Friday, 11 April 2025

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி - 18/04/2025

 ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி



புனித வார வழிபாட்டு ஒழுங்குகளும் பாடல்களும் 

  • மிகப் பழமையான மரபுப் படி , திரு அவை இன்றும் நாளையும் ஒப்புரவு, 'நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களைத் தவிர மற்ற அருளடையாளங்களை 'எச் சூழலிலும் கொண்டாடுவதில்லை.
  • இந்நாளில் ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டத்தின் போது மட்டும்தான் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கப்படும். இக்கொண்டாட்டத்தில் பங்குபெற இயலாது நோயாளிகளுக்கு இந்நாளின் எந்நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.
  • சிலுவை, திரிகள், பீடத் துகில் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் முழுவதும் வெறுமையாக இருக்கும்.
  • ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.

முன்னுரை

'திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு' என்று சிலுவையை திரும்பிப் பார்க்க வைத்த நாள் இன்று; ஒரு தனி மனிதனின் வீர மரணம் இவ்வுலக வரலாற்றுக்கு ஓர் அழகிய பாடத்தைச் சொல்லித்தந்த நாள் இன்று; தியாகத்தாலும், அர்ப்பணத்தாலும் அதன் வழி எமக்கு காட்டி நிற்கும் அன்பாலும் அனைத்து மனித குலத்திற்குமே மாண்பைக் கொடுக்க முடியும் என சொல்லித்தந்த நாள் இன்றைய பெரிய வெள்ளி. யூத பாரம்பரிய சிந்தனைகளுக்கு அப்பால், பாஸ்கா வழிபாட்டில் இறைவனுக்கு பலி ஒப்புக்கொடுக்கும் முறைமையில் இருந்து வேறுபடுத்தி, தன்னை பலியாக்கியதன் மூலம் அவரே தன்னை பலியாகவும்,  பலிப்பொருளாகவும், பலிப்பீடமாகவும் ஒப்புக்கொடுத்து வாழ்வின் புதிய நெறியை காட்டிச்சென்றார். இன்று நாமும் இப்பெரும் உண்மையைக் கொண்டாட கூடிவந்துள்ளோம். 

'தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை' (யோவான் 15:13), என்று இவ்வுலகில் அன்பே தலை சிறந்தது என்று மெய்ப்பித்துக் காட்டிய அழகான நாள். இயேசுவின் பாடுகள் எமக்கு வாழ்வின் அர்த்தத்தை காட்ட வல்லது. அவரது இரத்தம் எமக்கு மன்னிப்பின் பாணமாக மாற வல்லது. அவரது இறப்பு எமக்கு மீட்பை தரவல்லது. 

இன்றைய வழிபாடு நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

முதல் பகுதி - இறைவாக்கு வழிபாடாகவும்

இரண்டாம் பகுதி பொது மன்றாட்டாகவும்

மூன்றாம் பகுதி திருச்சிலுவை ஆராதனையாகவும்

நான்காம் பகுதி திருவிருந்தாகவும் இடம்பெறும்.

இன்று திரு அவைக்கு தேவையான அருள் ஆசீர்கள் அனைத்தும் அந்த சிலுவையில் இருந்து தான் ஊற்றெடுக்கின்றன. சிலுவையில் காணப்பட்ட பலி வாழ்வு, பணி வாழ்வாகின்றது; சிலுவையின் துன்பங்கள், வலிகள், கைவிடப்பட்ட நிலைகள், இரத்தம் சிந்தும் நிலை கூட, ஏன் மரணம் கூட இன்றைய திரு அவையின் வாழ்வியல் நிலையாகின்றது. அத்தோடு, சிலுவையிலே சொல்லப்பட்ட செபம், திரு அவைக்கு தேவையாகின்றது; அது சுகமளிக்கும் அருமருந்தாகின்றது.

சிலுவையில் இயேசுவின் கண்களோடு ஏழைகளை திரு அவை பார்க்க வேண்டும், செவிமெடுக்க வேண்டும், ஆறுதல்படுத்த வேண்டும், உருகும் இதயம் கொண்டு வாழ வேண்டும். இயேசுவின் வார்த்தைகள் எமது வாழ்வை குத்தி ஊடுறுவட்டும், இயேசுவின் அர்ப்பணம் எமது வாழ்வின் நிலைகளை தொடட்டும், இயேசுவின் இறப்பு எமது வாழ்வுக்கு ஆதாரமாய் அமையட்டும்.


மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகன் கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிந்தி, உம் அடியார்களுக்காகப் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்படுத்தினார்; உமது இரக்கத்தை நினைவுகூர்ந்து நிலையான பாதுகாப்பால் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லது

இறைவா, பழைய பாவத்தின் விளைவாக எல்லாத் தலைமுறைக்கும் தொடர்ந்த சாவை எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய கிறிஸ்துவின் பாடுகளால் அழித்தீர்; இவ்வுலக மனிதரின் சாயலை இயற்கையின் நியதியால் பெற்றுள்ளது போல நாங்கள் அவருக்கு ஏற்றவர்களாய் இருப்பதால் விண்ணகத்தின் சாயலை உமது அருளின் புனிதத்தால் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. எங்கள்.


இறைவாக்கு வழிபாடு

முதலாம் இறைவாக்கு: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்  52: 13 - 53: 12

பதிலுரைப் பாடல்  திபா 31

பல்லவி: 'தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.'

இரண்டாம் இறைவாக்கு: எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம்  4: 14-16; 5: 7-9

நற்செய்திக்கு முன் வழ்த்தொலி: பிலி 2: 8-9

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி இறைவாக்கு: யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 18: 1 - 19: 42

மறையுரை


பொது மன்றாட்டு

  • இறைவாக்கு வழிபாடு பொது மன்றாட்டுடன் முடிவடையும். 
  • இம்மன்றாட்டின் முழு நேரமும் அல்லது ஒரு பகுதியின்போது மக்கள் முழங்காலில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.


முன்னுரை

இப்பொழுது திருவழிபாட்டின் பொது முன்னுரை இடம்பெறும். திரு அவையில் காணப்படும் ஒவ்வொரு நிலையில் இருப்போருக்காகவும், அதன் வளர்ச்சியில் பயன்களாக அமைய இருக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்காகவும் மன்றாடுகின்றோம். தொடக்கக் காலத்தில் இருந்தே எமது திரு அவை சந்தித்த துன்பங்கள், இழப்புக்கள், சிந்திய இரத்தத் துளிகள், போலியான, முறனான கொள்கைகள் மட்டில் போராடும் திரு அவையாகவே இதை நாம் சந்திக்கின்றோம். நாம் சேர்ந்து ஒப்புக்கொடுக்கும் எமது மன்றாட்டுக்கள் இன்று திரு அவைக்கு அணிசேர்ப்பதாக. பக்தியோடு இவ்வழிபாட்டிலே கலந்துகொள்வோம். 


01. புனிதத் திரு அவைக்காக

02. திருத்தந்தைக்காக

03. திருநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளருள் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் ஆகிய அனைவருக்காக

04. கிறிஸ்தவப் புகுமுக நிலையினருக்காக

05. கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக

06. யூத மக்களுக்காக

07. கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காக

08. கடவுளை நம்பாதவர்களுக்காக

09. நாடுகளை ஆள்வோருக்காக

10. துன்புறுவோருக்காக


திருச்சிலுவை ஆராதனை

முன்னுரை

இப்பொழுது திருச்சிலுவை ஆராதனை இடம்பெறும். அவமானத்தின் சின்னமாய் இருந்த சிலுவை இன்று ஆராதனைக்குரியதாய் மாறுகின்றது. இதுவே சிலுவை, இதிலே தான் தொங்கியது உலகத்தின் மீட்பு என்று சிலுவையை மும்முறை உயர்த்திக் காட்டி அதை உலகிற்கான விடுதலையின் சின்னமாக எண்பிக்கின்றார். குருவானவர் இச்சிலுவையை உயர்த்திப் பிடிக்கும்போது மக்கள் அனைவரும் முழந்தாற்படியிட்டு அதை ஆராதிப்பர். உயரிய மதிப்பும், ஆராதனையும் அதை முத்திசெய்யும்போது அளிப்பர். தாழ்ந்துகிடந்த எனது வாழ்வை உயர்த்திவிட்ட சிலுவை, அடிமைப்பட்டிருந்த எனது வாழ்வின் தளைகளை உடைத்தெறிந்த சிலுவை எனக்கு வாழ்வு அளிப்பதாக.  முழந்தாற்படியிடுவோம். 


திருச்சிலுவையை உயர்த்திக் காட்டுதல்

  • பணியாளர்களோடு அல்லது தகுதியான மற்றொரு பணியாளரோடு திருத்தொண்டர் திருப்பொருள் அறைக்குச் செல்கின்றார். அங்கிருந்து எரியும் திரிகள் ஏந்திய இரு பணியாளர்களோடு அவர் ஊதா நிறத் துகிலால் மூடப்பட்ட சிலுவையை ஏந்தி, கோவில் வழியாகத் திருப்பீட முற்றத்தின் நடுப்பகுதிக்குப் பவனியாக வருகின்றார்.
  • பீடத்தின் முன் மக்களை நோக்கி நிற்கும் அருள்பணியாளர் சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். அதன் உச்சியிலிருந்து துகிலைச் சிறிது அகற்றி, அதை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, 'திருச்சிலுவை மரம் இதோ எனும் பாடலைத் தொடங்குகின்றார். மக்கள் எல்லாரும், 'வருவீர் ஆராதிப்போம் எனப் பதிலுரைக்கின்றார்கள். 
  • பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் சிலுவையைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு நிற்க, அனைவரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றார்கள். இது மூன்று தடவைகள் இடம்பெறும்.


திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு.

பதில்: வருவீர் ஆராதிப்போம்.

  • திருச்சிலுவை அருகிலோ எரியும் திரிகள் வைக்கப்படுகின்றன.


திருவிருந்து

  • பீடத்தின் மீது ஒரு துகில் விரிக்கப்படுகின்றது. திருமேனித் துகிலும் திருப்பலி நூலும் வைக்கப்படுகின்றன. 
  • அருள்பணியாளர் தாமே தோள் துகில் அணிந்து, தூயமைமிகு நற்கருணையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பீடத்துக்குக் குறுகிய வழியாகக் கொண்டு வருகின்றார். 
  • இரு பணியாளர்கள் எரியும் திரிகளை நற்கருணையோடு கொண்டுவந்து விளக்குத் தண்டுகளைப் பீடத்தின் அருகிலோ அதன்மீதோ வைக்கின்றனர்.
  • திருத்தொண்டர் இருந்தால், அவர் தூய்மைமிகு நற்கருணையைப் பீடத்தின்மீது வைத்து, நற்கருணைக் கலத்தைத் திறக்கின்றார். அருள்பணியாளர் பீடத்துக்கு வந்து தாழ்ந்து பணிந்து வணங்குகின்றார்.
  • விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே செபம் சொல்லப்படுகின்றது.

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய கிறிஸ்துவின் பாடுகளினாலும் புனித இறப்பினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர்; உமது இரக்கத்தால் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயல் எங்களில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு இம்மறைபொருளில் பங்கேற்பதன் வழியாக முடிவில்லா இறைப்பற்றுடன் வாழ்வோமாக. எங்கள். பதில்: ஆமென்.

  • அருள் பணியாளர் 'இறை ஆசிக்காகத் தலை வணங்குவோமாக' என அழைப்பு விடுக்கின்றார்.

ஆண்டவரே, தங்களது உயிர்ப்பின் நம்பிக்கையில் உம் திருமகனின் சாவை நினைவுகூர்ந்துள்ள உம் மக்கள் மீது உமது ஆசி நிறைவாய் இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்: அவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக் அவர்கள் ஆறுதல் அடைவார்களாக் புனித நம்பிக்கை வளர்வதாக் நிலையான மீட்பு உறுதி பெறுவதாக. எங்கள். பதில்: ஆமென்.

  • கொண்டாட்டத்துக்குப் பிறகு பீடம் வெறுமையாக்கப்படுகின்றது; ஆனால் இரண்டு அல்லது நான்கு மெழுகுதிரித் தண்டுகளோடு பீடத்தின்மேல் சிலுவை இருக்கும்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...