பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் - 11/08/2024



பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம்

திருப்பலி முன்னுரை 

இறை அன்பில் இணைந்து, இறை பலியில் கலந்து இறை அருளைப் பெற கூடிவந்திருக்கும் அன்பு உள்ளங்களே! இயேசுவின் பெயரால் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் எமக்கு இயேசுவின் நிலைவாழ்வு தரும் உணவிலே எம்மை உள்ளத்து தூய்மையோடும், உண்மை உணர்வோடும் பங்கேற்க இன்றைய நாள் அழைத்து நிற்கின்றது. 

"ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" எனும் திருப்பாடல் ஆசிரியரின் உள்ளத்து வரிகள் அனுபவ வரிகளாக, ஆழமான எண்ணங்களாக, தெளிவான வார்த்தைகளாக அனைத்து இறைவார்த்தைப் பகுதிகளையும் ஒன்றிணைத்து கொடுக்கப்படுகின்றது. இரண்டாயிரம் வருடங்களாகியும் இயேசுவை, எம் இறைவனை, திருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய அவரை நாம் உண்மை உணவாக உட்கொள்கின்றோம் என்றால் நாம் பெறுபெற்றவர்களே. 

மாண்டு போகவே இருந்த மனுக்குலமாகிய இஸ்ராயேல் மக்களுக்கு புதிய வாழ்வின்  ஆரம்பத்தை கொடுத்தது இந்த உணவு. கடவுளின் வல்லமையுள்ள பிரசன்னமாக மக்களுடனே உடன் சென்றது இந்த உணவு. பிரிந்து போன மக்களுக்கு ஒன்றிப்பின் புதிய அர்த்தத்தைக் கொடுத்தது இந்த உணவு. கடவுள் எவ்வளவிற்கு இவ்வுலகத்தின் மேல் அன்புகொண்டார் என்பதை தினமும் கொண்டாடும் அதே கல்வாரிப் பலியாக தன்னை புதுப்பிப்பதும் இந்த உணவு. மனிதனுக்கு மன்னிப்பை அளித்து, இறை அன்பை சுவைக்க அநுதினம் புதிய  எருசலேமுக்கு அழைத்து நிற்பதும் இவ்வுணவே. "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்று தன்னையே கொடுக்கும் உன்னத இயேசுவை இன்று நாம் அதிகமாக சுவைக்க இருக்கின்றோம். 

நாம் வாழும் இவ் அழகிய வாழ்விலே, மறைந்திருக்கும் அதிசயங்களில் ஒன்று இந்த இயேசுவே. இந்த இயேசுவை நாம் தொட்டுப் பார்க்கவும், சுவைத்துப் பார்க்கவும், கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நுகர்ந்து பார்க்கவும் முடியும் என்றால், நான் இயேசுவையே அணிந்துகொள்ளும் அழகிய கருவியாக மாறுகின்றேன். என்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வோம், நற்கருணையின் சாயல் என் வாழ்வு முழுவதும் மிளிர்ந்திட மன்றாடுவோம். இயேசு என்னை அன்புசெய்வது மாத்திரம் அல்ல, நானும் அவரை உண்டு, அவரில் என்னை மாற்றிக்கொள்ளவும் மன்றாடுவோம். 

இவ் அழகிய சிந்தனைகளுடன் தொடரும் இப்பலியில் முழுமையாக பங்கேற்று இறைவரம் வேண்டி நிற்போம். 

வருகைப் பல்லவி

ஆண்டவரே, உமது உடன்படிக்கையை நினைத்தருளும் உம் ஏழையரின் ஆன்மாக்களை ஒரு போதும் கைவிடாதேயும். ஆண்டவரே! எழுந்து வாரும்! உமது வழக்கை நீரே நடத்தும். உம்மை நாடும் குரலை மறவாதேயும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் தூய ஆவியார் எங்களுக்குக் கற்றுத்தந்தவாறு, உம்மைத் தந்தை என அழைக்க நாங்கள் துணிவு கொள்கின்றோம்; நீர் வாக்களித்த உரிமைப் பேறான விண்ணக வீட்டுக்கு நாங்கள் வந்து சேரும்படி நீர் தேர்ந்து கொண்ட மக்களுக்கு உரிய மனப்பான்மையை எங்கள் இதயங்களில் பொழிந்தருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8

அந்நாள்களில்

எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.” பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார்.

அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக்கொண்டார்.

ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.


1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;

அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;

எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி


3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்;

அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;

அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;

எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி


5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;

அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;

அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி


7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்;

அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30 - 5: 2

சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.

மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 51

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51

அக்காலத்தில்

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படிச் சொல்லலாம்?” என்று பேசிக் கொண்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. நற்கருணையின் ஆண்டவரே! உம்மை தம் அபிஷேக கரங்களால் அர்ச்சித்து, இவ்வுலகின் ஆன்ம உணவாக நாளும் அளிக்கும் எம் குருக்கள், இக்குருத்துவத்தின் உன்னத மேன்மையை உணர்ந்து, தமது தகுதியின்மையிலும், தகுதியாக அழைத்த இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருக்கவும், திரு அவையின் சிறந்த மேய்ப்பர்களாக திகழ்ந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...

2. நற்கருணையின் ஆண்டவரே! நம்பிக்கை இழந்து, திரு அவையின் கோட்பாடுகளை எதிர்த்து, உம்மையே மறந்து வாழும் மக்களின் அறியாமையை கண்ணோக்கும். உம்மை உணவாக உண்ணும் பாக்கியம் இழந்துபோகும் இவர்களுக்கு, நீரே உன்னதர், நீரே தூயவர், நீரே வாழ்வளிப்பவர் என்பதை தமது உள்ளார்ந்த நம்பிக்கையாக கொண்டு வாழ வரமளித்தருள வேண்டுமென்று, ...

3. நற்கருணையின் ஆண்டவரே! இஸ்ராயேல் மக்களின் வாழ்வு முழுவதிலும் உமது உடனிருப்பும், பிரசன்னமும் இருந்தது போல, இன்று நாம் சந்திக்கும் அனைத்து விதமான போராட்டங்களிலும், துயரங்களிலும், தீமைகளிலும் எம்முடனிருந்து எம்மை நேரிய வழியில் நடத்திட வேண்டுமென்று, ...

4. நற்கருணையின் ஆண்டவரே! எமது பங்கின் ஆன்ம வழிநடத்தல் வழியாக, எமது மறைமாவட்டத்தின் உயரிய நோக்கத்தின் வழியாக, இன்றும் எம்மை அன்பு செய்து பராமரித்து வருகின்றீர். இதற்காக உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். தமது வாழ்வையே உமது நோக்காக, திரு அவையின் உயரிய க்கொள்கையாக கொண்டு வாழும் எம் ஆயர், குருக்கள், துறவறத்தார் மேலும் தன்னார்வ பாணியாளர்கள் அனைவருக்கும் உமது அன்பையும், ஆசீரையும், பாதுகாப்பையும் கொடுத்து வழிநடத்தவேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருளும்; இரக்கத்தால் நீர் எங்களுக்கு அளித்த இக்காணிக்கைகள் உமது ஆற்றலால் எங்கள் மீட்பின் மறைநிகழ்வாக மாறச் செய்வீராக. எங்கள்.


திருவிருந்தப் பல்லவி

திபா 1472 எருசலேமே! உயர்தரக் கோதுமையினால் உன்னை நிறைவடையச் செய்யும் ஆண்டவரைப் போற்றுவாயாக! நான் அளிக்கும் உணவு வழி மரபினர் வாழ்வதற்கான எனது சதை, என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களை உம்மோடு ஒன்றிக்கச் செய்து எங்களுக்கு மீட்பு அளிப்பதாக; அது எங்களை உமது உண்மையின் ஒளியில் உறுதிப்படுத்துவதாக, எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments