பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு வாரம் - 17-11-2024

 பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவின் கல்வாரிப் பலிக்கு ஒன்றின் மக்களாக குழுமிவந்துள்ள என் அன்பு இறைமக்களே! பொதுக்காலம் முப்பது மூன்றாம் ஞாயிறு வாரம் எமக்கு புதிய வலிமையையும், புதிய தைரியத்தையும் தருகின்றது. இக் கல்வாரிப் பலியில் இணைந்து, அணைத்தையும் வாரி வழங்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம், அவர் கல்வாரி அனுபவத்தை சொந்தமாக்குவோம், அவரின் பாதை சென்று அவ் அன்பை பிறரோடு பகிர்ந்துகொள்வோம். 

மானிட மகனின் வருகை பற்றியும் அதற்காக எம்மை தயார்படுத்தவும் இன்றைய வாசகங்கள் எமக்கு அறைகூவலிடுகின்றன. மாற்கு நற்செய்தியின் இவ் எச்சரிக்கை தரும் வார்த்தைகள் எமக்குள் ஏற்படுத்தும் வியப்பைக் குறித்து நாம் அஞ்சவேண்டியதில்லை. மாறாக எமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்கவும், தகுந்த முறையில் எமக்கான ஆயத்தங்களை செய்யவும், எம்மை தயார்நிலையில் வைத்திருக்கவுமே இவ்வார்த்தைகள் எமக்கு கொடுக்கப்படுகின்றன. நாம் காத்திருக்கும் இவ்வருகை குறித்து நாமும் கருத்தோடு சிந்திக்கவும் எமக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றன. "விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா" எனும் இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை உள்ளத்தில் பதித்தவர்களாக அவை வாழ்வு தரும் உயிர் ஊற்றாக எம்மில் மலர வரம்வேண்டுவோம்.

இன்றைய திருப்பலியிலே நாம் பல்வேறு விண்ணப்பங்களோடு வந்திருந்தாலும், இவ்வுலகின் தேவைகளில் சற்று கவனத்தை திருப்பி, துன்பப்படும் மக்களுக்காக, பட்டினியில் வாடும் மக்களுக்காக, உலகத்தின் ஒவ்வொரு கோணத்திலும் நடைபெறும் யுத்தங்கள் நிறைவுக்கு வரவேண்டுமென்றும், இயற்கை அனர்த்தங்களால் நாளும் துன்பப்படும் மக்களுக்காகவும் மன்றாட இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இவ்வுலகத்திலே அனைத்து மக்களும் இறைவனின் பிள்ளைகளே! அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களையும் எமது உறவுகளாக இணைத்து, அவர்களின் நல்வாழ்வுக்காகவும் செபிக்க கடமைப்பட்டுள்ளோம். அத்தோடு எமது திரு அவை முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும், நாமும் ஆர்வமுள்ளவர்களாகவும், அத் திரு அவையின் வாழ்வுக்காக உழைப்பவர்களாகவும் திகழ வரம்வேண்டுவோம். 

நாம் அனைவரும் சேர்ந்து ஒப்புக்கொடுக்கும் இவ் உன்னதப்பலியில் இணைந்து, நாம் கேட்ட அனைத்து விண்ணப்பங்களையும் இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து இறை அருள் வேண்டி இப் பலிதனிலே கலந்திட்டுவோம். 


வருகைப் பல்லவி  எரே 29:11-12,14 

ஆண்டவர் கூறுகிறார்: நான் துன்பங்களின் எண்ணங்களை அல்ல, அமைதியின் எண்ணங்களை எண்ணுகிறேன். நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். எல்லா இடங்களினின்றும் உங்களது அடிமைத்தனத்திலிருந்து உங்களை மீண்டும் அழைத்து வருவேன்.


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3

“அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்.

ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்;

எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;

8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;

அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். -பல்லவி


9 என் இதயம் அக்களிக்கின்றது;

என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;

என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்;

உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். -பல்லவி


11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;

உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு;

உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18

சகோதரர் சகோதரிகளே

ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார்.

தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவ மன்னிப்புக் கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.

அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.

ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

இறைமக்கள் மன்றாட்டு

1. புனித திரு அவைக்காக மன்றாடுவோம்: 

இறைவா! நீர் தந்த இந்த திரு அவையை பாதுகாரும். தீமைகள் அனைத்திலும் இருந்தும், போலி பேதகங்களில் இருந்தும் வழிநடத்தும். தேவ அழைத்தலை தாரும், அதன் புனிதத்தை வளர்த்திட உழைக்கும் அனைவரையும் காத்திட வரமருள வேண்டுமென்று, ...

2. இந்நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுவோம்:

இறைவா! நீர் கொடுத்த இந்த அழகிய திரு நாட்டிற்காக நன்றி சொல்கின்றோம். பல்-சமய உறவுகளையும், பல்-மொழி உணர்வுகளையும்  மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி அபிவிருத்தியிலும் எம் நாட்டை முதன்மைப்படுத்த  நீர் எமக்கு தந்த தலைவர்களுக்காக நன்றி கூறுகின்றோம். இவர்களை வாழிநடத்தும், ஆற்றலைக் கொடும், விவேகத்தினால் நாட்டின் தீர்மானங்களை பகுப்பாய்வுசெய்து அதன் உயர்ச்சியில் பங்களிக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

3. எமது குடும்பங்களில் இறந்துபோனவர்களுக்காக மன்றாடுவோம்: 

இறைவா! நீர் எமக்கு தந்த அனைத்து உறவுகள், நண்பர்கள், சொந்தங்கள், நன்கொடையாளிகள், குருக்கள், துறவிகள் அனைவருக்காகவும் நன்றி சொல்கின்றோம். இவர்களில் சிலர் இன்று எம்முடன் இல்லை. இவர்களின் வாழ்வுக்காக, வார்த்தைகளுக்காக, நல்ல செயல்களுக்காக, புரிந்துகொண்ட உயரிய உறவுக்காக, செய்த கொடைகளுக்காக நன்றி சொல்லி, இவர்களின் ஆன்மாவை ஏற்று, வான்வீட்டில் இடமளித்திட வேண்டுமென்று, ...

4. யுத்தங்கள் நிறைவுற மன்றாடுவோம்: 

இறைவா! நாடுகளுக்கு நாடு நடைபெறும் யுத்தங்கள் நிறைவுறவேண்டி உருக்கமாக மன்றாடுகின்றோம். அதிகாரமும், ஆட்சியும், வல்லமையும், ஆற்றலும் நீர் ஒருவரே என்பதை இவர்கள்  புரிந்துகொள்வார்களாக. இதன் விளைவாக பாதிப்புறும் குடும்பங்கள், பிள்ளைகளின் கல்வி, எதிர்கால சுபிட்சம் அனைத்தையும் இந்நாட்டு தலைவர்கள் விளங்கிக்கொள்வார்களாக. அமைதியும், மகிழ்ச்சியும், சமத்துவமும் மிக விரைவில் கனிகளாக மலர்ந்திட அருள்புரியவேண்டுமென்று, ...

5. புதிய எதிர்காலத்தை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்:

இறைவா! பணமோக்கத்தாலும், வியாபார மோகத்தாலும், போதைவஸ்தாலும், சினிமாவாலும் சிதைவுறும் எமது இளைஞர்களின் எதிர்காலத்தை ஒப்புக்கொடுக்கின்றோம். நல்ல விழுமியங்களை எம் மனங்களில் விதைத்திடும் புதிய முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டு, கல்வியிலும், உயரிய துறைகளிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்த அருள்புரிய வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மாண்புக்கு உரிய உமது திருமுன் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை இறைப்பற்றின் அருளையும் நிலையான பேரின்பத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தருவதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி   திபா 72:28

கடவுளின் அண்மையே எனக்கு நலம். ஆண்டவராகிய கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.


அல்லது   மாற் 11:23-24

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். கேட்டபடியே உங்களுக்கு நடக்கும், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, 

Comments