புனித இரவில் பாஸ்கா திருவிழிப்பு
முன்னுரை
இறை இயேசுவில் பிரியமுள்ள உறவுகளே! இன்று கிறிஸ்து இயேசு இவ்வுலகின் பாவ இருளை வென்று உலகிற்கு ஒளியைக் கொடுத்த நாள். அதுவே கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளாகும். இது அனைத்து வழிபாடுகளிலும் ஒர் உயர்ந்த வழிபாடாகும். அனைத்து ஞாயிறிலும் முதன்மையான ஞாயிறாகும்.
இன்று நாம் கொண்டாட இருக்கும் இவ்விரவு ஒரு புனித இரவு. எமக்கு நம்பிக்கை எனும் வெளிச்சத்தை தந்த இரவு, இதுவே பாஸ்கா இரவு ஆகும். எகிப்தியரின் உலகிற்குள் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இஸ்ராயேல் மக்களை ஒரு சுதந்திர மக்களாக கொணர்ந்த இரவு, முழு மனித விடுதலையை பெற்று இறைவனின் சுவிகார மக்களாக மாற்றிய இரவு, சுதந்திரமாக வழிபடவென இஸ்ராயேல் மக்களை அழைத்துச்சென்ற இவ்விரவே பாஸ்கா இரவு ஆகும். இயேசுவின் உயிர்ப்பு நாளில் அகமகிழும் திரு அவை மக்களாகிய நாம் எமை சூழ்ந்திருக்கும் பாவ இருளை அகற்றி கிறிஸ்துவே ஒளியாக இவ்வுலகிற்கு கொண்டு வருவோம். தொடரும் இவ் அழகிய வழிபாட்டில் முழுமையாக பங்குபெறுவோம்.
திரு ஒளி வழிபாடு
தீயையும் பாஸ்கா திரியையும் புனிதப்படுத்துதல்
1. ஒளியின் வழிபாடு
இப்பொழுது ஒளியின் வழிபாடு ஆரம்பமாகின்றது. கடவுள் இவ்வுலகைப் படைத்தபோது, ஒளியை தனது முதற்படைப்பாக படைத்தார். ஒளி இருக்கும் இடத்தில் இருள் ஆட்சிசெலுத்த முடியாது. இன்று இவ்வொளி புது ஒளியாக ஏற்றப்படுகின்றது. தேனிக்களின் முயற்சியினால் ஆன மெழுகுதிரியைக் கொண்டு இவ்வொளி ஏற்றப்படுகின்றது. இதுவே தாய்த் திரியாக உலகிற்கு ஒளியாக திகழும் இயேசுவை எண்பிக்கின்றது. கடவுள் இஸ்ராயேல் மக்களை ஒளியிலும், மேகத் தூணிலும் நடத்திச் சென்றார். இயேசுவின் உயிர்ப்பின் ஒளி இன்று எம்மை அழைத்துச் செல்கின்றது.
இதோ ஒளியின் பவனி ஆரம்பமாகின்றது. குருவானவர் பாஸ்கா மெழுகுதிரியை ஏந்திச் செல்வார். 'கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று அழைக்க, நாம் 'இறைவனுக்கு நன்றி' என்று பதிலுரைப்போம், அவரை பின் தொடர்ந்து ஒரே நுழைவாயிலின் வழியே ஆலயம் செல்லுவோம்.
குரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து சென்ற புனிதமிக்க இவ்விரவில் திரு அவை உலகெங்கும் பரந்து வாழும் தன் மக்களை விழித்திருக்கவும் மன்றாடவும் ஒன்றுகூடுமாறு அழைக்கின்றது. இவ்வாறு இறைவார்த்தையைக் கேட்டும் அவருடைய மறைநிகழ்வுகளைக் கொண்டாடியும் அவருடைய பாஸ்காவை நாம் நினைவுகூர்ந்தால், சாவின் மீது அவர் கொண்ட வெற்றியில் நாமும் பங்குபெறுவோம், அவரோடு இறைவனில் வாழ்வோம் என்னும் எதிர்நோக்கைக் கொண்டிருப்போம்.
- பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத்தீயின் மீது ஆசி வழங்கிச் சொல்கின்றார்:
மன்றாடுவோமாக.
இறைவா, உம் திருமகன் வழியாக, நம்பிக்கையாளர் மீது உமது மாட்சியின் பேரொளி சுடர்ந்திடச் செய்தீரே; இப்புதுத் தீயைப் + புனிதப்படுத்தியருளும்; இவ்வாறு இப்பாஸ்கா திருவிழா வழியாக விண்ணகத்தின் மீது கொண்ட ஆவலால் நாங்கள் பற்றியெரிவோமாக; அதனால் தூய்மையான உள்ளத்தோடு முடிவில்லா மாட்சியின் விழாவுக்கு வந்து சேரும் வலிமை பெறுவோம்" எங்கள்.
- புதுத் தீயைப் புனிதப்படுத்தியபின் பணியாளர்களுள் ஒருவர் பாஸ்கா திரியை அருள்பணியாளரிடம் கொண்டுவர, அருள்பணியாளர் எழுத்தாணி கொண்டு அதில் சிலுவை அடையாளம் வரைகின்றார்;
1. கிறிஸ்து நேற்றும் இன்றும் (சிலுவையின் நேர் கோட்டை வரைகின்றார்)
2. முதலும் முடிவும் (குருக்குக் கோட்டை வரைகின்றார்)
3. அகரமும் (நேர் கோட்டுக்கு மேல் 'அ' என்னும் எழுத்தை எழுதுகிறார்)
4. னகரமும் (நேர்க்கோட்டுக்குக் கீழே 'ன' எனும் எழுத்தை எழுதுகின்றார்);
5. நேரங்கள் அவருடையன (நிகழும் ஆண்டின் முதல் எண்ணைச் சிலுவையின் இடப் பக்க மேற்பகுதியில் குறிக்கின்றார்);
6. காலங்களும் அவருடையன (நிகழும் ஆண்டின் இரண்டாம் எண்ணைச் சிலுவையின் வலப் பக்க மேற்பகுதியில் குறிக்கின்றார்);
7. மாட்சியும் ஆட்சியும் அவருக்கே ( நிகழும் ஆண்டின் மூன்றாம் எண்ணைச் 'சிலுவையின் இடப் பக்கக் கீழ்ப்பகுதியில் குறிக்கின்றார்);
8. என்றென்றும் எக்காலமுமே, ஆமென். (நிகழும் ஆண்டின் நான்காம் எண்ணைச் சிலுவையின் வலப் பக்கக் கீழ்ப்பகுதியில் குறிக்கின்றார்).
12 சிலுவை அடையாளத்தையும் எழுத்து, எண் குறிகளையும் இவ்வாறு பாஸ்கா தாயின்மீது வரைந்தபின், அதில் ஐந்து சாம்பிராணி மணிகளைச் சிலுவை வடிவில் பதிக்கலாம். அப்பொழுது அவர் சொல்கின்றார்:
1. தம்முடைய தூய
2. மாட்சிக்கு உரிய காயங்களால்
3. ஆண்டவராகிய கிறிஸ்து
4. நம்மைக் கண்காணித்துப்
5. பேணிக் காப்பாராக. ஆமென்.
மாட்சியுடன் உயிர்த்தெழும் கிறிஸ்துவின் ஒளி
இதயத்திலும் மனதிலும் இருள் அகற்றுவதாக.
- திரி ஏற்றப்பட்டவுடன், பணியாளர்களுள் ஒருவர் எரிந்து கொண்டிருக்கும் தீக் கங்குகளைத் தீயிலிருந்து எடுத்துத் தூபக் கலத்தில் இடுகின்றார்.
- அருள்பணியாளர் வழக்கம் போல அதனுள் சாம்பிராணி இடுகின்றார்.
- திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லை எனில் - தகுதியான வேறொரு பணியாளர் பாஸ்கா திரியை எடுத்துக் கொள்கின்றார்.
- பவனி தொடங்குகின்றது.
- தூபக் கலத்தை ஏந்தி இருப்பவர் பாஸ்கா திரியை ஏந்திச் செல்லும் திருத்தொண்டரின் அல்லது வேறொரு பணியாளரின்முன் புகையும் தூபக் கலத்துடன் செல்கின்றார். அவர்களை அருள் பணியாளர் ஏற்றப்படாத திரிகளை வைத்திருக்கும் பணியாளர்களுடனும் மக்களுடனும் பின்தொடர்கின்றார்.
- பின் திருத்தொண்டர், கோவில் வாயிலில் நின்று பாஸ்கா திரியை எடுத்து உயர்த்திப் பிடித்துக்கொண்டு பாடுகின்றார்:
கிறிஸ் து வின் ஒளி இதோ!
இறைவ னுக் கு நன் றி.
பாஸ்கா புகழுரை
பாஸ்கா புகழுரை: நீண்ட பாடம்
விண்ணகத் தூதர் அணி மகிழ்வதாக;
இப்புனித நிகழ்வில் பெருமகிழ்ச்சி பொங்குவதாக;
மாபெரும் மன்னரது வெற்றிக்காக
எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெரும் சுடர்களால் ஒளிவீசப்பெற்று இவ்வுலகம் பெருமகிழ்ச்சி கொள்வதாக:
முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கி,
தன்னைச் சூழ்ந்த இருள் அனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.
இப்பெரும் சுடர்களால் அழகுபெற்று
அன்னையாம் திரு அவையும் களிகூர்வதாக.
எனவே மக்கள் அனைவரின் பேரொலியால்
இக்கோவில் எதிரொலித்து முழங்குவதாக.
(எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்
சூழ்ந்து நிற்கும் அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
உங்களை வேண்டுகின்றேன். என்னுடன் சேர்ந்து,
எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தை இறைஞ்சுவீர்களாக.
தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் சேர்த்திட
அருள்கூர்ந்த இறைவன்தாமே திருவிளக்கின் பேரொளியை என் மீது வீசி
இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
இதயப் பற்றுதலோடும் முழு மனதோடும் வாயாரப் பாடிப் புகழ்வது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்.
ஆதாமினால் வந்த கடனைக்
கிறிஸ்துவே என்றுமுள்ள தந்தைக்கு நமது பெயரால் செலுத்தி,
பாவத்துக்கு உரிய கடன்சீட்டைத்
தாம் சிந்திய திரு இரத்தத்தால் அழித்துவிட்டார்.
ஏனெனில் பாஸ்கா விழா இதுவே:
இதில் மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்;
அவரது இரத்தத்தால் நம்பிக்கையாளரின் கதவு நிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.
முற்காலத்தில் எம் முன்னோரான இஸ்ரயேல் மக்களை
நீர் எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் கால் நனையாமல்
செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.
'நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்
பாவத்தின் இருளை அகற்றிய இரவு இதுவே.
பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும்
இந்த இரவேதான்.
சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும்
இந்த இரவிலேதான்.
ஏனெனில் இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்,
பிறந்ததால் எப்பயனும் இல்லையே.
நீர் எம்மீது அருள்கூர்ந்து காட்டிய பரிவிரக்கம்
எத்துணை வியப்புக்கு உரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த
அளவில்லா அன்புப் பெருக்கே!
ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்கக்
கிறிஸ்துவின் சாவு திண்ணமாய்த் தேவைப்பட்டது!
இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைந்ததால்
பேறுபெற்ற குற்றமே!
ஒ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!
பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த
காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்!
இரவு பகல் போல் ஒளிபெறும்; நாள் மகிழ்வுற இரவும் ஒளிதரும்
என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.
ஆகவே புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி
தீமையை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது;
தவறினோருக்கு மாசின்மையையும்
துயருற்றோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது;
பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது;
மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.
ஆகவே தூய தந்தையே, அருள்பொழியும் இவ்விரவில்
நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்;
தேனீக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப்
புனிதத் திரு அவை தன் பணியாளரின் கையால்
மிகச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.
இறைவனின் மாட்சிக்காகச் செந்தழலாய்ச் சுடர்விட்டெரியும்
இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்:
இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,
தன் ஒளியிலிருந்து பங்கு கொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை;
ஏனெனில் தாய்த் தேனீ தந்த மெழுகு உருகுவதால்
உயர்மதிப்புள்ள தீ வளர்க்கப்படுகின்றது.
விண்ணுக்கு உரியவை மண்ணுக்கு உரியவையோடும்
கடவுளுக்கு உரியவை மனிதருக்கு உரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பேறுபெற்ற இந்த இரவிலேதான்
எனவே ஆண்டவரே, உம்மை வேண்டுகின்றோம்:
உமது பெயரின் மாட்சிக்காக நேர்ந்தளிக்கப்பட்ட இந்த மெழுகுதிரி,
இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.
இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,
விண்ணக விளக்குகளுடன் கலந்து கொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஒருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி
உம் திருமகன் கிறிஸ்துவேதான்;
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,
மனித இனத்தின் மீது அமைதியுடன் ஒளி வீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.
பதில்: ஆமென்.
இரண்டாம் பகுதி
வார்த்தை வழிபாடு
முன்னுரை
கடவுளின் திட்டம் என்பது அவரது படைப்பின் தொடக்கம் முதல் இன்றுவரை நிறைவேறிக்கொண்டே இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு இவற்றை செவ்வனே தெளிவுபடுத்துகின்றன. மனிதனின் பாவத்தின் விளைவாக கடவுள் எமை மீட்க திட்டம் கொண்டார். இத்திட்டம் தனது மகன் இயேசுக் கிறிஸ்து வழியாக நிறைவேறுகின்றது. இதனையே ஒவ்வொரு இறைவார்த்தையும் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, அனைவரும் வாசிக்கப்படும் இறைவார்த்தைகளுக்கு பக்தியுடன் செவிமெடுப்போம்.
முதலாம் இறைவாக்கு:
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1 - 2: 2
பதிலுரைப் பாடல் திபா 104: 1-2ய. 5-6. 10,12. 13-14. 24,35உ (பல்லவி: 30)
பல்லவி: ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
அல்லது
திபா 33: 4-5. 6-7. 12-13. 20,22 (பல்லவி: 5டி)
பல்லவி: ஆண்டவருடைய பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
மன்றாடுவோமாக.
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உம்முடைய செயல்கள் அனைத்தையும்
நீர் வியப்புக்கு உரிய வகையில் சீர்படுத்துகின்றீர்;
தொடக்கத்தில் நீர் உலகத்தைப் படைத்தது மாபெரும் செயலே;
இறுதி நாள்களில் எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியானார் என்பது
அதைவிட மாபெரும் செயல் ஆகும்:
மீட்பு அடைந்த உம் மக்கள் இதைக் கண்டுணரச் செய்வீராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக
உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: ஆமென்.
அல்லது (மனிதப் படைப்பு)
இறைவா,
மனிதரை வியத்தகு முறையில் படைத்தீர்,
அதனினும் வியத்தகு முறையில் மீட்டருளினீர்;
நாங்கள் மெய்யறிவுடன் பாவ நாட்டங்களை உறுதியாய் எதிர்த்து நின்று
முடிவில்லா மகிழ்ச்சிக்கு வந்து சேரும் தகுதி பெற அருள்வீராக. எங்கள்.
பதில்: ஆமென்.
இரண்டாம் இறைவாக்கு:
நம் தந்தை ஆபிரகாமின் பலி. தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-18
பதிலுரைப் பாடல் திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
மன்றாடுவோமாக.
இறைவா, நம்பிக்கையாளரின் உன்னதத் தந்தையே,
உமது வாக்குறுதியால் நீர் சொந்த மக்களாக்கிக் கொண்டவர்களை
உலகம் முழுவதிலும் பெருகச் செய்தீர்;
உம் ஊழியராகிய ஆபிரகாம்
அனைத்துலக மக்களின் தந்தையாவார் எனும் உமது உறுதிமொழியை
நீர் வாக்களித்தபடி பாஸ்கா மறைபொருளின் வழியாக நிறைவேற்றினார்:
உம் மக்கள் உமது அழைப்பின் அருளைப் பெற்றுக்கொள் தகுதி பெறுவார்களாக. எங்கள்.
பதில்: ஆமென்.
மூன்றாம் இறைவாக்கு:
இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 15 - 15:1
பதிலுரைப் பாடல் விப 15: 1-2. 3-4. 5-6. 17-18 (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில் மாட்சியுடன் வெற்றி பெற்றார்.
மன்றாடுவோமாக.
இறைவா, நீர் முற்காலத்தில் ஆற்றிய அருஞ்செயல்கள்
எங்கள் காலத்திலும் தொடர்வதை உணர்கின்றோம்:
உமது வலக் கையின் ஆற்றலால்
ஓர் இனத்தாரைப் பார்வோனின் கொடுமையிலிருந்து விடுவித்தீர்;
அவ்வாறே புதுப் பிறப்பு அளிக்கும் நீரினால்
பிற இனத்தாருக்கு மீட்பு அளித்து வருகின்றீர்;
எனவே உலக மாந்தர் அனைவரும்
உமது அருளினால் ஆபிரகாமின் மக்களாகி,
இஸ்ரயேல் இனத்தாருக்கு உரிய மேன்மையின் முழுமையை அடையச் செய்வீராக. எங்கள்.
பதில்: ஆமென்.
அல்லது
இறைவா, முற்காலத்தில் நிறைவேற்றிய அருஞ்செயல்களைப்
புதிய உடன்படிக்கையின் ஒளியால் தெளிவுபடுத்தினீர்:
இவ்வாறு திருமுழுக்கு நீரின் சாயலாகச் செங்கடல் விளங்கவும்
அடிமைத்தளையிலிருந்து மீட்கப்பெற்ற மக்கள்
கிறிஸ்தவ மக்களின் முன்னடையாளமாகத் திகழவும் செய்தீர்;
இஸ்ரயேல் மக்கள் பெற்ற சிறப்பு உரிமையை
எல்லா மக்கள் இனத்தாரும் நம்பிக்கையால் பெற்றுக்கொண்டு
உம் தூய ஆவியார் வழியாகப் புதுப் பிறப்பு அடையச் செய்வீராக. எங்கள்.
பதில்: ஆமென்.
நான்காம் இறைவாக்கு:
என்றுமுள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 5-14
பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10,11ய,12டி (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைதூக்கிவிட்டீர்.
மன்றாடுவோமாக.
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உமது பெயரின் மாட்சிக்காக,
எங்கள் மூதாதையரது நம்பிக்கையின் பொருட்டு நீர் வாக்களித்ததையும்
உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட
உமது வாக்குறுதியின் மக்களுடைய எண்ணிக்கையையும்
நீர் பெருகச் செய்தருளும்;
அதனால் எங்கள் முற்காலப் புனிதர்கள்
ஐயமின்றி எதிர்பார்த்திருந்தவை அனைத்தும்
எங்களில் நிறைவேறி வருவதை நாங்கள் கண்டுணரச் செய்வீராக. எங்கள்.
பதில்: ஆமென்.
ஐந்தாம் இறைவாக்கு:
என்னிடம் வாருங்கள்; நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11
பதிலுரைப் பாடல் எசா 12: 2-3. 4டி9உன. 5-6 (பல்லவி: 3)
பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்.
மன்றாடுவோமாக.
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உலகின் ஒரே எதிர்நோக்கு நீரே.
இக்காலத்தில் நாங்கள் கொண்டாடும் மறைநிகழ்வுகளை
உம் இறைவாக்கினர்களின் வழியாக முன்னறிவித்தீர்;
இன்றைய காலங்களின் மறைநிகழ்வையும் வெளிப்படுத்தினீர்;
உமது தூண்டுதலால் அன்றி
உம் நம்பிக்கையாளரின் எந்த விதமான நற்பண்பும் வளம் பெறாது என்பதால்,
உம் மக்களில் இறை ஆவல்களைக் கனிவுடன் பெருகச் செய்வீராக. எங்கள்.
பதில்: ஆமென்.
ஆறாம் இறைவாக்கு:
ஆண்டவரின் ஒளியில் சீர்மையை நோக்கி நட.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 32-4: 4
பதிலுரைப் பாடல் திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா 6: 68)
பல்லவி: ஆண்டவரே! நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
மன்றாடுவோமாக.
இறைவா, உமது திரு அவையை என்றும் வளரச் செய்கின்றீர்;
திருமுழுக்குத் தண்ணீரால் கழுவப்பெறும் மக்களை
நீர் இடையறாது பராமரித்துக் காத்தருள்வீராக. எங்கள்.
பதில்: ஆமென்.
ஏழாம் இறைவாக்கு:
நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.
நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 16-17ய, 18-28
பதிலுரைப் பாடல் திபா 42: 2,4யடிஉ; 43: 3. 4 (பல்லவி: 42: 1)
பல்லவி: கடவுளே! என் நெஞ்சம் கலைமான் போல உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
- இத்திருவிழிப்பின்போது திருமுழுக்கு நடைபெறுமானால், ஐந்தாம் வாசகத்துக்குப் பின்னர் வரும் பதிலுரைப் பாடலைப் பயன்படுத்தவும்.
திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: 10)
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
மன்றாடுவோமாக.
இறைவா, என்றும் மாறாத ஆற்றலும் நிலையான ஒளியுமானவரே,
வியத்தகு அருளடையாளமாகிய திரு அவை முழுவதையும் கனிவுடன் கண்ணோக்கியருளும்:
முடிவில்லா ஏற்பாட்டின்படி மனிதரை மீட்கும் அதன் பணி
அமைதியுடன் நிறைவேறச் செய்தருளும்;
வீழ்ச்சியுற்றவை எழுச்சி அடைவதையும்
பழமையானவை புதுப்பிக்கப்பெறுவதையும்
கிறிஸ்துவில் தொடங்கிய அனைத்தும்
அவர் வழியாகவே முழுமை அடைவதையும் உலகம் கண்டுணர்வதாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
அல்லது
இறைவா, பாஸ்கா மறையுண்மையைக் கொண்டாட
இரு உடன்படிக்கை நூல்களிலிருந்தும் எங்களுக்குக் கற்பிக்கின்றீர்;
உமது இரக்கத்தைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவியருளும்;
இவ்வாறு இக்காலத்தில் உம் அருள்கொடைகளை அறிந்துகொள்ளும் நாங்கள்
வரவிருக்கும் கொடைகளை உறுதியாய் எதிர்பார்த்திருக்கச் செய்வீராக. எங்கள்.
பதில்: ஆமென்.
முன்னுரை
இப்பொழுது வானவர் கீதம் பாடப்படும், ஆலய மணிகள் ஒலிக்கப்படும், பீடத்தின் மீது காணப்படும் விளக்குகள் ஒளி ஏற்றப்படும். பாவத்தை வென்று, இயேசு வெற்றி வீரனாக உயிர்த்தார் என்பதன் அளவற்ற மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்துகொள்வோம். உலகிற்கு ஒளியாக வந்த கிறிஸ்து எமது இதயங்களில் ஒளிர்வாராக.
- வானவர் கீதம் இடம்பெறும்
- மணிகள் ஒலிக்கும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, புனிதமிக்க இந்த இரவை ஆண்டவருடைய உயிர்ப்பின் மாட்சியால் ஒளிர்விக்கின்றீர்;. உமது திரு அவையில் அனைவரும் உம் சொந்த மக்கள் எனும் மனப்பாங்கைத் தூண்டி எழுப்பியருளும்: அதனால் நாங்கள் உடலிலும் மனதிலும் புதுப்பிக்கப்பெற்று உமக்குத் தூய்மையான ஊழியம் புரிவோமாக. உம்மோடு.
எட்டாம் இறைவாக்கு: திருமுகம்
இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-11
பதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16யடி-17. 22-23
பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -பல்லவி
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;
ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். -பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி
நற்செய்தி இறைவாக்கு:
சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-7
அருள்பணியாளர் வழக்கம் போலத் தூபக் கலத்தில் சாம்பிராணி இடுகின்றார்.
மூன்றாம் பகுதி
திருமுழுக்கு வழிபாடு
திருமுழுக்குத் தொட்டி அல்லது திருமுழுக்கு இடம் நோக்கிய பவனி பின்வருமாறு நடைபெறும். பணியாளர் ஒருவர் பாஸ்கா திரியுடன் முன் செல்ல, திருமுழுக்குப் பெறுபவரும் அவர்களுடைய ஞானப் பெற்றோரும் பிற பணியாளர்களும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்கின்றனர். பவனியின்போது புனிதர் மன்றாட்டுமாலை பாடப்படும்.
முன்னுரை
இப்பொழுது திருமுழுக்கு வாழிபாடு ஆரம்பமாகின்றது. திருமுழுக்கு பெறும் புகுமுக நிலையினருக்காக மன்றாடும் அதேவேளை, திருமுழுக்கு பெற்ற நாமும் அதன் வாக்குறுதிகளை புதுப்பித்து இறைவனிலே புதிய உறவை மேம்படுத்துவோம். தண்ணீரின் வழியாக புதுப்பிறப்படைந்து, தூய ஆவியினால் புதுவாழ்வு பெற்றவர்களாய் அவரிலே ஒன்றித்து வாழ்வோம். நாம் அவர் பிள்ளைகள் என்பதே எமது மகிழ்ச்சி. இம்மகிழ்ச்சியை நாம் இரட்டிப்பாக்குவோம். பக்தியோடு இவ்வழிபாட்டிலே கலந்துகொள்வோம்.
குரு: அன்புமிக்கவர்களே, நம் சகோதரர் சகோதரிகளுக்குப் புனித எதிர்நோக்கு உண்டாக நமது ஒருமித்த வேண்டலினால் துணை புரிவோமாக. அதனால் புதுப் பிறப்பு அளிக்கும் ஊற்றை நோக்கிச் செல்லும் இவர்களுக்கு எல்லாம் வல்ல தந்தை இரக்கத்துடன் தமது உதவி அனைத்தையும் அளிப்பாராக.
ஆண்டவரே, இரக்கமாயிரும். ஆண்டவரே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்மாயிரும். ஆண்டவரே, இரக்கமாயிரும்
ஆண்டவரே, இரக்கமாயிரும். ஆண்டவரே, இரக்கமாயிரும்.
புனித மரியே, இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனிதத் திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யோசேப்பே, புனித பேதுருவே, புனித பவுலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித அந்திரேயாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யோவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மகதலா மரியாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித ஸ்தேவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித லாரன்ஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பெர்பேத்துவா, புனித பெலிசிட்டியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித ஆக்னஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித கிரகோரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அகுஸ்தினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அத்தனாசியுஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பேசிலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மார்ட்டினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பெனடிக்டே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித பிரான்சிஸே, புனித தோமினிக்கே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித பிரான்சிஸ் சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித வியான்னி மரிய ஜானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித சியன்னா கத்தரீனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித அவிலா தெரேசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
கனிவு கூர்ந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
தீமை அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
பாவம் அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
முடிவில்லாச் சாவிலிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
உமது மனித உடலேற்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
உமது இறப்பினாலே, உயிர்ப்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.
தூய ஆவியாரின் வருகையினாலேஎங்களை மீட்டருளும் ஆண்டவரே.
பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் மன்றாட்டைக் கேட் ட ரு ளும்.
- (திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்):
தேர்ந்து கொள்ளப்பெற்ற இவர்கள் திருமுழுக்கின் அருளினால்
புதுப் பிறப்பு அடையச் செய்தருள வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- (திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்):
உம் மக்களுக்குப் புதுப் பிறப்பு அளிக்கும் இந்த நீரூற்றை
உமது அருளினால் புனிதமாக்க வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம் -
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகின்றோம் -
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ் துவே, எங்களுக்குச் செவி சாய்த் தருளும்.
கிறிஸ் துவே, க னி வாய்ச் செவி சாய்த் தருளும்.
- திருமுழுக்குப் பெறுவோர் அங்கு இருந்தால், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்வார்:
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, திருமுழுக்கின் ஊற்று உமக்கு ஈன்றெடுக்கும் மக்களைப் புதிய மக்களாக மீண்டும் படைக்க உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களில் நீர் உடனிருப்பீராக; மனிதரை உம் பிள்ளைகளாக்கும் ஆவியாரை அனுப்புவீராக: இவ்வாறு எளியவராகிய நாங்கள் செய்யவேண்டிய திருப்பணி உமது ஆற்றலால் நிறை பயன் தருவதாக. எங்கள்.
பதில்: ஆமென்.
திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்
- பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்லி திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குகின்றார்:
இறைவா, அருளடையாளங்கள் வியத்தகு முறையில் பயனளிக்கக்
கண்ணுக்குப் புலப்படாத வலிமையால் செயலாற்றுகின்றீர்:
திருமுழுக்கின் அருளைக் குறித்துக்காட்டப்
"இப்புப் பொருளாகிய தண்ணீரைப் பல வகையில் தயார் செய்தீர்;
இறைவா, தண்ணீருக்குப் புனிதப்படுத்தும் ஆற்றலை அளிக்குமாறு
உலகின் தொடக்கத்திலேயே உமது ஆவியார் அதன் மீது அசைவாடிக்கொண்டிருந்தார்;
இறைவா, பெரும் வெள்ளத்தினைப் புதுப் பிறப்பின் அடையாள மாக்கி,
மறைபொருளாகிய அதே தண்ணீரால் குற்றங்கள் முடிவுறவும்
நற்பண்புகள் தொடங்கவும் செய்தீர்;
இறைவா, பார்வோனின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற
ஆபிரகாமின் மக்கள் செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்து,
திருமுழுக்குப் பெற்ற மக்களுக்கு முன்னடையாளமாக இருக்கச் செய்தீர்;
இறைவா, உம் திருமகன் யோர்தான் நீரில் யோவானால் திருமுழுக்குப் பெற்று,
தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டார்;
சிலுவையில் அவர் தொங்கியபொழுது,
தமது விலாவிலிருந்து இரத்தத்தோடு தண்ணீரையும் வழிந்தோடச் செய்தார்;
தமது உயிர்ப்புக்குப்பின் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாருக்கும் கற்பித்து
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்
அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுங்கள்' என்று
சீடர்களுக்குக் கட்டளையிட்டார்;
உமது திரு அவையைக் கண்ணோக்கி,
அதற்குத் திருமுழுக்கின் ஊற்றினைத் திறந்தருளும்;
இந்தத் தண்ணீர் உம் ஒரே திருமகனின் அருளைத்
தூய ஆவியாரினின்று பெற்றுக்கொள்ளச் செய்தருளும்;
இவ்வாறு உமது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்
திருமுழுக்கு அருளடையாளத்தினால் பழைய பாவ அழுக்கெல்லாம் கழுவப்பெற்று,
தண்ணீராலும் தூய ஆவியாராலும் புதுப் பிறப்பு அடைந்து எழும் தகுதி பெறுவார்களாக.
- அருள்பணியாளர் தேவைக்கு ஏற்பப் பாஸ்கா திரியை ஒரு முறை அல்லது மும்முறை தண்ணீரில் இறக்கிச் சொல்வதாவது:
ஆண்டவரே, இந்தத் தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதிலும்
தூய ஆவியாரின் ஆற்றல் உம் திருமகன் வழியாக இறங்க உம்மை வேண்டுகின்றோம்.
- திரியைத் தண்ணீரில் வைத்துப் பிடித்துக்கொண்டு சொல்வதாவது:
இவ்வாறு திருமுழுக்கினால் கிறிஸ்துவுடன் இறந்து
அடக்கம் செய்யப்பட்ட அனைவரும் அவரோடு வாழ்வுக்கு உயிர்த்தெழுவார்களாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: ஆமென்.
- திருமுழுக்கு அளித்தலோ திருமுழுக்குத் தொட்டியைப் புனிதப்படுத்தலோ நடைபெறவில்லை எனில், அருள்பணியாளர் நம்பிக்கையாளரைத் தண்ணீருக்கு ஆசி வழங்கும் சடங்குக்கு இட்டுச் சென்று சொல்கின்றார்:
அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
நம் திருமுழுக்கின் நினைவாக
நம்மீது தெளிக்கப்படும் படைப்புப் பொருளான இத்தண்ணீருக்குக்
கனிவுடன் ஆசி வழங்க நம் இறைவனாகிய ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியாருக்கு
உண்மையுள்ளவர்களாக இருக்க அவர் நம்மைப் புதுப்பிப்பாராக.
- சிறிது நேரம் அமைதியாக மன்றாடியபின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்து:
ஆண்டவரே எங்கள் இறைவா,
இப்புனிதமிக்க இரவில் கண்விழித்துக் காத்திருக்கும் உம் மக்களுடன்
கனிவாய்த் தங்கியருளும். வியத்தகு முறையில் எங்களைப் படைத்தீர் எனவும்
அதிலும் வியத்தகு முறையில் எங்களை மீட்டருளினீர் எனவும்
நினைவுகூரும் எங்களுக்காக இத்தண்ணீர் மீது உமது ஆசியைக் கனிவுடன் பொழிந்தருளும்.
ஏனெனில் நிலத்தை வளப்படுத்தவும்
எங்கள் உடலுக்குப் புத்துணர்வும் தூய்மையும் தரவும் இத்தண்ணீரைப் படைத்தீர்;
உமது இரக்கத்தின் கருவியாகவும் இத்தண்ணீரை அமைத்தீர்;
எவ்வாறெனில், தண்ணீரின் வழியாக
உம் மக்களின் அடிமைத்தளையை அகற்றினீர்;
பாலைநிலத்தில் அவர்களது தாகத்தைத் தணித்தீர்.
அதன் வழியாக மனித இனத்தோடு நீர் செய்ய இருந்த
புதிய உடன்படிக்கையை இறைவாக்கினர் முன்னறிவித்தனர்;
இறுதியாக, யோர்தானில் கிறிஸ்து புனிதமாக்கிய தண்ணீரின் வழியாகப்
பாவக் கறை படிந்த எங்கள் மனித இயல்பைப்
புதுப் பிறப்பு அளிக்கும் திருமுழுக்கினால் கழுவிப் புதுப்பித்தீர்.
ஆகவே நாங்கள் பெற்றுக்கொண்ட
திருமுழுக்கின் நினைவாக இத்தண்ணீர் இருப்பதாக.
பாஸ்கா பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற எங்கள் சகோதரர் சகோதரிகளோடு
நாங்களும் ஒன்றுசேர்ந்து பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்தருளும். எங்கள்.
பதில்: ஆமென்.
திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல்
- திருமுழுக்கு (உறுதிப்பூசுதல் ஆகிய) சடங்குகள் முடிந்தபின் அல்லது - அவை இல்லை எனில் - தண்ணீருக்கு ஆசி வழங்கிய பின், பின்வரும் வாக்குறுதிகள் திருமுழுக்குப் பெற்றவரோடு சேர்ந்து புதுப்பிக்கப்படாதிருந்தால், அனைவரும் எழுந்து நின்று, எரியும் திரிகளைப் பிடித்துக்கொண்டு, தம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கின்றனர்
அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
பாஸ்கா மறைநிகழ்வு வழியாக நாம் புது வாழ்வு பெற்றுக்
கிறிஸ்துவோடு வாழுமாறு புனிதத் திருமுழுக்கில்
நாம் அவரோடு அடக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
ஆகவே தவக் காலச் செயல்பாடுகள் முடிவடைந்திருக்கும் இவ்வேளையில்
சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டுவிடுவதாகவும்
புனிதக் கத்தோலிக்கத் திரு அவையில் இறைவனுக்கு ஊழியம் புரிவதாகவும்
முன்பு திருமுழுக்கின்போது நாம் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது புதுப்பிப்போம்.
எனவே,
அ.ப. : சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.
அ.ப.: அவன் செயல்களை எல்லாம் விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.
அ.ப. அவன் ஆரவாரங்களை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.
அல்லது
அ.ப.: கடவுளின் பிள்ளைகளுக்கு உரிய உரிமையுடன் வாழ நீங்கள் பாவத்தை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.
அ.ப. : பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தாதிருக்க, நீங்கள் தீயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.
அ.ப. : பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?
எல். : விட்டுவிடுகின்றேன்.
- தேவையானால் இந்த இரண்டாம் பாடத்தை ஆயர் பேரவை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். பின் அருள்பணியாளர் தொடர்கின்றார்:
அ.ப. : விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றீர்களா?
எல். : நம்புகின்றேன்.
அ.ப. : அவருடைய ஒரே மகனும், கன்னி மரியாவிடமிருந்து பிறந்து, பாடு பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றவருமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றீர்களா?
எல். : நம்புகின்றேன்.
அ.ப. : தூய ஆவியாரையும் புனிதக் கத்தோலிக்கத் திரு அவையையும் புனிதர்களுடைய சமூக உறவையும் பாவ மன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும் நிலைவாழ்வையும் நம்புகின்றீர்களா?
எல். : நம்புகின்றேன்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும், தண்ணீராலும் தூய ஆவியாராலும் நமக்குப் புதுப் பிறப்பு அளித்துப் பாவ மன்னிப்பு வழங்கியவரும் எல்லாம் வல்ல தந்தையுமாகிய கடவுளே தமது அருளால் நாம் நிலைவாழ்வு பெறும் பொருட்டு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நம்மைப் பாதுகாப்பாராக.
பதில்: ஆமென்.
கோவிலின் வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன், அல்லேலூயர்
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே மீட்பினைப் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
நம்பிக்கையாளர் மன்றாட்டு
குரு. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் எமக்கு இது மகிழ்ச்சியே. இயேசுவின் தியாகம் நிறைந்த அவரின் பாடுகள் மரணம் அனைத்துமே அவரின் உயிர்ப்பிலே நிறைவேறுகின்றது. எமக்கு விடுதலை பெற்றுத் தந்த இயேசுவின் பாதத்தில் எமது தேவைகளை ஒப்புக்கொடுப்போம்.
1. திரு அவைக்காக மன்றாடுவோம்
அன்பின் இறைவா, உமது உயிர்ப்பை அகிலம் எங்கும் கொண்டாடும் எமது திரு அவை, உம்மை அதிகம் அன்பு செய்து வாழ்வதாக. இம்மகிழ்ச்சியை பரப்பிடும் வாஞ்சைகொண்ட பணியாளர்கள் அதிகம் உருவாகிடவும், உமது உயிர்ப்பின் மக்களாக, பணியாளர்களாக நாளும் திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று...
2. எம் மக்களுக்காக மன்றாடுவோம்
அன்பின் இறைவா, நீர் உருவாக்கிய இப்பூமியிலே சமாதானம் மலரவும், மகிழ்ச்சி நிலைத்தோங்கவும், உரிமைகள் பாதுகாக்கப்படவும், சிதறுண்ட மக்கள் ஒன்று சேரவும், நடைபெறும் யுத்தம் நிறுத்தப்படவும் மக்கள் எதிர்பார்க்கும் விழுமியங்கள் மனதிலே விதைக்கப்படவும் வரமருளவேண்டுமென்று...
3. ஜுபிலி ஆண்டிற்காக மன்றாடுவோம்
அன்பின் ஆண்டவரே, இறைவேண்டலின் ஆண்டில் பயணிக்கும் நாம், எமது திரு அவையின் சமகால தேவைகளை கருத்தில்கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய அருளை கேட்டு மன்றாடுகின்றோம். விவேகத்தோடும், பொதுநலத்தோடும், ஒன்றிப்போடும் செயற்படும் திரு அவையாக நாம் மாறவேண்டிய அருளை பொழிந்தருளவேண்டும்மென்று...
4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்
அன்பின் ஆண்டவரே, அன்பை சுயநலனாக்கி, வாழ்வை கசக்கி பிழிந்து பொருளாதார கெடுபிடிகளால் நிலை இழந்து வாழும் எம் மக்கள் தொலைந்திடாமல், தூர விலகிடாமல் தொடுவானமாம் எம் உயிர்ப்பின் இயேசுவுடம் நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டுவாழ வாரமருளவேண்டுமென்று...
திருமுழுக்கு இடம்பெற்றால்
5. திரு அவையின் புது உறவுகளுக்காக மன்றாடுவோம்.
அன்பின் ஆண்டவரே, இன்று திருமுழுக்கு எனும் திருவருட்சாதனத்தை பெற்று புதிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம் உறவுகள், உலகின் ஒளியாக உப்பாக திகழ்வார்களாக. கிறிஸ்துவை அச்சாரமாகக் கொண்டு படைப்பின் நற்செய்தி அறிவிப்பார்களாக. உலகை தம்பால் ஈர்க்கும் உண்மைச் சக்திகளாக திகழவேண்டுமென்று...
குரு. இறைவா, நீர் எமக்கு தந்த விடுதலை வாழ்வுக்காக நன்றி கூறுகின்றோம். சாவை வென்று வாழ்வை தந்தீர். தீமைகள் எமக்குள்ளே அகன்று தூய வாழ்வை நாம் அணிந்துகொள்வோமாக. நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் இத்தேவைகள் எமக்கு தேவையான அருளைப் பெற்றுத் தருவதாக. எங்கள்...
நற்கருணை வழிபாடு
திருவிருந்துப் பல்லவி - 1 கொரி 5:7-8
நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு கொண்டாடு வோமாக. அல்லேலூயா.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு பாஸ்கா அருளடையாளங்களால் நிறைவு பெற்ற நாங்கள் உமது பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.
சிறப்பு ஆசி
எல்லாம் வல்ல இறைவன், இன்றைய பாஸ்கா பெருவிழாவின் கொண்டாட்டத்தால் உங்களுக்கு ஆசி வழங்கி பாவத்தின் தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் இரக்கத்துடன் காப்பாராக.
பதில்: ஆமென்.
அவருடைய ஒரே திருமகனின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு உங்களைத் தகுதி பெறச் செய்த இறைவன், அழியா வாழ்வின் கொடைகளால் உங்களை நிரப்புவாராக.
பதில்: ஆமென்.
ஆண்டவருடைய பாடுகளின் நாள்களுக்குப்பின் பாஸ்கா விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் நீங்கள் முடி வற்ற விண்ணகப் பாஸ்கா விழாவுக்கு அக்களிப்புடன் அவரது அருளால் வந்து சேர்வீர்களாக.
பதில்: ஆமென்.
எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி என்றும் தங்குவதாக.
சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.
அல்லது
அமைதியுடன் சென்று வாருங்கள், அல்லேலூயா, அல்லேலூயா.
எல்.' இறைவனுக்கு நன்றி, அல்லேலூயா, அல்லேலூயா.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி