பொதுக்காலம் முப்பத்து நான்காம் ஞாயிறு வாரம் - நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
திருப்பலி முன்னுரை
இன்று கத்தோலிக்க திரு அவை, அனைத்துலகுக்கும் அரசராம் நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் பெருவிழாவை மகிழ்வுடன் கொண்டாடுகின்றாள். பொதுக்காலம் நிறைவடையும் இவ்வாரத்திலே கிறிஸ்துவை அனைத்துலக அரசராக கொண்டாட விரும்புகின்றாள். பதினொராம் பத்தினாதர் 1925ம் ஆண்டு, மார்கழி பதினொன்று அன்று வெளியிட்ட குவாஸ் பிறிமாஸ் (Quas primas) எனும் சுற்றுமடலின் வழியாக, இவ்வுலகில் காணப்பட்ட இறை நம்பிக்கை அற்ற நிலையின் காரணமாகவும், மதப் பற்று அற்ற நிலை காரணமாகவும் இயேசுவை உலகம் முழுமையாக நம்பும்படி இப்பெருவிழாவை அறிமுகம் செய்தார்.
இயேசுவை இவ்வுலகு அரசராக கொண்டாடவேண்டும், ஏனெனில், அவரது ஆட்சி நிலையானது, உண்மையானது, பாவத்திற்கு இடங்கொடாதது, சம நிலைத் தீர்பு அளிக்க வல்லது, பிரிவினைகள் பாராபட்சம், பாகுபாடு காட்டாதது. இவரது அரசு எளிமையானது, அனைவரையும் அரவணைக்கக் கூடியது. உலகிற்காக உயிரை கொடுப்பதுவே தலைவனின் சிறந்த பண்பும் பணியுமாகின்றது. இன்றைய தொடக்கவுரையிலே, 'நீர் உம்முடைய ஒரே பேறான திருமகன் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அமைதியை வழங்கும் மாசற்ற பலிப்பொருளாகச் சிலுவைப் பீடத்தில் தம்மையே அவர் ஒப்புக்கொடுத்து மனிதருக்கு மீட்பு அளிக்கும் அருளடையாளங்களை நிறுவினார். அவரது ஆட்சி, உண்மையும் வாழ்வும் ஒங்கும் ஆட்சி; புனிதமும் அருளும் நிறைந்த ஆட்சி; அன்பும் அமைதியும் நிலவும் ஆட்சியும் ஆகும்.' என்று கிறிஸ்து இயேசுவின் மாபெரும் மான்புமிகு பணியை குறித்துக் காட்டுகின்றது. எம்மையும் தனது சுவீகார பிள்ளைகளாக மாற்ற தனது இரத்தத்தால் எங்களை கழுவினார். இன்று, இயேசுவின் ஆட்சி போன்று எமது குடும்பமும், சமூகமும் எமது நாடும் மிளிர மன்றாடுவோம். உண்மைக்கு சான்றுபகிரும் சமூகம் உருவாக மன்றாடுவோம், உறவினை கட்டியெழுப்பும் சமூகம் உருவாகிட மன்றாடுவோம்.
உலகெங்கும் சென்று இயேசுவின் நற்செய்தி பரப்பிட, எமைப் பயன்படுத்தும் இறைவனுக்கு நன்றி கூறி, தொடரும் பலியில் பங்கெடுப்போம்.
முதல் இறைவாக்கு
மானிட மகனின் ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 13-14
அந்நாள்களில்
இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 93: 1a-உ. 1de-2. 5 (பல்லவி: 1ab)
பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
1a-உ ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்;
ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். -பல்லவி
1de பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது;
நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். -பல்லவி
5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை;
ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் நம்மைக் குருக்களாக ஏற்படுத்தினார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8
கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.
இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!
“அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மாற் 11: 10
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
அரசன் என்று நீர் சொல்கிறீர்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37
அக்காலத்தில்
பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார்.
அதற்குப் பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?”என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார்.
பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு: ஆதாம், விண்ணகம் செல்வதற்கான தடுத்து வைத்த வழியை இயேசு தனது மரணம் உயிர்ப்பு வழியாக திறந்து வைத்தார். பாவிகளுக்கு மீட்பை பெற்றுக் கொடுத்தார். அவரது அரச ஆட்சி உரிமை பெற்றுத்தந்த இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழவும் அவரது அருளையும் ஆசீரையும் பெறவும் அவரிடம் மன்றாடுவோம்:
1. கருணையின் இறைவா! நீர் எமக்கு தந்த திரு அவைக்காக நன்றி கூறுகின்றோம். அதிலே தம்மை தியாகம்செய்து பணியாற்றுகின்ற அனைத்து நிருநிலைப்பணியாளர்கள், பொது நிலைப் பணியாளர்கள் அனைவரையும் உமது ஆசீராலும் அரவணைப்பாலும் வழிநடத்த வேண்டிய அருளைப் பெழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. இறந்த ஆன்மாக்களை நினைந்து அவர்களுக்கக செபிக்கும் இந்த மாதத்திலே, எம் பங்கிலே, எமது குடும்பங்களிலே இருந்து இறந்துபோன குருக்கள், துறவிகள், பெற்றோர்கள், உறவுகள், நண்பர்கள் அனைவருக்காகவும் மன்றாடுவோம். திருமுழுக்கினால் அழைக்கப்பெற்று, இயேசுவின் திரு விருந்தினால் ஊட்டம் பெற்று இம்மண்ணுலக வாழ்வுக்கு அர்த்தம் சொன்னவர்கள், விண்ணகத்திலும் இறைவனது பேரின்ப மாட்சி காண வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. 'அனைத்தும் அவர் வழியாய் அவருக்காக படைக்கப்பட்டன' என்று புனித பவுல் கூறுவதைப்போல் இறைவன் அழைப்பை ஏற்று வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரை அரசராக ஏற்று அவர் படைப்பிலே மகிழ்ந்து, அதை பொறுப்புடன் விருத்தி செய்யவும், அதைக் கரம் கொடுத்து பாதுகக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எமது நாட்டின் தலைவர்கள் தங்களது பொறுப்புமிக்க பணியை ஆழ உணர்ந்தவர்களாய், மக்களின் பொது நலனுக்காய் தங்களை அர்ப்பணிக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. உம்மை அரசராக ஏற்றுக்கொண்ட அனைவரும் தமது திருமுழுக்கால், கிறிஸ்துவின் குருத்துவத்தால், இறைவாக்கு பணியால், நற்செய்திக்கு சான்று பகிரவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: அன்பின் ஆண்டவரே! உமது மரணத்தால் மீட்பை கொண்டுவந்து, பாவிகள் மனந்திரும்பவும், ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெறவும் அருள்கூர்ந்தீரே. உமது உயிர்ப்பினால் எமது அழியக்கூடிய உடலுக்கு மகிமையை தந்து அழியா ஆன்மாவின் தூய்மையை காக்க சித்தம் கொண்டீரே. உம்மை அரசராக ஏற்றுக்கொள்ளும் எமக்கு இந்த வரங்களை எல்லாம் நிறைவாய் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்கு ஒப்புக்கொடுக்குமாறு நீர் அளித்த புனிதக் கொடைகளை ஏற்றுக்கொள்ளும்; இவற்றின் வழியாக நாங்கள் உமது பரிவிரக்கத்துக்கு ஏற்றவர்களாகி உம் கட்டளைகளுக்கு என்றும் கீழ்ப்படிந்து வாழச் செய்வீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
திபா 116:1-2 மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழுங் கள். ஏனெனில் நம்மீது அவரது இரக்கம் நிலையாய் உள்ளது.
அல்லது
மத் 28:20 இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, இப்புனித விருந்தில் நாங்கள் பங்குபெற்று மகிழச் செய்கின்றீர்; அதனால் நாங்கள் உம்மிடமிருந்து ஒருபோதும் பிரியாதிருக்க அருள்புரிவீராக. எங்கள்.
அருட் தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment