பொதுக்காலம் முப்பத்திரண்டாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமான இறை உறவுகளே! இன்று பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். எமது சர்வ சாதாரண மற்றும் நாளாந்த வாழ்விலே ஆண்டவருக்கு, 'நன்றி' எனும் வார்த்தையைக் கூறி அனைத்தையும் உள்ளடக்கிவிட முடியாது. எமது நன்றியின் செயல், திருப்பலியின் நன்றியின் செயலாகிய அப்பத்தை உடைத்துக் கொடுப்பதிலும், இரசத்தை பகிர்ந்தளிப்பதிலுமே நிறைவேறுகின்றது. ஆகவே, எமது வாழ்வை நன்றியின் பலியாக ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
இன்று நாம் சந்திக்கும் இறைவார்த்தைகள் ஆழமானதே. அரசர்கள் முதலாம் நூலிலே, இறைவனின் கைமாறு பெற்ற கைம்பெண்ணின் வாழ்வியல் அனுபவம் காட்டப்படுகின்றது. இறைவனின் வல்லசெயல்கள் எமது நாளாந்த வாழ்க்கை அனுபவத்தோடு பயணிக்கின்றது, அது தொடர்ந்தும் பிரதிபலிக்கின்றது. இதை நாம் எச்சந்தர்ப்பத்திலும், எவ்வேளையிலும் தவறவிடக்கூடாது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலே, "கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்" எனும் ஆழமன இறையியல் உண்மை சித்தரிக்கப்படுகின்றது. கிறிஸ்து இவ்வுலகிற்கு வருவதன் முதன்மை நோக்கமும் அதன் நிறைவும் எமக்கு கொடுக்கப்பட்ட உன்னத வரங்களே. மாற்கு நற்செய்தி இறைவாக்கானது இரண்டு வகையான சவால்களை முன்வைக்கின்றது: அதாவது, வாழ்க்கையில் உயர்திருப்போர் என கருதி அனைத்தையும் சுயநலனுக்கான நிறைவேற்றுபவர்கள் போல் நாம் இருக்கக்கூடாது என்றும், கைம்பெண்ணின் காணிக்கைபோல் ஒரு முழுமையான அர்ப்பணத்தில் நாம் நிலைத்திருக்கவேண்டும் என்பதையும் காட்டி நிற்கின்றது.
ஆகவே, இன்றைய நாளிலே, இறைவன் தரும் இவ்வார்த்தைக்காக நாம் நன்றி சொல்லுவோம். நாம் ஒவ்வொரு நாளும் உடைந்துபோனாலும் உயிரோட்டம் அளிக்கும் இறைவார்த்தை எமக்கு எப்பொழுதும் வாழ்வின் விளக்கே. எனவே, எமது பலம், பலவீனம், வெற்றி தோல்வி, நம்பிக்கை, அறியாமை மத்தியில் இறைவனை பற்றிக்கொண்டு வாழ கற்றுக்கொள்வோம். நாம் கற்றுக்கொள்ளும் விழுமியங்கள், இயேசுவின் இலக்கை மெய்ப்பிப்பதாக. எம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சுற்றியிருக்கும் மனிதர்கள் மத்தியில் இயேசுவை முன்கொணர்வோம். எமக்காக இயேசுவின் ஒவ்வொரு அசைவும் அதிசயங்களாகிட மன்றாடுவோம்.
குறிப்பாக எமது நாட்டிற்காகவும் அதன் அழகிய எதிர்காலத்திற்காகவும் மன்றாடுவோம். எமக்கு முன் நடைபெறும் நன்மைத்தனங்களில் நாமும் பொறுப்புள்ள குடிமக்களாக மாறவேண்டிக்கொள்வோம். தீமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாமும் கரங்கொடுத்து இந்நாட்டிற்காக உழைத்திடும் நல்மக்களாக மாறிட வரங்கேட்போம், இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
காண். திபா 87:3 ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
திருக்குழும மன்றாட்டு
எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, எங்களுக்கு எதிரானவற்றை எல்லாம் கனிவுடன் அகற்றியருளும்; அதனால் உள்ளத்திலும் உடலிலும் எழுகின்ற தடைகளை நீக்கி உவப்புடன் உமக்கு ஊழியம் புரிவோமாக. உம்மோடு.
முதல் இறைவாக்க்கு
எலியா சொன்னபடியே கைம்பெண் செய்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 10-16
அந்நாள்களில்
எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார்.
அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும்” என்றார்.
எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார்.
அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
அல்லது: அல்லேலூயா.
7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்;
பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;
சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி
8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;
நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி
9bc அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;
ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி
இரண்டாம் இறைவாக்க்கு
பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்து, மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பார் என்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.
மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்க்கு
இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
அக்காலத்தில்
இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
அல்லது குறுகிய வாசகம்
இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 41-44
அக்காலத்தில்
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. எமது திரு அவை தாம் தாங்கிச்செல்லும் புனிதத்திலும், அர்ப்பணத்திலும் நிறைவுகாண அருள்புரிய வேண்டுமென்று, ...
2. எமது திருத்தந்தை முன்னோக்கிச் செல்லும் பாதையை இறைவன் ஆசீர்வதிக்கவும், தூய ஆவியின் வல்லமை கொண்டு, இத்திரு அவையை தாங்கிச்செல்ல வேண்டுமென்று, ...
3. எமது பங்கில் நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நிறைவளிக்கவும், அதன் வளர்ச்சிப்படிகளில் அயராது உழைக்கும் அனைவரும் இத்திரு அவையின் நம்பிக்கை வாழ்வை அழகுபடுத்த வேஎண்டுமென்று, ...
4. எமது நாட்டின் புதிய பயணத்திற்காக தம்மை அர்ப்ப்பணிக்கும் அரசியல் தலைவர்கள் அதன் பெறுமதியை உணர்ந்து உழைக்கவும், ஊழல் அற்ற, பொய்மை அற்ற, ஆயுத கலாசாரமற்ற நாட்டை உருவாக்கும் புதிய பொறிமுறையை உணரவேண்டும்மென்று, ...
5. எமது பங்கிலே பொதுப்பணியாற்றும் ஆசிரியர்கள், வைத்தியர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு ஊழியர்கள், அரச பணியாளர்கள் என அனைவரும் இறைமாட்சிக்காக உழைக்கவும், புதிய சமுகம் படைக்கும் பணியில் தம்மை அர்ப்பணிக்கவும் வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இப்பலிப்பொருள்களை இரக்கமுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளின் மறைநிகழ்வைக் கொண்டாடும் நாங்கள் பற்றன்புடன் அதில் பங்குகொள்வோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
காண். திபா 22:1-2 ஆண்டவர் என்னை ஆள்கின்றார்; எனக்கேதும் குறை இல்லை; பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்தார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் சென்றார்.
அல்லது
லூக் 24:35 அவர் அப்பத்தைப் பிடுகையில், சீடர்கள் ஆண்டவர் இயேசுவைக் கண்டுணர்ந்து கொண்டார்கள்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உமது புனித கொடையால் ஊட்டம் பெற்ற நாங்கள் கனிவுடன் உம்மை மன்றாடி நன்றி கூறுகின்றோம்; இவ்வாறு உம் ஆவியாரின் பொழிவால் நாங்கள் விண்ணக ஆற்றல் பெற்று உண்மையான அருள்வாழ்வில் நிலைத்து நிற்கச் செய்வீராக. எங் கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment