தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
புதிய வாழ்வுக்கான பாதையில், இன்று புலரும் பொழுதின் விடியலில், புதிய உள்ளங்களாக இறைவனின் பலிப்பீடம் நாடி வந்திருக்கும் அன்பு இறை உறவுகளே! தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு வாரத்தில் நாம் கால் பதிக்கின்றோம். நாம் செல்லும் பாதையில் எம்மை முன்னோக்கி நகர்த்தும் இறைவனின் வார்த்தைகள் இன்று அதிசயங்களாகவே அமைகின்றன. நாம் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்த்து, அதன் இருளான பக்கங்களை, வெறுமையான நேரங்களை, மாற்றமுடியாத பழக்கங்களை இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்துவிட்டு, புதியன தேடும் உள்ளங்களையும் உணர்வுகளையும் சம்பாதிக்க இன்று எமக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
இயேசுவின் பொருட்டு, அவரின் துன்பங்களை, அவரின் பாடுகளை, அவரின் சிலுவை சாவைப் பற்றி இவ்வுலகம் எங்கும் அறிவிப்பதே எனது கடமை எனும் புனித பவுலின் அழகிய வார்த்தை எம்மையும் இறைவன்பால் ஈர்க்கின்றது. கிறிஸ்துவிற்காகவே அனைத்தையும் பொருளற்றதாக கருதி அவரை இன்னும் மிக நெருக்கமாக அன்புசெய்ய இன்றைய பலியில் மன்றாடுவோம். மேலும் இவ்வுலகில் நாம் பாவிகளாய், பலவீனமானவர்களாய் இருந்துகொண்டு மற்றவரை தீர்ப்பிடுவது தவறு என்பதை நற்செய்தியில் தெளிவாக காட்டுகின்றார் இயேசு. பாவம் என்பது இருளடைந்த வாழ்வு போன்றது. பாவம் என்பதில் இருந்து, நாம் இளைக்கும் பாவத்திற்குக் காரணமான எனது எண்ணங்கள், சோதனைகள், மாற்றமுடியாத பழக்க வழக்கங்கள் என்பனவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும். இயேசு பாவிப்பெண்ணின் பாவத்தை மட்டும் குணமாக்கவில்லை, கல் எறிய வந்தவரின் அகத்தையும் குணமாக்கினார். கிறிஸ்துவால் மாத்திரமே அக ஒளியைத் தரமுடியும் என்ப்தையும் இன்றைய இறைவார்த்தை எடுத்துக்காட்டுகின்றது.
எனவே, தவக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் எம்மைப் புதுப்பித்துக் கொள்வோம். அவரின் அருளால் எம்மை தொடர்ந்தும் புதுப்பித்துக்கொள்ள இப்பலியில் வரம் வேண்டிக்கொள்வோம். குறிப்பாக, எமது அயல் நாடுகளிலே இயற்கை அணர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்விழந்துபோன அனைத்து மக்களையும் நினைந்து மன்றாடுவோம். இறைவனின் வல்லமை நிறைவாக செயற்பட தொடர்ந்தும் இப்பலியில் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - காண். திபா 42:1-2
கடவுளே, எனக்கு நீதி வழங்கும்; இறைப்பற்றில்லாப் பிற இனத்தாரோடு என் வழக்குக்காக வாதிடும். தீயவரும் வஞ்சகருமான மனிதரிடமிருந்து என்னை விடுவித்தருளும். ஏனெனில் நீரே என் கடவுள், என் ஆற்றல்.
"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே எங்கள் இறைவா, உம் திருமகன் உலகை அன்பு செய்து சாவுக்குத் தம்மையே கையளித்தார்; உமது உதவியால் அதே அன்பில் நாங்களும் விரைந்து முன்னேறிச் செல்ல அருள்புரிவீராக. உம்மோடு.
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
முதல் இறைவாக்கு
இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21
கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)
பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்.
1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது,
நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.
2ab அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.
நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. - பல்லவி
2cd "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்”
என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;
அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி
4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல,
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். - பல்லவி
6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்;
அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். - பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்; சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14
சகோதரர் சகோதரிகளே,
உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவன் ஆக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.
நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின்மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம் யோவே 2: 12-13
இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி இறைவாக்கு
உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில்
இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, “போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.
இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, “அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், “இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம், “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு. 'தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். ' என்று கூறும் இயேசு பிறருக்காக வாழவும், பிறரின் தேவையில் எம்மை இணைத்துக்கொள்ளவும் அழைக்கின்றார். இவ்வுலகம் வேண்டிநிற்கும் தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் துன்புறும் திரு அவை மீண்டும் சந்திக்கும் நெருக்கடிகள், துன்பங்கள், வீழ்ச்சிகள், வேதனைகள், உயிர் இழப்புக்கள் மத்தியில் இயேசுவின் அன்பும், இரக்கமும், மன்னிப்பும் இத்திரு அவையை ஆண்டு நடத்தவும், பாவிகள் மனந்திரும்பவும் இவ் இறையரசைக் கட்டியெழுப்ப அனைவரும் உழைக்கவும் வரம்வேண்டி, ...
2. எமது பங்கு திரு அவைக்காக மன்றாடுவோம்.
எமது விசுவாசத்திற்கு எதிராக எம்மை திசைதிருப்பும் அனைத்து போலியான கொள்கைகளில் இருந்தும் தவறான வழிநடத்துதலில் இருந்தும் நாம் காப்பாற்றப்பட்டு இயேசுவை இலக்காகக் கொண்டு, நேர்மையான உண்மையான எண்ணங்களும் சிந்தனைகளும் சரியான பாதைக்கு வழிவகுத்திட வேண்டுமென்று, ...
3. எமது பெற்றோருக்காக மன்றாடுவோம்.
தாம் பெற்றெடுத்த பிள்ளைகள் இறைவன் கொடுத்த வரம் என்பதை முழுமையாக உணரவும், தமது இயலாமையில், தமது பாவத்தில், தமது பிழையான உணர்வுகளில் புதிய தலைமுறையை உருவாக்க முடியாது என்பதை உணர்வார்களாக. தமது தாழ்ச்சியால், விட்டுக்கொடுப்பால், தெய்வ பக்தியால் தமது பிள்ளைகளின் அழகான உருவாக்கத்தில் தாமும் பங்கெடுக்கின்றனர் என்பதை அறிந்து செயற்பட வரமருளவேண்டுமென்று, ...
4. பல்வேறு நிலைகளால் வருந்துவோருக்காக மன்றாடுவோம்.
அன்பின் இறைவா, இன்றைய சூழ்நிலையிலே, வறுமையால் வாடுவோர், அதிக வெப்பதினால் பாதிக்கப்படுவோர், தீராத நோயினால் கஸ்டப்படுவோர் என அனைவரும் உம்மை அதிகமாய் நெருங்கி வாழ வரம்வேண்டுவோம். இவர்களுக்காக உதவும் கரங்கள் பெருகவும், உழைக்கும் கரங்கள் ஆசிர்வதிக்கப்படவும், மேலும் இவர்கள் வாழ்வில் இறை நம்பிக்கையும், தளரா மனமும்கொண்டு வாழ வரமருள வேண்டுமென்று, ...
5. புதிய அருள் வாழ்வுக்காக மன்றாடுவோம்.
அன்பின் இறைவா! பழைய வாழ்வை முழுமையாக விட்டுவிடவும், புதிய பாதையாகிய கிறிஸ்துவை பின்பற்றிக்கொள்ளவும், அவருக்காகவே வாழ்வின் துன்பங்களை ஏற்று, எமது தவக்கால முயற்சிகளால் அவரின் பாஸ்கா மறைபொருளுக்கு அணிசேர்த்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
குரு. நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்று புதிய கட்டளையை எமக்கு பெற்றுத் தரும் இறைவா. இன்று நாம் உமது அன்பின் மக்களாக உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவீராக. எச்சந்தர்ப்பத்திலும் எம்மை விட்டுவிலகிடாமல் என்றும் கூடவே பயணிக்கவேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்தவ நம்பிக்கையின் படிப்பினையால் நீர் நிரப்பியுள்ள உம் அடியார்களுக்கும் எங்களுக்கும் செவிசாய்த்தருளும்; இப்பலியின் பயனாக இவர்களைப் புனிதப்படுத்துவீராக. எங்கள்.
தொடக்கவுரை: இலாசர்.
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ. : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் மெய்யான மனிதராகிய அவர்
தம் நண்பர் இலாசருக்காகக் கண்ணீர்விட்டு அழுதார்;
என்றுமுள்ள கடவுளாகிய அவர் இலாசரைக் கல்லறையினின்று உயிர்பெற்றெழச் செய்தார்;
அவரே மனித இனத்தின்மேல் இரக்கம் கொண்டு
தூய மறைநிகழ்வுகளால் எங்களைப் புதிய வாழ்வுக்கு இட்டுச் சென்றார்.
அவர் வழியாக மாண்புக்கு உரிய உம்மை
வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன;
உம் திருமுன் எக்காலத்தும் அக்களிக்கின்றன;
அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் தாழ்மையுடன் உம்மை இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது: தூயவர்.
திருவிருந்துப் பல்லவி :
இலாசரைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது: - காண். யோவா 11:26
உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார், என்கிறார் ஆண்டவர்.
விபசாரப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது: - யோவா 8:10-11
"அம்மா, நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" "ஒருவரும் இல்லை , ஆண்டவரே." "நானும் உம்மைத் தீர்ப்பிட மாட்டேன். இனிப் பாவம் செய்யாதீர்."
வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது: - யோவா 12:24
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படி யே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
எல்லாம் வல்ல இறைவர், எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: இயேசு கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்கின்ற நாங்கள் அவருடைய உறுப்பினர்களாக என்றும் விளங்குவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
மக்கள்மீது மன்றாட்டு
ஆண்டவரே, உமது இரக்கத்தின் கொடையை எதிர்பார்க்கும் உம் மக்களுக்கு ஆசி வழங்கியருளும்; உமது தூண்டுதலால் தாங்கள் விரும்புவதை உமது வள்ளன்மையால் அவர்கள் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜே. சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment