Monday, 21 July 2025

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்ணங்களோடும் இத்திருப் பீடம் நாடி வந்துள்ளோம். பொதுக்காலம் இருபத்தி ஒறாம் ஞாயிறு வாரத்தில் பயணிக்கும் எமக்கு இன்றைய இறைவார்த்தைகளின் ஆன்மிகத்தோடு சிந்திக்க இருக்கின்றோம். 

"மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்" எனும் இறைவனின் வார்த்தை இன்றைய முதலாம் இறைவார்த்தையில் உரக்க ஒலிக்கின்றது.  இறைவாக்கினர் எசாயா அறிவிக்கும் இறைவனின் வார்த்தைகள் மிக ஆழமானதே! “தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்” எனும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் வார்த்தைகள் எமக்கான அழகிய அழைப்பாக அமைகின்றன. லூக்கா நற்செய்தியும் எமது தனிப்பட்ட வாழ்வைக் குறித்து சாடுகின்றார், சவால்விடுகின்றார். 

நமக்கு முன்பே தெரியும் வாழ்வு மிக சாதாரணமானது அல்ல, மிக இலகுவானதும் அல்ல. சோதனைகளுக்குள் அதிகம் சிக்கி தாடுமாறும் காலம். ஏமாற்றங்களை எதிர்பார்த்து, வெறுப்புக்களை சம்பாதித்து, சுய மரியாதைகளை இழந்து, மற்றவர்களின் கடும் சினத்திற்கு உள்ளாகும் ஒரு விசித்திர வாழ்வைத் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இதைத்தவிர, தொலைத் தொடர்பு சாதனங்களால் சூழப்பட்டு, எது சரி எது பிழை தெரியாதமல், பிறர் பெயருக்கு பங்கம் விளைவித்தும் வாழும் இவ்வாழ்விலே,  தூய ஆவியை தொலைத்து தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 

எமது இறை உறவை பலப்படுத்தவும், எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு பணிபுரியவும், திரு அவையை  அன்புசெய்து வாழவும் இறைவார்த்தை விடுக்கும் சவால் இன்று  எமக்கு கொடுக்கப்படும் அழைப்பே. நாம் இறைவனில் தொடர்ந்தும் வாழவே, தூய ஆவி எம்மை வலுவூட்டுகின்றார். இன்றைய இறைவார்த்தை வழியாக தூய ஆவிக்கு செவிமெடுப்போம், தூய ஆவியின் துணைவேண்டி நிற்போம், அவரின் அழைப்பில் எம்மையும் இணைத்து இப் பலியில் கலந்திடுவோம். 


வருகைப் பல்லவி   'காண். திபா 85:1

ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்து, என் மன்றாட்டை. கேட்டருளும்; என் கடவுளே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ள உம் ஊழியனை மீட்டருளும்; ஆண்டவரே! என் மேல் இரக்கமாயிரும் ஏனெனில் நாள் முழுவதும் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டேன்.


திருக்குழும மன்றாட்டு

நம்பிக்கையாளரின் உள்ளங்களை ஒன்றிணைப்பவரான இறைவா, நீர் கற்றுத்தருவதை உம் மக்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை விரும்பவும் செய்தருளும்; அதனால் மாறிவரும் இவ்வுலகச் சூழலில் எங்கள் இதயங்கள் உண்மையான பேரின்ப உலகின் மீது என்றும் நாட்டம் கொள்ளச் செய்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

உங்கள் உறவின் முறையாரை அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21

ஆண்டவர் கூறியது:

மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில் வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.

அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும், லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.


1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!

மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! -பல்லவி


2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;

அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7,11-13

சகோதரர் சகோதரிகளே,

தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: “பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்துபோகாதே. தந்தை தாம் ஏற்றுக் கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.” திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ?

இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, “தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.” அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில்

இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:

“இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள்.

ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

குரு: இறை அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.


1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று


3. இயற்கை அணர்த்தத்தினால் யுத்தத்தினால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று


4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்

எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரே பலியினால் உமக்கென மக்களைச் சொந்தமாக்கிக்கொண்டீரே; உமது திரு அவையில் ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை எங்களுக்குக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 103:13-15 'ஆண்டவரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடை கின்றது; அதனால் பூவுலகினின்று உணவு அளிக்கின்றீர்; திராட்சை இரசம் மனித இதயத்தை மகிழ்விக்கின்றது.


அல்லது - யோவா 6:54 

எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், என் கிறார் ஆண்டவர். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தின் விருந்து எங்களுக்கு முழுமையான நலம் தரும் மருந்தாய்ச் செயல்பட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமது இரக்கத்தில் முழுமையாக நிலைபெற்றிருந்து அனைத்திலும் உமக்கு உகந்தவர்களாக இருக்கத் தகுதி பெறுவோமாக. எங்கள்.


அருட்தந்தை ஜே. சுரேந்திரராஜா, அமதி 

Thursday, 17 July 2025

பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரம் 17/08/2025

 பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரம் 


திருப்பலி முன்னுரை

இறை அன்பில் என்றும் இணைந்திருக்கும் என் இனிய உள்ளங்களே! உங்கள் அனைவரையும் இன்றைய திருப்பலிக்கு அழைத்து நிற்கின்றோம். பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் நாம், இறை அனுபவம் பெற்று, இறை திட்டத்தில் இணைந்து, புதிய வாழ்வுக்கான பாதையில் எம்மையும் இணைத்திட நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம். 

இன்றைய இறைவார்த்தைகள் மீண்டும் இயேசுவில் இணைந்திடும் வழியையே காண்பிக்கின்றன. இயேசுவில் உறுதியாக பற்றிக்கொண்டு அவரில் இணைந்து வாழும் வழியை உறுதிப்படுத்துகின்றன. 

இவ்வுலகத்தில் காணப்படும் சமுக நடைமுறைச் சட்டங்கள், உலக போக்குகள், உருவாக்கப்பட்ட நெறிமுறைகள், எம்மைச் சுற்றி நாம் அமைத்திருக்கும் குறுகிய வட்டங்கள், எம்மை சிந்திக்க விடாமல் எம் எண்ணங்களை, எமது சிந்தனைகளை எமது வாழ்வையுமே கட்டுப்படுத்தும் இன்றைய சமுக தொடர்புசாதனங்கள், சினிமாக்கள், சின்னத்திரைகள், எமது அநாகரிக தொடர்பாடல்கள் மேலும் எமது சாதி வரம்புகள் எல்லாமே இன்றைய இயேசுவின் வார்த்தையில் உடைக்கப்பட்டு, மீளவே சிந்திக்கப்பட வேண்டிய தேவையில் இருக்கின்றது. உலகத்திற்கு இவைகள் ஒரு வகை ஊந்துதலாயினும், இயேசுவை பின்பற்றும் எமக்கு இவைகள் ஒரு சவாலே. "என்னை உண்போரும் என்னால் வாழ்வர்" என்று இயேசுவை நாளும் சுவைக்கும் நாம் இவற்றைக் கடந்து தான் சிந்திக்கவேண்டும். 

ஆகவே, இன்றைய பலியிலே நாம், இயேசுவின் உடலும் இரத்தமும் தரும் வாழ்வுக்கான பாதையை அமைக்க மன்றாடுவோம். அவர் இன்றும் எம்மை அன்பு செய்கின்றார் என்பதை இன்றும் நாம் நாளும் கொண்டாடும் திருப்பலி வழியாக எண்பிக்கின்றார். அவாரோடு இணைந்திருப்போம், அவர் மொழி கற்றிடுவோம், அவரையே உண்டு, பருகி வாழ்ந்திட, வாழ்வித்திட இப்பலியில் மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - திபா 83:10-11

எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்; நீர் தி செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். - வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோலி, முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மை அன்பு செய்வோருக்குக் கட்புலனாகாத பல்வேறு நன்மைகளை நீரே ஏற்பாடு செய்திருக்கின்றீர்; எங்கள் இதயங்களில் உமது அன்பின் நிறைவைப் பொழிவதால் நாங்கள் உம்மை அனைத்திலும், அனைத்துக்கும் மேலாகவும் அன்பு செய்து எல்லா வகை மனித எதிர்பார்ப்புகளையும் கடந்த உம் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே!

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10

அந்நாள்களில்

தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள்.

அதற்கு அரசன் செதேக்கியா, “நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே” என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.

எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, “என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது” என்று கூறினார்.

அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, “உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு” என்று கட்டளையிட்டான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 40: 1. 2. 3. 17 (பல்லவி: 13b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.


1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;

அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். -பல்லவி


2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்;

சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்;

கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்;

என் காலடிகளை உறுதிப்படுத்தினார். -பல்லவி


3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்;

பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். -பல்லவி


17 நானோ ஏழை; எளியவன்;

என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்;

நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே,

எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே,

திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


இறைமக்கள் மன்றாட்டு

1. வல்லமையுள்ள இறைவா! ஆன்ம தாகம் தீர்க்கவே நீர் உம்மை எமக்கு உணவாக தந்தீர். உம்மை உண்டு, பருகி வாழ்ந்திடும் நாம் எமது புனிதத்தை  நாளும் வளர்த்திடச் செய்யும். இதற்காக உமது உடலை உடைத்துத் தரும் உம் பணியாளர்கள் உம்மை என்றும் நேசித்து, அவ் அன்பை எம்மோடும் எம் அயலவரோடும் பகிர்ந்துவாழ செய்தருள வேண்டுமென்று, ...

2. வல்லமையுள்ள இறைவா! இவ்வுலகத்தை இயக்குபவர் நீரே, அதை பராமரிக்கச் செய்பவரும் நீரே என்பதை முழுமையாக நம்புகின்றோம். இன்று பல்வேறு நாடுகளில் இடம்பெறும் அனர்த்தங்கள், அழிவுகள், விபத்துக்கள் மத்தியில் எம் மக்களை கண்ணோக்கிப் பாரும். தொடர்ந்தும் எங்களை பாதுகாரும், இன்னல்கள் மத்தியில் வழிநடத்தும். நாமும் உம்மை அன்புசெய்வது போல் இவ் இயற்கையையும் அன்புசெய்யக் கற்றுத்தர வேண்டுமென்று, ...

3. வல்லமையுள்ள இறைவா! ஜுபிலி ஆண்டில் பயணிக்கும் நாம், கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இணைந்து உம்மிடம் மன்றாடுகின்றோம். எமது திரு அவையை கறையின்றி பாதுகாத்தருளும், பொய்மைமிகு பேதகங்கள் மத்தியில் அதை வழிநடத்தும், உம் மந்தையாகிய மக்களின் ஆன்மாக்களை உம்மிடம் கொண்டுசெல்லும் வழியில் அதற்காக உழைக்கும் அனைவரையும் உமது அன்பால் தாங்கிட வரமருள வேண்டுமென்று, ...

4. வல்லமையுள்ள இறைவா! எமது குடும்பத்திற்காக மன்றாடுகின்றோம். நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எமது பாசமிகு பெற்றோர்கள் என்றும் எப்பொழுதும் உம்மால் அன்புசெய்யப்படவும் அவர்கள் தொழில்துறைகள் அனைத்தும் நிறைவாக ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுகின்றோம். இவர்களை மதிக்கும், அன்புசெய்யும், இவர்களுக்காக செபிக்கும் நல்ல பிள்ளைகள் உருவாகவும், புதிய தலைமுறை உருவாக நல் விழுமியங்களையும் இவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று, ... 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாட்சிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - திபா 129:7

 இரக்கம் ஆண்டவரிடமே உள்ளது ; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.


அல்லது  யோவா 6:51-52

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்கிறார் ஆண்டவர். இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வருளடையாளங்களால் கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்த நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் இவ்வுலகில் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருந்து விண்ணகத்தில் அவருடன் தோழமை கொள்ளத் தகுதி பெறுவோமாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Wednesday, 16 July 2025

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் 10/08/2025

 பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் 


திருப்பலி முன்னுரை 

இறை அன்பில் இணைந்து, இறை பலியில் கலந்து இறை அருளைப் பெற கூடிவந்திருக்கும் அன்பு உள்ளங்களே! இயேசுவின் பெயரால் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் எமக்கு இயேசுவின் நிலைவாழ்வு தரும் உணவிலே எம்மை உள்ளத்து தூய்மையோடும், உண்மை உணர்வோடும் பங்கேற்க இன்றைய நாள் அழைத்து நிற்கின்றது. 

"ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்" எனும் திருப்பாடல் ஆசிரியரின் உள்ளத்து வரிகள் அனுபவ வரிகளாக, ஆழமான எண்ணங்களாக, தெளிவான வார்த்தைகளாக அனைத்து இறைவார்த்தைப் பகுதிகளையும் ஒன்றிணைத்து கொடுக்கப்படுகின்றது. இரண்டாயிரம் வருடங்களாகியும் இயேசுவை, எம் இறைவனை, திருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய அவரை நாம் உண்மை உண்மைக் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றோம்  என்றால் நாம் பெறுபெற்றவர்களே. 

இயேசுவை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். அவரே எம் வாழ்வு, அவரே நம் உயிர் என அனைத்தையும் அவருக்காகவே வாழ்ந்திடும் வாழ்வை கொண்டிருக்க இன்றைய இறைவார்த்தைகள் எம்மை அழைக்கின்றன. நாம் வாழும் இவ் அழகிய வாழ்விலே, மறைந்திருக்கும் அதிசயங்களில் ஒன்று இந்த இயேசுவே. இந்த இயேசுவை நாம் தொட்டுப் பார்க்கவும், சுவைத்துப் பார்க்கவும், கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நுகர்ந்து பார்க்கவும் முடியும் என்றால், நான் இயேசுவையே அணிந்துகொள்ளும் அழகிய கருவியாக மாறுகின்றேன். என்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வோம், நற்கருணையின் சாயல் என் வாழ்வு முழுவதும் மிளிர்ந்திட மன்றாடுவோம். இயேசு என்னை அன்புசெய்வது மாத்திரம் அல்ல, நானும் அவரை உண்டு, அவரில் என்னை மாற்றிக்கொள்ளவும் மன்றாடுவோம். 

இவ் அழகிய சிந்தனைகளுடன் தொடரும் இப்பலியில் முழுமையாக பங்கேற்று இறைவரம் வேண்டி நிற்போம். 


வருகைப் பல்லவி

ஆண்டவரே, உமது உடன்படிக்கையை நினைத்தருளும் உம் ஏழையரின் ஆன்மாக்களை ஒரு போதும் கைவிடாதேயும். ஆண்டவரே! எழுந்து வாரும்! உமது வழக்கை நீரே நடத்தும். உம்மை நாடும் குரலை மறவாதேயும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் தூய ஆவியார் எங்களுக்குக் கற்றுத்தந்தவாறு, உம்மைத் தந்தை என அழைக்க நாங்கள் துணிவு கொள்கின்றோம்; நீர் வாக்களித்த உரிமைப் பேறான விண்ணக வீட்டுக்கு நாங்கள் வந்து சேரும்படி நீர் தேர்ந்து கொண்ட மக்களுக்கு உரிய மனப்பான்மையை எங்கள் இதயங்களில் பொழிந்தருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 6-9

எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.

நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்று போலப் பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர்களின் புகழ்ப் பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 33: 1,12. 18-19. 20,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.


1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்;

நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது;

அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். -பல்லவி


18 தமக்கு அஞ்சி நடப்போரையும்

தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;

அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி


20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;

அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

எதிர்நோக்கியிருந்த நகரைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2,8-19

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போல் இருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய் நாட்டைத் தேடிச்செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, “அவர்களுடைய கடவுள்” என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.

ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

எதிர்நோக்கியிருந்த நகரைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2,8-12

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 24: 42,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 32-48

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.” அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.

அதற்கு ஆண்டவர் கூறியது: “தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப் பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப் படும். மிகுதியாக ஒப்படைக்கப் படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


அல்லது குறுகிய வாசகம்

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-40

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

1. நற்கருணையின் ஆண்டவரே! உம்மை தம் அபிஷேக கரங்களால் அர்ச்சித்து, இவ்வுலகின் ஆன்ம உணவாக நாளும் அளிக்கும் எம் குருக்கள், இக்குருத்துவத்தின் உன்னத மேன்மையை உணர்ந்து, தமது தகுதியின்மையிலும், தகுதியாக அழைத்த இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருக்கவும், திரு அவையின் சிறந்த மேய்ப்பர்களாக திகழ்ந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...


2. நற்கருணையின் ஆண்டவரே! நம்பிக்கை இழந்து, திரு அவையின் கோட்பாடுகளை எதிர்த்து, உம்மையே மறந்து வாழும் மக்களின் அறியாமையை கண்ணோக்கும். உம்மை உணவாக உண்ணும் பாக்கியம் இழந்துபோகும் இவர்களுக்கு, நீரே உன்னதர், நீரே தூயவர், நீரே வாழ்வளிப்பவர் என்பதை தமது உள்ளார்ந்த நம்பிக்கையாக கொண்டு வாழ வரமளித்தருள வேண்டுமென்று, ...


3. நற்கருணையின் ஆண்டவரே! இஸ்ராயேல் மக்களின் வாழ்வு முழுவதிலும் உமது உடனிருப்பும், பிரசன்னமும் இருந்தது போல, இன்று நாம் சந்திக்கும் அனைத்து விதமான போராட்டங்களிலும், துயரங்களிலும், தீமைகளிலும் எம்முடனிருந்து எம்மை நேரிய வழியில் நடத்திட வேண்டுமென்று, ...


4. நற்கருணையின் ஆண்டவரே! எமது பங்கின் ஆன்ம வழிநடத்தல் வழியாக, எமது மறைமாவட்டத்தின் உயரிய நோக்கத்தின் வழியாக, இன்றும் எம்மை அன்பு செய்து பராமரித்து வருகின்றீர். இதற்காக உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். தமது வாழ்வையே உமது நோக்காக, திரு அவையின் உயரிய க்கொள்கையாக கொண்டு வாழும் எம் ஆயர், குருக்கள், துறவறத்தார் மேலும் தன்னார்வ பாணியாளர்கள் அனைவருக்கும் உமது அன்பையும், ஆசீரையும், பாதுகாப்பையும் கொடுத்து வழிநடத்தவேண்டுமென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருளும்; இரக்கத்தால் நீர் எங்களுக்கு அளித்த இக்காணிக்கைகள் உமது ஆற்றலால் எங்கள் மீட்பின் மறைநிகழ்வாக மாறச் செய்வீராக. எங்கள்.


திருவிருந்தப் பல்லவி 

எருசலேமே! உயர்தரக் கோதுமையினால் உன்னை நிறைவடையச் செய்யும் ஆண்டவரைப் போற்றுவாயாக! நான் அளிக்கும் உணவு வழி மரபினர் வாழ்வதற்கான எனது சதை, என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களை உம்மோடு ஒன்றிக்கச் செய்து எங்களுக்கு மீட்பு அளிப்பதாக; அது எங்களை உமது உண்மையின் ஒளியில் உறுதிப்படுத்துவதாக, எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு வாரம் 03/08/2024

 பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு வாரம்

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே! 

இன்று பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து அவர் தரும் ஆன்மிக உணவை உண்டு, அவர் இரத்தத்தில் பருகி எமது வாழ்வை புதுப்பித்துக்கொள்ள ஒன்றுகூடிவந்துள்ளோம். ஒவ்வொரு திருப்பலியும் என்னையும் இறைவனையும், என்னையும் அயலவரையும், என்னையும் இவ் இயற்கையையும் இணைக்கும் ஓர் ஊடகமே. தன்னை தாழ்த்தி வந்த இயேசுவிடம், எம்மையும் தாழ்த்தி அவர் ஆசீரையும் வல்லமையையும் இரஞ்சி நிற்போம்.

இன்றைய இறைவார்த்தைகள் வாழ்வின் நிலையான பாடத்தை எமக்குக் கற்றுத்தருகின்றன. வாழ்வை சுருக்கி அதை ஞானக் கண்களோடு கற்றுக்கொள்வோமானால் இவைகள் அனைத்துமே வீண் என முன்மொழியும் விவிலிய ஆசிரியர்கள் எமது ஆன்மாவுக்கான எமது தேடல் உறுதியாகவும், நிலையாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இவ் இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் சிந்திக்கும் போது, இவ்வுலகத்திலே, கடவுளை மீறி மனிதனின் அறிவும், அவனது திறமையும், அவனது ஆசைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. உணர்வுக்கும் அவர்களது  இருப்புக்கும் உரிமைகொண்டாடும் இவ்வுலகில், அதன் நோக்கம் தவறிப்போவதை அறியாது, இறைபராமரிப்பில் நம்பிக்கை கொள்ளாது, கடவுளுக்குக் கூட இடங்கொடாது வாழும் போது, இவ்வுலகும் வீண்தான். இருப்பினும் மனமாற்றத்திற்கு எப்பொழுதும் இடமுண்டு. இதன் மத்தியில் நாம் எங்கே? என்பதை இன்று சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். 

இயற்கைச் சட்டத்திற்கு எதிராக செல்லும் அனைத்து மனிதனும் இறைவனுக்கு எதிராகவே செயற்படுகின்றனர்;

எது சரி, பிழை என அறிய விரும்பாத அனைவரும், இறைவன் பேசும் குரலை தொலைத்துவிடுகின்றனர்; உடலை விற்று, எதிர்காலம் தொலைத்து ஆன்ம பசியைத் தொலைத்து வாழும் பலருக்கு இயேசு ஒரு சிலை தான்; இயேசுவே என் வழி என்று நாம் செல்லும் பதை இன்று ஆரம்பமாகட்டும், ஒவ்வொரு நாளும் நான் தேடும் உயிருள்ள உணவாகட்டும். எம்மை கருவில் இருந்து உருவாக்கி, உயிராக்கி, உலகறிய காட்டிய இயேசுவை என்றும் எம் வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம். இதற்காக வரம்கேட்டு இப்பலியில் இணைந்திடுவோம். 


வருகைப் பல்லவி

கடவுளே! எனக்குத் துணை யாக வாரும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை ; நீரே என்னை விடுவிப்பவர். ஆண்டவரே! காலம் தாழ்த்தாதேயும்.


திருக்குழும மன்றாட்டு 

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் உம் அடியார்களாகிய எங்களுடன் இருந்து உமது கனிவிரக்கத்தை என்றும் எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு எங்களைப் படைத்து, வழிநடத்துகிறவர் நீரே எனப் பெருமை கொள்ளும் எங்களுக்காக நீர் படைத்தவற்றைப் புதுப்பித்து, புதுப்பித்தவற்றைப் பாதுகாத்தருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

உழைத்துச் சேர்த்த சொத்தை,

அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2; 2: 21-23

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.

ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும், வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ் நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.


3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;

‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.

4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும்

இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி


5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்;

அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;

6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;

மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி


12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;

அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

13 ஆண்டவரே, திரும்பி வாரும்;

எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி


14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;

அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!

நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!

ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5,9-11

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21

அக்காலத்தில்

கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, ‘என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

1. கருணையின் இறைவா! உமது திரு அவையை ஆசீர்வதியும். இறை நம்பிக்கை இழந்து, பொய்மையை உண்மையாக மாற்றி உழைத்திடும் மக்கள் மத்தியில் இயேசுவை உலகறிய கொண்டுசெல்ல உழைக்கும் திரு அவையின் பணியாளர்களை நீர் தாங்கிச்செல்லவும் வழிநடத்தவும் வேண்டுமென்று,...


2. கருணையின் இறைவா! திவ்ய நற்கருணையில் வீற்றிருந்து, ஆன்ம உணவாக எம் இதயத்தில் வருவதற்காய் உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். திருமுழுக்கு பெற்ற அனைத்து மக்களும் இதன் ஆழத்தை உணர்ந்து வாழவும், உம் வழியாக உண்மை வாழ்வுக்கு செல்லும் வழியை நாளும் தேடவும் அருள்புரிய வேண்டுமென்று,... 


3. கருணையின் இறைவா! எமது திருநாட்டில் எமது மக்களின் கண்ணீரையும், உள்ளத்து உணர்வுகளையும், முடங்கிக் கிடக்கும் எதிர்கால கனவுகளையும் நீர் கண்ணோக்கும். அரசியல் மாற்றங்களாலும், அதிகார அடக்குமுறைகளாலும், அலட்சியபோக்குகளாலும், பொருளாதார கெடுபிடிகளாலும் அவதிப்ப்படும் எம் மக்கள் அனைவர் உள்ளத்திலும் மாற்றங்கள் நிகழவும், நம்பிக்கையும், துணிவும் நாம் அனைவரும் சம்பாதிக்கும் விளைநிலங்களாகிட அருள்புரிய வேண்டுமென்று,...


4. கருணையின் இறைவா! அதிகாரத்தில் உள்ளவர்கள், மக்கள் நலனுக்காக உழப்பவர்கள் அனைவரும் நேர்மையையும் உண்மையையும் அணிகலனாகக் கொண்டு உழைக்கவும், பணம் பதவிக்காக அல்ல, மக்கள் அனைவரும் தேடும் மகிழ்ச்சியையும், அமைதியையும் இவர்கள் தமது உழைப்பால் பெற்றுக் கொடுத்திட வரமருளவேண்டுமென்று,...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - சா.ஞா. 16:20 

ஆண்டவரே, எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை வானத்திலிருந்து எங்களுக்கு அளித்தீர்.


அல்லது - யோவான் 6:35 

வாழ்வு தரும் உணவு நானே, என்கிறார் ஆண்டவர். என்னிடம் வருபவருக்குப் பசியே இராது ; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகக் கொடையால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உமது முடிவில்லா உதவியையும் உடனிருப்பையும் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்; எங்களை என்றும் கனிவுடன் காக்கத் தவறாத நீர் நிலையான மீட்புக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவீராக. எங்கள்.


அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Tuesday, 8 July 2025

பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு வாரம் - 27/07/2024

பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு வாரம் 

திருப்பலி முன்னுரை

இறை அன்பில் இணைந்து, புது உலகம் படைக்க இயேசுவின் திருக்குலமாய் கூடி வந்திருக்கும் என் உறவுகளே! இன்று பொதுக்காலம் 17ம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்றோம். இக்கல்வாரிப் பலியில் இறைபுகழ் பாட உங்களை அழைத்து நிற்கின்றோம். 

தொடக்கநூல் ஆசிரியர் இறைவன் இவ்வுலகின் மாந்தர்மேல் கொண்ட அன்பு எத்தகையது என்பதை எண்பிக்க, ஆபிரகாமிற்கும் இறைவனுக்கும் இடையில் நடந்த உரையாடலை படம்பிடித்துக் காட்டுகின்றார். சோதோம் கொமோரா எவ்வளவிற்கு பாவம் நிறைந்திருந்து, நீதிமான்களை இழந்து காணப்பட்ட வேளையில் இறைவனோடு இடம்பெற்ற ஒரு பரிந்துரையாக இதைக் காணலாம். குற்றங்களாலும் பாவங்களாலும் நாம் இறந்தவர்களாய் இருக்கின்றோம் என்பதை புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தின் வழியாக ஓர் அறைகூவல் விடுக்கின்றார். லூக்கா நற்செய்தியில் "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்" எனும் மிக ஆழமான நம்பிக்கை வாழ்வின் வழியைக் காண்பிக்கின்றார் இயேசு. 

எனவே, உண்மை என்பதற்கு வரைவிலக்கணம் இயேசு என்பதை உணர்ந்துகொள்வோம், வாழ்ந்து பார்ப்போம். பசித்தோர்க்கு உணவைக் கொடுத்தே வாழ்விக்கமுடியும், அன்பில்லார்க்கு அன்புசெய்தே வாழ்விக்க முடியும், காயப்பட்டோருக்கு மருந்தளித்தே ஆற்றமுடியும், உறவைத் தொலைத்தவர்க்கு உடனிருந்தே ஆறுதல் அளிக்கமுடியும். அதேபோல் தேவை அறிந்து செயற்படும் இயேசுவில் எமது உள்ளத்தை இன்று ஒப்புக்கொடுப்போம். ஏனெனில் இன்றைய திருப்பாடல் கூறுவதுபோல, 'ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்'  என்று ஆண்டவரின் பிரமாணிக்கத்தையும், இவ்வுலகின் மேல் கொண்ட அன்பையும் ஆழ விபரிக்கின்றது. ஆண்டவரில் நாம் கொள்ளும் அன்பு, இவ்வுலகின் எல்லையைவிட பெரியது என்பதை நிறுபிப்போம், அவருக்காக வாழும் தியாகம் திறைந்த எமது உள்ளம் கடலைவிட ஆழமானது என்பதை வெளிப்படுத்துவோம். 

இந்த ஆழமான சிந்தனைகளோடு தொடரும் இப்பலியில் இணைந்துகொள்வோம், இறைவரம் வேண்டி மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - காண். திபா 67:6-7,36 

கடவுள் தமது தூயகத்தில் உறைகின்றார்: தமது இல்லத்தில் மக்கள் ஒன்று பட்டு வாழச் செய் கின்ற கடவுளே அவர்களுக்கு வலிமையையும் மனத்திடத்தையும் அளிப்பார்.


திருக்குழும மன்றாட்டு

உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 20-32

அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்துகொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்” என்றார்.

அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார்.

அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, “தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், “நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்” என்றார்.

மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, “ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?” என்று கேட்க, ஆண்டவர், “நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்” என்றார்.

அப்பொழுது ஆபிரகாம்: “என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?” என, அவரும் “முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.

அவர், “என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?” என, அதற்கு அவர், “இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்” என்றார்.

அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்கு பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்த பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 138: 1-2a. 2bc-3. 6-7ab.7c-8 (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.


1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்;

தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

2a உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி


2bc உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;

ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.

3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;

என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி


6 ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;

எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;

ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.

7ab நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்;

என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; -பல்லவி


7c உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்;

ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு;

உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-14

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப் பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுந்துள்ளீர்கள்.

உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி உரோ 8: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்கு உரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-13

அக்காலத்தில்

இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று கற்பித்தார்.

மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


இறைமக்கள் மன்றாட்டு

 1.⁠ ⁠தாய்த் திரு அவைக்காக மன்றாடுவோம்:

எம் ஞான வழிகாட்டிகளான திரு நிலையினரும், துறவியர்களும் தாம்  பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழவும் முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, பணி வாழ்விலும் குழும வாழ்விலும் அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள அருள் கூரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

அல்லது 

எமது திருத்தந்தைக்காக மன்றாடுவோம் 

இவ்வுலக மக்களின் உன்னத வாழ்வுக்காகவும் , நம்பிக்கை வாழ்வுக்காகவும் தினமும் செபித்து இவ்வுலகை புதுப்பிக்கும் பணியில் தம்மை அர்ப்பணிக்கும் எமது திருத்தந்தை, தூய ஆவியால் வழிநடத்தப்படவும், தமது ஆழமான தீர்மானங்களால் திரு அவையின் வாழ்வுக்கு அணிசேர்க்கவும், அமைதி தேடும் உலகிற்காக பரிந்துபேசவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.⁠ ⁠வறுமையில் வாழ்வோருக்காக மன்றாடுவோம்:

நாளாந்த வாழ்வியல் ஓட்டத்தில் தம் வாழ்வினை நகர்த்திச் செல்லும் ஏழைகள், பசியினால் வாடுபவர்கள், தம் நாள் கூலிக்கேற்ற வருவாய்க்காக போராடும் மக்கள், கடன் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், வெளிநாடுகளில் வேலைசெய்ப்பவர்கள் யாவரும் உம் தொடர் அரவணைப்பையும், ஆசீரையும் தமது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கண்டு வாழ தயைகூர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

3.⁠ ⁠திரு அவையின் நம்பிக்கையாளர்களுக்காக மன்றாடுவோம்:

மனித மாண்புடன் படைக்கப்பட்ட நாம் அனைவரும் பாகுபாடுகள் களைந்து, இருப்பதைப் தேவையில் உள்ளவர்களுடன் பகிர்ந்து, இறைமனித அன்பை எம் நாளாந்த வாழ்வினால் சாட்சி பகர அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

4. இவ் உலகின் இயற்கைக்கு எதிராக செயற்பட்டு, மற்றவர்களின் வாழ்வை கருத்தில் கொள்ளாது வாழும் பலர் மத்தியில் மனித சுதந்திரத்தை மதிக்கவும், மாண்பை உயர்த்தவும், பாகுபாடுகளை களைந்து வாழவும், உரிமையை பெற்றுக்கொடுக்கவும் உழைக்கும் மனதை அளித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5.⁠ ⁠துன்புறும் ஆன்மாக்களுக்காக மன்றாடுவோம்:

யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், மரணத்தருவாயில் உள்ள துன்புறும் எம் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

அல்லது 

பல்வேறு அணர்த்தங்களால் இறந்தவர்கள், கொடூர யுத்தத்தால் அநியாயமாக தம் உயிரை மாய்த்தவர்கள், பல்வேறு விபத்துக்களால் இறந்தவர்கள் என அனைவரும் உமது சந்நிதானம் வரவேண்டி மன்றாடுகின்றோம். இவ்வுலகில் பிறந்த யாரையும் நீர் கைவிடுவதில்லை என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். எனவே இவர்களை ஏற்று நித்திய வாழ்வை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர்தாமே வாரி வழங்கிய கொடைகளிலிருந்து நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் உமது அருளின் ஆற்றலால் செயல்படும் இப்புனிதமிக்க மறைநிகழ்வுகள் இவ்வுலகில் எங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தி நிலையான பேரின்பத்துக்கு இட்டுச் செல்வனவாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - திபா 102:2 

என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு ! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!


அல்லது - மத் 5:7-8 

இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்; தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய பாடுகளின் நிலையான நினைவாகிய இத்திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு சொல்லற்கரிய அன்பினால் அவரே எங்களுக்கு அளித்துள்ள இக்கொடை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்வீராக.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Sunday, 6 July 2025

பொதுக்காலம் பாதினாறாம் ஞாயிறு வாரம் 20/07/2025

 பொதுக்காலம் பாதினாறாம் ஞாயிறு வாரம் 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புமிக்க இறை உறவுகளே! 

பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு வாரத்தில் இன்று நாம் கால் பதிக்கின்றோம்.  நாளையும் பொழுதையும் தரும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம், வாழ்வையும் வசந்தத்தையும் தரும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம், இடரல்கள் மத்தியிலும் பாதை காட்டும் பரமனுக்கு நன்றி சொல்லுவோம், இன்று புதிய உலகம் காண அழைக்கும் அவருக்கு நன்றி சொல்லி இப்புதிய வாரத்தில் கால்பதிப்போம். 

இன்றைய முதல் இறைவார்த்தையில் தொடக்கநூல் ஆசிரியர் இறைவன் மேல் கொண்ட முழுமையான நம்பிக்கைதான் வாழ்வின் அடித்தளம் என்பதைக் காட்டுகின்றார். புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் இயேசுவுக்காக ஆற்றும் பணியைப் போன்று நிறைவானது எதுவும் இல்லை என்பதை பல்வேறான சான்றுகள் வழியாக அறிக்கயிடுவதையும் காணலாம். லூக்கா நற்செய்தியில் மரியா மற்றும் மார்த்தா ஆகியோருக்கிடையிலான அழகிய உரையாடல் காட்டப்படுகின்றது. 

நாம் இயேசுவை எப்படிப் பார்க்கின்றோம் அல்லது எமது கண்களுக்குத் தெரியும் இயேசு யார் என்பது இன்று எமக்குத் தரப்படும் கேள்வியே. திரு அவையோடு சேர்ந்து பயணிக்கும் நாம், எமது இருப்பை, அடையாளத்தை, எமது நம்பிக்கை வாழ்வின் நோக்கத்தை உறுதிசெய்து கொள்வோம். எமக்காக கிறிஸ்துவின் தியாகம் மெய்ப்பிக்கப்படும் போது, அவருக்காக நாம் எமது ஆன்மாவை தயார்செய்வது, புனிதமாக்குவது, அவரின் ஒன்றிப்பை உறுதிசெய்வது இன்றைய தேவையாகின்றது. நாம் இருப்பதும், இயங்குவதும் இயேசுவிலே தான் என்பது எமது அசையாத நம்பிக்கையாகட்டும். எமது வழ்வின் நீண்டதூரப் பயணம் முடிவுரும்வரை இயேசுவை இலக்காகக் கொண்டு பயணிக்க இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - திபா 53:6,8 

இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் இருக்கின்றார்: தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன். ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன். ஏனெனில் அது நல்லது.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நீர் உளம் கனிந்து உம் அடியார்களாகிய எங்களில் உம் அருள்கொடைகளைப் பெருகச் செய்தருளும்; இவ்வாறு நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றால் நாங்கள் பற்றியெரிந்து உம் கட்டளைகளை விழிப்புடனும் ஆர்வத்துடனும் கடைப்பிடிக்கச் செய்தருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

என் தலைவரே, நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-10

அந்நாள்களில்

ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலை விட்டு ஓடினார். அவர்கள் முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.

அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, “விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு” என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.

பின்பு அவர்கள் அவரை நோக்கி, “உன் மனைவி சாரா எங்கே?” என்று கேட்க, அவர், “அதோ கூடாரத்தில் இருக்கிறாள்” என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 15: 2. 3-4. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?


2 மாசற்றவராய் நடப்போரே!

இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;

உளமாற உண்மை பேசுவர். -பல்லவி


3 தம் நாவினால் புறங்கூறார்;

தம் தோழருக்குத் தீங்கிழையார்;

தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;

ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்;

தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். -பல்லவி


5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;

மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;

இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

மறைந்திருந்த இறைத்திட்டம் இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 24-28

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என் மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன்.

நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

குரு: இறை அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.


1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பல்வேறு அணர்த்தத்தினால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று

4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்

எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எமக்காக மன்றாடுவோம்

மரியாவைப் போலவும் மார்த்தாவைப் போலவும் நாமும் நாளும் சந்திக்கும் வாழ்வின் எடுகோள்கள் வழியாக எமது குடும்ப நல் ஒன்றிப்பிற்காக உழைப்போமாக. எமது உடலாலும், உள்ளத்தாலும் மேலும் உறவாலும் வலுச்சேர்க்கும் அன்பின் பிணைப்பை உருவாக்கி நல்ல ஆரோக்கியமான சமூகம் அமைக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  


குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, பழைய ஏற்பாட்டுப் பல்வேறு பலிகள் உம் திருமகனின் நிறைவான ஒரே பலியில் முழுமை பெறச் செய்தீர்; ஆபேலின் காணிக்கைகள் மீது ஆசி வழங்கிப் புனிதப்படுத்தியது போல, உமது மாட்சியின் மேன்மைக்காக இறைப்பற்றுள்ள உம் அடியார்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் பலியை ஏற்று, அது அனைவரின் மீட்புக்கும் பயன்படச் செய்தருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி  திபா 110:4-5 

இரக்கமும் அருளும் உடைய ஆண்டவர், தம் வியத்தகு செயல்களை நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளித்தார்.


அல்லது திவெ 3:20

இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்; யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் அவரோடு உள்ளே சென்று அவரோடு உணவு அருந்து வேன்; அவரும் என்னோடு உணவு அருந்துவார், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

பொதுக் காலம் பதினைந்தாம் ஞாயிறு - 13/07/2025

 பொதுக் காலம் பதினைந்தாம் ஞாயிறு 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புள்ள இறைமக்களே! இயேசுவின் கல்வாரிப் பலிக்கு உங்களை அழைத்து நிற்கின்றேன். இன்று பொதூக்காலம் பதினைந்தாம் ஞாயிறு வாரத்தில் நாம் கால் பதிக்கின்றோம். அன்பு என்றால் என்ன என்பதை இயேசு தெளிவாக வரைவிலக்கணப்படுத்துவதை இன்றைய இறைவார்த்தைகளில் காணலாம். 

இயேசு இவ்வுலகை அன்பு செய்தார் என்பதை தனது செயல்களில் எண்பித்தார். கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பு அனைத்திலும் தலைப்பேறான இறைவன் இவ்வுலக மாந்தரின் இதயத்தை அன்புசெய்ததன் காரணமாக அவர் இவ்வுலகைத் தேடிவந்தார், இவ்வுலகில் போதித்தார், அன்பு என்றால் என்ன என்பதை வாழ்ந்துகாட்டினார். லூக்கா நற்செய்தியிலே நல்ல சமாரியன் உவமை வழியாக, அடுத்திருப்பவரின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவது எப்படி என்பதை கோடிட்டுக் காட்டுகின்றார். 

ஆபத்தில் உடனிருப்பது தான் அன்பு; இயலாமையில் துணையாய் இருப்பது தான் அன்பு; வறுமையில் உணவையாவது கொடுப்பதுதான் அன்பு, கண்களில் கண்ணீரை துடைக்கும் கரங்கள்தான் அன்பு; பிறர் வாழ தன்னிடம் இருப்பதை இழப்பதுதான் அன்பு. இதை நம் ஆண்டவர் காட்டிச் சென்றுவிட்டார். எனவே, இவ் இறைவார்த்தைகளின் அடிப்படையில், நாம் அன்பிற்கு புதிய வரைவிலக்கணம் கொடுப்போம். இயேசுவில் அன்பைக் கற்றுக்கொள்வோம்; அயலானுக்காக வாழும் வரம்கேட்போம். இப்பலியில் இணைந்து மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி

நான் நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; உமது மாட்சியை நீர் வெளிப்படுத்தும்போது நான் நிறைவு பெறுவேன்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, தவறி நடப்போர் நன்னெறிக்குத் திரும்பிவர அவர்களுக்கு உமது உண்மையின் ஒளியைக் காட்டுகின்றீர்; கிறிஸ்தவ நம்பிக்கையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் தமது பெயருக்குப் பொருந்தாதவற்றை விலக்கவும் ஏற்றவற்றைச் செயல்படுத்தவும் செய்தருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 10-14

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.

ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல் கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 69: 13. 16. 29-30. 35ab,36 (பல்லவி: 32b)

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.


13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்;

கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்;

துணை செய்வதில் நீர் மாறாதவர். -பல்லவி


16 ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;

உம் பேரன்பு நன்மை மிக்கது;

உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். -பல்லவி


29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்;

கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!

30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்;

அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். -பல்லவி


35ab கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;

யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்;

36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;

அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். -பல்லவி


அல்லது மாற்று பதிலுரைப் பாடல்

பதிலுரைப் பாடல் திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.


7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;

அது புத்துயிர் அளிக்கின்றது.

ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;

எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி


8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;

அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை;

அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி


9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;

அது எந்நாளும் நிலைத்திருக்கும்.

ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை;

அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி


10 பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை;

தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20

இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பு அனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 63b,68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில்

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில்

என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:

“ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக்கொண்டார். மறு நாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.

கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


இறைமக்கள் மன்றாட்டு

1. தாய்த் திரு அவைக்காக மன்றாடுவோம்:

இறையரசின் வளமைக்கும், ஆன்மாக்களின் மீட்பிற்காகவும் பயணிக்கின்ற உம்  மறை உடலாகிய திரு அவையின் திருப்பணியாளர்கள் யாவரும் இறையரசின் மதிப்பீடுகளை தம் அர்ப்பண வாழ்வில் என்றும் கருத்தூன்றி வாழ வரமருள வேண்டுமென்று, ...  

2. உலக அமைதிக்காக மன்றாடுவோம்:

யுத்த பூமிகள் மனம் மாறவும், அரசியல் தலைவர்கள் மத்தியிலே மனித நேயம் மலரவும், இன, மத, மொழி, நிற வேறுபாடுகளைக் கடந்து நாம் யாவரும் இறைவனின் உன்னதமான படைப்பின் சிகரங்கள் என்பதை உணர்ந்து வாழத் தேவையான ஞானத்தின் ஆவியை மண்ணகத்தின் மீது பொழிய வேண்டுமென்று, ... 

3. மறைபரப்பு பணியில் உள்ளவர்களுக்காக மன்றாடுவோம்:

வாழ்வின் பல்வேறு சூழல்களின் மத்தியில் சென்று, இறைவாக்கு உரைத்திடும் அனைத்து மறைபரப்பாளர்களும் உம் அழைப்பின் மேன்மையை உணர்ந்து, உம் பணிக்காகவே தாங்கள் யாவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை குன்றா நற்செய்தியின் ஒளியில் சீர்தூக்கிப்பார்த்திட தயைகூற வேண்டுமென்று, ...

4. இறை நம்பிக்கையில் வாழாதவர்களுக்காவும், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்போருக்காகவும் மன்றாடுவோம்:

உலக மீட்பரான இயேசுகிறிஸ்துவின் ஒளி இவர்கள் வாழ்வினைத் தொடவும், இறைபக்தி மலரவும், அன்றாட வாழ்வியல் அனுபவங்கள் மூலமாக ஒரே இறைவனை கண்டு அனுபவிக்கவும் அருள்கூர வேண்டுமென்று, ...

5. நமது பங்கு திரு அவைக்காக மன்றாடுவோம்

அன்பை எமக்குக் கற்றுத் தரும் இறைவா! நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் உம்மில்தான் என்பதை நினைக்கின்றோம். நாம் வாழும்போதே பிறருக்காக கொடுப்பதிலும், பிறருக்காக செவிமெடுப்பதிலும், பிறருக்காக இழப்பதிலும் நாம் எம்மை கற்றுக்கொண்டு உணர்ந்துவாழ அருள்புரிய வேண்டுமென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் திரு அவையின் காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; உம் நம்பிக்கையாளர் புனிதத்தில் வளர உதவும் உணவாக இவற்றை மாற்றியருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி காண். திபா 83:4-5 

படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே, உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக்குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.


அல்லது. யோவா 6:56

எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார்; நானும் அவரோடு இணைந்திருப்பேன், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய அருள்கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இம்மறைநிகழ்வுகளில் நாங்கள் அடிக்கடி பங்கேற்பதால் அவற்றின் மீட்பு அளிக்கும் பயன் எங்களில் வளரச் செய்வீராக. எங்கள்.


அருட்தந்தை ச். ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...