திருப்பலி முன்னுரை
'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?'
இயேசுக் கிறிஸ்துவில் அன்பு இறைமக்களே! இயேசுவை கருவில் சுமந்த தாய் அன்னை மரியாவின் மகிழ்வில் நாமும் இன்று இணைந்து அதை பார் உலகமெங்கும் பரப்பிட கூடிவந்துள்ளோம். இன்று அன்னையாம் திரு அவை அன்னை மரியாள் எலிசபேத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடுகின்றாள். இவ்விழா பதின்நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே வழிபாட்டிற்குள் இணைத்து கொண்டாடப்படுகின்றது. திருத்தந்தை ஆறாம் உர்பான் இவ்விழாவிற்கான சிறப்பு தனித்துவத்தை அளித்து அதை இறைமக்கள் அனைவரும் கொண்டாடும்படி அழைத்தார். எலிசபேத் அம்மாள் அன்னை மரியாளை, பெண்களுள் ஆசீர் பெற்றவள் என்றும், ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டதால், அவள் பேறுபெற்றவள் என்றும் வாழ்த்தி அன்னை மரியாளை உலகின் நட்சத்திரமாக எண்பிக்கின்றாள். இன்று நாம் கொண்டாடும் இவ்விழாவில் எம்மையும் இணைத்துக் கொள்வோம். இயேசுவில் நம்பிக்கை கொண்டு அவர் வார்த்தையில் நிலைத்து நிற்கும் நாம் ஒவ்வொருவரும் பெறுபெற்றவர்களே! இவ்வாசீரில், அன்னையும் எம்மோடு சேர்ந்து பயணிக்கின்றாள். அன்னையின் மகிழ்வில், இவ்வுலகம் ஒரு புதிய வரலாற்றை கண்டது, அவளின் சந்திப்பில், ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது, அவளின் தூய்மையில், இறைவன் புதிய வாழ்வைக் எமக்குக் கொடுத்தார். இந்த சிந்தனைகளோடு தொடரும் இப்பலியில் வரம் கேட்டு மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
காண், திபா 6:1:16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, அனைவரும் வாரீர் கேளீர்! ஆண்டவர் என ஆன்மாவுக்குச் செய்தது எத்துணை என்பதை எடுத்துரைப்பேன்
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனைக் கருத்தாங்கிய புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்திக்கத் தூண்டுதல் தந்தீNர் அதனால் நாங்கள் தூய ஆவியாரின் ஏவுதலுக்குப் பணிந்து, அந்த அன்னையோடு உம்மை என்றும் போற்றிப் பெருமைப்படுத்த அருள்புரிவீராக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.
பதிலுரைப் பாடல்: எசாயா: 12
பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
நற்செய்தி இறைவாக்கு
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
இறைமக்கள் மன்றாட்டு
குரு. அன்னையின் அன்பு சந்திப்பில் எமது தேவைகளை அவள் வழியாக இறை தந்தையிடம் எடுத்துச் சொல்லி மன்றாடுவோம். எமக்காக இன்றும் பரிந்துபேசும் தாய், எம்மை ஒருபோதும் கைவிடமாட்டாள் எனும் நம்பிக்கையில் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுப்போம்.
1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: இறைவனின் அரசை இவ்வுலகெங்கும் பரப்பி, இயேசுவின் நற்செய்திற்கு பிரமாணிக்கமாய் வாழும் அனைவரையும், அன்னை மரியாவின் எடுத்துக்காட்டால் ஊந்தப்பட்டு, தொடர்ந்து பணியாற்றிடும் அருளையும் வல்லமையையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: இறைவா, அன்னை மரியாவையும் புனித வளனாரையும் கொண்டு அழகிய குடும்பம உணர்வையும், விழுமியத்தையும், அன்பையும் எமக்கு காட்டினீரே. குடும்பம் என்பது நீர் கொடுத்த கொடை, அதை உருவாக்கி, உறவுகொண்டாட செய்தவர் நீர் என உணரவும், குடும்பம் தருகின்ற பண்புகள், விழுமியங்கள், புன்னியங்கள், ஒழுக்கங்கள் என்பன அதன் அத்திவாரமாக இருப்பதாக. எமது தாயும் தந்தையும் இப்பண்புகளால் எமை அழகுபடுத்தி, இவ்வுலகு அறியச் செய்பவர்களாக மாற்றியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்னையின் பக்தர்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா, உமது அன்னையை எமக்கு தாயாக தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அன்னையின் வழி நடந்து, அவள் கூறும் செய்திகளைக் கேட்டு, அவளின் உண்மையான உணர்வுகளுக்கு செவிசாய்த்து, தினமும் திருச்செபமாலையை அன்பின், புனிதத்தின், வாழ்வின் செபமாகச் சொல்லி அவளின் வழி உம்மிடம் வந்துசேரும் அருளை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நலிவுற்ற குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா, இன்று பண ஆசை, பொருள் ஆசை மீது நாட்டம் கொண்டு குடும்ப பலம் இழந்து, குடும்ப அன்பு இழந்து, குடும்ப ஒன்றிப்பு இழந்து வாழும் எம் குடும்பங்களை ஆசீர்வதித்தருளும். குடும்ப சச்சரவுகளால், பிரட்சனைகளால், பொருளாதார நெருக்கடியினால், சந்தேகங்களினால், பண மோகங்களால், விவாகரத்து வரைக்கும் பிரிந்து சென்ற குடும்ப தம்பதியினர், குடும்பங்களை இணைத்து வைத்தவர் இயேசு என்பதை முழுமையாக அறிந்து தமது வாழ்வின் உயர் பொறுப்பாகிய குடும்பங்களை கட்டிக்காக்கும் வல்லமை கிடைக்கவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: அன்பும் இரக்கமும் நிறைந்த இறைவா! உம் தாயாகிய அன்னை மரியாவை எமக்கு ஒரு வரலாற்றின் தாயாக தந்தீரே, உமக்கு நன்றி கூறுகின்றோம். அத்தாய் குடும்பத்தை பக்குவமாக பேணிப் பாதுகாத்து, பராமரித்து, இறைதிட்டத்திற்கு ஏற்ப இயேசுவை வளர்த்து கையளித்தது போல, எமது குடும்பங்கள் உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்கள் உம் பாதம் வந்து சேர்வனவாக. குடும்பங்கள் இவ்வுலகிற்கு கொடுக்கும் உயரிய கொடையாகிய பிள்ளைகளை ஞானத்திலும், அறிவிலும் வளர்த்து அவர்களுக்கு தேவையான வழி நடத்துதலை கொடுத்து காத்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் புனிதமிக்க அன்னை புரிந்த அன்புப் பணி உமக்கு ஏற்புடையதாய் இருந்தது; அது போல நாங்கள் ஒப்புக்கொடுக்கும் மீட்பின் பலி உமது மாட்சிக்கு உகந்ததாய் இருப்பதாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
லூக் 1:48-49 எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பது அவரது பெயர்
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு அரும்பெரும் செயல் செய்யும் உம்மை உமது திரு அவை போற்றிப் பெருமைப்படுத்துவதாக் மரியாவின் வயிற்றில் இருந்த இயேசுவைப் புனித யோவான் அக்களிப்போடு கண்டுகொண்டது போல், என்றும் வாழும் அதே இயேசுவை உமது திரு அவை இவ்வருளடையாளத்தில் பேரின்பத்துடன் கண்டுகொள்ளச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.