திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! மலரும் இவ் இளங்காலை வேளையில் எமது உள்ளங்களை இறைவன்பால் திருப்பி, அவர் புகழ்பாடவும், அவர் அன்பை தினமும் சுவைக்கவும் நாம் இக்கல்வாரி பீடம் நோக்கி கூடிவந்துள்ளோம். இன்று பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறாகும், அத்தோடு உலக தேவ அழைத்தலின் தினத்தையும் நாம் கொண்டாடுகின்றோம்.
இறைவன் எம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார், தனது பணியை நேர்மையோடும் ஆர்வத்தோடும் வாஞ்சையோடும் ஆற்ற இன்றும் பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றார். நல்ல ஆயன் நானே என்று இயேசு தன்னை ஓர் வழிகாட்டியாக, தலைவனாக, ஆசானாக, அரவணைப்பவராக, உடன் பயணிப்பாவராக எண்பிக்கின்றார். அனைத்தையும், அனைவரையும் அறிந்து, தேர்ந்து அழைப்பதைக் காணலாம்.
இன்று நாம் எமது திருநிலைப் பணியாளர்களுக்காக மன்றாட அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக எமது மறைமாநில ஆயர், குருக்கள், துறவிகள் அனைவருக்காகவும் இப்பலியிலே மன்றாடுவோம். இவர்களின் அர்ப்பண வாழ்வுக்காக மன்றாடுவோம். தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பான இயேசுவின் தாழ்ச்சியை, தியாகத்தை, வெறுமையை தமது வாழ்வின் பண்புகளாக்கிட மன்றாடுவோம். ஒப்படைக்கப்பட்ட மந்தைகளின் உரிமைக்காக போராடும், ஆன்மாவுக்காக செபிக்கும், உறவுகளை ஒன்றிணைக்கும் நல் இதயம்கொண்டிருக்க மன்றாடுவோம். இயேசுவே தம் வாழ்வின் தொடக்கமும் முடிவுமாகிட மன்றாடுவோம். அவரின் சாயல் இப்பணியாளர்களின் வாழ்நாள் முழுவதும் செழித்தோங்கிடவும் தொடர்ந்தும் இறை அழைத்தல் பெருகிடவும் தொடரும் இப்பலியில் இவர்களை இணைத்து மன்றாடுவோம்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணவரின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்குகொள்ள எங்களை அழைத்துச் செல்கின்றீர்; அதனால் நல்ல ஆயராகிய கிறிஸ்து துணிவோடு முன்னரே சென்றுள்ள இடத்துக்குப் பணிவுள்ள மந்தையாகிய நாங்களும் வந்து சேர்வோமாக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
திருத்தூதர் பணிகள் நூல்: 4: 8-12
இயேசுவினாலே அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.
இரண்டாம் இறைவாக்கு
யோவான் எழுதிய முதல் திருமுகம்: 3: 1-2
கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
நற்செய்தி இறைவாக்கு
யோவான் எழுதிய நற்செய்தி: 10: 11-18
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
இறைமக்கள் மன்றாட்டு
குரு. அழைத்தலின் ஞாயிறு தினத்திலே, எம்மை தம் பெயர்சொல்லி அழைக்கும் இயேசுவிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. அழைத்தலின் ஆண்டவரே, எமது திரு அவையிலே பணியாற்றும் அனைத்து திரு நிலைப் பணியாளர்களும் உமது அன்பையும், உம்மேல் வைத்திருக்கும் பிரமாணிக்கத்தையும் தொடர்ந்து பறைசாற்றிட அருளபுரிய வேண்டுமென்று...
2. அழைத்தலின் ஆண்டவரே, எமது மறைமாநில ஆயருக்காக மன்றாடுவோம். உமது பாதையில் தொடர்ந்து பயணிக்கும் இவர், தமது ஞானத்தால், அறிவால், வல்லமையால், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இம்மறை மாவட்டத்தையும், அதிலே பணியாற்றும் அனைத்து குருக்கள் துறவிகளையும், மேலும் இறைமக்களையும் வழிநடத்த தேவையான அருளை பொழிந்தருள வேண்டுமென்று...
3. அழைத்தலின் ஆண்டவரே, இவ்வுலகிலே நாம் சந்திக்கும் புதிய புதிய சவாலகள், போராட்டங்கள் மத்தியில், அதை முகங்கொடுத்து, முன்செல்லவும், திரு அவையை எவ்வித கலக்கமின்றி, கறையின்றி வழிநடத்த தேவையான பணியாளர்களை அளித்தருள வேண்டுமென்று...
4. அழைத்தலின் ஆண்டவரே, எமது மறைமாவட்டத்தில் பணியாற்றி உமதண்டை சேர்ந்திருக்கும் எமது பணியாளர்கள் அனைவரும், விண்ணக பேரின்பத்தை அடையவும், புனிதர்காளின் கூட்டத்தில் சேர்த்தருள வேண்டுமென்று...
5. அழைத்தலின் ஆண்டவரே, உமது அழைப்பை ஏற்று, வௌ;வேறு நாடுகளில் மறைபோதகர்களாக பணியாற்றும் அனைவருக்கும் உமது வல்லமையையும் ஆற்றலையும், பணியார்வத்தையும் அளித்திடவேண்டுமென்று...
குரு: அன்பின் இறைவா, உமது அழைப்பு மிக மகத்தானது, சிறந்தது, எம்மை தொடர்ந்தும் மக்களோடு இணைக்கின்றது. ஒவ்வொரு ஆன்மாவையும் உம்மிடம் கொண்டுசேர்க்கும் பாரிய பணியை எமக்கு அளித்திருக்கின்றீர். எமது திறமையோடும், பலவீனத்தோடும் நாம் அவற்றில் திறம்பட செயாலாற்ற தேவையான அருளை பொழிந்தருளும். மிக தாழ்மையோடும் பணிவோடும் உம்மிடம் ஒப்படைக்கும் எமது தேவைகளுக்கு நீர் செவிசாய்த்து அவற்றை பெற்றுத் தந்தருள்வீராக. எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாக அமைவதாக. எங்கள்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
நல்ல ஆயரே, உமது மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; உம் திருமகனின் உயர் மதிப்புள்ள இரத்தத்தால் மீட்ட உம் ஆடுகளை நிலையான பசும்புல் வெளியில் கூட்டிச் சேர்க்க அருள்வீராக. எங்கள்.
No comments:
Post a Comment