பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் அன்பார்ந்த உறவுகளே! இன்று நாம் பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்றோம். காலையில் கண்விழித்து தினமும் தொடங்கும் எமது வாழ்வுக்கு அருளையும் ஆசீரையும் தரும் இறைவனின் அன்பும், கருணையும் அவர் இரக்கமும் எம்மை வழிநடத்தவேண்டி இறைவரம் வேண்டி இங்கே கூடியிருக்கின்றோம். இன்றைய இறைவார்த்தையும், அவர் திருவிருந்தும் எம் வாழ்வின் வழியாக அமைவதாக, சவால்களை சந்திக்க தேவையான பலமாக அமைவதாக, இவ்வுலகைத் தாங்கும் கருவிகளாக மாற எம்மை உருவாக்குவதாக.
எசாயா இறைவாக்கினரின் இன்றைய முதாலாம் இறைவாக்கு, பாபிலோனில் அடிமைப்பட்ட யூதாவின் மக்கள் கொண்ட துன்பங்களை சித்தரிக்கின்றது. துன்புறும் ஊழியன் பகுதியில், புதிய விடியலுக்காக பயணிக்கும் மக்களுக்காக தம்மை ஒப்புக்கொடுக்கும் அழகிய பகுதி மக்களுக்கு அருளிய நற்செய்தியாக இது அமைகின்றது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகம், நம்பிக்கை எனும் அழகிய கொடையை செயலோடு இணைந்த வாழ்வில் காட்டவேண்டும் என வலியுறுத்துவதைக் காணலாம். மாற்கு எழுதிய நற்செய்தி இறைவார்த்தையில், இயேசுவின் அதிசயம் நிறைந்த போதனை கொடுக்கப்படுகின்றது. அதாவது, சிலுவையின் வழி தான் மானிட மீட்பு என துன்பங்களை ஏற்று, தாங்கிச் செல்லவேண்டும் என இயேசுவின் போதனை பேதுறுவை வலிமைப்படுத்துவதைக் காணலாம்.
அன்பார்ந்தவர்களே!
- நமது வாழ்வைப் புடமிடும் இன்பங்களும் துன்பங்களும் வாழ்வின் இரண்டு தூண்கள் என ஏற்றுக்கொண்டு செல்ல வரம்வேண்டுவோம்;
- நாம் இவ்வுலகில் சந்திக்கும் அதிவேக மாற்றங்கள் மத்தியில், நாம் இலக்கோடே பய்ணிக்க வரம் வேண்டுவோம்;
- மனித உரிமைகள் மதிப்பிழந்து, மனிதப் புதைகுழிகள் பெருகுகிக்கொண்டே செல்லும் பரிதாப நிலை மத்தியில், இறை சாயல் கொண்டு வாழும் எம் அனைவரையும் அன்பு செய்து வாழும் வரம் வேண்டுவோம்;
- எமக்காக இயேசு பாடுகள் பட்டு, மரித்து உயிர்த்தெழுந்தார் எனும் உண்மை எமது வாழ்விற்கான புது விடியலாக அமைய மன்றாடுவோம்;
- எமக்கு முன் துன்புற்று, துயறுற்று, வாழ எத்தனிக்கும் அனைத்து உள்ளங்களிலும் இறைவனின் கருணையும், இரக்கமும் கிடைக்கவேண்டி மன்றாடுவோம்.
நாம் பயணிக்கும் பாதைகள் இறைவனின் தரும் வரங்களை தாங்கிச் சென்று அவரின் வாழ்வை பின்பற்றி செல்லும் வழியாக அமைக்க இறைவரம் வேண்டி இன்றைய பலியின் இணைந்திடுவோம்.
வருகைப் பல்லவி
காண். சீஞா 36:18 ஆண்டவரே, உமக்காகக் காத்திருப்போருக்கு அது அளித்தருளும்; அதனால் உம் இறைவாக்கினர்கள் - தகுந்தவர்களாகக் காணப்படுவார்களாக. உம் ஊழியர்களின் மக்களாகிய இஸ்ரயேலரின் மன்றாட்டுகளுக்குச் செவிசாயும்.
திருக்குழும மன்றாட்டு
அனைத்தையும் படைத்தவரும் ஆள்பவருமான இறைவா, எங்களைக் கண்ணோக்கியருளும்; அதனால் உமது பரிவிரக்கத்தின் செயலாற்றலை உய்த்துணர்ந்து உமக்கு முழு இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரிய அருள்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 5-9a
ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவும் இல்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 116: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 9)
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்;
ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.
2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். -பல்லவி
3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன.
பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன;
துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.
4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்;
‘ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்’ என்று கெஞ்சினேன். -பல்லவி
5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.
6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்;
நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். -பல்லவி
8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;
என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.
9 உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18
என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டா விட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.
ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி கலா 6: 14
அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
‘மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும். † மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35
அக்காலத்தில்
இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.
“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். தம்மைப் பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
“மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்து கொண்டார்.
பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. கருணையின் இறைவா! எமது திரு அவையை பாதுகாத்தருளும். அனைத்து இன்னல்களிலும், நெருக்கீடுகளிலும் உமது தொடர் வழிநடத்தல் இருக்கவேண்டுமென்று, ...
2. கருணையின் இறைவா! எமது பங்குதந்தையை ஆசீர்வதித்தருளும். இப்பங்கின் நல்வாழ்வுக்காக உழைக்கும் இவரை உமது அருளால் நிறைத்துக் காத்தருளவேண்டுமென்று, ...
3. கருணையின் இறைவா! எமது பங்கில் உள்ள பிற சமய உறவுகள் அனைவருக்கும் உமது அருளையும் பாதுகாப்பையும் அளித்தருளும். அவர்களின் அன்பும் புரிந்துணர்வும் எமது வள்ர்ச்சிக்காகவே அமைந்திட வேண்டுமென்று, ...
4. கருணையின் இறைவா! யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நொந்துபோய்கிடக்கும் அனைத்து உறவுகளின் உணர்வுகளை ஒப்புக்கொடுக்கின்றோம். நீரே அவர்களின் ஆறுதலாக, அரவணைப்பவராக, துன்பத்தில் தாங்குபவராக இருக்கவேண்டுமென்று, ...
5. கருணையின் இறைவா! நடைபெற இருக்கும் தேர்தலில் எமது இலக்கு நேர்மையானதாக இருக்க மன்றாடுகின்றோம். மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்கும் பண்பை சம்பாதிக்கவேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கண்ணோக்கி இக்காணிக்கைகளை ஏற்றருளும்; இவ்வாறு உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் ஒவ்வொருவரும் ஒப்புக்கொடுக்கும் காணிக்கை அனைவருடைய மீட்புக்கும் பயன்படுவதாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
காண். திபா 35:8
கடவுளே, உமது இரக்கம் எத்துணை உயர்மதிப்புள்ளது ! மானிடா உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.
அல்லது
காண். 1 கொரி 10:16 நாம் போற்றும் திருக்கிண்ணம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் ஆகும்; நாம் பிடும் அப்பம் கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் ஆகும்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட விண்ணகக் கொடைகளின் செயலாற்றல் எங்கள் மனதையும் உடலையும் ஆட்கொண்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் எங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாம இத்திருவிருந்தின் பயனுக்கு ஏற்ப வாழ்வோமாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment