பொதுக்காலம் இருபத்தி இரண்டாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் பிரியமான என் உறவுகளே! இயேசுவின் பொன்மொழி கேட்டு, அவரின் உணர்வுகளில் உடனிருந்து, எம் ஐம்புலன்களால் அவரை அநுதினம் அனுபவித்திடவும், நாம் வாழும் இவ்வுலகத்தை, இயேசுவின் கண்களினூடாக காணவும், அவரை இவ்வுலகிற்கு எடுத்தியம்பவும் இன்று நாம் கூடிவந்துள்ளோம். பொதுக்காலம் இருபத்தி இரண்டாம் ஞாயிறு வாரம் இன்று எங்களுக்கு புதிய அர்த்தங்கள் தரும் வாழ்வையும், செல்லும் பாதைக்கான தெளிவையும் எமக்கு தர இருக்கின்றது.
இன்றைய இறைவார்த்தைகள் எமது சிந்தனைக்கு அப்பால், நாளாந்த வாழ்வுக்கு அப்பால், எமக்கு முன்னால் கிடக்கும் பல்வேறு தடைகளுக்கு அப்பால் சிந்திக்க அழைக்கின்றது. இணைச்சட்ட நூலிலிருந்து கொடுக்கப்படும் இன்றைய முதலாம் இறைவாக்கு கடவுளின் வார்த்தைக்கும், அவரது நியமங்களுக்கும் பிரமாணிக்கமாக இருக்கவேண்டிய தேவையையும் கடமையையும் தெளிவுபடுத்துகின்றது. அழைத்த கடவுள், அனைத்தையும் அறிந்தே செயற்படுகின்றார் என்பதை தெளிவாக காட்டுகின்றது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்தில் "இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்" எனும் வேண்டுகோள் கடவுளின் அழைப்பு மட்டும் அல்ல, அதுவே அவர் அழைத்த மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும் அவரது தூய்மையின் உணர்வுகளாகும். மாற்கு எழுதிய நற்செய்தியில் இரண்டுவகை மனிதர்களை புடமிட்டுக் காட்டுகின்றார். அதிலே, வெளிவேடம் நிறைந்த வாழ்வை, தீமையின் ஊற்றாக சுட்டிக்காட்டுகின்றார். அதாவது, பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு என்பன தீமையின் வெளிப்பாடு எனவும், இவை மனிதரில் காணப்படும் போது இறை அருள் இழந்த மனிதனாக, இவ்வுலகை தீமையாகவே மாற்றுகின்ற எண்ணங்களையும் சிந்தனைகளையும், செயல்களையும் விதைக்கின்றன எனும் ஒரு சவாலை முன்னிருத்திக் காட்டுகின்றார் இன்றைய நற்செய்தியாளர்.
இன்றைய வாசகங்கள் எம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒரு மனிதனாக, முழுமையான கிறிஸ்தவனாக, புனிதனாக நாம் வாழும் வாழ்வை எமக்கு சொல்லித் தரும் இன்றைய இறைவார்த்தைகள் எமக்குள் ஆழமாக ஊடுருவவேண்டும். நாம் காணும் யுத்தங்கள், அழிவுகள், சுயநல வாழ்வு, அரசியல் மந்தநிலை, பொருளாதார பின்னடைவுகள் அனைத்துமே இவ் வெளிவேடக்காரர்களின் வெளிச்சமே. இந்நிழலில் நாம் வாழ்ந்து எம்மையும் காத்துக்கொள்ளவேண்டுமா என்பது இன்றைய கேள்வியே. ஆசைகள் மேலோங்கி, உரிமைகளை விலங்கிடும் அதிகாரம் பெருகி, பணவெறியில் வாழும் எம் சமுகம் இவ்வெளிவேடக்கார்களே. நாம் மாறவேண்டி எமக்காக சிலுவையில் தொங்கும் இயேசுவின் தியாகம் மிகப் பெரியதே. இதை அதிகமாக உணர்ந்துகொள்வோம். இப்பலியில் நாம் உட்கொள்ளும் அவரின் உடலும் இரத்தமும் எம் வாழ்வை மாற்றவேண்டி மன்றாடுவோம். எம்மையும் இணைத்து எமக்காகவும், இவ்வுலகத்திற்காகவும் தொடர்ந்து மன்றாடுவோம். எம்மை அழைத்த இறைவன் எம்மை தொடர்ந்தும் வழிநடத்துவாராக. இச் சிந்தனைகளோடு இப்பலியில் இணைந்திடுவோம்.
வருகைப் பல்லவி
ஆண்டவரே, என்மேல் இரக்கமாயிரும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டேன். ஏனெனில் ஆண்டவரே, நீர் இனியவர், பரிவுள்ளவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
திருக்குழும மன்றாட்டு
ஆற்றல் வாய்ந்த இறைவா, சிறந்தவை அனைத்தும் நிறைந்தவரே, உம்மீது நாங்கள் உள்ளார்ந்த அன்புகொள்ளச் செய்தருளும்; அதனால் எங்களது சமயப்பற்றை வளர்த்து நன்மைகளைப் பெருகச் செய்து நீர் எங்களில் கருத்துடன் உருவாக்கியதைப் பராமரித்துக் காத்தருள்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2,6-8
இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
2 மாசற்றவராய் நடப்போரே!
இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;
உளமார உண்மை பேசுவர்;
3a தம் நாவினால் புறங்கூறார். -பல்லவி
3bc தம் தோழருக்குத் தீங்கிழையார்;
தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4ab நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். -பல்லவி
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;
மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;
இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27
சகோதரர் சகோதரிகளே,
நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.
உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23
ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.
அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! கிறிஸ்துவின் விழுமியங்களை இவ்வுலகமெங்கும் கொண்டுசெல்லும் எம் பணியாளர்கள் தமது குருத்துவ அர்ப்பணத்தின் வழியாக அவருக்கு முழுமையாக சான்றுபகர வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எமது மறைமாவட்டத்திற்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! எமது மறைமாவட்ட ஆயர், அவருடன் உடன் பணியாற்றும் அனைத்து குருக்கள் துறவிகள் அனைவரும் நற்செய்தியின் ஒளியில் இவ்வுலகை தாங்கிக்கொள்ளவும், திரு அவையின் உயர்வுக்காக தம்மை அர்ப்பணிக்கவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! ஒன்றிப்பை உயர்ந்த பண்பாக எமக்கு தந்தருளினீரே. எமது குடும்பத்தில் உள்ள அனைவரும் இவ்வொன்றிப்பை தமது இதயத்தில் எற்று, அனைவரையும் அன்பு செய்து வாழவும், குடும்ப செபத்தில் ஒருவரை ஒருவர் தாங்கிவாழும் வரத்தை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. திரு அவையில் துன்புறும் உறவுகளுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! பல்வேறு காரணங்களால் தமது உடலிலும் உள்ளத்திலும் துன்பங்களை தாங்கி சாட்சிய வாழ்வு வாழும் அனைவரையும் நீர் அரவணைத்து, அவர்களின் துன்பப் பாதையில் நீர் உடனிருந்து செயற்பட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. எமக்கு முன் இறந்தவர்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! இவ்வுலகில் வாழ்ந்து, எம் வாழ்வுக்கான வழியைக் காட்டிசென்ற பலநூறு உறவுகளை நன்றியோடு நினைவிற்கொண்டு, அவர்களுக்கு உமது விண்ணக பரிசை அளித்திடவும், புனிதர்களின் வரிசையில் சேர்த்திடவும் அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
6. எமது அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! பிறருக்காக பணிபுரிந்து அவர்களுக்காகவே வாழும் நற்பணியை அவர்களுக்கு கொடுத்திருக்கின்றீர். தமது வாழ்விலே இதை மிக அதிகமாகவே உணரும் வலிமையை அவர்களுக்கு கொடுக்கவும், தூய்மையான தலைமைத்துவத்தை எமக்கு தந்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, என்றும் புனிதமான இக்காணிக்கை மீட்பு அளிக்கும் ஆசியை எங்கள் மீது பொழிவதாக; இவ்வாறு அருளடையாள முறையில் நிகழும் இப்பலி உமது ஆற்றலால் நிறைவு பெறுவதாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
திபா 30:20 உமது அருள் எத்துணை ஆண்டவரே, உமக்கு அஞ்சுவோருக்கு நீர் சேர்த்து வைத்திருக்கும் மிகுதி.
அல்லது மத் 5:9-10
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இந்த அன்பின் உணவு எங்கள் இதயங்களை உறுதிப்படுத்தி எங்கள் சகோதரர் சகோதரிகளில் உமக்குப் பணிபுரிய எங்களைத் தூண்டியெழுப்புவதாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி