Sunday, 31 March 2024

புனித இரவில் பாஸ்கா திருவிழிப்பு 01/04/2024

 


புனித இரவில் பாஸ்கா திருவிழிப்பு

முன்னுரை:

இன்று நாம் கொண்டாட இருக்கும் இவ்விரவு ஒரு புனித இரவு.  இருள் ஏனும் சாவை இயேசு வெற்றிகொண்ட இரவு, பாவத்தை தகர்த்தெறிந்த இரவு. இவ்விரவை நாம் கொண்டாடவேண்டும். எமக்கு நம்பிக்கை எனும் வெளிச்சத்தை தந்த இரவு, இதுவே பாஸ்கா இரவு ஆகும். எகிப்தியரின் உலகிற்குள் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இஸ்ராயேல் மக்களை ஒரு சுதந்திர மக்களாக கொணர்ந்த இரவு, முழு மனித விடுதலையை பெற்று இறைவனின் சுவிகார மக்களாக மாற்றிய இரவு, சுதந்திரமாக வழிபடவென அழைத்துச்சென்ற இவ்விரவே பாஸ்கா இரவு ஆகும். இயேசுவின் உயிர்ப்பு நாளில் அகமகிழும் திரு அவை மக்களாகிய நாம் எமை சூழ்ந்திருக்கும் பாவ இருளை அகற்றி கிறிஸ்துவே ஒளியாக இவ்வுலகிற்கு கொண்டு வருவோம். 

இன்றைய வழிபாடு நான்கு பெரும் பிரிவுகளை கொண்டிருக்கின்றது. 

1. ஒளியின் வழிபாடு

2. இறைவார்த்தை வழிபாடு

3. திருமுழுக்கு வழிபாடு

4. நற்கருணை வழிபாடு 

முதல் பகுதி: திரு ஒளி வழிபாடும் பாஸ்கா புகழுரையும்;

இரண்டாம் பகுதி: வார்ததை வழிபாடு - ஆண்டவராகிய கடவுள் தொடக்கத்திலிருந்தே தம் மக்களுக்குப் புரிந்துள்ள அரும்பெரும் செயல்களைப் புனிதத் திரு அவை சிந்தித்து, அவரது வார்த்தையிலும் வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொள்ள முனைகின்றது.

மூன்றாம் பகுதி: திருமுழுக்கு வழிபாடு. விடியல் நெருங்கி வர, திரு அவையின் புது உறுப்பினர் திருமுழுக்கினால் புதுப் பிறப்பு அடைவர்;

நான்காம் பகுதி: நற்கருணை வழிபாடு. ஆண்டவர் தம் இறப்பினாலும் உயிர்பினாலும் முன்னேற்பாடு செய்த திருவிருந்தில், அவர் மீண்டும் வரும்வரை பங்குகொள்ளத் திரு அவை அழைக்கப்படுகின்றது.

பாஸ்கா திருவிழிப்பு முழுவதும் இரவிலேயே கொண்டாடப்பட வேண்டும்; எனவே அதை இரவுக்குமுன் தொடங்கக் கூடாது. ஞாயிறு விடியுமுன் முடிக்க வேண்டும்.

திருவிழிப்புத் திருப்பலியை நள்ளிரவுக்கு முன்னரே ஒப்புக்கொடுத்தாலும், அது ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு திருப்பலி ஆகும்.

இவ்விரவுத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள், பகலில் நடைபெறும் திருப்பலியிலும் நற்கருணை உட்கொள்ளலாம். தனியாகவோ கூட்டாகவோ இவ்விரவுத் திருப்பலியை நிறைவேற்றிய அருள்பணியாளர் பகலில் தனியாகவோ கூட்டாகவோ இரண்டாவது திருப்பலி நிறைவேற்றலாம். பாஸ்கா திருவிழிப்புக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் வாசகத் திருப்புகழ்மாலையில் பங்குபெறுவதில்லை.

அருள் பணியாளரும் திருத்தொண்டரும் திருப்பலிக்கான வெண்ணிறத திருவுடைகளை அணிவர்.

திருவிழிப்பில் பங்கெடுக்கும் அனைவரும் மெழுகுதிரிகளை வைத்திருக்க வகை செய்ய வேண்டும். கோவிலில் உள்ள விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்கும்.

முதல் பகுதி திருவிழிப்பின் சிறப்புத் தொடக்கம் அல்லது திரு ஒளி வழிபாடு

தீயையும் பாஸ்கா திரியையும் புனிதப்படுத்துதல்

1. ஒளியின் வழிபாடு

இப்பொழுது ஒளியின் வழிபாடு ஆரம்பமாகின்றது. கடவுள் இவ்வுலகைப் படைத்தபோது, ஒளியை தனது முதற்படைப்பாக படைத்தார். ஒளி இருக்கும் இடத்தில் இருள் ஆட்சிசெலுத்த முடியாது. இன்று இவ்வொளி புது ஒளியாக ஏற்றப்படுகின்றது. தேனிக்களின் முயற்சியினால் ஆன மெழுகுதிரியைக் கொண்டு இவ்வொளி ஏற்றப்படுகின்றது. இதுவே தாய்த் திரியாக உலகிற்கு ஒளியாக திகழும் இயேசுவை எண்பிக்கின்றது. கடவுள் இஸ்ராயேல் மக்களை ஒளியிலும், மேகத் தூணிலும் நடத்திச் சென்றார். இயேசுவின் உயிர்ப்பின் ஒளி இன்று எம்மை அழைத்துச் செல்கின்றது. 

இதோ ஒளியின் பவனி ஆரம்பமாகின்றது. குருவானவர் பாஸ்கா மெழுகுதிரியை ஏந்திச் செல்வார். 'கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று அழைக்க, நாம் 'இறைவனுக்கு நன்றி' என்று பதிலுரைப்போம், அவரை பின் தொடர்ந்து ஒரே நுழைவாயிலின் வழியே ஆலயம் செல்லுவோம். 

பாஸ்கா புகழுரை

திருத்தொண்டர் திருப்பலி நூலுக்கும் பாஸ்கா திரிக்கும் தூபம் இட்டு, வாசக மேடையில் நின்றுகொண்டு பாஸ்கா புகழுரையைப் பாடுகின்றார்; அப்பொழுது அனைவரும் எரியும் திரிகளைத் தம் கைகளில் ஏந்தி நிற்பர்.

இரண்டாம் பகுதி

இறைவார்த்தை வழிபாடு

திருவிழிப்புகளுக்கெல்லாம் அன்னையாகிய இத்திருவிழிப்பில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும் புதிய ஏற்பாட்டிலிருந்து (திருமுகம், நற்செய்தி என) இரண்டும் ஆக மொத்தம் ஒன்பது வாசகங்கள் இடம்பெறுகின்றன. நீண்ட நேரம் நிகழும் திருவிழிப்பின் தன்மையை வெளிப்படுத்தும் வண்ணம், இயன்றவரை வாசகங்கள் அனைத்தும் வாசிக்கப்பட வேண்டும்.

முன்னுரை

கடவுளின் திட்டம் என்பது அவரது படைப்பின் தொடக்கம் முதல் இன்றுவரை நிறைவேறிக்கொண்டே இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு இவற்றை செவ்வனே தெளிவுபடுத்துகின்றன. மனிதனின் பாவத்தின் விளைவாக கடவுள் எமை மீட்க திட்டம் கொண்டார். இத்திட்டம் தனது மகன் இயேசுக் கிறிஸ்து வழியாக நிறைவேறுகின்றது. இதனையே ஒவ்வொரு இறைவார்த்தையும் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, அனைவரும் வாசிக்கப்படும் இறைவார்த்தைகளுக்கு பக்தியுடன் செவிமெடுப்போம். 

முதலாம் இறைவாக்கு: கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1 - 2: 2 

பதிலுரைப் பாடல் திபா 104: 1-2ய. 5-6. 10,12. 13-14. 24,35உ (பல்லவி: 30)

பல்லவி: ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

அல்லது

திபா 33: 4-5. 6-7. 12-13. 20,22 (பல்லவி: 5டி)

பல்லவி: ஆண்டவருடைய பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

செபம் இடம்பெறும் 


இரண்டாம் இறைவாக்கு: நம் தந்தை ஆபிரகாமின் பலி. தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-18

பதிலுரைப் பாடல் திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

செபம் இடம்பெறும் 


மூன்றாம் இறைவாக்கு: இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 15 - 15:1

பதிலுரைப் பாடல் விப 15: 1-2. 3-4. 5-6. 17-18 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில் மாட்சியுடன் வெற்றி பெற்றார்.

செபம் இடம்பெறும் 


நான்காம் இறைவாக்கு: என்றுமுள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 5-14

பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10,11ய,12டி (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைதூக்கிவிட்டீர்.

செபம் இடம்பெறும் 


ஐந்தாம் இறைவாக்கு: என்னிடம் வாருங்கள்; நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11

பதிலுரைப் பாடல் எசா 12: 2-3. 4டி9உன. 5-6 (பல்லவி: 3)

பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்.

செபம் இடம்பெறும் 


ஆறாம் இறைவாக்கு: ஆண்டவரின் ஒளியில் சீர்மையை நோக்கி நட.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 32-4: 4

பதிலுரைப் பாடல் திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா 6: 68)

பல்லவி: ஆண்டவரே! நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.

செபம் இடம்பெறும் 


ஏழாம் இறைவாக்கு: நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.

நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 16-17ய, 18-28

பதிலுரைப் பாடல் திபா 42: 2,4யடிஉ; 43: 3. 4 (பல்லவி: 42: 1)

பல்லவி: கடவுளே! என் நெஞ்சம் கலைமான் போல உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

இத்திருவிழிப்பின்போது திருமுழுக்கு நடைபெறுமானால், ஐந்தாம் வாசகத்துக்குப் பின்னர் வரும் பதிலுரைப் பாடலைப் பயன்படுத்தவும். (காண்க: பக்கம் 432). அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள திருப்பாடல் 51ஐப் பயன்படுத்தவும்.

திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: 10)

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

செபம் இடம்பெறும் 



முன்னுரை

இப்பொழுது வானவர் கீதம் பாடப்படும், ஆலய மணிகள் ஒலிக்கப்படும், பீடத்தின் மீது காணப்படும் விளக்குகள் ஒளி ஏற்றப்படும். பாவத்தை வென்று, இயேசு வெற்றி வீரனாக  உயிர்த்தார் என்பதன் அளவற்ற மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்துகொள்வோம். உலகிற்கு ஒளியாக வந்த கிறிஸ்து எமது இதயங்களில் ஒளிர்வாராக. 

வானவர் கீதம் இடம்பெறும்

மணிகள் ஒலிக்கும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனிதமிக்க இந்த இரவை ஆண்டவருடைய உயிர்ப்பின் மாட்சியால் ஒளிர்விக்கின்றீர்;. உமது திரு அவையில் அனைவரும் உம் சொந்த மக்கள் எனும் மனப்பாங்கைத் தூண்டி எழுப்பியருளும்: அதனால் நாங்கள் உடலிலும் மனதிலும் புதுப்பிக்கப்பெற்று உமக்குத் தூய்மையான ஊழியம் புரிவோமாக. உம்மோடு.

எட்டாம் இறைவாக்கு: திருமுகம்

இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-11

பதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16யடி-17. 22-23

பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.

ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -பல்லவி


ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;

ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;

ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். -பல்லவி


கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி


நற்செய்தி இறைவாக்கு: சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-7

அருள்பணியாளர் வழக்கம் போலத் தூபக் கலத்தில் சாம்பிராணி இடுகின்றார்.


மூன்றாம் பகுதி

திருமுழுக்கு வழிபாடு

திருமுழுக்குத் தொட்டி அல்லது திருமுழுக்கு இடம் நோக்கிய பவனி பின்வருமாறு நடைபெறும். பணியாளர் ஒருவர் பாஸ்கா திரியுடன் முன் செல்ல, திருமுழுக்குப் பெறுபவரும் அவர்களுடைய ஞானப் பெற்றோரும் பிற பணியாளர்களும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்கின்றனர். பவனியின்போது புனிதர் மன்றாட்டுமாலை பாடப்படும். மன்றாட்டுமாலை முடிவில் அருள்பணியாளர் அறிவுரை கூறுகின்றார்.

திருமுழுக்குத் தொட்டிக்கு நீண்ட பவனியாகப் போக வேண்டுமானால், பவனியின் போது மன்றாட்டுமாலை பாடப்படும்; அப்படியானால், திருமுழுக்குப் பெறவேண்டியவர் பவனி தொடங்கும் முன் அழைக்கப்படுவர். பவனியில் முதலாவது பாஸ்கா திரி கொண்டு போகப்படும்; பின் திருமுழுக்குப் பெறுவோர் ஞானப் பெற்றோருடன் செல்ல, பணியாளரும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்வர். நீரைப் புனிதப் படுத்தும் முன் அறிவுரை வழங்கப்படும்.

திருமுழுக்குப் பெறுவோர் இல்லையென்றாலோ திருமுழுக்குத் தொட்டி புனிதப் படுத்தல் இல்லையென்றாலோ, மன்றாட்டுமாலையை விட்டுவிட்டு உடனே தண்ணா புனிதப்படுத்தப்படும்

புனிதர் சிலரின் பெயர்களை, சிறப்பாகக் கோவிலின் பாதுகாவலர், ஒரு தலத்தின் பாதுகாவலர், திருமுழுக்குப் பெறுவோரின் பெயர் கொண்ட புனிதர் ஆகியோர் பெயர்களை மன்றாட்டு மாலையில் சேர்த்துக் கொள்ளலாம்.

முன்னுரை

இப்பொழுது திருமுழுக்கு வாழிபாடு ஆரம்பமாகின்றது. திருமுழுக்கு பெறும் புகுமுக நிலையினருக்காக மன்றாடும் அதேவேளை, திருமுழுக்கு பெற்ற நாமும் அதன் வாக்குறுதிகளை புதுப்பித்து இறைவனிலே புதிய உறவை மேம்படுத்துவோம். தண்ணீரின் வழியாக புதுப்பிறப்படைந்து, தூய ஆவியினால் புதுவாழ்வு பெற்றவர்களாய் அவரிலே ஒன்றித்து வாழ்வோம். நாம் அவர் பிள்ளைகள் என்பதே எமது மகிழ்ச்சி.  இம்மகிழ்ச்சியை நாம் இரட்டிப்பாக்குவோம். பக்தியோடு இவ்வழிபாட்டிலே கலந்துகொள்வோம். 

திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்

திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல்

அருள் பணியாளர் மக்கள் மீது புனிதப்படுத்தப்பட்ட நீரைத் தெளிக்கின்றார்; அப்போது அனைவரும் பாடுகின்றனர்:


கோவிலின் வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன், அல்லேலூயர்

அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ

அவர்கள் யாவருமே மீட்பினைப் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.


நம்பிக்கையாளர் மன்றாட்டு

குரு. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் எமக்கு இது மகிழ்ச்சியே. இயேசுவின் தியாகம் நிறைந்த அவரின் பாடுகள் மரணம் அனைத்துமே அவரின் உயிர்ப்பிலே நிறைவேறுகின்றது. எமக்கு விடுதலை பெற்றுத் தந்த இயேசுவின் பாதத்தில் எமது தேவைகளை ஒப்புக்கொடுப்போம். 

1. திரு அவைக்காக மன்றாடுவோம் 

அன்பின் இறைவா, உமது உயிர்ப்பை அகிலம் எங்கும் கொண்டாடும் எமது திரு அவை, உம்மை அதிகம் அன்பு செய்து வாழ்வதாக. இம்மகிழ்ச்சியை பரப்பிடும் வாஞ்சைகொண்ட பணியாளர்கள் அதிகம் உருவாகிடவும், உமது உயிர்ப்பின் மக்களாக, பணியாளர்களாக நாளும் திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று... 

2. எம் மக்களுக்காக மன்றாடுவோம்

அன்பின் இறைவா, நீர் உருவாக்கிய இப்பூமியிலே சமாதானம் மலரவும், மகிழ்ச்சி நிலைத்தோங்கவும், உரிமைகள் பாதுகாக்கப்படவும், சிதறுண்ட மக்கள் ஒன்று சேரவும், நடைபெறும் யுத்தம் நிறுத்தப்படவும் மக்கள் எதிர்பார்க்கும் விழுமியங்கள் மனதிலே விதைக்கப்படவும் வரமருளவேண்டுமென்று...

3. ஜுபிலி ஆண்டிற்காக மன்றாடுவோம்

அன்பின் ஆண்டவரே, இறைவேண்டலின் ஆண்டில் பயணிக்கும் நாம், எமது திரு அவையின் சமகால தேவைகளை கருத்தில்கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய அருளை கேட்டு மன்றாடுகின்றோம். விவேகத்தோடும், பொதுநலத்தோடும், ஒன்றிப்போடும் செயற்படும் திரு அவையாக நாம் மாறவேண்டிய அருளை பொழிந்தருளவேண்டும்மென்று...

4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம் 

அன்பின் ஆண்டவரே, அன்பை சுயநலனாக்கி, வாழ்வை கசக்கி பிழிந்து பொருளாதார கெடுபிடிகளால் நிலை இழந்து வாழும் எம் மக்கள் தொலைந்திடாமல், தூர விலகிடாமல் தொடுவானமாம் எம் உயிர்ப்பின் இயேசுவுடம் நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டுவாழ வாரமருளவேண்டுமென்று...

திருமுழுக்கு இடம்பெற்றால்

5. திரு அவையின் புது உறவுகளுக்காக மன்றாடுவோம். 

அன்பின் ஆண்டவரே, இன்று திருமுழுக்கு எனும் திருவருட்சாதனத்தை பெற்று புதிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம் உறவுகள், உலகின் ஒளியாக உப்பாக திகழ்வார்களாக. கிறிஸ்துவை அச்சாரமாகக் கொண்டு படைப்பின் நற்செய்தி அறிவிப்பார்களாக. உலகை தம்பால் ஈர்க்கும் உண்மைச் சக்திகளாக திகழவேண்டுமென்று...

குரு. இறைவா, நீர் எமக்கு தந்த விடுதலை வாழ்வுக்காக நன்றி கூறுகின்றோம். சாவை வென்று வாழ்வை தந்தீர். தீமைகள் எமக்குள்ளே அகன்று தூய வாழ்வை நாம் அணிந்துகொள்வோமாக. நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் இத்தேவைகள் எமக்கு தேவையான அருளைப் பெற்றுத் தருவதாக. எங்கள்...


நற்கருணை வழிபாடு

வருகின்றோம் இந்நாளில் நன்றி

காணிக்கை தருகின்றோம் (2)

கரம் பற்றி நடந்திடும் என் தலைவா

என் கிண்ணம் நிரம்பிடச் செய்திடுவாய்


1. உழைப்பினை எடுத்து வந்தோம் உமக்கு அதன்

பலன்தனை அர்ப்பணித்தோம்

மனிதத்தை வளர்த்திடவே நாங்கள் உந்தன்

தியாகத்தை வாழ்ந்திடுவோம்

இறைவா என் இறைவா உன் மலரடி பாதம் பணிந்திடுவோம் -2

குறைகளை நீக்கி ஏற்றிடுவாய்

ஒளிர்ந்திடும் சுடராய் மாற்றிடுவாய்


2. ஏழைகள் உயர்ந்திடவே என்றும் எங்கள்

வாழ்வினைப் பகிர்ந்தளித்தோம்

சமநிலை தோன்றிடவே எங்கும் பாவப்பிரிவினை மீட்டிடுவோம்

உயிரே என் உறவே புது வசந்தம் விரைவில் மலர்ந்திடவே -2

ஏழையின் துயரம் போக்கிடவே

ஏற்றிடு எங்களின் காணிக்கையை

 

திருவிருந்துப் பல்லவி

1 கொரி 5:7-8 நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு கொண்டாடு வோமாக. அல்லேலூயா.

திருப்பாடல் 117-ஐப் பாடுவது பொருத்தம் ஆகும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு பாஸ்கா அருளடையாளங்களால் நிறைவு பெற்ற நாங்கள் உமது பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.


சிறப்பு ஆசி

சிலுவையில் அறையுண்ட மெசியா

இறைவல்லமையும் இறைஞானமுமாய் உள்ளார்

இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும் - இந்த

உலகமும் உணர்ந்திடட்டும்

அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா -4


1. நெஞ்சினில் அமைதியை இழக்கின்றோம் - மன

நிம்மதி இழந்தே தவிக்கின்றோம்

நோவிலும் சாவிலும் துடிக்கின்றோம் - எங்கள்

தேவனே சிலுவையின் பொருள் சொல்வாய்

இந்தச் சிலுவை உமது வல்லமையோ

இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) அல்லேலூ...


2. உறவுகள் நிறைவு தருவதில்லை எங்கள்

உள்ளத்தில் அன்பு வளர்வதில்லை

பிரிவுகள் பிளவுகள் பிணக்குகளே எங்கள்

வீட்டிலும் நாட்டிலும் வளர்வது ஏன்

இந்தச் சிலுவை உமது வல்லமையோ

இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) அல்லேலூ...



தொடர் பாடல்

இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.


பாஸ்காப் பலியின் புகழ்தனையே

பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.


மாசில் இளமறி மந்தையினை

மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாNர்

மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்

மாசுறு நம்மை இணைத்தாரே.


சாவும் உயிரும் தம்மிடையே

புரிந்த வியத்தகு போரினிலே

உயிரின் தலைவர் இறந்தாலும்

உண்மையில் உயிரோடாளுகின்றார்.


வழியில் என்ன கண்டாய் நீ?

மரியே, எமக்கு உரைப்பாயே.


உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்

கல்லறைதன்னைக் கண்டேனே;

உயிர்த்து எழுந்த ஆண்டவரின்

ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.


சான்று பகர்ந்த தூதரையும்

போர்த்திய பரிவட்டத்தினையும்

அவர்தம் தூய துகிலினையும்

நேராய்க் கண்ணால் கண்டேனே.


கிறிஸ்து என்றன் நம்பிக்கை,

கல்லறை நின்று உயிர்த்தாரே,

இதோ, உமக்கு முன்னாலே

செல்வர் கலிலேயாவிற்கே.


மரித்தோர் நின்று உண்மையிலே

கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.

வெற்றிகொள் வேந்தே, எம்மீது

நீரே இரக்கங் கொள்வீரே.

Fr. S. James Suren OMI

Thursday, 28 March 2024

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி - 29/03/2024

 


புனித வார வழிபாட்டு ஒழுங்குகளும் பாடல்களும் 

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி

  • மிகப் பழமையான மரபுப் படி , திரு அவை இன்றும் நாளையும் ஒப்புரவு, 'நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களைத் தவிர மற்ற அருளடையாளங்களை 'எச் சூழலிலும் கொண்டாடுவதில்லை.
  • இந்நாளில் ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டத்தின் போது மட்டும்தான் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கப்படும். இக்கொண்டாட்டத்தில் பங்குபெற இயலாது நோயாளிகளுக்கு இந்நாளின் எந்நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.
  • சிலுவை, திரிகள், பீடத் துகில் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் முழுவதும் வெறுமையாக இருக்கும்.
  • ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.


முன்னுரை

இன்று புனித வெள்ளி. 'திருச்சிலுவை மரம் இதோ இதிலே தான் தொங்கியது, உலகத்தின் மீட்பு' என்று புனித வெள்ளியின் முழு அர்த்தத்தையும் குறித்துக் காட்டும் சிலுவை இன்று எமது வழிபாட்டின் மையமாக அமைகின்றது. இன்று விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் தொங்கும் இயேசுவின் வாழ்வின் முழுமையை சிந்திக்க இருக்கின்றோம். இது தியாகத்தின் நாள், மீட்பின் நாள், தன்னைப் பலியாக்கியதன் மூலம் அவரே பலியாகவும், பலிபொருளாகவும், பலிப்பீடமாகவும் இவ்வுலகிற்கு தன் அன்பைக் காட்டிய அழகான நாள். 'தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை' (யோவா:15:13) என்று இவ்வுலகில் அன்பே தலைசிறந்தது என்று மெய்ப்பித்துக் காட்டிய அழகிய நாள். இயேசுவின் பாடுகள் எமக்கு வாழ்வின் அர்த்தத்தைக் காட்டவல்லது. அவரது இரத்தம் எமக்கு மன்னிப்பின் பானமாக மாறவல்லது. அவரது இறப்பு எமக்கு மீட்பைத் தரவல்லது. எனவே, இன்றைய வழிபாட்டில் பக்தியோடு பங்கேற்க எம்மையும் இணைத்துக் கொள்வோம். இன்றைய வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. 

1. இறைவாக்கு வழிபாடு

2. திருச்சிலுவை ஆராதனை 

3. திருவிருந்து.

இயேசுவின் வார்த்தைகள் எம்மை குத்தி ஊடுறுவட்டும், இயேசுவின் அர்ப்பணம் எமது வாழ்வின் நிலைகளைத் தொடட்டும், இயேசுவின் இறப்பு எமது வாழ்வுக்கு ஆதாரமாய் அமையட்டும். இச்சிந்தனைகளோடு இவ்வழிபாட்டிலே பக்தியோடு பங்கேற்போம். 

ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம்

திருப்பலிக்கு உரிய சிவப்பு நிற உடைகள் அணிந்து அருள் பணியாளரும் திருத்தொண்டர் இருந்தால், அவரும் அமைதியுடன் பீடத்தின் முன் வந்து, பீடத்துக்கு வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுவார்கள் அல்லது பொருத்தமானால் முழங்கால் பணிந்து சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவார்கள்; மற்ற அனைவரும் முழங்காலில் இருப்பர்.

மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகன் கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிந்தி, உம் அடியார்களுக்காகப் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்படுத்தினார்; உமது இரக்கத்தை நினைவுகூர்ந்து நிலையான பாதுகாப்பால் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென்.

அல்லது

இறைவா, பழைய பாவத்தின் விளைவாக எல்லாத் தலைமுறைக்கும் தொடர்ந்த சாவை எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய கிறிஸ்துவின் பாடுகளால் அழித்தீர்; இவ்வுலக மனிதரின் சாயலை இயற்கையின் நியதியால் பெற்றுள்ளது போல நாங்கள் அவருக்கு ஏற்றவர்களாய் இருப்பதால் விண்ணகத்தின் சாயலை உமது அருளின் புனிதத்தால் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. எங்கள். பதில்: ஆமென்.

இறைவாக்கு வழிபாடு

முதலாம் இறைவாக்கு: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்  52: 13 - 53: 12

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்

பதிலுரைப் பாடல்  திபா 31

பல்லவி: 'தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.'

என் இறைவா என் இறைவா 

ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)


1. என்னைப் பார்ப்போர் எல்லாரும் 

என்னை ஏளனம் செய்கின்றனர் 

உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர் 

ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும் 

அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால் 

இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்


2. ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன 

பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது 

என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் 

என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும் 

அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்


3. என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் 

என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள் 

ஆனால் நீரோ ஆண்டவரே 

என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும் 

எனக்கு துணையான நீர் எனக்கு 

உதவி புரிய விரைந்து வாரும்


இரண்டாம் இறைவாக்கு: எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம்      4: 14-16; 5: 7-9

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

நற்செய்திக்கு முன் வழ்த்தொலி: பிலி 2: 8-9

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி இறைவாக்கு: யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 18: 1 - 19: 42

குருத்து ஞாயிறன்று நடைபெற்றதுபோல், ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும்.

மறையுரை

பொது மன்றாட்டு

  • இறைவாக்கு வழிபாடு பொது மன்றாட்டுடன் முடிவடையும். 
  • இம்மன்றாட்டின் முழு நேரமும் அல்லது ஒரு பகுதியின்போது மக்கள் முழங்காலில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.

முன்னுரை

இப்பொழுது திருவழிபாட்டின் பொது முன்னுரை இடம்பெறும். திரு அவையில் காணப்படும் ஒவ்வொரு நிலையில் இருப்போருக்காகவும், அதன் வளர்ச்சியில் பயன்களாக அமைய இருக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்காகவும் மன்றாடுகின்றோம். தொடக்கக் காலத்தில் இருந்தே எமது திரு அவை சந்தித்த துன்பங்கள், இழப்புக்கள், சிந்திய இரத்தத் துளிகள், போலியான, முறனான கொள்கைகள் மட்டில் போராடும் திரு அவையாகவே இதை நாம் சந்திக்கின்றோம். நாம் சேர்ந்து ஒப்புக்கொடுக்கும் எமது மன்றாட்டுக்கள் இன்று திரு அவைக்கு அணிசேர்ப்பதாக. பக்தியோடு இவ்வழிபாட்டிலே கலந்துகொள்வோம். 

01. புனிதத் திரு அவைக்காக

02. திருத்தந்தைக்காக

03. திருநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளருள் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் ஆகிய அனைவருக்காக

04. கிறிஸ்தவப் புகுமுக நிலையினருக்காக

05. கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக

06. யூத மக்களுக்காக

07. கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காக

08. கடவுளை நம்பாதவர்களுக்காக

09. நாடுகளை ஆள்வோருக்காக

10. துன்புறுவோருக்காக


இரண்டாம் பகுதி திருச்சிலுவை ஆராதனை

முன்னுரை

இப்பொழுது திருச்சிலுவை ஆராதனை இடம்பெறும். அவமானத்தின் சின்னமாய் இருந்த சிலுவை இன்று ஆராதனைக்குரியதாய் மாறுகின்றது. இதுவே சிலுவை, இதிலே தான் தொங்கியது உலகத்தின் மீட்பு என்று சிலுவையை மும்முறை உயர்த்திக் காட்டி அதை உலகிற்கான விடுதலையின் சின்னமாக எண்பிக்கின்றார். குருவானவர் இச்சிலுவையை உயர்த்திப் பிடிக்கும்போது மக்கள் அனைவரும் முழந்தாற்படியிட்டு அதை ஆராதிப்பர். உயரிய மதிப்பும், ஆராதனையும் அதை முத்திசெய்யும்போது அளிப்பர். தாழ்ந்துகிடந்த எனது வாழ்வை உயர்த்திவிட்ட சிலுவை, அடிமைப்பட்டிருந்த எனது வாழ்வின் தளைகளை உடைத்தெறிந்த சிலுவை எனக்கு வாழ்வு அளிப்பதாக. முழந்தாற்படியிடுவோம். 


திருச்சிலுவையை உயர்த்திக் காட்டுதல்

பணியாளர்களோடு அல்லது தகுதியான மற்றொரு பணியாளரோடு திருத்தொண்டர் திருப்பொருள் அறைக்குச் செல்கின்றார். அங்கிருந்து எரியும் திரிகள் ஏந்திய இரு பணியாளர்களோடு அவர் ஊதா நிறத் துகிலால் மூடப்பட்ட சிலுவையை ஏந்தி, கோவில் வழியாகத் திருப்பீட முற்றத்தின் நடுப்பகுதிக்குப் பவனியாக வருகின்றார்.

பீடத்தின் முன் மக்களை நோக்கி நிற்கும் அருள்பணியாளர் சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். அதன் உச்சியிலிருந்து துகிலைச் சிறிது அகற்றி, அதை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, 'திருச்சிலுவை மரம் இதோ எனும் பாடலைத் தொடங்குகின்றார். மக்கள் எல்லாரும், 'வருவீர் ஆராதிப்போம் எனப் பதிலுரைக்கின்றார்கள். 

பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் சிலுவையைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு நிற்க, அனைவரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றார்கள். இது மூன்று தடவைகள் இடம்பெறும்.


திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு.

பதில்: வருவீர் ஆராதிப்போம்.


பாடல்

1. எனது ஜனமே நான் உனக்கு

என்ன தீங்கு செய்தேன் சொல்

எதிலே உனக்கு துயர் தந்தேன்

எனக்குப் பதில் நீ கூறிடுவாய்


எகிப்து நாட்டில் நின்றுன்னை

மீட்டுக் கொண்டு வந்தேனே

அதனாலோ உன் மீட்பருக்குச்

சிலுவை மரத்தை நீ தந்தாய்


நாற்பது ஆண்டுகள் நான் உன்னை

பாலைநிலத்தில் வழிநடத்தி

உனக்கு மன்னா உணவூட்டி

வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்

அதனாலோ உன் மீட்பருக்கு

சிலுவை மரத்தை நீ தந்தாய்


நான் உனக்காக எகிப்தியரை

அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை

வதைத்து ஒழித்தேன் நீயோ என்னைக்

கசையால் வதைத்துக் கையளித்தாய்


பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி

எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்

நீயோ என்னைத் தலைமையாம்

குருக்களிடத்தில் கையளித்தாய்


நானே உனக்கு முன்பாக

கடலைத் திறந்து வழி செய்தேன்

நீயோ எனது விலாவை ஓர்

ஈட்டியினாலே திறந்தாயே


மேகத்தூணில் வழிகாட்டி

உனக்கு முன்னே நான் சென்றேன்

நீயோ பிலாத்தின் நீதிமன்றம்

என்னை இழுத்துச் சென்றாயே


பாலைவனத்தில் மன்னாவால்

நானே உன்னை உண்பித்தேன்

நீயோ என்னைக் கன்னத்தில்

அடித்துக் கசையால் வதைத்தாயே


இனிய நீரைப் பாறையினின்று

உனக்கு குடிக்கத் தந்தேனே

நீயோ கசக்கும் காடியை

எனக்கு குடிக்கத் தந்தாயே


2. ஆணி கொண்ட உன் காயங்களை 

அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2


வலது கரத்தின் காயமே -2 

அழகு நிறைந்த ரத்தினமே 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


இடது கரத்தின் காயமே -2 

கடவுளின் திரு அன்புருவே 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


வலது பாதக் காயமே - 2 

பலன் மிகத் தரும் நற்கனியே ... 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


இடது பாதக் காயமே - 2 

திடம் மிகத் தரும் தேனமுதே ... 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


திருவிலாவின் காயமே - 2 

அருள் சொரிந்திடும் ஆலயமே ... 

அன்புடன் முத்தி செய்கின்றேன்


  • ஆராதனை முடிவுற்றபின் திருத்தொண்டர் அல்லது பணியாளர் ஒருவர் திருச் சிலுவையைப் பீடத்தில் வைக்கும் பொருட்டு எடுத்துச் செல்கின்றார். பீடத்தைச் சுற்றியோ பீடத்தின் மேலோ திருச்சிலுவை அருகிலோ எரியும் திரிகள் வைக்கப்படுகின்றன.

திருவிருந்து

  • பீடத்தின் மீது ஒரு துகில் விரிக்கப்படுகின்றது. திருமேனித் துகிலும் திருப்பலி நூலும் வைக்கப்படுகின்றன. 
  • அருள்பணியாளர் தாமே தோள் துகில் அணிந்து, தூயமைமிகு நற்கருணையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பீடத்துக்குக் குறுகிய வழியாகக் கொண்டு வருகின்றார். 
  • இரு பணியாளர்கள் எரியும் திரிகளை நற்கருணையோடு கொண்டுவந்து விளக்குத் தண்டுகளைப் பீடத்தின் அருகிலோ அதன்மீதோ வைக்கின்றனர்.
  • திருத்தொண்டர் இருந்தால், அவர் தூய்மைமிகு நற்கருணையைப் பீடத்தின்மீது வைத்து, நற்கருணைக் கலத்தைத் திறக்கின்றார். அருள்பணியாளர் பீடத்துக்கு வந்து தாழ்ந்து பணிந்து வணங்குகின்றார்.
  • விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே செபம் சொல்லப்படுகின்றது.


நற்கருணை 

திருவிருந்துப் பாடல் 

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய கிறிஸ்துவின் பாடுகளினாலும் புனித இறப்பினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர்; உமது இரக்கத்தால் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயல் எங்களில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு இம்மறைபொருளில் பங்கேற்பதன் வழியாக முடிவில்லா இறைப்பற்றுடன் வாழ்வோமாக. எங்கள். பதில்: ஆமென்.

  • அருள் பணியாளர் 'இறை ஆசிக்காகத் தலை வணங்குவோமாக' என அழைப்பு விடுக்கின்றார்.
  • பின் அருள்பணியாளர் மக்களை நோக்கி நின்றவாறு, அவர்கள்மீது தம் கைகளை விரித்து, பின்வரும் மன்றாட்டைச் சொல்கின்றார்:

ஆண்டவரே, தங்களது உயிர்ப்பின் நம்பிக்கையில் உம் திருமகனின் சாவை நினைவுகூர்ந்துள்ள உம் மக்கள் மீது உமது ஆசி நிறைவாய் இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்: அவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக் அவர்கள் ஆறுதல் அடைவார்களாக் புனித நம்பிக்கை வளர்வதாக் நிலையான மீட்பு உறுதி பெறுவதாக. எங்கள். பதில்: ஆமென்.

  • கொண்டாட்டத்துக்குப் பிறகு பீடம் வெறுமையாக்கப்படுகின்றது; ஆனால் இரண்டு அல்லது நான்கு மெழுகுதிரித் தண்டுகளோடு பீடத்தின்மேல் சிலுவை இருக்கும்.

Fr. S. James Suren OMI

Wednesday, 27 March 2024

ஆண்டவருடைய இரவு விருந்து - புனித வியாழன்



 புனித வார வழிபாட்டு ஒழுங்குகளும் பாடல்களும் 

ஆண்டவருடைய இரவு விருந்து - புனித வியாழன்

மக்கள், பணியாளர்கள், பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் ஆகியோரின் பாடல் இநநாள்களின் கொண்டாட்டத்தில் சிறப்பிடம் பெறுகின்றது. ஏனெனில் பாடங்கள் பாடப்படும்பொழுது அவை தமக்கு உரிய சிறப்பைப் பெறுகின்றன.

எனவே அருள்நெறியாளர்கள் தங்களால் இயன்றவரையில் கொண்டாட்டங்களின் பொருள், அமைப்புமுறை பற்றியும் கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் செயல்முறை, பயனுள்ள பங்கேற்பு ஆகியன பற்றியும் அவர்களுக்கு விளக்கம் தருவது கடமை ஆகும்.

திருப்பலியில் மட்டும் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கலாம். நோயாளிகளுக்கு இந்நாளில் எந்த நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.

இந்நாளின் இயல்புக்கு ஏற்றவாறு பீடம் மலர்களால் எளிமையாக அணிசெய்யப்படலாம். நற்கருணைப் பேழை முழுவதும் வெறுமையாய் இருக்க வேண்டும். ஆனால் இன்றும் மறு நாளும் அருள்பணியாளர்களுக்கும் மக்களுக்கும் போதிய அளவு அப்பங்கள் இதே திருப்பலியில் அர்ச்சிக்கப்பட வேண்டும்.

இசைப் பெட்டியும் பிற இசைக் கருவிகளும் பாடலைத் தொடரத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம்.


முன்னுரை 

இன்று புனித வாரத்தின் பெரிய வியாழனாகும் - ஆண்டவர் இயேசுவின் திருவிருந்து கொண்டாட்டமாகும். இன்று தான் இயேசு குருத்துவத்தையும் நற்கருணையையும் ஏற்படுத்திய நாளாகும். இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி 'உங்களுக்கு நான் அன்பு செய்தது போல நீங்களும் ஒருவர் மற்றவரை அன்புசெய்ய வேண்டும்' என்றும், 'இதை என் நினைவாய் செய்யுங்கள்' என்று தனது பணியின் அர்த்தத்தையும் அதை நிறைவேற்றவேண்டும் என்பதன் தார்மிககடமையையும் நினைவுறுத்துகின்றார். 'இது என் உடல், இது என் இரத்தம்' என்று தன்னை உடலாக இரத்தமாக இவ்வுலகிற்கு கொடுக்கும் நற்கருணையாக வாழ்ந்துகொண்டிருக்கும் இயேசு பலியாகவும், பலிப்பீடமாகவும், பலிப்பொருளாகவும் மாறுகின்றார். 'மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக முதன்முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து, தம் நினைவாக நாங்களும் பலி செலுத்த வேண்டுமென்று கற்பித்தார்' என்று இன்றைய வழிபாட்டின் தொடக்கவுரை எமக்கு நினைவூட்டுவதுபோல, குருவும் ஆசிரியருமாகிய இயேசுவைத் தவிர எமக்கு வாழ்வு இல்லை என்பதை உணர்ந்துகொள்வோம். நாளும் உட்கொள்ளும் நற்கருணை எமது ஆன்மிக உணவாக அமையட்டும். நற்கருணையின்றி திரு அவை இல்லை, திரு அவையின்றி நற்கருணை இல்லை என தமது திரு நிலைப் பணியினை செவ்வனே ஆற்றுகின்ற அனைத்து குருக்களுக்காகவும் இப்பலியிலே மன்றாடிக்கொள்வோம்.

வருகைப் பல்லவி : காண். கலா 6:14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் 
சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ளவேண்டும்; 
அவரிலேதான் நமக்கு மீட்பும் உயிரும் உயிர்ப்பும் உண்டு; 
அவராலே தான் நாம் இரட்சனியமும் விடுதலையும் அடைந்தோம் - 3

 திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் திருமகன் சாவுக்குத் தம்மைக் கையளிக்கும் வேளையில் நிலைத்து நிற்கும் அன்பின் புதிய பலியையும் திருவிருந்தையும் தமது திரு அவைக்கு அளித்தார்; அதனால் இப்புனிதமிக்க திரு உணவில் அடிக்கடி பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்விலிருந்து அன்பின் முழுமையையும் வாழ்வின் நிறைவையும் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.

  • 'உன்னதங்களிலே' பாடப்படும்; அப்பொழுது மணிகள் ஒலிக்கும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பில் 'உன்னதங்களிலே' பாடும்வரை மணிகள் ஒலிக்காது.

முதலாம் இறைவாக்கு: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14

பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.


திருப்பாடல் : 116

திருக்கிண்ணத்தை கையிலேந்தி

இறைபுகழ் நாம் கூறுவது

கிறிஸ்துவின் திரு இரத்தத்திலே 

பங்கு கொள்வதாம்


1. இறைவன் எனக்கு செய்த அனைத்து

ஈடில்லாத நன்மைகளுக்காய் - 2

நான் என்ன கைமாறு செய்திடுவேன்


2. மீட்புக்காக நன்றிகூறி 

திருக்கிண்ணத்தை கையிலேந்தி 

ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்


3. ஆண்டவரே நான் உமது

அடியேன் நல் ஊழியனே – 2

நீர் எனது கட்டுக்களை அவிழ்த்து விட்டீர்


4. புகழ்ச்சி நிறை பலியுமக்குப்

புண்ணியனே நான் செலுத்தி – 2

உமது பெயர் கூவி எந்தன் பொருத்தனை தருவேன்


2ம் இறைவாக்கு :- 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26 - 

அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: யோவா 13: 34

'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். 

நற்செய்தி இறைவாக்கு: யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15 - இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

  • மறையுரை
  • 'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படுவதில்லை.
பாதம் கழுவும் சடங்கு

முன்னுரை

இப்பொழுது பாதம் கழுவும் சடங்கு ஆரம்பமாகின்றது. 'இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.' இப்புனித செயல், பணிவிடை பெறவன்று, பணிவிடை புரியவே வந்தேன் என்பதன் உள் அர்த்தத்தை எண்பிக்கின்றது. குருத்துவ அருட்சாதனத்தின் அடிநாதமாகிய இச்செயல் அதன் வழிநடக்கின்ற அனைத்து குருக்களின் தார்மிக அழைத்தலை உணர்த்துகின்றது. பக்தியோடு இச்சடங்கில் பங்கேற்போம். 


பாடல்

உங்களுக்கன்பு நான் செய்தது போலவே

அன்பொருவருக்கொருவர் செய்வீர் - 2


சரணம்

1. தாம் உலகில் நின்று தந்தையிடம் செல்லும்

நேரம் வந்ததை அறிந்த இயேசு

தம்மவர்மேல் அன்புகூர்ந்திருந்த அவர்

இறுதிவரையும் அன்பு கூர்ந்தார்


2. பாஸ்கா விழாவிற்கு சீடருடன் இயேசு

பந்தி இரவில் அமர்ந்தபோது

எழுந்து சீடர்களின் பாதம் கழுவி

துணியினால் அவர் துடைத்தாரே


3. போதகர் ஆண்டவர் ஆகிய நானே

சாதனை இன்றுங்களுக்களித்தேன்

நீங்களும் ஒருவர் ஒருவர் பாதங்கள் 

கழுவவேண்டுமெனப்பணித்தேன்


4. உங்களுக்கே ஒரு புதிய கட்டளை

இன்று நான் கொடுக்கிறேன் இதோ

உங்களுக்கன்பு நான் செய்தது போலவே 

அன்பொருவருக்கொருவர் செய்வீர்


5. இத்தகைய அன்பு கொண்டிருந்தாலோ நீங்கள்

என் சீடரென்றெல்லோரும் அறிவர்

இவ்வாறு அன்புடன் அன்றிரவே – தம்

சீடருக்கே இயேசு பணித்தார்


6. சாகுமுன் எமக்குச் சாதகமாகவே 

சோதர அன்பினையே புகட்டி

நற்கருணை மூலம் அற்புதமாய் அதை

தற்பர அன்புடன் இணைத்தாரே


நம்பிக்கையாளர் மன்றாட்டு

குரு: 'ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்று இயேசு எம்மை அவர் சீடராக மாற அழைக்கின்றார். சீடத்துவ வாழ்வின் உயிர்நாடி, நம் ஆண்டவர் இயேசுவிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுப்போம். 


1. தமது குருத்துவத்தை நினைவுகூர்ந்து கொண்டாடும் அனைத்து திருநிலைப் பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம். இயேசுவை சொந்தமாக்கிகொண்டு, அவர் பணியை சிரமேற்கொண்டு, தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து குருக்களும் இயேசுவின் அழைப்பை ஏற்று இறை மக்களுக்காகவே வாழ்ந்து, இறை அருளை இரஞ்சும் கருவிகளாக திகழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


2. சீடர்களுக்கு மாதிரிகாட்டி ஆசிரியரும், குருவுமாக திகழும் இறைவா, எமது நாளந்த வாழ்விலே, தாழ்ச்சி எனும் புண்ணியத்தைக் கற்றுக்கொள்ள வரமருளும். எம்மைக் கடந்துசென்ற காலங்களில் இத்திரு அவைக்காக தம்மை அர்ப்பணித்து உயிர் நீத்த அனைத்து பணியாளர்களையும் நன்றியோடு நினைக்கச் செய்தருளும். இவர்களின் விசுவாச வாழ்வு எமக்கு ஒரு சான்றாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. எமது திரு அவையில் நற்கருணை மட்டில் வாஞ்சையோடும் தாகத்தோடும் தவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். ஒவ்வொரு திருப்பலியின் போதும் அருட்சாதன முறையில் உட்கொள்ளும் இயேசுவின் உடலும் இரத்தமும் எமது வாழ்வுக்கான அருமருந்தாக அமையவும், எமது நாளாந்த வாழ்வை தாங்கிக் செல்லவும், புனித வாழ்வுக்கு எம்மை அழைத்து நாளும் புதுப்பிக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


4. இன்றைய சூழலில், மிகுந்த அச்சத்தோடும், தீராத நோவுகளோடும், முடிவில்லாத கவலையோடும் வாழும் அனைவரையும் நினைத்துக்கொள்வோம். துன்பங்கள் வாழ்வின் சுமைகளன்று, சவால்கள் அதன் எல்லைகளன்று, மாறாக இயேசுவோடு இணைந்து பயணிக்கும் அருள்கிடைக்கவும், தீமைகளை நாடிச்செல்லாத மனதை உருவாக்கி, இயேசுவின் மனநிலை கொண்டு வாழும் அருள்கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


5. உலகில் நடந்தேறிக்கொண்டிருக்கும் போர்கள் நிறுத்தப்படவும், ஆட்கடத்தல்கள், கொலைகள் வன்முறைகள் நிறுத்தப்படவும் மன்றாடுவோம். தனி மனித சுயநலத்தால் எமக்கு முன்பே அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகை இறைவன் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டுமென்று மன்றாடுவோம். நாளும் மாண்டுகொண்டிருக்கும் மனித மான்பு காக்கப்படவும், விரும்பித்தேடும் சுதந்திரம் நிலைநாட்டப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


குரு: அன்பின் இறைவா, நீர் நல்லவர், எமக்கு வாழ்வு கொடுப்பவர் என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். இன்றைய நாளில் நீர் எமக்கு தந்திருக்கும் இவ்வழகிய அருட்கொடைகளுக்காக நன்றி கூறுகின்றோம். இவைகள் வழியாக இத்திரு அவையை நிலைநாட்ட நாம் உழைப்போமாக. எமது தேவைகள், எமது விண்ணப்பங்கள் இவ்வுலகின் வாழ்வுக்கான அருளையும் ஆசீரையும் உம்மிடமிருந்து பெற்றுக்கொடுப்பதாக. இவற்றை எல்லாம் என்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் உம் திருமகன் இயேசுக் கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.  


காணிக்கைப்பாடல்

அன்பிற்கே எம்மை அர்ப்பணித்தோம் 

அனைத்தும் பகிர்ந்தே வாழுவோம் - 2

இதுவே எம் காணிக்கை - 4


1. எமது காணிக்கை உமது ஆவியால் 

புனிதமாக வேண்டும் 

இதனால் அகிலமே வாழ்வின் பாதையை 

இன்றே காணவேண்டும் 

எங்கள் உழைப்பின் பலன்களும் 

நிலத்தின் கொடைகளும் 

உமக்கு புகழ்தர உலகம் உயிர்பெற 

எம்மையே பலி தந்தோம் 


2. அன்பு புரட்சியே வாழ்வின் மலர்ச்சியாய் 

மாற்றும் வழியில் இணைந்தோம் 

நீதி அமைதியும் மனித நேயமும் 

பலியின் பொருளாய் ஏற்றோம் 

இந்த ஆழ்ந்த உணர்வினில் நாமும் இணைந்திட 

தாழ்வு நீங்கிட வாழ்வு ஓங்கிட 

எம்மையே பலி தந்தோம் 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.


தொடக்கவுரை: கிறிஸ்துவின் பலியும் அருளடையாளமும் 

தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை 1


திருவிருந்து பாடல்

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்

ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்

ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம் 

அந்த இயேசுவை உணவாய் உண்போம் 

இந்த பாரினில் அவராய் வாழ்வோம் .


1.இருப்பதை பகிர்வதில் 

பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே

இழப்பதை வாழ்வென 

ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே .

வீதியில் வாடும் நேரிய மனங்கள் 

நீதியில் நிலைத்திடுமே 

நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் 

நாளைய உலகின் விடியலாகவே !


2.பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே 

வேதமாய் ஆனதே

புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே

இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே 

இதை உணர்வோம்  நம்மை பகிர்வோம்

இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !


திருவிருந்துப் பல்லவி 1 கொரி 11:24-25

இவ்வுடல் உங்களுக்காகக் கையளிக்கப்படும்; புதிய உடன்படிக்கையின் இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படுகிறது. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்யுங்கள், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிவீராக் உம் திருமகனின் இரவு விருந்தினால் இவ்வுலகில் ஊட்டம் பெறும் நாங்கள் என்றென்றும் நிறைவு அடையத் தகுதி பெறுவோமாக. எங்கள்.


தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம்


  • திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொன்ன பிறகு அருள்பணியாளர் பீடத்துக்கு முன் நின்று தூபக் கலத்தில் சாம்பிராணியிட்டுப் புனிதப்படுத்தி, முழங்காலிட்டு, தூய்மைமிகு நற்கருணைக்கு மும்முறை தூபம் காட்டுகின்றார். 
  • எரியும் திரிகளுடனும் தூபத்துடனும் தூய்மைமிகு நற்கருனை கொண்டு செல்லப்படும். 
  • கோவிலின் ஒரு பகுதியில் இதற்கென்று தயார் செய்யப்பட்டுள்ள மாற்று இடத்துக்கோ, தகுதியான விதத்தில் அணிசெய்யப்பட்டுள்ள வேறொரு சிற்றாலயத்துக்கோ கோவிலின் வழியாக நற்கருணை கொண்டு செல்லப்படுகின்றது. 
  • எரியும் திரிகளோடு உள்ள மற்ற இரு பணியாளர்கள் நடுவில் திருச்சிலுவை ஏந்திய பொது நிலைப் பணியாளர் முன்னின்று வழிநடத்துகின்ற பணியாலர் முன்னின்று வழிநடத்துகின்றார்.
  • எரியும் திரிகளைக் கொண்டிருப்போர் பின்தொடர்வர். புகையும் தூபக் கலத்தை ஏந்தி நிற்பவர் தூய்மைமிகு நற்கருணையைக் கொண்டு செல்லும் அருள்பணியாளர் முன் செல்வார். 
  • அவ்வேளையில் 'பாடுவாய் என் நாவே'  அல்லது வேறு நற்கருணைப் பாடல் 'பாடப்படுகின்றது.
  • நற்ருணை வைக்கப்படும் இடத்தைப் பவனி அடைந்ததும் அருள்பணியாளர் - தேவையானால் திருத்தொண்டரின் உதவியுடன் - நற்கருணைப் பேழைக்குள் நற்கருணைக் கலத்தை வைக்கின்றார். அதன் கதவு திறந்திருக்கும். 
  • பின் முழங்காலிட்டு தூய்மைமிகு நற்கருணைக்குத் தூபம் இடுகின்றார். அப்பொழுது 'மாண்புயர் அல்லது வேறு நற்கருணைப் பாடல் பாடப்படும். 
  • பிறகு திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளரே நற்கருணைப் பேழையின் கதவை மூடுகின்றார்.
  • பீடம் வெறுமையாக்கப்பட்டு, கூடு மானால், சிலுவைகள் எல்லாம் கோவிலிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகளைத் திரையிட்டு மறைப்பது பொருத்தம் ஆகும்.


முன்னுரை

இப்பொழுது தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம் செய்யப்படுகின்றது. இயேசு தனது தந்தையின் விருப்பத்தை சிரமேற்கொண்டு தனது பாடுகள் மரணத்தில் பங்கேற்கின்றார். இயேசுவின் இந்த பாஸ்கா மறைபொருளை சிந்திக்க அழைக்கும் நேரமிது. விழித்திருந்து செபியுங்கள் என்று எமக்கு அழைப்புவிடுக்கும் இயேசுவின் உணர்வுகளோடு இன்று பயணிப்போம். நற்கருணையாக உடைக்கப்பட்டு இன்று எமக்காக பாடுகளை தாங்கும் இயேசுவில் எம்மையும் இணைத்து இவ்வழிபாட்டில் கலந்துகொள்வோம். 


நற்கருணை பவனிக்கான பாடல்

1. பாடுவாய் என் நாவே மாண்பு

மிக்க உடலின் இரகசியத்தை

பாரின் அரசர் சீருயர்ந்த

வயிற்றுதித்த கனியவர் தாம்

பூதலத்தை மீட்கச் சிந்தும்

விலைமதிப்பில்லாதுயர்ந்த

தேவ இரத்த இரகசியத்தை

எந்தன் நாவே பாடுவாயே


2. அவர் நமக்காய் அளிக்கப்படவே

மாசில்லாத கன்னி நின்று

நமக் கென்றே பிறக்கலானார்

அவனி மீதில் அவர் வதிந்து

அரிய தேவ வார்த்தையான

வித்து அதனை விதைத்த பின்னர்

உலக வாழ்வின் நாளை மிகவே

வியக்கும் முறையில் முடிக்கலானார்


3. இறுதி உணவை அருந்த இரவில்

சகோதரர்கள் யாவரோடும்

அவரமர்ந்து நியமனத்தின்

உணவை உண்டு நியமனங்கள்

அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்

பன்னிரண்டு சீடருக்கு

தம்மைத் தாமே திவ்விய உணவாய்

தம் கையாலே அருளினாரே


பவனி முடிந்த பின்பு

4. மாண்புயர் இவ்வருட் அனுமானத்தை

தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

பழைய நியம முறைகள் அனைத்தும்

இனி மறைந்து முடிவு பெறுக

புதிய நியம முறைகள் வருக

புலன்களாலே மனிதன் இதனை

அறிய இயலாக் குறைகள் நீக்க

விசுவாசத்தின் உதவி பெறுக


5. பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்

புகழ்ச்சியோடு வெற்றியார்க்கும்

மீட்பின் பெருமை மகிமையோடு

வலிமை வாழ்த்து யாவும் ஆக

இருவரிடமாய் வருகின்றவராம்

தூய ஆவியானவர்க்கும்

அளவில்லாத சம புகழ்ச்சி

என்றுமே உண்டாகுக, ஆமென்.


பிற்சேர்க்கை


ஆசைமேல் ஆசையாய் இருந்தேன் - இந்த 

பாஸ்கா உணவை உண்பதற்கு - நான் 

ஆசைமேல் ஆசையாய் இருந்தேன் இந்த 

பாஸ்கா உணவை உண்பவத்றகு


1. பாடுகள் துவங்கும் காலமிது - நம் 

கண்முன் தெரிகின்றது 

பகிர்ந்திடும் விருந்து வேளையிது 

இங்கு அன்பு மலர்கின்றது 

அன்பில் பிறந்திடும் துன்பங்கள் 

மகிமையின் வாசல்கள்


2. உடலின் உழைப்பும் வலிமையையும் - நாம் 

பகிர்ந்தே வாழ்ந்திடுவோம் 

குருதியில் கலந்த நல்லறங்கள் - நம் 

வாழ்வில் நிறைத்திடுவோம் 

பகிர்ந்து வாழும் நெஞ்சங்கள் 

பலியதன் பீடங்கள்


இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் 

என்னையே உனக்காக தருகின்றேன் 

மலர்களில் விழுந்து 

மணமென நுழைந்து 

காற்றினில் கலந்து 

கனிவோடு பணிந்து 


1. பசி உள்ளோர்க்கு 

உணவாக நானிருப்பேன் -உடை 

இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன் 

விழுந்தவரை தூக்கிடுவேன்-இங்கு 

நலிந்தவரின் துணையிருப்பேன் 

இதுவே நான் தரும் காணிக்கையே 


2. இருப்பவர் கொடுப்பதில் 

இன்பம் என்ன - கையில் 

இருப்பதை கொடுப்பதே இன்பம் என்றாய் 

பலியை அல்ல இரக்கத்தையே - என்னில் 

விரும்புகின்ற இறைமகனே 

உன்னைபோல் நானும் உருவாகிட


காணிக்கை தரும் நேரம் 

கடவுளே உன் திரு முன்னே 

அன்பென்னும் பலியாக அள்ளி தரும் நேரம் 

என்னை படைத்தேன் என்னை படைத்தேன் 

இன்றும் என்றும் உந்தன் 

உகந்த காணிக்கையாய் 


1. வாழும் வாழ்வை பலியாய் தந்தேன் 

வரமே தருவாய் நீ 

போதும் என்ற மனமே தந்து 

பொறுத்துக்கொள்வாய் நீ 

என்னன்பு தேவனும் நீ 

என் வாழ்வின் ஜீவனும் நீ 


2. உள்ளம் விரும்பும் இறைவன் நீரே 

உவந்து தர வந்தேன் 

மீதி வாழ்வை திருமுன் தந்து 

நிம்மதி பெறுகின்றேன் 

என்னன்பு தேவனும் நீ 

என் வாழ்வின் ஜீவனும் நீ

Fr. S. James Suren OMI,
Communauté Internationale Des Missionnaires Oblats,
60, Cours Mirabeau, 
13100, Aix-en-Provence,
France. 
+94 77 232 3266,
+33 61 331 3213

Saturday, 23 March 2024

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு 24/03/2024

 


ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு

  • திருப்பலிக்கான திரு உடை: சிகப்பு
  • எருசலேமுக்குள் ஆண்டவரின் நுழைவை நினைவுகூர்தல்மு
  • தல் வகை: பவனி
  • குருவானவர் சிலுவை அடையாளம் வரைந்து வழிபாட்டை தொடங்குவார்.

திருப்பலி முன்னுரை

இயேசு எருசலேம் நுழைகின்றார்; 'தாவிதின் மகனுக்கு ஒசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே! இஸ்ரயேலின் அரசரே, உன்னதங்களிலே ஒசன்னா' என்று கீதம் பாடி அவரை வரவேற்கின்றனர். இயேசு தனது தந்தையின் விருப்பப்படி தனது வாழ்வின் இறுதிக் கட்ட நிகழ்வுகளுக்குள் செகின்றார். இன்று தான் புனித வாரம் ஆரம்பமாகின்றது. இயேசுவின் பாஸ்கா மறை நிகழ்வின் கொண்டாட்டம் ஆரம்பமாகின்றது. எமது வாழ்வும் விண்ணகம் நோக்கிய பயணத்தில் இணைகின்றது. எமது தவ ஒறுத்தல்கள் அர்த்தம் பெறும் அழகான சந்தர்ப்பமாகின்றது. கிறிஸ்துவின் வெற்றி அவரது பாடுகள் மற்றும் மரணத்திலே

பொதிந்து கிடக்கின்றது என்பதை எண்பிக்கின்றார். இயேசுவோடு சேர்ந்து பயணிப்போம். அவரது பாடுகளில், துயரத்தில் பங்கேற்போம். 'ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்;' எனும் இறைவாக்கினர் எசாயாவின் கூற்றை மெய்பிக்க எமக்காக மரிக்க முன்வரும் இயேசுவின் பாதங்கள் பற்றிக்கொண்டு முன்செல்வோம்.

தாவீதின் மகனுக்கு ஓசான்னா

ஆண்டவர் பெயரால் வருகிறவர்

ஆசி நிரம்ப பெற்றவரே

இஸ்ராயேலின் பேரரசே

உன்னதங்களிலே ஓசான்னா

குருத்தோலைகள் மந்திரித்தல்

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இக்குருத்தோலைகளை உமது ஓ ஆசியால் புனிதப்படுத்தியருளும்; அதனால் கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக நிலையான எருசலேமுக்குள் வந்து சேர ஆற்றல் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

அல்லது

மன்றாடுவோமாக.

இறைவா, உம்மை எதிர்நோக்கியிருப்போரின் நம்பிக்கையை வளர்த்து உம்மை வேண்டுவோரின் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும்; அதனால் வெற்றி வீரரான கிறிஸ்துவின் திருமுன் இன்று குருத்தோலைகளை ஏந்தி வருகின்ற நாங்கள் அவர் வழியாக நற்செயல்களின் பயன்களை உமக்கு அளிப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென். அருள்பணியாளர் அமைதியாகக் குருத்தோலைகள் மீது புனித நீரைத் தெளிக்கின்றார்.

நற்செய்தி இறைவாக்கு: மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 11:1-10 

அல்லது யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 12:12-16

பவனி

எபிரேயர்களின் சிறுவர் குழாம்

ஒலிவக்கிளைகள் பிடித்தவராய்

உன்னதங்களிலே ஓசான்னா

என்று முழங்கி ஆர்ப்பரித்து

ஆண்டவரை எதிர் கொண்டனரே


மண்ணுலகும் அதில் நிறைந்துளளவையும் 

பூவுலகும் அதில்வாழும் யாவும் ஆண்டவருடையது.

ஏனெனில் அவரே அதைக் கடல்கள்மேல் நிறுவினார் 

ஆறுகளின் மீது அதை நிலைநாட்டினார். (பல்லவி)


திருப்பலி

  • பவனியின் பின், சிலுவை அடையாளம் வரைந்து திருப்பலியை ஆரம்பிப்பது, மன்னிப்பு வழிபாடு, மற்றும் மக்கள் மீது ஆசிர் நீர் தெளிப்பது தவிர்க்கப்படல் வேண்டும். 

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, தாழ்மையின் எடுத்துக்காட்டை மனித இனம் பின்பற்ற, எங்கள் மீட்பரை மனித உடல் எடுக்கவும் சிலுவையை ஏற்றுக்கொள்ளவும் செய்தீNர் அதனால் நாங்கள் அவரது பொறுமையைக் கற்றுக்கொண்டு அவரது உயிர்ப்பில் பங்கேற்கத் தகுதி பெறுமாறு எங்களுக்குக் கனிவாய் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

1ம் இறைவாக்கு:- எசாயா 50: 4-7

தியானப்பாடல் :- திருப்பாடல் 22


என் இறைவா என் இறைவா

ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்


உதட்டை பிதுக்கி தலையசைத்து

எனைப்பார்த்து ஏளனம் செய்கிறனர் – 2

ஆண்டவரில் நம்பிக்கை வைத்தானே

அவரே இவனை விடுவிக்கட்டும் - 2 என்றார்


நாய்களோ பல என்னை சூழ்ந்தனவே

நஞ்சினும் கொடியவர் வளைத்தனரே – 2

கைகளை கால்களை துளைத்தனரே – என்

மெய்யதன் எலும்பெண்ண முடிந்ததுவே – 2


ஆடையை தமக்குள்ளே பகிர்ந்தனரே – என்

உடைமீது சீட்டையும் போட்டனரே

ஆனால் என் ஆண்டவா எனை விட்டு நீர்

தொலைவிலே போகாமல் உதவவாரும் - 2


ஆண்டவர்க்கஞ்சுவொரே அவரை

ஆர்பரித்தே புகழ்ந்தேத்துங்களே

இஸ்ராயேல் மக்களே அவர்க்கஞ்சுங்கள்

யாக்கோபின் மரபே நீ போற்றிடுவாய்


2ம் இறைவாக்கு :- பிலிப்பியர் 2 : 6 – 11

  • நற்செய்தி இறைவாக்கின் போது எரியும் திரிகளும் தூபமும் இருக்கக் கூடாது, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் ஆண்டவருடைய பாடுகளின் வரலாறு வாசிக்கப்படும். நற்செய்தியின் இறுதியில் நற்செய்தி நூலை முத்தமிட தேவையில்லை. 


நற்செய்தி இறைவாக்கு:- தூய மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பாடுகள்' 14:1 - 15:47

  • சுருக்கமான மறையுரை இடம் பெறலாம்.
  • நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்.

நம்பிக்கையாளர் மன்றாட்டு

குரு. இயேசு கிறிஸ்துவின் எருசலேம் நோக்கிய பயணத்திலே நாமும் சேர்ந்து பயணிக்கின்றோம். தமது பாடுகளோடு, துன்பங்களோடு, வேதனைகளோடு நாம் ஒப்புக்கொடுக்கும் விண்ணப்பங்களையும் தாங்கிச் செல்வார் எனும் நம்பிக்கையுடன் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. திரு அவையை வழிநடத்தும் இறைவா, 

தனது புனிதப்படுத்தும் பணியினால் உலகை இறைவன்பால் கொண்டுவர உழைக்கும் எமது திருநிலைப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். இவர்கள் சந்திக்கும் அனைத்து சவால்களையும் முகங்கொடுக்கும் வீரத்தையும், மக்களை தமது முன்மாதிரிகையால் வழிநடத்தும் ஆற்றலையும் அளித்தருள வேண்டுமென்று ...

2. வரங்களை நிறைவாய் பொழியும் இறைவா, 

கிறிஸ்துவின் பாடுகளை, மரணத்தை தியானிக்கும் நாம் அவரின் விருப்பத்தை எமது வாழ்விலே நிறைவேற்ற முன்வருவோமாக. இதனால் எமது ஆன்மிக வாழ்வில் சந்திக்கும் அனைத்து சவால்களிலும் அவரையே பிரதிபலிக்க அருள்புரிய வேண்டுமேன்று ...

3. சுமைகளை தாங்கும் இறைவா, 

இவ்வுலகை வாட்டி வதைக்கும் துன்பங்களும் துயரங்களும், வேதனைகளும் சோதனைகளும், நோய்களும் இறப்புக்களும் எம்மை விட்டு நீங்கவும், மக்களும் தமது வாழ்வின் தேர்வுகளின் போது நேர்மையுடனும், உண்மையுடனும் உழைத்துப் போராடும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று ...

4. அன்பைப் பொழியும் இறைவா, 

சிலுவை அன்பை இன்று நீர் எமக்கு காட்டியிருக்கின்றீர். இவ்வன்பினால் பிறரை ஏற்றுக்கொள்ளவும், தாழ்ச்சியோடு வாழவும், இரக்கம் காட்டவும், பகிர்ந்து கொடுக்கவும், ஆணவத்தை விட்டொழிக்கவும் எமக்கு கற்றுத்தருகின்றீர். நாமும் இச்சிலுவை அன்பை ஏற்றுக்கொண்டு உம்மையே நாளும் வாழும் வரமருள வேண்டுமென்று ...

குரு: இறைவா, நீர் சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டு எமக்காக உமது உயிரையே உவந்தளித்தீரே. இச்சிலுவை தரும் பாடங்களை நாம் கருத்தாய் கடைப்பிடிக்க எமக்கு உதவியருளும். இன்று நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் எமது விண்ணப்பங்களை ஏற்றருளும். தாழ்ச்சியோடு நாம் அளிக்கும் இவ்வேண்டல்கள் வழியாக எமது வாழ்வும் ஆசிர்வதிக்கப்படுவதாக. இவற்றை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைப் பாடல் 

தந்தாய் நாங்கள் வந்தோம் 

உம் பாதம் காணிக்கை தந்தோம் -2 

ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் வாழ்வுகள் மலர அருள்புரிவீர் -2


1. கல்வாரி மலைமீது சிலுவை நம் பாவப்பரிகார முழுமை 

எவ்வாறு சுமப்போம் பளுவை என்பவன் சுயநலத்தின் அடிமை 

ஓ இயேசுவே எம் அன்பினை காணிக்கையாகத் தந்தோம் 

ஓ தேவனே எம் வாழ்வினை அர்ப்பணம் செய்திட வந்தோம் -2


2. ஏழ்மையில் வாழ்ந்திடும் சிலுவை ஏளனப் பொருளாகும் நிலைமை 

எவ்வாறு மாற்றுவது இதனை என்பதே வாழ்க்கையின் கடமை 

ஓ இயேசுவே பணிவாழ்வினைக் காணிக்கையாகத் தந்தோம் 

ஓ தேவனே உம் தோள்களின் சிலுவையைச் சுமந்திட வந்தோம் 

அர்ப்பணம் செய்திட வந்தோம்

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் பாடுகளால் நீர் எம்மீது கொண்டுள்ள இரக்கம் நெருங்கி வருவதாக் எங்கள் செயல்களால் தகுதியற்றவர்கள் ஆயினும் இந்த ஒரே பலியின் ஆற்றலால் உமது இரக்கத்தை முன்கூட்டியே நாங்கள் கண்டுணர்வோமாக. எங்கள்.


நற்கருணைப் பாடல்

கருணை தெய்வமே கனிவாய் என்னில் வா 

வானின் அமுதமே வாழ்வில் கலந்து வா 

உந்தன் விருந்திலே உள்ளம் மகிழுதே 

உணவாய் எழுந்து வா


1. அன்பே உன் வரவின்றி அருளே உன் துணையின்றி 

இருளில் நான் தள்ளாடுவேன் 

உயிரே உன் உறவின்றி உலகில் உன் நிழலின்றி 

துயரில் நான் கண்மூடுவேன் (2) 

உயிரூட்டும் உணவாக வா வழிகாட்டும் விளக்காக வா 

ஆன்மாவின் ஆனந்தமே ஆறாகும் பேரின்பமே


2. ஊர் தூங்கும் வேளை ஒளிதூவும் நிலவாய் 

என் வாழ்வின் ஒளியாகினாய் 

வழி பார்த்து கண்கள் நீர் கோர்த்து நிற்க 

என் பாதை வழியாகினாய் (2) 

என் தேவன் நீ இல்லையேல் என் உள்ளம் தடுமாறுமே 

உன் பாதை நான் இல்லையேல் என் வாழ்வு வீணாகுமே


திருவிருந்துப் பல்லவி மத் 26:42 

தந்தையே, நான் குடித்தால் அன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படி ஆகட்டும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு 

ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நம்புவதை உம் திருமகனின் இறப்பினால் எதிர்நோக்கியிருக்கச் செய்த நீர் நாங்கள் நாடுவதை அவரது உயிர்ப்பினால் வந்தடையச் செய்வீராக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு ஆண்டவரே, 

உம்முடைய இந்தக் குடும்பத்துக்காக எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து துன்புறுத்துவோருக்குத் தம்மைக் கையளிக்கவும் சிலுவையின் கொடுமையைத் தாங்கிக்கொள்ளவும் தயங்கவில்லை; நீர் இக்குடும்பத்தைக் கண்ணோக்கி அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

இறுதிப் பாடல் 

தயை செய்வாய் நாதா 

என் பாவங்களை நீக்கி - 2


அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வைய்யும்

அனுதபித்து என் பிழையை அகற்றுமையா 

பாவமதை நீக்கி என்னை பனிபோலாக்கும் 

தோஷமெல்லாம் தீர்த்து என்னை தூய்மையாக்கும் 


என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மழைபோல்

தீவினையில் மறவாது என் மனது என்றும் - உம் 

புனிதத்தை போக்கி நான் பாவியானேன் - நீர் 

தீமை என்று கருதுவதை துணிந்து செய்தேன்


உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர் - ஏன் 

ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவை ஊட்டும் 

என்பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்

பனி வென்மைக்கு உயர்வாக புனிதமாவேன்

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,


Saturday, 16 March 2024

தவக்கால ஐந்தாம் ஞாயிறு 17/03/2024



திருப்பலி முன்னுரை

இறை அன்பில் இணைந்து அவர் பலியில் கலந்து அவரது வாழ்வோடு உறவாட வந்திருக்கும் என் இனிய உறவுகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் அன்பின் பெயரால் அழைத்து நிற்கின்றோம். அன்னையாம் திரு அவை இன்று எம்மை தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வாரத்திற்கு அழைக்கின்றாள். 

புனித வாரத்தை அண்மித்திருக்கின்ற நாம், இயேசுவின் பாஸ்கா மறை நிகழ்வை மிகச் சிறப்பாக கொண்டாட எம்மை அக ஆயத்தம் செய்கின்றோம். பாவங்களுக்காக பரிகாரம் தேடுகின்றோம், முழுமையான பாவசங்கீர்த்தனம் செய்கின்றோம், தவ ஒறுத்தல் மேற்கொள்கின்றோம் இன்னும் திரு யாத்திரைகள் செய்து எமது பழைய நிலைகளைக் களைந்து புதிய மனிதனுக்குரிய இயல்பை அணிந்துகொள்கின்றோம். இவைகள் எம்மை புதிய வாழ்வுக்குள் அழைத்துச் செல்கின்றன. 

புதிய உடன்படிக்கை வழியாக கடவுளோடு ஒன்றித்திருக்க இன்றைய வாசகங்கள் எம்மை அழைத்து நிற்கின்றன. 'நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்' எனும் வார்த்தைகள் எம்மை தேர்ந்தெடுத்த இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு மனிதனின் தியாகமும் அர்ப்பணமும் அவனது வாழ்வின் தூய்மைக்கான வழிகளே. இதையே இன்றைய நற்செய்தி இறைவாக்கு எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றது. 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்' எனும் இயேசுவின் வார்த்தைகள் அழகானவை எம்மைச் சிந்திக்கத் தூண்டுபவை. 

எனவே, எமக்கு முன் நிற்கும் எமது தடைகளைத் தாண்டி நாம் செல்லவேண்டிய இலக்கை அடைய முயல்வோம். எமது ஆன்மாவை காயப்படுத்தும் உலகத்தின் அந்தரங்கங்களுக்குள்ளே வீழ்ந்திடாமல், இயேசுவை கரம்பற்றி துணிந்து செல்வோம். உலகிலே நடந்தேறிக்கொண்டிருக்கும் வன்முறைகள் நீங்கவும், எமது திரு அவை சந்திக்கும் சமகால துன்புறுத்தல்கள் அகற்றப்படவும், கடத்தல்கள், கொலைகள், போர் வன்முறைகள் நிறுத்தப்படவும் இப்பலியிலே உருக்கமாக மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி

காண். திபா 42:1-2 கடவுளே, எனக்கு நீதி வழங்கும்; இறைப்பற்றில்லாப் பிற இனத்தாரோடு என் வழக்குக்காக வாதிடும். தீயவரும் வஞ்சகருமான மனிதரிடமிருந்து என்னை விடுவித்தருளும். ஏனெனில் நீரே என் கடவுள், என் ஆற்றல்.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே எங்கள் இறைவா, உம் திருமகன் உலகை அன்பு செய்து சாவுக்குத் தம்மையே கையளித்தார்; உமது உதவியால் அதே அன்பில் நாங்களும் விரைந்து முன்னேறிச் செல்ல அருள்புரிவீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

புதிய உடன்படிக்கை செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34

பதிலுரைப் பாடல் திபா 51: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 10ய)

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

இரண்டாம் இறைவாக்கு

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

நற்செய்திக்கு முன் வசனம் யோவா 12: 26

'எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்,' என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி இறைவாக்கு

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33

அல்லது

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-45

  • 'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.


விசுவாசிகள் மன்றாட்டு 

குரு. 'தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். ' என்று கூறும் இயேசு பிறருக்காக வாழவும், பிறரின் தேவையில் எம்மை இணைத்துக்கொள்ளவும் அழைக்கின்றார். இவ்வுலகம் வேண்டிநிற்கும் தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம். 

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் துன்புறும் திரு அவை மீண்டும் சந்திக்கும் நெருக்கடிகள், துன்பங்கள், வீழ்ச்சிகள், வேதனைகள், உயிர் இழப்புக்கள் மத்தியில் இயேசுவின் அன்பும், இரக்கமும், மன்னிப்பும் இத்திரு அவையை ஆண்டு நடத்தவும், பாவிகள் மனந்திரும்பவும் இவ் இறையரசைக் கட்டியெழுப்ப அனைவரும் உழைக்கவும் வரம்வேண்டி, ...

2. எமது பங்கு திரு அவைக்காக மன்றாடுவோம்.

எமது விசுவாசத்திற்கு எதிராக எம்மை திசைதிருப்பும் அனைத்து போலியான கொள்கைகளில் இருந்தும் தவறான வழிநடத்துதலில் இருந்தும் நாம் காப்பாற்றப்பட்டு இயேசுவை இலக்காகக் கொண்டு, நேர்மையான உண்மையான எண்ணங்களும் சிந்தனைகளும் சரியான பாதைக்கு வழிவகுத்திட வேண்டுமென்று, ...

3. எமது பெற்றோருக்காக மன்றாடுவோம்.

தாம் பெற்றெடுத்த பிள்ளைகள் இறைவன் கொடுத்த வரம் என்பதை முழுமையாக உணரவும், தமது இயலாமையில், தமது பாவத்தில், தமது பிழையான உணர்வுகளில் புதிய தலைமுறையை உருவாக்க முடியாது என்பதை உணர்வார்களாக. தமது தாழ்ச்சியால், விட்டுக்கொடுப்பால், தெய்வ பக்தியால் தமது பிள்ளைகளின் அழகான உருவாக்கத்தில் தாமும் பங்கெடுக்கின்றனர் என்பதை அறிந்து செயற்பட வரமருளவேண்டுமென்று, ...

4. பல்வேறு நிலைகளால் வருந்துவோருக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா, இன்றைய சூழ்நிலையிலே, வறுமையால் வாடுவோர், அதிக வெப்பதினால் பாதிக்கப்படுவோர், தீராத நோயினால் கஸ்டப்படுவோர் என அனைவரும் உம்மை அதிகமாய் நெருங்கி வாழ வரம்வேண்டுவோம். இவர்களுக்காக உதவும் கரங்கள் பெருகவும், உழைக்கும் கரங்கள் ஆசிர்வதிக்கப்படவும், மேலும் இவர்கள் வாழ்வில் இறை நம்பிக்கையும், தளரா மனமும்கொண்டு வாழ வரமருள வேண்டுமென்று, ...

குரு. நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்று புதிய கட்டளையை எமக்கு பெற்றுத் தரும் இறைவா. இன்று நாம் உமது அன்பின் மக்களாக உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவீராக. எச்சந்தர்ப்பத்திலும் எம்மை விட்டுவிலகிடாமல் என்றும் கூடவே பயணிக்கவேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்தவ நம்பிக்கையின் படிப்பினையால் நீர் நிரப்பியுள்ள உம் அடியார்களுக்கும் எங்களுக்கும் செவிசாய்த்தருளும்; இப்பலியின் பயனாக இவர்களைப் புனிதப்படுத்துவீராக. எங்கள். 

திருவிருந்துப் பல்லவி :

  • இலாசரைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

காண். யோவா 11:26 உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார், என்கிறார் ஆண்டவர்.

  • விபசாரப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

யோவா 8:10-11 'அம்மா, நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?' 'ஒருவரும் இல்லை , ஆண்டவரே.' 'நானும் உம்மைத் தீர்ப்பிட மாட்டேன். இனிப் பாவம் செய்யாதீர்.'

  • வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது:

யோவா 12:24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படி யே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவர், எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: இயேசு கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்கின்ற நாங்கள் அவருடைய உறுப்பினர்களாக என்றும் விளங்குவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தின் கொடையை எதிர்பார்க்கும் உம் மக்களுக்கு ஆசி வழங்கியருளும்; உமது தூண்டுதலால் தாங்கள் விரும்புவதை உமது வள்ளன்மையால் அவர்கள் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Saturday, 9 March 2024

தவக்காலம் நான்காம் ஞாயிறு - 10-03-2024


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகள், உங்களை இயேசுவின் பெயரால் இக்கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்று நாம் கால்பதிக்கும் தவக்காலத்தின் நான்காம் வாரம், கிறிஸ்து வழியாக அதாவது அவரது பாடுகள், இரத்தம் அவரது இறப்பு வழியாக கொடுக்கப்பட்ட விடுதலை, இன்று எம்மை அருள்நிலை வாழ்வுக்கு அழைக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. சட்டங்களையும் கோட்பாடுகளையும் கடந்து மனித இதயங்கள் பேசும் மொழியே அதன் வெளிப்பாடாக அமையவேண்டும் என்பதை விரும்பும் இறைவன், தனது வாழ்வையே எடுகோளாக எண்பிப்பது இன்றைய வாசகங்கள் தரும் பாடமாகின்றது. 

தவக்காலம் நாம் நாளும் கடந்து செல்லும் நாள்கள் அல்ல, நேரங்கள் அல்ல, விழாக்களும் அல்ல. மாறாக இயேசுவின் வாழ்வுப் பாடங்கள், அவை எமக்கு தரும் நாளாந்த படிப்பினைகள். 'தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' என்றால் இந்த அன்பு, பாவத்தை வெற்றிகொண்ட அன்பு,  உலகிற்காய் தனது உயிரைக் கொடுத்த அன்பு, தாம் அழைத்தவர்களை தமக்குரியதாய் மாற்ற விளையும் அன்பு, பாவியானாலும் மீண்டும் தேடிச் சென்று அழைக்கும் அன்பு - இதுவே இயேசுவின் அன்பு. இவ்வன்பை உணர்த்துவதே இத்தவக்காலம். இன்றைய நாளிலே, இறைவன் இறைவார்த்தையூடாக பேசுவதை செவிமெடுத்துக் கேட்போம், திருவழிபாடு வழியாக எமக்கு அருளும் கொடைகளை பெற்று அனுபவிப்போம். நல்ல பயணத்தை தொடருவோம், அவரது உயிர்ப்பிலே அர்த்தம் காணுவோம். இச்சிந்தனைகளோடு தொடரும் இப்பலியிலே இணைந்துகொள்வோம். 


வருகைப் பல்லவி காண். எசா 36:10-11

எருசலேமே அகமகிழ்; அவள் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒன்று கூடுங் கள். துயருற்ற நீங்கள் மகிழ்ந்து, அக்களியுங்கள்; அதனால் ஆர்ப்பரியுங் கள்; நீங்கள் நிறைவாக ஆறுதல் பெற்று மகிழ்வடையுங்கள்.

  • 'உன்னதங்களிலே' சொல்லப்படுவதில்லை

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மனிதரான உம் வாக்கின் வழியாக மனிதக் குலத்தின் ஒப்புரவை வியத்தகு முறையில் செயல்படுத்துகின்றீர்; அதனால் ஆர்வமிக்க இறைப்பற்றாலும் உயிர்த் துடிப்புள்ள நம்பிக்கையாலும் வரவிருக்கும் பெருவிழாவுக்குக் கிறிஸ்தவ மக்கள் விரைந்திட ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு: குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 36: 14-16,19-23

ஆண்டவரின் சினமும் இரக்கமும் மக்கள் நாடுகடத்தப்படுதலிலும், அவர்கள் மீட்கப்பெறுவதிலும் வெளியாகின்றன.

பதிலுரைப் பாடல் திபா 137

பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!

இரண்டாம் இறைவாக்கு: திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:4-10

குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

நற்செய்தி இறைவாக்கு: யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 14-21

தம் மகன் வழியாக உலகை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

  • 'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்


நம்பிக்கையாளர் மன்றாட்டு 

குரு: 'பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.' இயேசுவின் சிலுவையில் உணரப்பட்ட வாழ்வுக்கான அனைத்து புண்ணியங்களும் எமது வாழ்வில் நிறைவேறுகின்றன.  இயேசுவில் நாம் முழு நம்பிக்கைகொண்டு அவரது சிலுவைவழி நடந்துசென்று எமது உள்ளார்ந்த உணர்வுகளை எமது தேவைகளாக ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது பங்கில் பணியாற்றும் பங்குத்தந்தை, மற்றும் அனைத்து குருக்கள் துறவிகள் தங்களது சாட்சிய வாழ்வாலும், தியாகத்தாலும் உமக்கு என்றும் சான்றுபகர அருள்புரியவேண்டுமென்று ...

2. எமது பங்கு சமுகத்தில், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் அனைத்து நல் உள்ளங்களும் இறைவனால் ஆசீர்வதிக்கப்படவும், தொடர்ந்தும் தமது பணியில் முழு நிறைவுகாண அருள்புரிய வேண்டுமென்று ...

3. எமது பங்கின் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரும் நல் ஒழுக்க சீலர்களாக திகழவேண்டுமென்றும், அவர்களுக்காக கொடுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களையும் முழுமையாக பின்பற்றும் ஆற்றலை அளித்திடவேண்டுமென்று ...

4. பல்வேறு தேவைகளின் நிமித்தம் புலம்பெயர் நாடுகளில் வாழும் அனைத்து உறவுகளும் இறைவனின் அருளால் நிரம்பப்பெற்று, தங்களின் அனைத்து தேவைகளின்போதும், தீர்மானங்களின் போதும், இறை ஆற்றலையும், விவேகத்தையும் கண்டுபாவிக்கவும் அருள்புரிய வேண்டுமென்று ...

5. எம்மைச் சுற்றி வாழும் பிற சமய உறவுகள் அனைவரிலும் இறைவன் செயலாற்றுவதை நாம் முழுமையாக நம்பவும், என்றும் அவர்களை எமது உடன் சக உறவுகளாக ஏற்று, மதித்து வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று ...

குரு: எல்லோரின் உள்ளங்களை அறியும் இறைவா, எமது நீண்டதூர பயணத்திலே நாம் கடந்துசெல்லும் சவல்களை தாங்கிச் செல்ல வரம்தாரும், போராட்டங்களில் வெற்றிகாண அருள்தாரும், எதிரிகளை இனங்கண்டு அவர்களுக்காக செபிக்கும் மனம் தாரும். நாம் இவ்வுலகில் வெளிக்கொணரும் அன்பும், பாசமும், இரக்கமும், மன்னிப்பும் நீர் எமக்கு தரும் கொடைகளும், வரங்களுமே. எமது தேவைகள் இவற்றை தாங்கிச் செல்வதாக. எங்கள ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பணிவுடன் உம்மை வேண்டி, நிலையான உதவி அளிக்கும் காணிக்கைகளை பேரின்பத்துடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நாங்கள் இவற்றை உண்மையிலேயே போற்றவும் உலகின் மீட்புக்காக உமக்கு உகந்தவாறு ஒப்புக்கொடுக்கவும் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி :

  • பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது: 

காண். யோவா 9:11,38: ஆண்டவர் என் கண்களில் பூசினார்; நான் சென்றேன், கழுவினேன், பார்த்தேன்; கடவுளை நம்பினேன். 

  • ஊதாரி மைந்தனைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

லூக் 15:32: மகனே, நீ மகிழ்ந்து இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்.

  • வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது  

காண். திபா 121:3-4: எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும். ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இறைவா, இவ்வுலகுக்கு வரும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்ற நீர் எங்கள் இதயங்களை உமது அருளின் சுடரால் ஒளிர்வித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது மாண்புக்குத் தகுதியானதையும் விருப்பமானதையும் என்றும் நினைவில் கொண்டு உம்மை நேர்மையாக அன்பு செய்ய வலிமை பெறுவோமாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு:

ஆண்டவரே, தாழ்மையுடன் உம்மை நோக்கி மன்றாடுவோரைக் காத்து வலுவற்றோரைத் தாங்கிக்கொள்ளும்; சாவின் நிழலில் நடப்போரை உமது நிலையான ஒளியால் உயிர் பெறச் செய்தருளும்: தீமை அனைத்திலிருந்தும் உமது இரக்கத்தால் அவர்களை விடுவித்து நிறைவான நன்மைக்கு அவர்கள் வந்து சேர அருள்புரிவீராக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Saturday, 2 March 2024

தவக்காலம் -மூன்றாம் ஞாயிறு - 03-03-2024



திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு வாரத்துற்குள்ளே நுழைகின்றோம். எமது தவ முயற்சிகள், தியாகங்கள் மேலும் எமது செபங்கள் வழியாக நாம் இறைவனோடு இன்னும் மிக நெருக்கமாக பயணிக்க இத்தவக்காலம் எமக்கு உதவுகின்றது.

இன்றைய இறைவார்த்தைகள், மனித வாழ்வுக்குத் தேவையான ஒழுக்கம் நிறைந்த கடமைகளையும், பொறுப்புக்களையும் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன: 'என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்' என்பதை இறைவனின் உள்ளார்ந்த உணார்வுகளாக முதலாம் இறைவார்த்தை எடுத்தியம்புகின்றது. 'சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம்' என்பதை இத்தவக்காலத்தில் எமது அழைப்பாக இருக்க வேண்டும் என்று புனித பவுல் எடுத்தியம்புகின்றார். யோவான் நற்செய்தியிலே உள்ளம் எனும் கோவிலில் குடியிருப்பது இறைவனே, அதை இறைவனுக்குரியதாய் உருவாக்கவே நாம் உழைக்கவேண்டும் என்று தெளிவுபடுத்துகின்றார். அன்பும், நிறை மகிழ்ச்சியும், நம்பிக்கையும், இரக்கமும், மன்னிப்பும் இவையனைத்தும் உள்ளத்தில் இருந்தே ஊற்றெடுக்கவேண்டும். சட்டங்களை மதித்து, கடமைகளை நிறைவேற்றி பொறுப்புக்களை செவ்வனே செயற்படுத்த எம்மை உருவாக்கிக்கொள்ளவேண்டும். இதுவே இன்றைய அழைப்பாகும். 

நாமும் நல்லவற்றை சிந்திப்போம், உண்மையைப் பேசுவோம், உறவுகளை உயிராய் நேசிப்போம், மன்னிப்போம்,  இரக்கத்தாலும், பண்பினாலும், இறை சித்தம் நிறைவேற்றுவோம், அன்பினால் அனைத்தையும் வெல்லுவோம். இச்சிந்தனைகளோடு தொடரும் பலியில் இணைந்துகொள்வோம்.  


வருகைப் பல்லவி         காண். திபா 24:15-16 

என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன, ஏனெனில் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும். ஏனெனில் நான் ஆதரவற்றவன்; ஏழை.

அல்லது       காண். எசே 36:23-26

நான் உங்களில் என் தூய்மையை நிலை நாட்டும்போது பல நாடுகளிலிருந்து உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். உங்கள் எல்லாக் குற்றங்களிலிருந்தும் நீங்கள் தூய்மையாவீர்கள். புதிய ஆவியை உங்களுக்குக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, இரக்கப் பெருக்கத்துக்கும் முழுமையான நன்மைக்கும் காரணரே, பாவிகளின் உண்ணா நோன்புகள், இறைவேண்டல்கள், இரக்கச் செயல்கள் ஆகியவற்றின் வழியாக எங்களுக்குப் பாவ மன்னிப்பை வழங்குகின்றீர்; எங்களது தாழ்ச்சிமிக்க பாவ அறிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கி மனச்சான்றினால் நொறுங்குண்ட எங்கள் உள்ளங்களை உமது இரக்கத்தால் என்றும் உயர்த்துவீராக. உம்மோடு.


1ம் இறைவாக்கு

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17

திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப்பெற்றது.

பதிலுரைப் பாடல்             திபா 19

பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.

2ம் இறைவாக்கு  

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 22-25

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே பறைசாற்றுகிறோம். அவரது சிலுவை யூதருக்குத் தடைக்கல்; அழைக்கப்பட்டவருக்கோ கடவுளின் ஞானம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி      யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

நற்செய்தி இறைவாக்கு

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25: இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்.

  • முதலாம் ஆண்டுக்கான திருப்பலி இறைவார்த்தையைப் பயன்படுத்தலாம் 


விசுவாகிகள் மன்றாட்டு

குரு: எமது வாழ்வு ஒரு புதிய பாதையிலும், புனித பாதையிலும் பயணிக்கின்றது. இப்பயணத்திலே இயேசுவின் உடனிருப்பு எம்மோடு இருக்கின்றது. எனவே, எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது திரு அவையின் வாழ்வுக்காகவும் அதன் ஆன்மிக வளர்ச்சிக்காகவும் உழைக்கும் அனைத்து பணியாளர்களும் இயேசுவின் தூய மனநிலை கொண்டுவாழவும், அவரையே முழுமையாக பின்பற்றி உலகெங்கும் அறிக்கையிடுகின்ற கருவிகளாக திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று ...  

2. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்வாலும், தியாகத்தாலும், உழைப்பாலும் தங்கள் உணர்வுகளாலும் சான்றுபகரும் அனைவரும் இத்தவக்காலம் கற்றுத்தரும் அனைத்து போதனைகளுக்கும் கிறிஸ்துவின் சிலுவை தரும் அனைத்தும் படிப்பினைகளுக்கும் பிரமாணிக்கமாய் இருந்து செயற்பட அருள்புரிய வேண்டுமென்று ...  

3. இன்றைய சமகால அரசியல் பொருளாதார வாழ்வோடு பயணிக்கும் எமக்கு, கொடுக்கப்படும் கேள்விகளும் பதில்களும் அர்த்தமற்ற நிலைகளையும், பொருத்தமற்ற சூழலையும், எதிர்மறை விமர்சனங்களையும் எம்மேல் திணிக்கின்ற விவாதங்களையுமே எமக்கு தரும்வேளை, நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் தேடிச் செல்லவும், வாழ்வில் இயேசுவை விட்டு பிரிந்திடா வரமருள வேண்டுமென்று ... 

4. எமது சமுகத்திலே காணப்படும் பிரிந்துபோன குடும்பங்கள், நொந்துபோன மற்றும் உடைந்துபோன உறவுகள், விரக்தியின் விளிம்பில் வெளிவரமுடியாமல் முடங்கிப் போனவர்கள் என அனைவரையும் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். மனித உள்ளங்களை அறியும் இறைவன்,  நம்பிக்கையை வெளிச்சத்தை தந்து, வாழ்வின் பாதைகளை தெளிவாக அமைத்து என்றும் முன்னோக்கிச் செல்ல அருள்புரியவேண்டுமென்று ... 

குரு: எம்மை எல்லாம் அன்பு செய்யும் இறைவா! உமது துணை இன்றி நாம் வாழ முடியாது, உமது வழிநடத்துதல் இன்றி நாம் இயங்கமுடியாது. உமது பாதம் நம்பிக்கையோடு நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து, உமது அருளைப் பொழிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிகளால் மன நிறைவு அடைந்து எங்களுக்கு அருள்புரிவீராக் எங்கள் குற்றங்களிலிருந்து எங்களை மன்னிக்க வேண்டுகின்ற நாங்க பிறருடைய குற்றங்களை மன்னிக்க முயல்வோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி    காண். யோவா 4:13-14 

  • சமாரியப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவர் நிலைவாழ்வு அடைய அவருக்குள் பொங்கும் நீரூற்று எழும், என்கிறார் ஆண்டவர்.

  • வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது:          திபா 83:4-5

படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக் குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகத்தில் உள்ள மறைபொருள்களின் அச்சாரத்தையும் இவ்வுலகில் ஏற்கெனவே விண்ணக உணவால் வளமையையும் பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் மறைபொருளாக எங்களில் திகழ்வது செயலளவிலும் நிறைவு பெறுவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் இதயங்களை ஆண்டருள உம்மை வேண்டுகின்றோம்: உம் ஊழியர்களுக்குக் கனிவுடன் இந்த அருளை வழங்குவதால் உம் அன்பிலும் பிறரன்பிலும் நிலைத்திருந்து அவர்கள் உம் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றுவார்களாக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...