Friday, 20 September 2024

பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு - 22/09/2024



பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு

திருப்பலி  முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே! நாம் பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்றோம். அன்பு எனும் கடலிலே, ஆழம் காணா இறைவனின் கருணையும், அவர் இரக்கமும், அலைகள் மோதி, புயல் அடித்தும் தாங்கும் படகுபோல், எம்மையும் தாங்கிக்கொள்ள அருள்வேண்டி இங்கு வந்திருக்கின்றோம். நாம் கடந்துசெல்லும் நேரங்களும் நாட்களும் எமக்கு பயந்தருவதாக, வாழ்வளிப்பதாக, வெற்றிகளையும், தோல்விகளையும் - இழப்புக்களையும், இறப்புக்களையும் சந்திக்க பலம் தருவதாக.

இன்றைய இறைவார்த்தைகள் மிக அழகான பாடத்தை எமக்கு கற்றுத் தருகின்றன. ஒவ்வொரு மனிதனின் இருப்பும், அவனது உறவை பலப்படுத்த வேண்டும், நன்மைகள் பெருகவேண்டும், இறை சாயல்கொண்ட நாம் இறைவனை ஞானமாக சுவீகரிக்கவேண்டும், சுயநல இன்பங்களை கண்டறிந்து, அது விதிக்கும் தடைகளை தகர்த்தெறிந்து, அன்பை அணிகலனாக கொண்டு வாழவேண்டும், ஒன்றித்து செயற்படும்  திரு அவையாக மாறவேண்டும். இன்றைய நற்செய்தியில், இறைவனின் பணியாளனே உண்மையான தலைவன் என்பதை அழகாக காட்டுகின்றார். தலைவனாக இருப்பவர், தனது சிந்தனையில், எண்ணத்தில், தனது பார்வையில் அன்பின் விழுமியங்களை வெளிப்படுத்தவேண்டும் என்பதை ஒரு குழந்தைதை கொண்டு இயேசு சித்தரிப்பதைக் காணலாம். 

அன்பார்ந்தவர்களே! இறைவனின் வார்த்தை  மிக அழகானது, ஆழமானது, உண்மையானது என்பது எமக்கு நன்கு தெரிந்ததே. நாம் கொண்ட இந்நம்பிக்கை எம்மில் தான் மலரவேண்டும், அது கொடைகளாக, வரங்களாக விருட்சமாக வேண்டும். எனவே, பாதை தெரியாதவர்களுக்கு நாம் பாதை காட்டுவோம், வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வுக்கான வழியாக மாறுவோம், படைப்பைப் பாதுகாத்து புதிய உலகத்தை உருவாக்குவோம், எம்மைக் முழுமையாக கொடுப்பதன் வழி, எம்முள் இருக்கும் இயேசுவை  உலகறியவைப்போம்.. இதுவே, நாம் உருவாக்கும் இயேசுவின் சீடத்துவம் என்பதை மெய்ப்பித்து தொடரும் பலியில் இறைவரம் கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

மக்களின் மீட்பர் நாமே, என்கிறார் ஆண்டவர். எத்தகைய இடுக்கண்களில் என்னைக் கூவி அழைத்தாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்ப்பேன்; நான் என்றும் அவர்களுக்கு ஆண்டவராய் இருப்பேன்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மையும் பிறரையும் அன்பு செய்வதில் திருச்சட்டத்தின் எல்லாக் கட்டளைகளும் அடங்கியிருக்கச் செய்தீரே; உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் நாங்கள் முடி வில்லா வாழ்வுக்கு வந்து சேரும் தகுதி பெற எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 17-20

பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வதாவது: ‘நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.

நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டு கொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)

பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.


1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்;

உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.

2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;

என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி


3 ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;

கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;

அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி


4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்;

என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;

6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்;

ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16 - 4: 3

அன்பிற்குரியவர்களே,

பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக் கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவுகள் உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராக இருக்கட்டும்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.

பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி



நம்பிக்கையாளர் மன்றாட்டு

1. வல்லமையின் இறைவா! எமது  திரு அவையை வழிநடத்தவேண்டி மன்றாடுகின்றோம். இவ்வுலகத்தின் காலத்தையும், நேரத்தையும் அறிந்து, இறை மக்களுக்காக பல்வேறு  வழிகளில் குரல்கொடுக்கும் எமது திரு நிலைப் பணியாளர்கள், உம்மை அன்புசெய்வதன் மூலம் உம் மக்களை உயர்வழியில் கொண்டுசேர்க்கும் பணியில் தம்மை அர்ப்பணித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

2. வல்லமையின் இறைவா! எமது புதிய நாட்டு தலைவர்களுக்காக மன்றாடுவோம். தாழ்ச்சியையும், பணிவையும் மக்களின் மேல் கொண்ட உண்மையான அன்பையும் இவர்கள் கண்டறிவார்களாக. தம்மை அல்ல, மாறாக, தம்வழி இந்நாட்டு மக்கள் புதிய சகாப்தம் நோக்கி பயணிக்கும் உயரிய நோக்கங்களை தம் சிரத்தில் இருத்தி பணிபுரிந்திட வரமருளவேண்டுமென்று, ...

3. வல்லமையின் இறைவா! எமது பங்கையும், பங்கு மக்களையும் ஆசீர்வதியும். எமது பலவீனத்தால், இயலாமையால், அறியாமையால் நாம் செய்த பாவங்கள் எமையும் எமது குடும்பங்களையும் தீண்டாது இருப்பதாக. இன்று நீர் கற்றுத்தந்த அன்பின் ஆழத்தை நாம் உண்மை உணர்வோடு அறிந்து, செயற்படச் செய்தருளும். எமது வாழ்வின் வளர்ச்சியும், நம்பிக்கையின் ஆழமும் எமக்கு நீர் தரும் கொடைகளாக அமைய அருள்புரிய வேண்டுமென்று, ...

4. வல்லமையின் இறைவா! எமது புலம்பெயர் உறவுகளுக்காக மன்றாடுவோம். நாளும் பொழுதும் உழைத்து, பல தடைகள், மனச்சோர்வுகள், ஏமாற்றங்கள் மத்தியில் தமது வாழ்வை கொண்டுசெல்லும் இவர்களுடன் உடன் இருந்தருளும். இவ்வுகத்தோடு பயணிக்கும் இவர்கள், இவ்வுலக போக்குகளையும் விழுமியங்களையும் கடந்து இறை நம்பிகையில் நிலைத்திருந்து, நல்ல குடும்பங்களை உருவாக்கி,  நற்பணி புரிந்து வாழும் அருளை பெறவேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடு கின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி   திபா 118:4-5

உம் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிக்க நீர் கட்டளையிட்டீர்; அதனால் உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க என் வழிகளை நிலைப்படுத்தும்.

யோவா 10:14

அல்லது

நல்ல ஆயன் நானே! என் கிறார் ஆண்டவர். நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அருளடையாளங்களால் புத்துயிர் பெற்ற எங்களுக்கு உமது இடையறாத உதவியைக் கனிவுடன் என்றும் அருள்வீராக; அதனால் மீட்பின் பயனை இம்மறைநிகழ்வுகளிலும் அன்றாட வாழ்விலும் பெற்றுக்கொள்வோமாக. எ ங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...