பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் என்றும் இணைந்திருக்கும் என் இனிய உள்ளங்களே! உங்கள் அனைவரையும் இன்றைய திருப்பலிக்கு அழைத்து நிற்கின்றோம். பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் நாம், இறை அனுபவம் பெற்று, இறை திட்டத்தில் இணைந்து, புதிய வாழ்வுக்கான பாதையில் எம்மையும் இணைத்திட நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய இறைவார்த்தைகள் மீண்டும் இயேசுவில் இணைந்திடும் வழியையே காண்பிக்கின்றன. இயேசுவின் உடலை உண்டு, அவர் இரத்தத்தில் பருகினால் மாத்திரமே நிலை வாழ்வு பெறுவதற்கான வழி கிடைக்கப்பெறுகின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றது இன்றைய நற்செய்தி. "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே" எனும் இயேசுவின் அழகிய வார்த்தைகள் யூதர்களுக்கு ஒரு பெரும் சவாலே! யூதர்களுக்கு விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு என்பது விவிலியத்தில் காணப்படும் முதல் ஐந்து நூல்களுமே. இதையே தோரா என்று அழைப்பர். ஆனால் இயேசு தன்னை விண்ணக உணவாகக் எண்பிக்கும் போது அது யூதர்களுக்கு, யூத சட்டங்களுக்கு, சமய கோட்பாடுகளுக்கு எதிரானது என்றே கருதினர்.
இவ்வுலகத்தில் காணப்படும் சமுக நடைமுறைச் சட்டங்கள், உலக போக்குகள், உருவாக்கப்பட்ட நெறிமுறைகள், எம்மைச் சுற்றி நாம் அமைத்திருக்கும் குறுகிய வட்டங்கள், எம்மை சிந்திக்க விடாமல் எம் எண்ணங்களை, எமது சிந்தனைகளை எமது வாழ்வையுமே கட்டுப்படுத்தும் இன்றைய சமுக தொடர்புசாதனங்கள், சினிமாக்கள், சின்னத்திரைகள், எமது அநாகரிக தொடர்பாடல்கள் மேலும் எமது சாதி வரம்புகள் எல்லாமே இன்றைய இயேசுவின் வார்த்தையில் உடைக்கப்பட்டு, மீளவே சிந்திக்கப்பட வேண்டிய தேவையில் இருக்கின்றது. உலகத்திற்கு இவைகள் ஒரு வகை ஊந்துதலாயினும், இயேசுவை பின்பற்றும் எமக்கு இவைகள் ஒரு சவாலே. "என்னை உண்போரும் என்னால் வாழ்வர்" என்று இயேசுவை நாளும் சுவைக்கும் நாம் இவற்றைக் கடந்து தான் சிந்திக்கவேண்டும்.
ஆகவே, இன்றைய பலியிலே நாம், இயேசுவின் உடலும் இரத்தமும் தரும் வாழ்வுக்கான பாதையை அமைக்க மன்றாடுவோம். அவர் இன்றும் எம்மை அன்பு செய்கின்றார் என்பதை இன்றும் நாம் நாளும் கொண்டாடும் திருப்பலி வழியாக எண்பிக்கின்றார். அவாரோடு இணைந்திருப்போம், அவர் மொழி கற்றிடுவோம், அவரையே உண்டு, பருகி வாழ்ந்திட, வாழ்வித்திட இப்பலியில் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
திபா 83:10-11
எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்; நீர் தி செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். - வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோலி, முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது. பாக்கம்: நீர் திருப்பொழிவு வடன் பாரும்; ஏனெனில்
திருக்குழும மன்றாட்டு
இறைவா, உம்மை அன்பு செய்வோருக்குக் கட்புலனாகாத பல்வேறு நன்மைகளை நீரே ஏற்பாடு செய்திருக்கின்றீர்; எங்கள் இதயங்களில் உமது அன்பின் நிறைவைப் பொழிவதால் நாங்கள் உம்மை அனைத்திலும், அனைத்துக்கும் மேலாகவும் அன்பு செய்து எல்லா வகை மனித எதிர்பார்ப்புகளையும் கடந்த உம் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
நான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6
ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, “அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; “வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்” என்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்;
அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும்,
ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. -பல்லவி
11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்!
ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.
12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?
வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? -பல்லவி
13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு;
வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!
14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்;
நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 15-20
சகோதரர் சகோதரிகளே,
உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்.
திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 56
அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. வல்லமையுள்ள இறைவா! ஆன்ம தாகம் தீர்க்கவே நீர் உம்மை எமக்கு உணவாக தந்தீர். உம்மை உண்டு, பருகி வாழ்ந்திடும் நாம் எமது புனிதத்தை நாளும் வளர்த்திடச் செய்யும். இதற்காக உமது உடலை உடைத்துத் தரும் உம் பணியாளர்கள் உம்மை என்றும் நேசித்து, அவ் அன்பை எம்மோடும் எம் அயலவரோடும் பகிர்ந்துவாழ செய்தருள வேண்டுமென்று, ...
2. வல்லமையுள்ள இறைவா! இவ்வுலகத்தை இயக்குபவர் நீரே, அதை பராமரிக்கச் செய்பவரும் நீரே என்பதை முழுமையாக நம்புகின்றோம். இன்று பல்வேறு நாடுகளில் இடம்பெறும் அனர்த்தங்கள், அழிவுகள், விபத்துக்கள் மத்தியில் எம் மக்களை கண்ணோக்கிப் பாரும். தொடர்ந்தும் எங்களை பாதுகாரும், இன்னல்கள் மத்தியில் வழிநடத்தும். நாமும் உம்மை அன்புசெய்வது போல் இவ் இயற்கையையும் அன்புசெய்யக் கற்றுத்தர வேண்டுமென்று, ...
3. வல்லமையுள்ள இறைவா! ஜுபிலி ஆண்டில் பயணிக்கும் நாம், கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இணைந்து உம்மிடம் மன்றாடுகின்றோம். எமது திரு அவையை கறையின்றி பாதுகாத்தருளும், பொய்மைமிகு பேதகங்கள் மத்தியில் அதை வழிநடத்தும், உம் மந்தையாகிய மக்களின் ஆன்மாக்களை உம்மிடம் கொண்டுசெல்லும் வழியில் அதற்காக உழைக்கும் அனைவரையும் உமது அன்பால் தாங்கிட வரமருள வேண்டுமென்று, ...
4. வல்லமையுள்ள இறைவா! எமது குடும்பத்திற்காக மன்றாடுகின்றோம். நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எமது பாசமிகு பெற்றோர்கள் என்றும் எப்பொழுதும் உம்மால் அன்புசெய்யப்படவும் அவர்கள் தொழில்துறைகள் அனைத்தும் நிறைவாக ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுகின்றோம். இவர்களை மதிக்கும், அன்புசெய்யும், இவர்களுக்காக செபிக்கும் நல்ல பிள்ளைகள் உருவாகவும், புதிய தலைமுறை உருவாக நல் விழுமியங்களையும் இவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, மாட்சிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
திபா 129:7 இரக்கம் ஆண்டவரிடமே உள்ளது ; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
அல்லது யோவா 6:51-52
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்கிறார் ஆண்டவர். இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, இவ்வருளடையாளங்களால் கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்த நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் இவ்வுலகில் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருந்து விண்ணகத்தில் அவருடன் தோழமை கொள்ளத் தகுதி பெறுவோமாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment