Saturday, 2 November 2024

பொதுக்காலம் முப்பத்தொராம் ஞாயிறு வாரம் - 03/11/2024



பொதுக்காலம் முப்பத்தொராம் ஞாயிறு வாரம்

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவின் என் அன்புக்கினிய இறைமக்களே! 

பொதுக்காலம் முப்பத்தொராம் ஞாயிறு வாரத்தில் பயணிக்கின்றோம். இறை அருளும் வல்லமையும் எம்மை புடைசூழ்ந்து எமது வழியை செம்மைப்படுத்தி எமது வாழ்வுக்கான வரங்களை பெற்றுத்தர இருக்கின்றது. இதற்காக விசேட விதமாக இப்பலியிலே நன்றிசொல்லி மன்றாடுவோம். 

"உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக!" எனும் உன்னத கட்டளையின் முழுமையை இயேசு இன்று எமக்கு தருகின்றார். கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு வழங்கிய மிக உன்னத சட்டமாக இதை உயர்த்தி நிற்பதை இணைச்சட்ட நூல் காட்டிநிற்கின்றது. இயேசு இச்சட்டங்களைக் கொடுத்து, இதுவே உயர்ந்த கட்டளை என தெளிவுபடுத்துவது, அச்சட்டங்களின் மகத்துவத்தையும், பழைய ஏற்பாட்டின் தொடர்பினை எடுத்தியம்புவதையும் காணலாம். 

கடவுள் இவ்வுலகை படைத்ததில் இருந்து, தன்னைப் போல் மனிதனைப் படைத்து, அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அரச குருத்துவ திருக்கூட்டமாக அர்ச்சித்து, அவர்களை பாவநிலையில் இருந்து மீட்டெடுக்க தனது மகனை உயிர்ப்பலியாக ஈந்தது வரை அனைத்துமே 'அன்பு' எனும் அழகிய மொழியாக உரைக்கப்பட்டு, உணர்வாக பகிரப்பட்டு, இதயத்தில் வரையப்பட்டது. இது வரலாறு அல்ல, இது எமக்கு கிடைக்கப்பெற்ற வாழ்வு. இவ்வுண்மையை இன்றைய இறைவார்த்தைகள் மெய்ப்படுத்துவதைக் காணலாம். 

ஆகவே, கிறிஸ்து இறைவனுக்காக நாம் எமது வாழ்நாள் எல்லாம் நன்றியோடு வாழுவோம். எம்மை நாள்தோறும் உருவாக்கும் அவரின் தூய ஆவிக்காக நன்றி சொல்லுவோம். எம்மை குருத்துவ மக்களாக தேர்ந்தெடுத்து அவரின் அருளை நாளும் நாம் அனுபவிப்பதற்காக இப்பலியில் நன்றிசொல்லுவோம்.

விசேடவிதமாக, எமக்கு முன் வாழ்ந்துசென்று இவ்வுலகின் பல நிலைகளில் உயர்ந்தே காட்டிச் சென்ற எமது முன்னோர்கள் அனைவரையும் நினைந்து அவர்களுக்காகவும் அவர்களது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் செபிக்க இம்மாதம் எமக்கு அழைப்புவிடுக்கின்றது. எனவே, எமது குடும்பங்களில், எமது கிராமங்களில், உறவுகளாக, நண்பர்களாக வாழ்ந்து மரித்த அனைவரையும் நினைத்து அவர்களுக்காகவும் இப் பலியில் மன்றாடுவோம்.

வருகைப் பல்லவி

காண். திபா 37:22-2 ஆண்டவரே, என் கடவுளே, என்னைக் கைவிடாதேயும் என்னிடமிருந்து அகன்று விடாதேயும். ஆண்டவரே, என் மீட்பின் ஆற்றலே, எனக்குத் துணைபுரிய வாரும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உமது அருள்செயலால்தான் உம் நம்பிக்கையாளர் உமக்கு ஏற்ற வகையில் சிறப்பான ஊழியம் புரிகின்றனர்; இவ்வாறு நீர் வாக்களித்தவற்றைப் பெற்றுக்கொள்ளத் தடையின்றி விரைந்து செல்ல எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 18: 1-2abஉ, 2deக-3. 46,50ab (பல்லவி: 1)

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.


1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

2abஉ ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். -பல்லவி


2deக என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே;

என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்,

3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்;

என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். -பல்லவி


46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்!

என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக!

என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!


50ab தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;

தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும்

என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 23-28

சகோதரர் சகோதரிகளே,

லேவியர் குலத்தைச் சார்ந்த குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர். இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.

இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார்.

திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

அக்காலத்தில்

மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு,

“ ‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.

அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இறைமக்கள் மன்றாட்டு

எமது திரு அவைக்காக மன்றாடுவோம்.

அன்பின் இறைவா! அழகிய திரு அவை வழியாக எம்மை தினமும் ஊட்டமளிக்கின்றீர், எம்மை தூய்மைப்படுத்துகின்றீர் தினமும் இவ்வுலகை நலன்களால் நிரப்புகின்றீர். இவற்றிற்காக நன்றி கூறுகின்றோம். இத் திரு அவை வழியாக தொடர்ந்தும் நீர் ஆற்றுகின்ற உமது மீட்பின் திட்டத்தில் தம்மையும் கருவிகளாக இணைத்து பணியாற்றும் அனைத்து இறை பணியாளர்களையும் உமது வல்லமையால் காத்தி வழிநடத்தியருள வேண்டுமென்று, ...

எமது திரு அவையில் பணிபுரிந்து மரித்துப் போன அனைத்து திரு நிலைப்பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம். 

தமது வாழ்வை தினமும் பலியாக அர்ப்பணித்து உயிர்நீத்த அனைத்து திரு நிலைப் பணியாளர்களும், துறவிகளும் மேலும் அனைத்து பொதுநிலைப் பணியாளர்களும் இறைவனின் மாட்சியின் பேரொளியைக் காணும் பாக்கியம் பெறவும், அவர்களுக்கான வெற்றிவாகையை பெற்றிடவும் வரமருள வேண்டுமென்று, ...

நாட்டில் அமைதியை ஏற்படுத்துவோர்க்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! இந்நாட்டின் அனைத்து வளங்களையும் சூறையாடி தமது சுயநலத்திற்காக மக்களின் வாழ்வை நிர்க்கதியாக்கியிருக்கும் மனிதர்கள் மத்தியில், இந்நாட்டின் உயர்வுக்காக அதன் வாழ்வுக்காக உழைக்கும் அனைத்து தலைவர்களும் சவால்களை தாங்கும் வல்லமையைப் பெறவும், போராட்டங்களில் முன்னின்று வெற்றிகாணும் அருளை அளித்திட வேண்டுமென்று, ...

எமது பங்கின் இளையோர்க்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! இறை அன்பு ஒன்றே சிறந்தது என அன்பின் பெறுமதியையும் அதன் வல்லமையையும் உணரும் எமது இளைஞர்கள் யுவதிகள் அவ் இறை அன்பை பரப்பும் கருவிகளாக திகழ்வார்களாக. திரு அவையின் மேல் அதீத ஆர்வம் காணவும், இயேசுவை பரப்பும் பணியில் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து முன்னோக்கிச் செல்லும் தைரியத்தைப் பெற்றிட அருள்ரிபுயவேண்டுமென்று


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலி உமக்கு ஏற்ற, தூய காணிக்கையாக அமையச் செய்தருளும்; அது எங்களுக்கு உமது இரக்கத்தின் புனித கொடையாகவும் விளங்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 15:11 வாழ்வின் வழிகளை நான் அறியச் செய்தீர்; ஆண்டவரே, உம் திருமுன் மகிழ்ச்சியால் என்னை நிரப்புவீர்.

அல்லது

யோவா 6:58 வாழும் தந்தை என்னை அனுப்பினார்; நானும் அவரால் வாழ்கிறேன். என்னை உண்போரும் என்னால் வாழ்வர், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, ஆற்றல்மிகு உமது செயல் எம்மில் பெருகச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு விண்ணக அருளடையாளங்களால் ஊட்டம் பெற்ற நாங்கள் உமது கொடையால் அவை அளிக்கும் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளத் தயார்செய்வோமாக. எ ங் கள்.


அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...