கிப் பணிவுடன் மன்றாடுவோம். தவத்தின் அடையாளமாக நம் தலைகளின் மீது இடப்படும் திருநீற்றைப் புனிதப்படுத்த அவர் இரக்கம் கொள்வாராக.

இறைவா, எங்கள் தாழ்ச்சியின் பொருட்டு நீர் மனம் இரங்குகின்றீர்; பரிகாரங்களினால் மகிழ்கின்றீர்; பக்தியுள்ள எங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்தருளும்: திருநீற்றைப் பூசிக்கொள்ளும் உம் அடியார்கள் மீது உமது ஆசியின் ஓ அருளைக் கனிவுடன் பொழிந்தருளும்; அதனால் நாங்கள் தவக் காலத்தின் தவ முயற்சிகளைப் பின்பற்றி உம் திருமகனின் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடவும் தூய்மைப்படுத்தப்பட்ட மனதுடன் வாழவும் தகுதி பெறுவோமாக. எங்கள். பதில் : ஆமென்.

அல்லது

இறைவா, பாவிகளின் இறப்பை அன்று, மாறாக அவர்களின் மன மாற்றத்தையே விரும்புகின்றீர். எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும். எங்கள் தலைகள் மீது பூசப்பட இருக்கின்ற இச்சாம்பலை உமது பரிவிரக்கத்துக்கு ஏற்பப் † புனிதப்படுத்தத் திருவுளம் கொள்வீராக. அதனால் நாங்கள் சாம்பலாக உள்ளோம் எனவும் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் எனவும் அறிந்துள்ள நாங்கள் ஆர்வமிக்க தவ முயற்சிகளின் பயனாகப் பாவங்களுக்கு மன்னிப்பையும் உயிர்த்தெழும் உம் திருமகனின் சாயலுக்கு ஏற்பப் புது வாழ்வையும் அடைந்திட வலிமை பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென்.


  • ஒவ்வொருவர் மீதும் திருநீற்றைப் பூசிச் சொல்வது: மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.
அல்லது
  • நினைவில் கொள் மனிதா! நீ மண்ணாய் இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய்.


விசுவாகிகள் மன்றாட்டு

குரு: ஆண்டவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; ஆகவே, நாம் ஆரம்பிக்கும் இப்புதிய வாழ்வுக்கான நிறையாசீர் கேட்டு மான்றாடுவோம்.


1. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று எம்மை அழைக்கும் இறைவா! ஒவ்வொரு ஆன்மாவின் மனமாற்றத்திற்காக உழைக்கும் அனைவரையும் ஆசீர்வதியும். இதற்காக தம்மையே தியாகப் பலியென, உருகிடும் மெழுகாக பாணியாற்றும் அனைவரும் உமது அன்பாலும் இரக்கத்தாலும் வழிநடத்தப்பட அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

2. இதயத்தில் மாற்றங்களை விரும்பும் இறைவா! எமது அக இருள் நீக்கி புது ஒளியாம் இறைவனை ஏற்ற எம்மை புதுப்பிக்கும் கருவியாக மாற்றிட அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

3. அர்த்தமுள்ள பயணம் அமைக்க அழைக்கும் இறைவா! எமது தீமைகளை அகற்றி, இத்தவக்காலம் எமக்கு விடுக்கும் புதிய வழிமுறைகளைப் பின்பற்றி வாழ அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. வாழ்வைப் பலியேன தந்த இறைவா! எம்மைச் சுற்றி காணப்படும் ஏழைகள், எளியவர்கள், பசியுற்றோர், நோயினால் வாடுவோர் என்று பலரும் எம்மைக் கடந்துசெல்கின்றார்கள். இவர்களின் தேவையிலும், மகிழ்விலும் எமது கரங்கள் உதவவும், இதயங்கள் செபிக்கவும், கால்கள் தேடிச்செல்லவும் அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

 

குரு: 'தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்' என்று எம்மை தேற்றும் இறைவா. இன்று புதிய காலத்தை ஆரம்பிக்கும் எம்மை ஆசீர்வதித்தருளும். நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து நாம் உமது அருள்வேண்டி இரந்து கேட்கும் விண்ணப்பங்களை இரக்கத்துடன் எமக்கு பெற்றுத்தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தவக் காலத் தொடக்கமாக அமையும் இப்பலியைச் சிறப்பாக உமக்கு ஒப்புக்கொடுக்க உம்மை வேண்டுகின்றோம்: தவச் செயல்களாலும் பிறரன்புச் செயல்களாலும் நாங்கள் தீய ஆசைகளை அடக்குவோமாக் இவ்வாறு பாவத்திலிருந்து தூய்மை பெற்று, உம் திருமகனின் பாடுகளை ஆர்வமுடன் கொண்டாடத் தகுதி உள்ளவர்களாகத் திகழ்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


திருவிருந்துப் பல்லவி காண். திபா 1:2-3

ஆண்டவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் உரிய காலத்தில் அதன் கனி தருவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருவிருந்து எங்களுக்கு உதவ வேண்டும் என உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் நோன்புகள் உமக்கு ஏற்புடையனவாகி நாங்கள் நலம் அடைய உதவுவனவாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு

இறைவா, மாண்புக்கு உரிய உம் திருமுன் தலைவணங்குபவர்களுக்கு, ஆழமான மனத்துயரைக் கனிவுடன் தந்தருளும்; தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பரிசுகளைத் தவம் புரிவோர் இரக்கத்துடன் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

Fr. S. James Suren OMI,

+94 77 232 3266,

Sunday, 11 February 2024

லூர்து அன்னை விழா 11/02/2024


 திருப்பலி முன்னுரை

இன்று நமது தாயாம் திருஅவை தூய லூர்து அன்னையின் திருவிழாவைக் கொண்டாட நம்மை அழைக்கின்றது. பிரான்ஸ் நாட்டில் மலையடிவாரத்திலுள்ள லூர்து நகர் என்ற குக்கிராமத்தின், ஆற்றருகே 14வயது சிறுமி பெர்னதெத் சூபிரூஸ் தன் தோழிகளுடன் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென ஓர் ஒளி, கண்களைக் கூசச் செய்தது. சிறுமி ஒளியை நோக்கி உற்றுப்பார்க்க, அங்கே அழகிய பெண் தன் கையில் செபமாலை ஏந்தியவாறு காட்சியளித்தார். செபமாலைச் சொல்லும்படி பெர்னதெத்துக்கு அழைப்பு விடுத்தார். 18 நாட்களுக்குத் தொடர்ந்து வரும்படியும், பாவிகள் மனம் திரும்ப செபிக்கவும், அங்கிருந்த குருவிடம் சொல்லி ஒரு ஆலயம் கட்டவும் கேட்டுக் கொண்டார். 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் நாள் அன்னையின் அற்புதக் காட்சித் தொடங்கி, 1858ம் ஆண்டு ஜூலை 16ம் நாள் வரை தொடர்ந்து 17முறை காட்சியளித்தார். பெர்னதெத் அப்பெண்ணின் பெயர் என்ன என்று கேட்டபோது 'நாமே அமலோற்பவம்' என்று பதிலுரைத்தார். இறுதித் தீர்ப்புக்குப் பிறகுதான் அன்னை ஓய்வு பெறுவார். அதுவரை அன்னை மரியா தமது பிள்ளைகளைக் காக்கும் பணியில் செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்' என புனித ஜான் மரிய வியான்னி கூறுவது உண்மையிலும் உண்மை. பாவிகளுக்காகச் செபிக்கவும், மனம் வருந்தவும் அழைத்தார் லூர்து அன்னை. இம்மையில் மட்டுமன்று, மறுமையிலும் நம் அனைவரையும் மகிழ்விப்பதாக வாக்களித்தார். நாமும் தூய லூர்து அன்னையின் பரிந்துரையால் நலம் பெற பக்தியோடு இன்றைய திருப்பலியில் பங்கெடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு 

குரு: ஆண்டவரை நினைந்து தாய் அன்னையின் உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்தியதே, மீட்பராம் கடவுளை நினைத்து அவள் மனம் பேருவகை கொண்டதே. இந்த சிந்து யாத்திரை அன்னையின் பதியிலே கூடியிருக்கும் அவள் பக்தர்கள் எமக்கு, நமது ஆண்டவர் இயேசுவை நினைந்து போற்றவும், பெருமைப்படுத்தவும் அவள் அழைப்புவிடுக்கின்றாள். எமது விண்ணப்பங்கள், உள்ளத்தின் அபிலாஷைகள் அனைத்தையும் அன்னை வழி, இறை தந்தையிடம் ஒப்புக்கொடுப்போம். 

1. அன்புள்ள ஆண்டவரே! நீர் எமக்கு அளித்த உன்னத கொடையாகிய திரு அவையை கறையின்றி பாதுகாக்கவும், தவறான பேதகங்கள், போதனைகளிலிருந்து அதன் ஏகம், பரிசுத்தம், கத்தோலிக்கம் மாசுபடாமல் காக்கவென உழைக்கும் திரு அவை பணியாளர்கள் அனைவரையும் நீரே வழிநடத்திக் காத்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. அன்புள்ள ஆண்டவரே! இன்று அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடி எமக்காக செபித்து நிற்கும் எமது மறை மாநில ஆயர், அவர்களோடு இணைந்து பலி ஒப்புக்கொடுக்கும் குருக்கள் துறவிகளை உமது அன்பின் கரங்களால் வழிநடத்தி ஆசீர்வதிக்கவும், ஒவ்வொரு ஆன்மாவின் இடேற்றத்திற்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் வஞ்சையை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்புள்ள ஆண்டவரே! உமது தாயின் பதியிலே கூடியிருக்கும் எம் அனைவரையும் உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். பண்புகள் நிறைந்த குடும்பங்கள் உருவாகவும், பாசத்தை விதைக்கும் உறவுகள் உருவாகவும், அன்பினால் அடித்தளமாகும் அழகான சமூகம் உருவாகவும், அனைவரையும் அரவணைக்கும் மனங்கள் பெருகவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. அன்புள்ள ஆண்டவரே! எம்மை சுற்றியுள்ள துன்பப்படுவோர், வேதனைப்படுவோர், கைவிடப்பட்டோர், புறம்தள்ளப்பட்டோர், அடிமை வாழ்வில் அகப்பட்டோர் என பலவீனமாக்கப்பாட்டுள்ள பலர் வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். இவர்களின் இயலாமையில், அறியாமையில், பலவீனத்தில் ஆண்டவரே நீரே இவர்களோடு இருந்து பயணிக்கவும், இந்நிலைக்குரிய காரணிகளை அறிந்து துணிவோடும், தெளிவோடும் பயணிக்கவேண்டிய ஆற்றலையும் வல்லமையையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5.அன்புள்ள ஆண்டவரே! உம்மை உதரத்திலே பெற்று இதயத்தில் சுமந்து, கரங்களிலே தாங்கிச் சென்ற தாய் அன்னை மரியாவைப் போல நாமும் எமது திரு அவைக்காக, எமது சமூகத்திற்காக, எமது குடும்பங்களுக்காக வாஞ்சையோடு உழைக்கும் உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு. என்றுமே கன்னியான மரியாவை இவ்வுலகின் வெளிச்சமாக எமது வாழ்வுக்கான மாதிரியாகவும் தந்த இறைவா! உம்மைப் போற்றுகின்றோம். ஒவ்வொரு ஆன்மாவையும் நேசித்து, நாம் ஒவ்வொருவரும் இறை மாட்சி காணும் ஆர்வத்தை உம் அன்னைக்கு அளித்ததற்காக உமக்கு நன்று கூறுகின்றோம்.  அவளின் பொருவிழாவைக் கொண்டாடும் நாம் அவளை ஏறெடுத்துப் பார்த்து பின்பற்றுகின்ற வரத்தை எங்களுக்கு தாரும். நாம் செல்லும் பாதை வரைய துணிவைத் தாரும், இவ்வாழ்க்கையை புடமிட அவள் பரிந்துரையை பெற்றுத் தாரும். உம்மிடம் ஒப்புக்கொடுத்த  எமது தேவைகளும் மன்றாட்டுக்களும் அர்த்தப் பெறுவனவாக. நாம் விரும்பி கேட்கும் அருளும் ஆசீரும் அவை பெற்றுத்தருவனவாக. இவற்றை எல்லாம் ஏங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மைப் பார்த்து கேட்கின்றோம், ஆமென். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

பொதுக் காலம் ஆறாம் ஞாயிறு - 11.02.2024

 பொதுக் காலம் ஆறாம் ஞாயிறு 



முன்னுரை

(வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)

இப்புதிய இளங்காலைப் பொழுதினிலே, அன்பின் உறவுகளாய், இறைவனின் பிள்ளைகளாய், அவரது பீடம் நாடி, தெய்வீகப் பலி ஒப்புக்கொடுக்க வந்திருக்கும் என் இனிய உறவுகளே. உங்கள் அனைவரையும் இயேசுவின் பெயரால் வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் ஐந்தாம் வாரத்திற்குள் நுழைகின்றோம். அனைத்துமே புதிதாய் பிறந்து, அனைத்திலும் புதிய வாழ்வுக்கான பாதை அமைத்திட இந்த ஞாயிறு எம்மை அழைத்து நிற்கின்றது. 

விடுதலைப் பயணத்தின் தொடர்ச்சியாகவும், குருக்களுக்கான மேலும் வழிபடுவதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை வரிசைப்படுத்துகின்ற நூலாகவும் லேவியர் நூல் திகழ்கின்றது. தொழுநோயாளியின் மட்டில் குருவுக்குரிய கடமை பற்றி முதலாம் இறைவார்த்தையான லேவியர் நூல் எடுத்தியம்புகின்றது. ஆன்மீக முதிர்ச்சியின்மை என்பது உரோமை மக்களின் சீர்கெட்ட நடத்தையிலே காணப்படுகின்றது என்பதைக் கண்டிப்புடன் விமர்சிப்பதையும், திரு அவை மேலுள்ள எமக்குரிய கடமை பற்றியும் புனித பவுலின் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய முதலாம் திருமுகத்தில் தெளிவாகக் காட்டுகின்றார். மேலும் மாற்கு எழுதிய நற்செய்தியிலே, இம்மக்கள் மேல் கொண்ட இயேசுவின் இரக்கம், அனைத்தையும் கடந்து செயலாற்றக் கூடியது என்பதை காட்டுகின்றார். 

நாம் வாழும் சமூகம், தேவையற்றைதை சேகரித்து, தேவையானதை தவறவிடுகின்றது. சுய நலனை உள்வாங்கிக்கொண்டு, பிறருக்கு உதவுவதை, இரக்கம் காட்டுவதை, அவர்களை ஆதரிப்பதை தவறவிடுகின்றது. விமர்சனங்கள் அதிகரித்து, வீண்பேச்சுக்கள் மலிவடைந்து, வாதங்கள் உருவாகிக்கொண்டே செல்கின்றது. இருப்பினும், இயேசுவின் பரிவும், இரக்கமும் எம்மை சிந்தனைக்குள் இட்டுச்செல்லவேண்டும். சங்கீத ஆசிரியரோடு இணைந்து, 'ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்' என்று அவர் பாதம் நாடிச் செல்ல இவ்வழிபாடு எம்மை அழைத்து நிற்கின்றது. இச்சிந்தனைகளை மனதில் இருத்தி தொடரும் இக்கல்வாரிப் பலியில் பங்குகொள்வோம்.

வருகைப் பல்லவி

ஆண்டவரே, நீர் என்னைக் காப்பாற்றுபவராகவும் புகலிடமாகவும் இரும் அதனால் நீர் என்னை மீட்டீர் ஏனெனில் நீர் என் காறையாகவும் அடைக்கலமாகவும் உள்ளீர் உமது பெயரின் பொருட்டு நீர் எனக்குத் தலைவராகவும் இருப்பீர் எனக்கு உணவு அளிப்பீர். திபா 30:3-4

உன்னதங்களிலே' சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உண்மையும் நேர்மையும் உள்ள நெஞ்சங்களில் நீர் குடிகொள்வதாக உறுதி அளித்துள்ளீNர் எங்கள் உள்ளங்களில் நீர் தங்குவதற்கு ஏற்றவாறு நாங்கள் வாழ எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு:

லேவியர் நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 44-46

தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

பதிலுரைப் பாடல்

திபா 32: 1-2. 5. 11

பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம். 

இரண்டாம் இறைவாக்கு :

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 - 11: 1

நான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன், நீங்கள் என்னைப்போல் நடங்கள்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா. லூக் 7: 16

நற்செய்தி இறைவாக்கு:

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40- 45

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்

விசுவாசிகள் மன்றாட்டு

குரு: 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' என்று தொழுநோயாளியை சுகப்படுத்திய இறைவனின் வார்த்தைகள் எமக்கும் ஆறுதல் தரும் வார்த்தைகளாக அமைகின்றன. ஆண்டவர் விரும்பும் மனநிலையில், எமது விண்ணப்பங்களை திரு அவையின் தேவைகளோடு இணைத்து மன்றாடுவோம்.

1. அன்பின் ஆண்டவரே, திரு அவைப் பணியாளர்கள் அனைவருக்கும், திரு அவையின் தேவையை முழுமையாக அறியும் ஞானத்தைக் கொடும், ஏழைகளின் உள்ளத்தை அறியும் வாஞ்சையை கொடும், துயருறும் மக்களின் அழுகுரல் கேட்கச் செய்தருளும். இவ்வாறு எப்பொழுதுமே இவர்கள் தங்கள் பணி வாழ்வின் அர்ப்பணத்திற்கு சான்றுபகிர அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. அன்பின் ஆண்டவரே, நீதியின் பொருட்டு துயருறும் அனைவரும், உமது சிலுவையின் தியாகத்தில் பங்குபெறுவார்களாக. தமது வீழ்ச்சியில் நிறைவுகாணவும், தாழ்ச்சியில் உயர்ந்து நிற்கவும், கண்னீரில் அர்த்தம் காணவும், தமது துன்பத்தில் வெற்றியைக் கண்டுகொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

3. அன்பின் ஆண்டவரே, இவ்வுலகத்தின் வாழ்வுக்காக, திரு அவையின் வளர்ச்சிக்காக பல நிலைகளில் இருந்து பணிபுரிந்து, தமது உழைப்பால், ஊதியத்தால் உதவிகள் புரியும் நலன் விரும்பிகள் நன்கொடையாளிகள் அனைவரையும் ஆசிர்வதித்து, அவர்களின் வாழ்வு என்றும் எப்பொழுதும் சிறந்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் 

4. அன்பின் ஆண்டவரே, வைத்திய சாலைகளில் நோய்வாய்ப்பட்டு பல்வேறு வழிகளில் உதவிகளின்றி தவிக்கும் அனைவரையும் உமது கரமேந்தி, காத்தருள்வீராக. துன்பத்தின் வழியே சிலுவையின் வாழ்வு என்று எண்பித்த இயேசுவின் வழியில் இவர்களும் ஆறுதல் அடையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

5. அன்பின் ஆண்டவரே, எமது பங்கின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உழைக்கும் அனைவரும் இறைவனின் வழிநடத்துதலையும் பராமரிப்பையும் தங்கள் வாழ்வில் உணர்ந்துகொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

குரு:: இறைவா, இன்றைய நாளுக்காக நன்றி சொல்லி எமது வாழ்வை ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். எமது உள்ளத்தின் விண்ணப்பங்கள் எல்லையற்றவை இருப்பினும், உமது இறை திட்டத்தில் எம்மை அர்ப்பணிக்கின்றோம். நாம் நாளும் வளம்பெறவேண்டும், இறையன்பின் வளரவேண்டும், சகோதரத்துவத்தில் உயரவேண்டும். நீரே எமது விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து அவற்றைப் பெற்ருத்தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இந்தக் காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்திப் புதுப்பிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திருவுளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அது நிலையான பயன் விளைவிப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி:

காண். திபா 77:29-30: அவர்கள் உண்டு முற்றிலுமாய் நிறைவடைந்தனர் ஆண்டவர் அவர்கள் விரும்பியவற்றையே அவர்களுக்கு அளித்தார் அவர்களது விருப்பம் வீணாகவில்லை. 

அல்லது

யோவா 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:

ஆண்டவரே, இனிய விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உண்மை வாழ்வை அளிக்கும் உணவின் மீது நாங்கள் என்றும் ஆவல் கொள்ளச் செய்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச.ஜே. சுரேந்திரராஜா, அமதி

Sunday, 4 February 2024

இலங்கை மாதா பெருவிழா 04/02/2024



திருப்பலி  முன்னுரை

இறையருள் வேண்டி, அவர் பாதம் ஓடி வந்திருக்கும் என் அன்பு இறைமக்களே! புனித இலங்கை அன்னையின் திருவிழா திருப்பலியில் கலந்து சிறப்பிக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். 

இலங்கைத் தீவின் மிகவும் அழகான பெருவிழாக்களில் ஒன்றாக, இம் மண்ணின் சுதந்திரதினமாகிய மாசி 4ம் நாள் இப்பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இரண்டாம் உலகப் போரின் போது இலங்கைத் தீவை பாதுகாக்க வேண்டி உயர் ஆயர், வண. மசோன் அவர்கள் அன்னை மரியாவிடம் இலங்கைத் தீவை ஒப்புக்கொடுத்து மன்றாடினார். இதனால் இலங்கை காப்பாற்றப்பட்டது. இதனாலேயே, இலங்கைத் தீவுக்கே உரித்தான விழாவாக இலங்கை மாதா பெருவிழா அமைகின்றது. 

எமது நாட்டின் பாதுகாவலி அன்னை மரியாவிடம், எமது நாட்டின் அழகையும், தனித்துவத்தையும், மனித மாண்பையும், எமது கலை, கலாசாரத்தையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். ஆபத்துக்களின் போது எம்மை பாதுகாத்து, வழிநடத்திய தாய், இன்றைய சமகால அரசியல், பொருளாதார குழப்பங்கள் அதனால் ஏற்பட்ட பிறழ்வுகள் மத்தியிலும் எம்மை வழிநடத்துவாளாக. இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்தவள், போரின் போது எம்மை வழிநடத்தியவள், இன்று உலகத்தின் வேகத்தில் நிலை தடுமாறும் எமது வாழ்க்கை ஓட்டத்தில் எம்மோடு உடன் பயணிப்பாளாக. நாம் விரும்பித் தேடுகின்ற அழகான, பொய்மையற்ற, புதிய சமுதாயம் படைக்க துணைபுரிவாளாக. அம்மா என்று அழைக்கும் குழந்தைகள் அனைவரின் செபங்களையும், கண்ணீரையும் கடைக்கண் நோக்குவாளாக.

இப்பெருவிழாவைக் கொண்டாடும் எமக்கு, இறைவனின் ஆசீர் நிறைவாகக் கிடைக்கவேண்டி, இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 


இறைமக்கள் மன்றாட்டு

குரு: கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என நம்பிய அன்னை மரியாவைப் போல, எமது வாழ்விலும் ஆழமான நம்பிக்கையும், எதிர்நோக்கும் கொண்டவர்களாக எமது விண்ணப்பங்களை ஆண்டவர் பாதம் சமர்ப்பிப்போம். 

1. அன்பின் இறைவா! 'உலகெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள், உலகு முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருப்பேன்' என்ற உமது வார்த்தைக்கு தம்மை அர்ப்பணித்த அனைத்து திரு நிலைப் பணியாளர்கள், பொது நிலைப் பணியாளர்கள் அனைவரும், விளக்கு தண்டின் மீது வைக்கப்பட்ட ஒளியாக இருப்பார்களாக. தப்பறையான எண்ணங்கள், போதனைகள், கொள்கைகள் அனைத்திலிருந்தும் எமது தாய் திரு அவையை பேணிப் பாதுகாத்திட உழைக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம். 

2. உயிரின் ஊற்றே இறைவா! பாதைகள் தெளிவற்று, வாழ்க்கையே அர்த்தம் இழந்து, ஆன்மீக வறுமையினாலும், உள நோயினாலும் இன்னலுறும் எமது இளைஞர், யுவதிகள், உமது தாய் எம் அன்னை மரியாவைப்போல் கற்புக்கு வரைவிலக்கணம் கொடுக்கும் கன்னிமையால் உலகம் போற்ற துணிந்து பெற்ற தூய தைரியத்தை கொடுத்து, இத் திரு அவையின் அழகுமிக்க தூண்களாக திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

3. எமது நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். வல்லமையின் இறைவா! மக்களின் நலனே இவர்கள் எண்ணமாகட்டும், சிந்தனையாகட்டும் இவர்கள் செயல்களாகட்டும். அரசியல் சார் தீர்மானங்கள் வழியாக இவர்கள் ஆற்றும் சேவை பொது நலனாக இருப்பதாக. இவர்களை உமது வல்லமையால் நிறைத்து எமது மக்களின் கண்ணீரில் கரங்களாகவும், வறுமையில், தாங்கும் இதயமாகவும், போராட்ங்களில் துணை நிற்கும் விரர்களாகவும் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4.  இன்று பல்வேறு காரணங்களால் புலம்பெயர் நாடுகளிலே வாழுகின்ற எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். அன்பின் ஆண்டவரே! பல வேளைகளிலே, ஆலயம் இழந்து, உறவு இழந்து, உடமைகள் கூட இழந்து,  கல்வி இழந்து, திருமண உறவு தடைப்பட்டு  சிதறி வாழும் இவர்களை ஒன்று சேர்க்கவும்,  இவர்களின் பல்வேறு தேவைகளில் நீரே உறுதுணையாக இருந்து வழி நடத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: என்றுமுள்ள இறைவா! சிலுவையிலே நீர் தொங்கியபோது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் இடை நிலையாளராக நீர் இருந்து அதை இதயத்திலே தாங்கும் வல்லமையை உம் தாய்க்கு கொடுத்தீரே. அந்த அன்புத் தாயை எமக்கும் தாயாகக் கொடுத்து எம்மை ஆசீர்வதிக்கின்றீர். இன்று அவளுடைய வியாகுலங்களை நினைந்து, செபத்திலும், தவத்திலும், எமது பாவங்களுக்காக பரிகாரம் செய்வதிலும் அவளோடு இணைகின்ற நாங்கள், எமது விண்ணப்பங்களை அவள் விழியாக ஒப்புக்கொடுக்கின்றோம். இவற்றை ஏற்று, உமது கனிவான இதயத்தில் இருந்து வழிந்தோடும் அருள்வளங்களை எமக்கு பொழிந்தாருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம், அமென். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

பொதுக் காலம் ஐந்தாம் ஞாயிறு - 04.02.2024

 பொதுக் காலம் ஐந்தாம் ஞாயிறு



முன்னுரை

(வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)

என் அன்புக்கினிய இறைமக்களே! இன்றைய நாளின் முதல் பணியாக, நாம் ஒன்றாகக் கூடி, இறைவனுக்கு நன்றிப் பலி ஒப்புக்கொடுத்து, அவர் தருகின்ற அருள் வளங்களைப் பெற்று வாழ வந்திருக்கின்றோம். பொதுக்காலம் ஐந்தாம் வாரம் எம்மை ஓர் ஆழ்ந்த இறையியல் சிந்தனைக்கு அழைத்துச் செல்கின்றது. கடவுளின் அழைப்பும், அவரது தேர்வும், அவரது பணியின் தன்மையும், இயல்பும் இன்றைய இறைவார்த்தைகள் வழியாக கொடுக்கப்படுகின்றன. 

முதலாவது இறைவார்த்தையிலே, யோபுவின் வாழ்வு சோதிக்கப்படுகின்றது. யோபு ஒரு நீதிமான், கடவுள் அச்சம் உடையவர் இருப்பினும், அவர்படும் துன்பம் அவரின் இறை நம்பிக்கையை சோதிக்கின்றது. இரண்டாவது இறைவார்த்தையில், நற்செய்தி மட்டில் கொண்டிருக்கும், புனித பவுலின் வீரம் நிறைந்த வார்த்தைகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன: 'நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்' எனும் வார்த்தைகள், இயேசுவின் மேல்

கொண்ட அதீத அன்பையும், பிரமாணிக்கத்தையும் எண்பிக்கின்றன. நற்செய்தி இறைவார்த்தையில், இயேசுவின் பொறுப்புமிக்க பணி ஆர்வத்தையும், சீடர்களின், சீடத்துவ உருவாக்கத்தையும் நற்செய்தியாளர் தெளிவாக காட்டுகின்றார். நாமும் அழைப்புப் பெற்றவர்கள், எமது வாழ்வும் இறைவனை நோக்கிச் செல்கின்ற நாளாந்த பயணமாக இருக்கின்றது. நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருக்கின்றோம் என்பதற்காக, துன்பப்பட மாட்டோம் என்பது அர்த்தமற்ற கருத்து என்பதை முதலாம் இறைவார்த்தை உணர்த்துகின்றது. ஆகவே, இயேசுவில் எமது வாழ்வு கண்ட ஆழமான உருவாக்கம், என்றும் அவரைச் சான்றுபகர அழைத்துச் செல்ல வேண்டும். நாம் வாழும் சமுதாயம், ஆரோக்கியமற்று, பாவம் செய்வதன் உணர்வைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. பொய்யான விழுமியங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றது. நாம் சான்று பகரும் அன்பின் மக்களாக வாழுவோம். இயேசுவை எடுத்துச் சொல்லி வாழ்ந்து காட்டுவோம். இவ்வரங்களைக் கேட்டு தொடரும் பலியில் மன்றாடுவோம்.

வருகைப் பல்லவி திபா 94:6-7

வாருங்கள்! கடவுளைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். ஏனெனில் அவரே நம் ஆண்டவராகிய கடவுள்.

உன்னதங்களிலே' சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தை இடையறாத பரிவிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் விண்ணக அருளை மட்டுமே எதிர்நோக்கியுள்ள இக்குடும்பம் உமது நிலையான பாதுகாவலால் என்றும் உறுதி அடைவதாக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு:

யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.

பதிலுரைப் பாடல் திபா 147

பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்;!

இரண்டாம் இறைவாக்கு :

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!

நற்செய்தி இறைவாக்கு:

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

பல்வேறு பிணிகளால் வருந்தியவரை இயேசு குணப்படுத்தினார்.

நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்


விசுவாசிகள் மன்றாட்டு

குரு: நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! எனும் புனித பவுலின் வாழ்வின் குறிக்கோள்கள், எமது பணியின் எடுகோள்களாக அமைவதாக. நாம் ஒரே சமூகமாகக் கூடி, சான்று பகரும் மக்களாக, திரு அவையின் வேண்டுதல்களை இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. திரு அவையின் வாழ்வுக்காக மன்றாடுவோம்: நற்செய்திப் பணி ஆற்றுகின்ற அனைவரும், இயேசுவையே முன்னிலைப்படுத்தி, தளரா உள்ளம் கொண்டு, வாழ்வால், வார்த்தையால் துணிவோடு போராடவும், தீமைகளை தகர்த்தெறிந்து, நன்மைகளை நாளும் எடுத்தியம்பும் வாஞ்சைகொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: நற்செய்தியை அறிவிக்கும் ஆற்றலையும், ஆர்வத்தையும் கற்றுத்தந்த முதல் விளை நிலம் குடும்பம் என்பதை நன்கு உணர்ந்தவர்களாய், நாம் அமைக்கும் குடும்பத்தில், புனிதம் வாழப்படவும், இதனால் அன்பையும், பாசத்தையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் அனுபவிக்க, இறைவன் என்றுமே அருள்கூர்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமது பிள்ளைகளுக்காக மன்றாடுவோம்: போதைக் கலாராசாரமும், பிரிவினைகளும், நவீன தொடர்பாடல் மற்றும் ஊடகங்கள் வழி அடிமை வாழ்வும் பெருகிக்கொண்டே போகும் இக்கால சூழலில், வாழ்வின் நிலை உணர்ந்து, அழைத்தலின் பொருள் உணர்ந்து, எதிர்காலத்தின் தேவை அறிந்து செயற்படும் இளைஞர், யுவதிகளை உருவாக்கி, உயர்வாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நிலத்தின் விளைச்சலுக்காக மன்றாடுவோம்: நாளும் பொழுதும் உழைத்து, உழைப்பின் வியர்வை சொறிந்து, இயற்கை அன்னை தந்த இறைவனின் கொடையாகிய விளைச்சலுக்காய் நன்றி சொல்வோம். நல்ல மனம் கொண்டு, நேர்மையான வாழ்வு கொண்டு, உயரிய பண்புகள் கொண்டு இவற்றைப் பயன்படுத்தவும், எமது மக்களின் பசி, பிணி தீர்க்கும் தாராள சிந்தையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: அன்பின் ஆண்டவரே, நீர் கொடுத்த அனைத்து வரங்களுக்காகவும், நன்மைகளுக்காகவும் நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். நாம் உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து விண்ணப்பங்களும் உமதண்டை வந்து சேர்வனவாக. பிள்ளைக்குரிய பாசத்தோடும், உணர்வோடும், எமது தேவைகளை ஏற்று நிறைவேற்றித் தந்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை பார்த்து கெஞ்சி மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, வலுக்குறைவுற்ற எங்களுக்கு உதவியாக இப்பொருள்களைப் படைத்திருக்கின்றீர் அதனால் இவை எங்களுக்கு நிலைவாழ்வின் அருளடையாளமாக மாறிட அருள் புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி:

காண். திபா 106:8-9 ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டும், மானிடருக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டும் அவர்கள் அவருக்குப் புகழ் சாற்றுவார்களாக! ஏனெனில் வெறுங்கையருக்கு அவர் நிறைவளித்தார் பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்! 

அல்லது

துயருறுவோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். மத் 5:4,6

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:

இறைவா, ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் நாங்கள் பங்கேற்கத் திருவுள மானீNர் அதனால் கிறிஸ்துவுக்குள் நாங்கள் ஒன்றிணைக்கப்பெற்று உலகின் மீட்புக்காக நற்கனி தந்து மகிழ்ந்து வாழ எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

அருட்தந்தை ச.ஜே. சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...