தவக்காலம் - திருநீற்றுப் புதன் - 05-03-2025
முன்னுரை
நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.
என் அன்புக்கினிய இறைமக்களே! வழிபாட்டுக் காலங்களில் ஒரு புதிய காலமாகிய தவக்காலத்தினை இன்று ஆரம்பிக்கின்றோம். திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகும் இக்காலம் எம்மை புதிய பாதையில் வழிநடத்த அழைக்கின்றது. 'மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்' என்று ஒவ்வொருவர் நெற்றியிலும் சாம்பலை பூசி கொடுக்கப்படும் இவ் அழைப்பு எம் ஒவ்வொருவர் இதயத்தின் ஆழத்திற்குச் சென்று ஊடுறுவிப் பார்த்து, கிறிஸ்துவின் பாடுகளோடும், மரணத்தோடும் மேலும் அவர் உயிர்ப்போடும் ஒன்றித்து பயணிக்கவும் அழைக்கின்றது.
தனது சாயலாக பாவனையாக எம்மைப் படைத்தவர், எமது இதயத்தையே அதிகம் அன்புசெய்யும் இறைவனாக இருக்கின்றார். ஏனெனில், 'அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்;' எனவே, இன்றிலிருந்து நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் எமது இதயத்தின் வெளிச்சமாக இருப்பதாக.
இதயத்தின் மனமாற்றம் இல்லாத ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகத்தின் தீமைகளை நயவஞ்சமாக பரப்பிக்கொண்டே இருக்கின்றான். யுத்தங்களை தொடுத்தும், உரிமைகளை பறித்தும், பணத்தால் அடிமையாகியும், ஆயுதக் கலாசாரத்தை அலங்கரித்தும், மனிதனின் இயற்கைச் சட்டத்தை மீறி திருமணத்தை இல்லாமலே ஆக்குகிறான். இவ்வளவு கொடூரங்களை புரியும் இம்மானுடம் மனமாற வேண்டும், எம்மைச் சுற்றி நடைபெறும் அனைத்துத் தீமைகளும் தகர்த்தெறியப்பட வேண்டும். பாவங்கள் அனைத்துமே கிறிஸ்துவின் உயிர்ப்பில் அழிக்கப்பட்டு இவ்வுலகம் புதுப்பிக்கப்பட இத் தவக்காலத்தை பயனுள்ள ஒரு காலமாக மாற்றுவோம்.
நாம் இன்று ஒப்புக்கொடுக்கும் இப் இப்பலியில் இவ் அனைத்து விண்ணப்பங்களுக்காகவும் மன்றாடுவோம். இறைவன் விரும்பும் எம் இதயத்திற்காக நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இறைவன் ஆசீர்வதிக்கவும், அதற்கான பாதைகளை அமைத்துத் தரவும் தொடர்ந்தும் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி காண். சாஞா 11:24, 25, 27
ஆண்டவரே, மனிதர் அனைவர் மீதும் நீர் இரக்கம் காட்டுகின்றீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. மக்கள் மனம் வருந்தும்போது அவர்களுடைய பாவங்களைப் பாராமல் இருக்கின்றீர்; நீர் அவர்களை மன்னிக்கின்றீர். ஏனெனில் நீரே எங்கள் இறைவனாகிய ஆண்டவர்.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, புனித நோன்புகளின் வழியாகக் கிறிஸ்தவ வாழ்வின் போராட்டத்தைத் தொடங்க எங்களுக்கு உதவியருளும்; அதனால் ஆன்மீகத் தீமைகளுக்கு எதிராக நாங்கள் போரிட்டு, தன்னடக்கத்தின் உதவியால் காக்கப்படுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
1ம் இறைவாக்கு
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18
நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.
ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?
சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.
ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், “ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்” எனச் சொல்வார்களாக! ‘அவர்களுடைய கடவுள் எங்கே?’ என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?
அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 51
பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி
3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4a உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன். -பல்லவி
10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;
உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி
12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;
தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;
அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். -பல்லவி
2ம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2
கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்..
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2
சகோதரர் சகோதரிகளே,
நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். “தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்” எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா 95
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.
நற்செய்தி இறைவாக்கு
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
அக்காலத்தில்,
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."
திருநீற்றைப் புனிதப்படுத்துதலும் பூசுதலும்
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தந்தையாம் கடவுளை நோக்கிப் பணிவுடன் மன்றாடுவோம். தவத்தின் அடையாளமாக நம் தலைகளின் மீது இடப்படும் திருநீற்றைப் புனிதப்படுத்த அவர் இரக்கம் கொள்வாராக.
இறைவா, எங்கள் தாழ்ச்சியின் பொருட்டு நீர் மனம் இரங்குகின்றீர்; பரிகாரங்களினால் மகிழ்கின்றீர்; பக்தியுள்ள எங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்தருளும்: திருநீற்றைப் பூசிக்கொள்ளும் உம் அடியார்கள் மீது உமது ஆசியின் ஓ அருளைக் கனிவுடன் பொழிந்தருளும்; அதனால் நாங்கள் தவக் காலத்தின் தவ முயற்சிகளைப் பின்பற்றி உம் திருமகனின் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடவும் தூய்மைப்படுத்தப்பட்ட மனதுடன் வாழவும் தகுதி பெறுவோமாக. எங்கள். பதில் : ஆமென்.
அல்லது
இறைவா, பாவிகளின் இறப்பை அன்று, மாறாக அவர்களின் மன மாற்றத்தையே விரும்புகின்றீர். எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும். எங்கள் தலைகள் மீது பூசப்பட இருக்கின்ற இச்சாம்பலை உமது பரிவிரக்கத்துக்கு ஏற்பப் † புனிதப்படுத்தத் திருவுளம் கொள்வீராக. அதனால் நாங்கள் சாம்பலாக உள்ளோம் எனவும் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் எனவும் அறிந்துள்ள நாங்கள் ஆர்வமிக்க தவ முயற்சிகளின் பயனாகப் பாவங்களுக்கு மன்னிப்பையும் உயிர்த்தெழும் உம் திருமகனின் சாயலுக்கு ஏற்பப் புது வாழ்வையும் அடைந்திட வலிமை பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென்.
ஒவ்வொருவர் மீதும் திருநீற்றைப் பூசிச் சொல்வது: மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.
அல்லது
நினைவில் கொள் மனிதா! நீ மண்ணாய் இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய்.
இறைமக்கள் மன்றாட்டு
குரு: ஆண்டவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; ஆகவே, நாம் ஆரம்பிக்கும் இப்புதிய வாழ்வுக்கான நிறையாசீர் கேட்டு மான்றாடுவோம்.
1. உங்கள் முழு இதயத்தோடு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.
எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! இன்று உம்மிடம் திரும்பி வர, திருந்த்தி வர நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஆசீர்வதியும். இம்முயற்சியின் வெளிச்சத்தை எமக்கு காண்பிக்கும் அனைத்துத் திரு அவைப் பணியாளர்களும் எம்மை நிறைவான பாதையில் வழிநடத்த அருள்புரிய வேண்டுமென்று, ...
2. ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! நீர் ஒருவரே எமக்கு மன்னிப்பளிப்பவர் என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகளை நினைத்து, மனமுருகி, அதற்காக மன்னிப்புக் கேட்கின்றோம். இத் தவக்காலத்தின் ஊடாக எம்மை தூய்மைப்படுத்தி முழுமனிதனாக்கிட அருள்புரிய வேண்டுமென்று, ...
3. இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! நாம் தவங்கள் புரிந்திடவும், செபங்களில் எம்மை அதிகம் ஈடுபடுத்திடவும், எமது பாவத்திற்காக பரிகாரம் தேடிடவும் இத் தவக்காலத்தை ஓர் அருளின் காலமாக எமக்கு தந்தருளினீரே! எம்மை தியாகம் செய்து உமது பாடுகளின் பாதையில் எம்மையும் இணைத்துப் பயணித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
4. நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும்.
எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! வெளிவேட உலகிலே வாழும் நாம், எமது இதயத்தை தூய்மைப்படுத்த உழைப்போமாக. எமது ஆன்மீகக் கடமைகளில் பிரமாணிக்கமாய் இருக்கவும், எமது ஒறுத்தல் முயற்சிகளால் எமக்கும், இவ்வுலகின் மீட்புக்காகவும் எம்மை அர்ப்பணித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
5. ஆண்டவர், அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்;
எம் இதயங்களை அதிகம் அன்புசெய்யும் இறைவா! நாம் தொடங்கும் இப் புதிய காலம் எமக்கடுத்திருப்பவர் மீதான அன்பை ஆழப்படுத்துவதாக. பகைமையை மறந்து, பழிப்புரைகளை தவிர்த்து, சந்தேகங்களை விலக்கி, எமது பார்வையை தூய்மைபப்டுத்துவோமாக. இதனால் நாம் பேசும் வார்த்தைகளால், எமது எண்ணங்களால், புதிய உறவு மலர அருள்புரிய வேண்டுமென்று, ...
குரு: 'தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்' என்று எம்மை தேற்றும் இறைவா. இன்று புதிய காலத்தை ஆரம்பிக்கும் எம்மை ஆசீர்வதித்தருளும். நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து நாம் உமது அருள்வேண்டி இரந்து கேட்கும் விண்ணப்பங்களை இரக்கத்துடன் எமக்கு பெற்றுத்தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, தவக் காலத் தொடக்கமாக அமையும் இப்பலியைச் சிறப்பாக உமக்கு ஒப்புக்கொடுக்க உம்மை வேண்டுகின்றோம்: தவச் செயல்களாலும் பிறரன்புச் செயல்களாலும் நாங்கள் தீய ஆசைகளை அடக்குவோமாக் இவ்வாறு பாவத்திலிருந்து தூய்மை பெற்று, உம் திருமகனின் பாடுகளை ஆர்வமுடன் கொண்டாடத் தகுதி உள்ளவர்களாகத் திகழ்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
திருவிருந்துப் பல்லவி காண். திபா 1:2-3
ஆண்டவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் உரிய காலத்தில் அதன் கனி தருவார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, இத்திருவிருந்து எங்களுக்கு உதவ வேண்டும் என உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் நோன்புகள் உமக்கு ஏற்புடையனவாகி நாங்கள் நலம் அடைய உதவுவனவாக. எங்கள்.
மக்கள்மீது மன்றாட்டு
இறைவா, மாண்புக்கு உரிய உம் திருமுன் தலைவணங்குபவர்களுக்கு, ஆழமான மனத்துயரைக் கனிவுடன் தந்தருளும்; தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பரிசுகளைத் தவம் புரிவோர் இரக்கத்துடன் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி