Monday, 7 April 2025

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு 13/04/2025

 ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு

எருசலேமுக்குள் ஆண்டவரின் நுழைவை நினைவுகூர்தல்



முன்னுரை

இறை அன்பில் பிரியமுள்ள உறவுகளே! 

இன்று நாம் குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடுகின்றோம், இன்றைய நாளோடு, நாம் புனித வாரத்தையும் தொடங்குகின்றோம். இயேசு எருசலேம் நுழைகின்றார்; 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே! இஸ்ராயேலின் அரசரே! உன்னதங்களிலே ஓசான்னா' என்று ஓசான்னா கீதம் பாடி இயேசுவை வரவேற்கும்போது, நாமும் அவருடன் பயணிக்க அழைக்கும் காலமாகவும் இது அமைகின்றது. இயேசு தனது தந்தையின் விருப்பப்படி தனது வாழ்வின் புனித நிகழ்வாகிய அவரின் பாஸ்கா மறைபொருள் கொண்ட பாடுகள், மரணம் மேலும் உயிர்ப்புக்குள் செல்ல எமக்கு இன்று அழைப்பு விடுக்கப்படுகின்றது. எமது வாழ்வும் இன்று விண்ணகம் நோக்கிய பயணத்திற்குள் நுழைகின்றது. 

அன்று இயேசுவை 'இஸ்ராயேலின் அரசரே' என்று தாவீதின் அரசராக உலகிற்கு எண்பிக்கும்போது, இன்று நாமும் அதே ஒலிவக் கிளைகளை கையில் ஏந்தியவாறு இயேசுவின் பலிக்கள கல்வாரி அனுபவத்திற்குள் செல்ல எம்மையும் ஆயத்தம் செய்துகொள்வோம். இந்த எருசலேம் நோக்கிய பயணம் எமது 'விடுதலைப் பயணமாக' அமையட்டும். நாம் சுமந்து செல்லும் சுமைகள், வேதனைகள், போராட்டங்கள், அவமானங்கள், விரக்திகள், வெறுமைகள் அனைத்தையும் சிலுவையில் அறையமுடியும் எனும் நம்பிக்கையில் செல்வோம். இவ்வுலகின் பாவங்களுக்கு பரிகாரமாக இயேசுவின் இப்பயணத்திற்கு அர்த்தம் கொடுக்க எம்மையும் தயார்செய்துகொள்வோம். நாம் கையேந்தும் இம்மரக் கிளைகள், இவ்வுலகம் தொலைத்த இயேசுவை வரவேற்கும் நம்பிக்கையாக அமைவதாக. 

இச் சிந்தனைகளோடு தொடரும் இவ் அழகான வழிபாட்டில் கலந்துகொள்வோம். 

பல்லவி: மத் 21:9

தாவிதின் மகனுக்கு ஒசன்னா! ஆண்டவர் பெயரால்

வருகிறவர் ஆ - - சி பெற்றவரே! இஸ்ரயேலின் அரசரே,

உன்னதங்களிலே ஒசன்னா!

உன்னதங்களிலே ஒசன்னா!


குரு:  அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தவக் காலத் தொடக்கத்திலிருந்தே, தவ முயற்சிகளாலும் பிறர் அன்புப் பணிகளாலும் நம் இதயங்களைத் தயாரித்தபின் இன்று நாம் ஒன்று கூடியுள்ளோம். இதனால் நம் ஆண்டவருடைய பாஸ்கா மறைநிகழ்வை, அதாவது ஆண்டவருடைய திருப்பாடுகளையும் உயிர்ப்பையும் உலகளாவிய திரு அவையோடு சேர்ந்து அறிவிக்கின்றோம். இப்பாஸ்கா மறைநிகழ்வை நிறைவேற்றவே அவர் தம் நகரான எருசலேமுக்குள் நுழைந்தார். எனவே மீட்பு அளிக்கும் இந்த நுழைவை நாம் முழு நம்பிக்கையுடனும் இறைப்பற்றுடனும் நினைவில் கொண்டு, ஆண்டவரைப் பின்செல்வோம். அவருடைய அருளினால் சிலுவையின் பங்கேற்பாளர்களாக மாறி, அவருடைய உயிர்ப்பிலும் வாழ்விலும் நாம் பங்குபெறுவோமாக.


மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இக்குருத்தோலைகளை உமது X ஆசியால் புனிதப்படுத்தியருளும்; அதனால் கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக நிலையான எருசலேமுக்குள் வந்து சேர ஆற்றல் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

அல்லது

மன்றாடுவோமாக.

இறைவா, உம்மை எதிர்நோக்கியிருப்போரின் நம்பிக்கையை வளர்த்து உம்மை வேண்டுவோரின் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும்; அதனால் வெற்றி வீரரான கிறிஸ்துவின் திருமுன் இன்று குருத்தோலைகளை ஏந்தி வருகின்ற நாங்கள் அவர் வழியாக நற்செயல்களின் பயன்களை உமக்கு அளிப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென். 


அருள்பணியாளர் அமைதியாகக் குருத்தோலைகள் மீது புனித நீரைத் தெளிக்கின்றார்.

நற்செய்தி இறைவாக்கு

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19:28-40

அக்காலத்தில்

இயேசு முன்பாகவே எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்: அதில் நுழைந்ததும், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், 'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள் என்றார். அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள். பின்பு அதை இயேசுவிடம் ஒட்டி வந்தார்கள். அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏறச் செய்தார்கள். அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச் சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட அனைத்து வகை செயல்களுக்காகவும் உரத்த குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்:

" ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் ஆசி பெற்றவர்!

விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம் சீடர்களைக் கடிந்துகொள்ளும் என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


குரு: அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்து மக்கள் திரளைப் போன்று நாமும் அமைதியுடன் புறப்படுவோம்.


பவனி

எபிரேயர்களின் சிறுவர் குழாம்

ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்

உன்னதங்களிலே ஓசான்னா

என்று முழங்கி ஆர்ப்பரித்து

ஆண்டவரை எதிர் கொண்டனரே


1. மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன

பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்

அவர் தம் உடைமையே

ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை

நிலை நிறுத்தியவர் அவரே

ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே


2. ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?

அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்?

மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன் பயனற்றதில்

மனத்தைச் செலுத்தாதவன்

தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்


திருப்பலி

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, தாழ்மையின் எடுத்துக்காட்டை மனித இனம் பின்பற்ற, எங்கள் மீட்பரை மனித உடல் எடுக்கவும் சிலுவையை ஏற்றுக்கொள்ளவும் செய்தீரே; அதனால் நாங்கள் அவரது பொறுமையைக் கற்றுக்கொண்டு அவரது உயிர்ப்பில் பங்கேற்கத் தகுதி பெறுமாறு எங்களுக்குக் கனிவாய் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


இறைவாக்கு வழிபாடு 

முதல் இறைவார்த்தை எசாயா 50:4-7

திருப்பாடல்: 22:8-9, 17-18, 19-20, 23-24

பல்லவி: என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்தீர்

இரண்டாம் இறைவார்த்தை: பிலிப்பியர் 2: 6-11 

நற்செய்தி இறைவார்த்தை: லூக்கா:  22:14 - 23:56

நற்செய்தி இறைவாகக்கின்போது எரியும் திரிகளும் தூபமும் இருக்கக் கூடாது, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் ஆண்டவருடைய பாடுகளின் வரலாறு வாசிக்கப்படும். நற்செய்தியின் இறுதியில் நற்செய்தி நூலை முத்தமிட தேவையில்லை

நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு 

குரு. இயேசு கிறிஸ்துவின் எருசலேம் நோக்கிய பயணத்திலே நாமும் சேர்ந்து பயணிக்கின்றோம். தமது பாடுகளோடு, துன்பங்களோடு, வேதனைகளோடு நாம் ஒப்புக்கொடுக்கும் விண்ணப்பங்களையும் தாங்கிச் செல்வார் எனும் நம்பிக்கையுடன் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 


1. திரு அவையை வழிநடத்தும் இறைவா, 

தனது புனிதப்படுத்தும் பணியினால் உலகை இறைவன்பால் கொண்டுவர உழைக்கும் எமது திருநிலைப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். இவர்கள் சந்திக்கும் அனைத்து சவால்களையும் முகங்கொடுக்கும் வீரத்தையும், மக்களை தமது முன்மாதிரிகையால் வழிநடத்தும் ஆற்றலையும் அளித்தருள வேண்டுமென்று ...

2. வரங்களை நிறைவாய் பொழியும் இறைவா, 

கிறிஸ்துவின் பாடுகளை, மரணத்தை தியானிக்கும் நாம் அவரின் விருப்பத்தை எமது வாழ்விலே நிறைவேற்ற முன்வருவோமாக. இதனால் எமது ஆன்மிக வாழ்வில் சந்திக்கும் அனைத்து சவால்களிலும் அவரையே பிரதிபலிக்க அருள்புரிய வேண்டுமேன்று ...

3. சுமைகளை தாங்கும் இறைவா, 

இவ்வுலகை வாட்டி வதைக்கும் துன்பங்களும் துயரங்களும், வேதனைகளும் சோதனைகளும், நோய்களும் இறப்புக்களும் எம்மை விட்டு நீங்கவும், மக்களும் தமது வாழ்வின் தேர்வுகளின்போது நேர்மையுடனும், உண்மையுடனும் உழைத்துப் போராடும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று ...

4. அன்பைப் பொழியும் இறைவா, 

சிலுவை அன்பை இன்று நீர் எமக்கு காட்டியிருக்கின்றீர். இவ்வன்பினால் பிறரை ஏற்றுக்கொள்ளவும், தாழ்ச்சியோடு வாழவும், இரக்கம் காட்டவும், பகிர்ந்து கொடுக்கவும், ஆணவத்தை விட்டொழிக்கவும் எமக்கு கற்றுத்தருகின்றீர். நாமும் இச்சிலுவை அன்பை ஏற்றுக்கொண்டு உம்மையே நாளும் வாழும் வரத்தை அருள வேண்டுமென்று ...

5. எம்மை வழிநடத்தும் இறைவா! 

இன்று நாம் தொடங்கியிருக்கும் இயேசுவோடு செல்லும் எமது விடுதலைப் பயணத்தை ஆசீர்வதியும். எமது வெறுமையில் இயேசுவின் பாஸ்கா மறைபொருள் எமக்கு அர்த்தம் தருவதாக. உலகின் மக்கள் அனைவரும் உயர்த்தப்படும் இயேசுவின் சிலுவையில் உண்மையை கண்டுணர்ந்து அவரையே பின்பற்ற அருள்புரிய வேண்டுமென்று, ...

குரு: இறைவா, நீர் சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டு எமக்காக உமது உயிரையே உவந்தளித்தீரே. இச்சிலுவை தரும் பாடங்களை நாம் கருத்தாய் கடைப்பிடிக்க எமக்கு உதவியருளும். இன்று நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் எமது விண்ணப்பங்களை ஏற்றருளும். தாழ்ச்சியோடு நாம் அளிக்கும் இவ்வேண்டல்கள் வழியாக எமது வாழ்வும் ஆசிர்வதிக்கப்படுவதாக. இவற்றை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் பாடுகளால் நீர் எம்மீது கொண்டுள்ள இரக்கம் நெருங்கி வருவதாக; எங்கள் செயல்களால் தகுதியற்றவர்கள் ஆயினும் இந்த ஒரே பலியின் ஆற்றலால் உமது இரக்கத்தை முன்கூட்டியே நாங்கள் கண்டுணர்வோமாக. எங்கள்.


தொடக்கவுரை: ஆண்டவருடைய பாடுகள்

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


மாசற்ற கிறிஸ்து பாவிகளுக்காகப் பாடுபடவும்

தீயோரின் மீட்புக்காக அநீதியாகத் தீர்ப்பிடப்படவும் திருவுளமானார்.

' அவரது இறப்பு எங்கள் பாவங்களைப் போக்கியது;

அவரது உயிர்த்தெழுதல் எங்களை உமக்கு ஏற்புடையவர்கள் ஆக்கியது.


ஆகவே நாங்கள் வானதூதர் அனைவரோடும் சேர்ந்து

உம்மைப் புகழ்ந்து போற்றி, அக்களித்துக் கொண்டாடி,

ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.


 திருவிருந்துப் பல்லவி - மத் 26:42 

தந்தையே, நான் குடித்தால் அன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படி ஆகட்டும்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நம்புவதை உம் திருமகனின் இறப்பினால் எதிர்நோக்கியிருக்கச் செய்த நீர் நாங்கள் நாடுவதை அவரது உயிர்ப்பினால் வந்தடையச் செய்வீராக. எங்கள்.


மக்கள்மீது மன்றாட்டு 

ஆண்டவரே, உம்முடைய இந்தக் குடும்பத்துக்காக எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து துன்புறுத்துவோருக்குத் தம்மைக் கையளிக்கவும் சிலுவையின் கொடுமையைத் தாங்கிக்கொள்ளவும் தயங்கவில்லை; நீர் இக்குடும்பத்தைக் கண்ணோக்கி அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...