Friday, 6 September 2024

பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு - 08/09/2024



பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு 

திருப்பலி முன்னுரை

அன்பினில் இணையும் இறை குலமாக, அருளில் நனையும் அவர் உறவாக இன்று நாம் அனைவரும் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். பொதுக்காலம் இருபத்துமூன்றாம் ஞாயிறு வாரத்தில் இணையும் நாம், தொடர்ந்தும் அவர்வழி செல்ல, அவர் அழைப்பை ஏற்று புதிய இஸ்ராயேல் குலமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக வாழ இங்கு கூடி வந்துள்ளோம். 

முதலாவது இறைவார்த்தையாக, இறைவாக்கினர் எசாயா தனது நூலிலே, அடிமைப்பட்ட, நொருங்குண்ட, உடந்துபோன மக்களுக்கு கடவுளின் நம்பிக்கை தரும் வார்த்தைகளை கொடுப்பதை காணலாம். இன்றைய இரண்டாம் இறைவார்த்தையாக, யாக்கோபு எழுதிய திருமுகத்திலே தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாக இறைவனோடு இணைந்து வாழ அழைப்புவிடுக்கின்றார். நற்செய்தி இறைவார்த்தையில், மாற்கு, இயேசுவின் அழகிய புதுமை வழியாக, அவர் யார், அவரின் ஆளுமை என்ன, அவரின் இவ்வுலக வருகையின் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு எடுத்தியம்புவதைக் காணலாம். 

இன்று நாமும் இயேசுவில் கொண்ட அளவுகடந்த நம்பிக்கையை அதிகரிப்போம், உறுதிசெய்வோம். நாம் காணும் வாழ்வியற் போராட்டங்கள் மேலும் உலகபோக்குக்கள், இறைபற்றற்ற வாழ்வு என அனைத்தும், இயேசுல் கொண்ட எமது அன்பையும், புரிதலையும் பிரித்துவிடாமல் இருக்க மன்றாடுவோம். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், எம்மை தொட்டுச் செல்லும் ஒவ்வொரு நிகழ்வும், எமக்கு அனுபவமாகும் ஒவ்வொரு மனிதனும் இறைவன் கொடுத்த அதிசயங்களே. இதற்காக நன்றிகூறி, எமது வாழ்வின்வழி இறைவனை மகிமைப்படுத்த அவர் வரம் கேட்டு இப்பலியில் மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

ஆண்டவரே, நீர் நீதி உள்ளவர்; உமது தீர்ப்பு நேர்மையானது - உமது இரக்கத்துக்கு ஏற்ப உம் ஊழியனை நடத்தியருளும்.


திருக்குழும மன்றாட்டு

எங்களுக்கு மீட்பும் பிள்ளைகளுக்கு உரிய உரிமையும் வழங்கும் இறைவா, உம் அன்புக்கு உரிய மக்களைக் கனிவுடன் கண்ணோக்கும்; அதனால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள உம் மக்களுக்கு உண்மையான விடுதலையையும் நிலையான உரிமைப் பேற்றையும் அளிப்பீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

காது கேளாதோரின் செவிகள் கேட்கும். வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 4-7a

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்துபாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

அல்லது: அல்லேலூயா.


7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்;

பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;

சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி


8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;

தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.

9a ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி


9bc அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;

ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.

10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

ஏழைகளாய் இருப்பவர்களை, கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

அக்காலத்தில்

இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ‘எப்பத்தா’ அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: அன்பின் ஆண்டவரே! இவ்வுலகை ஓர் அழகிய அதிசயமாகக்கொண்டு, இவ்வுலகின் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, இறை அருளை தமது வாழ்வாலும், அருட்கொடைகளாலும் அளிக்கும் எமது திரு அவை ஊழியர்கள் அனைவரும் உமது ஆவியால் உந்தப்படவும், அவர்களுக்கு தேவையான நிறை கொடைகளை அளித்திட அருள்புரியவேண்டுமென்று, ... 

2. எமது திருத்தந்தைக்காக மன்றாடுவோம்: இன்றைய தினங்களில் ஆசியாவை நோக்கிய தமது பயணங்களை மேற்கொள்ளும் எமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தமது வாழ்வில் கொண்டிருக்கும் இயேசுவின் அழகிய மதிப்பீடுகளை அவர் எடுக்கும் பெறுமதியான முயற்சிகளில் கொணரச் செய்தருளும். இவ்வுலகில் மனிதர்களில் அன்பையும், சமயங்களில் புரிதலையும், அரசியல் தலைமைத்துவத்தில் மனித உரிமையையும் இத்திருத்தந்தை வழியாக நீர் அளித்திட வேண்டுமென்று, ...

3. எமது நாட்டுக்காக மன்றாடுவோம்: புதிய விடியல் நோக்கி செல்லும் எமது நாட்டின் அரசியல் மாற்றங்கள் நிலையானதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற வேண்டுகின்றோம். மக்கள் வாழ்வே எமது இலக்கு என்று தம்மை அர்ப்பணிக்கும் புதிய தலைவர்கள் உருவாகவும், உயரிய எண்ணங்களோடும், வலிமையான விழுமியங்களோடும் இந்நாட்டை தாங்கும் தலைவர்கள் உருவாக அருள்புரிய வேண்டுமென்று, ...

4. எம் பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் ஆண்டவரே! நாம் அமைக்கும் இவ் அழகிய பங்கு சமூகம் உமது திரு அவையின் ஒன்றிப்பை காட்டுவதாக. எமக்குள் மிளிரும் அன்பையும், பகிர்வையும், விட்டுக்கொப்பையும், தெளிவான சிந்தனைகளையும், பிறருக்கான எமது செபங்களையும், உமது ஆவியின் வெளிப்பாடாக கொள்வோமாக. அனைவரையும், அனைத்திலும் நாம் தாங்கிச் செல்லவும் எமது உழைப்பையும் வாழ்வையும் ஆசீர்வதிக்கவும் வேண்டுமென்று, ... 


காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

 கலைமான் நீரோடைகளுக்காக ஏங்குவது போல, கடவுளே! என் ஆன் மா உமக்காக ஏங்குகின்றது. வல்லவரான வாழும் கடவுள் மீது என் ஆன் மா தாகம் கொண்டுள்ளது.

அல்லது

யோவா 8:12 உலகின் ஒளி நானே: என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது வார்த்தையாலும் விண்ணக விருந்தாலும் உம் நம்பிக்கையாளருக்கு நீர் உணவு அளித்து வாழ்விக்கின்றீர்; இவ்வாறு உம் அன்புத் திருமகன் அளிக்கும் மாபெரும் கொடைகளால் நாங்கள் வளம் பெற்று அவரது வாழ்வில் என்றும் பங்கேற்கும் தகுதி பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...