பாஸ்கா காலம் -இரண்டாம் ஞாயிறு -இறை இரக்கத்தின் ஞாயிறு 07-04-2024

 


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள இறை உறவுகளே, இயேசுவின் பிரசன்னத்திலே அவரின் உயிர்ப்பை கொண்டாடி மகிழும் இந்நாட்களில் அவருக்கு நன்றி செலுத்தவும்  அவரின் தியாகப்பலியில் கலந்துகொள்ளவும் அவர் பாதம் நாடி வந்திருக்கின்றோம். 

இன்று பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறாகும் அத்தோடு அன்னையாம் திரு அவை இன்றைய நாளை இறை இரக்கத்தின் ஞாயிராகவும் கொண்டாடுகின்றது. புனித பவுஸ்தினாவுக்கு கிடைத்த இயேசுவின் வெளிப்பாடுகளை உலகறிய கொணர்ந்தவர் திருத்தந்தை புனித இரண்டாம் ஜோவான் பவுல் ஆகும். இயேசுவே நான் உம்மில் நம்பிக்கை வைக்கின்றேன் என்று நாம் அளிக்கும் நம்பிக்கை அறிக்கையே இன்றைய நாளுக்கான வேண்டுகோளாகவும் இருக்கின்றது. 

இயேசு இறந்து உயிர்த்தெழுந்து இன்றும் என்றும் வாழ்கின்றார் என்பதனை இன்றைய இறைவார்த்தைகள் எண்பிக்கின்றன. சீடர்களின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுகின்றது, அவர்களின் அச்சம் நீக்கப்படுகின்றது, இலக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. நாமும் உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கப்படுகின்றோம். இயேசு மீதுகொண்ட நம்பிக்கை வாழ்வே அவரை உலகறிய எடுத்துரைக்க எமக்கு கொடுக்கப்படும் அழைப்பாகும். எமக்குள் இருக்கும் வெறுமையான கல்லறையான எமது சுயநல எண்ணங்களை மாற்றுவோம், இலக்குகளற்ற பயணங்களை புதுப்பிப்போம், அறியாமையில் இருந்து எமது ஆளுமைகளை மீட்டெடுப்போம், புதிய வாழ்வுக்குள் நுழைவோம். தொடரும் கல்வாரிப்பலியில் கலந்து இறையாசீரை பெற மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி  1 பேதுரு 2:2

புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த  ஆர்வம் உள்ளவராய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளர்வீர்கள், அல்லேலூயா.

அல்லது எஸ் 2:36-37

உங்கள் மாட்சியில் பெருமகிழ்ச்சி கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் உங்களை விண்ணரசுக்கு அழைத்துள்ளார், அல்லேலூயா.

'உன்னதங்களிலே' சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள இரக்கத்தின் இறைவா, மீண்டும் மீண்டும் நாங்கள் கொண்டாடும் பாஸ்கா விழாவிலே உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை நீர் தூண்டுகின்றீர்; நீர் வழங்கிய இவ்வருளைப் பெருக்குகின்றீர்: இவ்வாறு திருமுழுக்கினால் நாங்கள் கழுவப்பட்டுள்ளதையும் தூய ஆவியாரால் நாங்கள் புதுப் பிறப்பு அடைந்துள்ளதையும் இரத்தத்தால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளதையும் நாங்கள் சரியான முறையில் அறிந்து, புரிந்து கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

1ம் இறைவாக்கு

திருத்தூதர்பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-35.

பதிலுரைப் பாடல்  திபா 118

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2ம் இறைவாக்கு  

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! 'தோமா, நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்,' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி இறைவாக்கு

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31.

'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.

விசுவாகிகள் மன்றாட்டு

குரு: 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!' என்று கூறி, இயேசுவில் நம்பிக்கையை உறுதிப்படுத்திய தோமாவைப் போல் நாமும் எமது தேவைகளை எடுத்துரைத்து மன்றாடுவோம்.  

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம். 

உயிர்த்த கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் பரப்பிடும் அனைத்து பணியாளர்களையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். மாறிடும் உலகில் மாறாத உம்மை என்றும் பற்றிப்பிடித்து வாழவும், சவால்களை சந்திக்கும் போது, அதை எதிர்த்துபோரிடக் கூடிய மனத் தைரியத்தை அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. எமது பங்கு திரு அவைக்காக மன்றாடுவோம். 

இயேசுவின் உயிர்ப்பை மகிழ்வுடன் கொண்டாடும் நாம், இறைவன் தரும் இம்மகிழ்ச்சியை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைக்கும் அழைப்பை பெறுவோமாக. சிறுவர்களாக, இளைஞர் யுவாதிகளாக, அன்பின் உறவுகளாக, பகிர்ந்து வாழவும், ஒருவர் ஒருவருக்காக விட்டுக்கொடுக்காவும், செபித்து வாழவும் வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமக்காக மன்றாடுவோம்: கூட்டொருங்கியக்கத் திரு அவையாக பயணிக்கும் எமக்கு, 2025ம் ஆண்டை ஜுபிலியின் ஆண்டாகக் கொண்டாட எம்மை ஆயத்தம்செய்வோம். தூய ஆவியின் வழிநடத்தலில் திருக் குடும்ப உணர்வோடு, புதிய வழிகாட்டலில், புதிய நெறிப்படுத்தலில், புதிய சமுகமாக பயணிக்கத் தேவையான அருளை அளித்திட வேண்டுமென்று,...

4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம் 

எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: வல்லமையின் இறைவா, உமது உயிர்ப்பிலே நாம் கொண்டாடும் மகிழ்ச்சியை, அருளை, வல்லமையை, மன்னிப்பை மற்றும் இரக்கத்தை என்றும் எப்பொழுதும் அனுபவிக்கச் செய்தருளும். உமது பிள்ளைகள் நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்கள் எமக்கு நிறைவைத் தருவதாக. எங்கள்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புதுப் பிறப்பு அடைந்த உம் மக்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பெயரை அறிக்கையிடுவதாலும் திருமுழுக்கினாலும் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் என்றென்றுமுள்ள பேற்றினைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்;.

திருவிருந்துப் பல்லவி       காண். யோவா 20:27

உன் கையை இடு, ஆணிகள் இருந்த இடத்தைக் கண்டறிவாய்: ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருளடையாளத்தை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்; அதனால் அதன் ஆற்றல் எங்களுடைய உள்ளங்களில் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வீராக. எங்கள்;.

Fr. S. James Suren OMI,
Communauté Internationale Des Missionnaires Oblats,
60, Cours Mirabeau, 
13100, Aix-en-Provence,
France. 
+94 77 232 3266,
+33 61 331 3213

Comments