பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - அல்லது இறை இரக்கத்தின் ஞாயிறு - 27-04-2025

 பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 

இறை இரக்கத்தின் ஞாயிறு




திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள இறை உறவுகளே, இயேசுவின் பிரசன்னத்திலே அவரின் உயிர்ப்பை கொண்டாடி மகிழும் இந்நாட்களில் அவருக்கு நன்றி செலுத்தவும்  அவரின் தியாகப்பலியில் கலந்துகொள்ளவும் அவர் பாதம் நாடி வந்திருக்கின்றோம். 

இன்று பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறாகும் அத்தோடு அன்னையாம் திரு அவை இன்றைய நாளை இறை இரக்கத்தின் ஞாயிராகவும் கொண்டாடுகின்றது. திருத்தந்தை புனித இரண்டாம் ஜோவான் பவுல் அவர்களே புனித பவுஸ்தினாவை 2000ம் ஆண்டு புனிதையாக உயர்த்தி, அப்புனிதைக்குக் கிடைத்த இறை இரக்கத்தின் வெளிப்பாடுகளை உலகறிய கொணர்ந்தவர். "இயேசுவே நான் உம்மில் நம்பிக்கை வைக்கின்றேன்" என்று நாம் அளிக்கும் நம்பிக்கை அறிக்கையே இன்றைய நாளுக்கான வேண்டுகோளாகவும் இருக்கின்றது.

இயேசு இறந்து உயிர்த்தெழுந்து இன்றும் என்றும் வாழ்கின்றார் என்பதனை இன்றைய இறைவார்த்தைகள் எண்பிக்கின்றன. சீடர்களின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுகின்றது, அவர்களின் அச்சம் நீக்கப்படுகின்றது, இலக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. நாமும் உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கப்படுகின்றோம். இயேசு மீதுகொண்ட நம்பிக்கை வாழ்வே அவரை உலகறிய எடுத்துரைக்க எமக்கு கொடுக்கப்படும் அழைப்பாகும். எமக்குள் இருக்கும் வெறுமையான கல்லறையான எமது சுயநல எண்ணங்களை மாற்றுவோம், இலக்குகளற்ற பயணங்களை புதுப்பிப்போம், அறியாமையில் இருந்து எமது ஆளுமைகளை மீட்டெடுப்போம், புதிய வாழ்வுக்குள் நுழைவோம். இயேசுவின் இரக்கத்தில் நம்பிக்கைக் கொண்டு தொடரும் கல்வாரிப்பலியில் கலந்து இறையாசீரை பெற மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - 1 பேதுரு 2:2 

புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த  ஆர்வம் உள்ளவராய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளர்வீர்கள், அல்லேலூயா.


அல்லது - 4 எஸ் 2:36-37 

உங்கள் மாட்சியில் பெருமகிழ்ச்சி கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் உங்களை விண்ணரசுக்கு அழைத்துள்ளார், அல்லேலூயா.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள இரக்கத்தின் இறைவா, மீண்டும் மீண்டும் நாங்கள் கொண்டாடும் பாஸ்கா விழாவிலே உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை நீர் தூண்டுகின்றீர்; நீர் வழங்கிய இவ்வருளைப் பெருக்குகின்றீர்: இவ்வாறு திருமுழுக்கினால் நாங்கள் கழுவப்பட்டுள்ளதையும் தூய ஆவியாரால் நாங்கள் புதுப் பிறப்பு அடைந்துள்ளதையும் இரத்தத்தால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளதையும் நாங்கள் சரியான முறையில் அறிந்து, புரிந்து கொள்ளச் செய்வீராக. உம்மோடு.


முதல்  இறைவார்த்தை

ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 12-16

அந்நாள்களில்

மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடிவந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்.

ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல் நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல் நலமற்றோரையும் தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 118: 2-4. 22-24. 25-27a (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!


2 ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

3 ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!

4 ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என 

ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. - பல்லவி


22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;

இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி


25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!

26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்!

ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27a ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். -பல்லவி


 இரண்டாம்  இறைவார்த்தை

சாவுக்கு உட்பட்டேனாயினும், இதோ நான் என்றென்றும் வாழ்கிறேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் - 1: 9-11a, 12-13, 17-19

உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்கு கொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும் குரல் ஒன்று எக்காளம் போல முழங்கக் கேட்டேன். “நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை” என்று அக்குரல் கூறியது.

என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத் தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்.

நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என் மீது வைத்துச் சொன்னது: “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழ இருப்பவற்றையும் எழுதிவை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவார்த்தை

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.

தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு: 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!' என்று கூறி, இயேசுவில் நம்பிக்கையை உறுதிப்படுத்திய தோமாவைப் போல் நாமும் எமது தேவைகளை எடுத்துரைத்து மன்றாடுவோம்.  

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம். 

உயிர்த்த கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் பரப்பிடும் அனைத்து பணியாளர்களையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். மாறிடும் உலகில் மாறாத உம்மை என்றும் பற்றிப்பிடித்து வாழவும், சவால்களை சந்திக்கும் போது, அதை எதிர்த்துபோரிடக் கூடிய மனத் தைரியத்தை அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. எமது திருத்தந்தைக்காக மன்றாடுவோம்.

புனித பேதுறுவின் வழி எமது திரு அவையை வழிநடத்தி தமது வாழ்வை இவ்வுலகிற்காய் ஈந்த எமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுகின்றோம். தனது எளிமையான வாழ்வாலும், ஆழமான நம்பிக்கையாலும், உண்மையை எதிர்க்கும் உலக விழுமியங்களை கண்டிக்கும் தலைவனாகவும், தாழ்ச்சிக்கான உதாரணமாகவும் திகழ்ந்த இவரை இறைவன் ஏற்று தமது புனிதர்களின் அணியில் இணைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. புதிய திரு அவைத் தலைவருக்காக மன்றாடுவோம். 

எமது கத்தோலிக்க திரு அவையை வழிநடத்த புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் அழகிய பொறுப்பிலே அணிதிரளும் அனைத்து கருதினால்களுக்காக மன்றாடுவோம். தூய ஆவியின் துணையால் ஈர்க்கப்பெற்று, இறை அருளால் வழிநடத்தப்பட்டு அனைத்து இறைவனின் மக்களையும் அவர் வழி நடத்தவேண்டி, புதிய தலைவரை இறைவன் எமக்கு தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எமது பங்கு திரு அவைக்காக மன்றாடுவோம். 

இயேசுவின் உயிர்ப்பை மகிழ்வுடன் கொண்டாடும் நாம், இறைவன் தரும் இம்மகிழ்ச்சியை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைக்கும் அழைப்பை பெறுவோமாக. சிறுவர்களாக, இளைஞர் யுவாதிகளாக, அன்பின் உறவுகளாக, பகிர்ந்து வாழவும், ஒருவர் ஒருவருக்காக விட்டுக்கொடுக்காவும், செபித்து வாழவும் வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எமது நாட்டிற்காக மன்றாடுவோம் 

எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: வல்லமையின் இறைவா, உமது உயிர்ப்பிலே நாம் கொண்டாடும் மகிழ்ச்சியை, அருளை, வல்லமையை, மன்னிப்பை மற்றும் இரக்கத்தை என்றும் எப்பொழுதும் அனுபவிக்கச் செய்தருளும். உமது பிள்ளைகள் நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்கள் எமக்கு நிறைவைத் தருவதாக. எங்கள்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புதுப் பிறப்பு அடைந்த உம் மக்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பெயரை அறிக்கையிடுவதாலும் திருமுழுக்கினாலும் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் என்றென்றுமுள்ள பேற்றினைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - காண். யோவா 20:27

உன் கையை இடு, ஆணிகள் இருந்த இடத்தைக் கண்டறிவாய்: ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருளடையாளத்தை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்; அதனால் அதன் ஆற்றல் எங்களுடைய உள்ளங்களில் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வீராக. எங்கள். 


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments