திருப்பலி முன்னுரை
நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். இறை இயேசுவில் அன்புள்ள இறைமக்களே. இயேசுவின் உயிர்ப்பு இன்றும் எமக்கு இன்னும் அழகான செய்திகளை தருகின்றது, அம்மகிழ்ச்சியை பரப்ப எமக்கு அழைப்புவிடுக்கின்றது. இயேசுவோடு இணைந்து, அவர் வாழ்வோடு கலந்து, அவரை உண்டு, பருக இப்பலியிலே இணைந்திருக்கின்றோம். பாஸ்கா காலத்தின் இவ் ஐந்தாம் வாரம், இயேசுவில் எம்மை இன்னும் இணைத்திட அழைக்கின்றது.
இயேசுவை உலகறிய எடுத்துரைப்பது என்பது ஒரு சவாலே. அதிலும் கிறிஸ்தவர்களை துன்புறுத்திய பவுல், இயேசுவையே எடுத்துரைப்பதை இன்றைய முதலாம் இறைவார்த்தையில் காணலாம். இயேசுவோடு அனைத்திலும் இணைந்திருந்து, உண்மையான, நேர்மையான வாழ்வினால் அவரின் அன்பு பிள்ளைகளாக மாறமுடியும் என்பதை இரண்டாம் இறைவாக்கு எடுத்துரைக்கின்றது. இன்றைய நற்செய்தி இன்னும் அழகாக இயேசுவின் இயல்புகளில் ஒன்றை எடுத்துரைக்கின்றது. இயேசுவோடு நாம் கொண்டுள்ள இணைபிரியா உறவே நாம் இன்று கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கிய பண்பாக உள்ளது. ஆகவே, இன்று எம் வாழ்வை இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்வோம். தூய்மையான வாழ்வினால் அவர் தரும் அருளை ஆசீரை பிறரோடு பகிர்ந்துகொள்வோம், எமது இயலாமைகள், பாவங்கள் எமது ஆரோக்கியமற்ற எண்ணங்களை அடியோடு களைந்துவிடுவோம். நாம் பார்க்கும் பார்வைகள், கேட்கும் வார்த்தைகள், பேசும் மொழிகள் புதிய வாழ்வுக்கான பாதையை அமைப்பதாக. எமது விருப்பங்கள், அபிலாஷைகள் அனைத்தும் இயேசுவின் உண்மை வார்த்தைகளோடு இணைந்திருப்பதாக. அவர் சீடராக நாளும் பொழுதும் வாழ்ந்து, வாழ்வித்து, வழிகாட்டிச் செல்ல தொடரும் இப்பலியில் இணைந்துகொள்வோம்.
வருகைப் பல்லவி
காண். திபா 97:1-2
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள், ஏனெனில் ஆண்டவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார், அல்லேலூயா..
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா மறைபொருளை எப்பொழுதும் எங்களில் நிறைவு பெறச்செய்தருளும் இவ்வாறு புனிதத் திருமுழுக்கினால் நீர் புதுப்பிக்கத் திருவுளம் கொண்ட நாங்கள் உமது பாதுகாப்பின் உதவியால் மிகுந்த பயன் தந்து நிலைவாழ்வின் மகிழ்ச்சிக்கு வந்து சேர அருள்வீராக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
திருத்தூதர் பணிகள் நூல்: 9: 26-31
பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றி பர்னபா திருத்தூதர்களுக்கு விளக்கிக் கூறினார்..
இரண்டாம் இறைவாக்கு
யோவான் எழுதிய முதல் திருமுகம்: 3: 18-24
நம்பிக்கை கொண்டு, அன்பு செலுத்த வேண்டும். இதுவே கிறிஸ்துவின் கட்டளை.;
நற்செய்தி இறைவாக்கு
யோவான் எழுதிய நற்செய்தி: 15: 1-8
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால், அவர் மிகுந்த கனி தருவார்.
இறைமக்கள் மன்றாட்டு
குரு. நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என்று மொழிந்த நம் ஆண்டவர் இயேசுவிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். இறைவனிலே நம்பிக்கைகொண்டு, தமது முழு விருப்பத்தோடும், சுதந்திரத்தோடும் திரு அவையிலே பணிபுரியும் அனைத்து திருநிலைப் பணியாளர்களும், தமது அழைப்பின் மேன்மை உணர்ந்து, இறைபராமரிப்பிலும், இறைவல்லமையிலும் நம்பிக்கைகொண்டு பணியாற்ற அருள்புரிய வேண்டுமென்று...
2. துன்புறும் எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். அரசியல் சீர்கெட்ட சிந்தனையால், ஆணவத் தலைமைத்துவத்தால் முன்னெடுக்கும் யுத்தங்களும், ஆயுத கலாசாரமும் அழித்துக்கொண்டிருக்கும் எம் மக்கள் தமது வாழ்வை மீண்டும் பெறவும், உரிமையும், உணர்வுகளும் மதிக்கப்படவும், மகிழ்ச்சியும், அமைதியும் வாழப்படவும் வேண்டுமென்று...
3. உலகின் பல நிலைகளில் உயிருக்காக போராடும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தினால் பாதிப்புற்று, பசியினால், பஞ்சத்தினால் உயிரை இழந்துகொண்டிருக்கும் சிறுவர்கள், பெண்கள், வயதுவந்தோர் என அனைவரையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். இறைவா, இவர்களை நீரே பொறுப்பெடுத்து, இவர்களின் கண்ணீருக்கு பதில்தரவேண்டுமென்று...
4. அசாதாரண நிலைமாற மன்றாடுவோம். எம்மை சுற்றி காணப்படும் காலநிலை மாற்றங்கள் அதனால் ஏற்படும் பஞ்சம், வெப்பநிலை அதிகரிப்பு, அதிக மழை, வெள்ளம் மேலும் பயிர்செய்கைகள் அழிவு என பல்வேறு நிலைகளில் கஸ்டப்படும் அனைவரையும் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். இவற்றை நீரே கண்ணோக்கி இவ் இயற்கை அனர்த்தங்களில் இருந்து எம் அனைவரையும் பாதுகாத்தருள வேண்டுமென்று...
குரு: இறைவா நீரே வல்லவர், நல்லவர், அனைத்தையும் ஆள்பவர் என் நாம் அறிவோம். நாம் எவ்வளவிற்கு உம்மோடு இணைந்து பயணிக்கின்றோமோ, அவ்வளவிற்கு எமது அயலவர்களின் உறவு, அவர்களின் தேவைகள் எமக்கு தேவையானதே. இங்கே கூடியிருக்கும் அனைவரோடும் இணைந்து எமது தேவைகளை முன்வந்து ஒப்புக்கொடுக்கின்றோம். தயவுடன் இவற்றிற்கு செவிசாய்த்து ஏற்றருளவேண்டுமென்று, எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
உண்மையான திராட்சைச் செடி நானே. நீங்கள் கொடிகள், என்கிறார் ஆண்டவர். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், அல்லேலூயா.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.
No comments:
Post a Comment