ஆண்டவருடைய திருமுழுக்கு
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் இணையும் என் இறை உறவுகளே! உங்கள் அனைவரையும் இக் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்றைய நாளிலே அன்னையாம் திரு அவை "ஆண்டவருடைய திருமுழுக்கு" திரு விழாவைக் கொண்டாடுகின்றாள். இன்றைய நாளோடு கிறிஸ்து பிறப்புக் காலம் நிறைவுற்று, ஆண்டின் பொதுக்காலம் ஆரம்பமாகின்றது.
படைப்பின் தொடக்கத்திலே மூவொரு இறைவனின் பிரசன்னம் இருந்ததுபோல், ஆண்டவரின் திருமுழுக்கின் போதும் இதே மூவொரு இறைவனின் பிரசன்னம் இருப்பதைக் காணலாம். இவ் உன்னத பிரசன்னமே, இயேசுவை இறுதிவரைக்கும் வழிநடத்தியது. இயேசுவின் பணிவாழ்வின் ஆரம்பத்திற்கு ஆணிவேராகவும், அத்திவாரமாகவும் இருந்தது இந்த திருமுழுக்கு. இந்த கனப்பொழுது வரைக்கும் தான் இயேசுவின் வருகைக்கான ஆயத்தமாக திருமுழுக்கு யோவானின் பணி இருந்தது. இதிலிருந்து அவர் முன்னறிவித்த இயேசுவின் பணிவாழ்வு ஆரம்பமாகின்றது.
இன்றைய நாளிலே, நாம் பெற்றுக் கொண்ட எமது திருமுழுக்கை நினைத்துக் கொள்வோம்; அத் திருவருட்சாதனத்தின் வழியாக நாம் பெற்றுக் கொண்ட கொடைகளுக்காக நன்றி சொல்லுவோம். எமது கிறிஸ்தவாழ்வு இறை அன்பிலும், பராமரிப்பிலும், நம்பிக்கையிலும் கட்டப்பட்ட வாழ்வாக மிளிர வரம்வேண்டுவோம். நாம் இறைவனின் பிள்ளைகள் எனும் உரிமையோடு அவரை எம் இதயத்தில் தாங்கிக்கொள்வோம். பாவங்களை தகர்த்தெறிந்து புனித வாழ்வு வாழ இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - காண். மத் 3:16-17
ஆண்டவர் திருமுழுக்குப் பெற்றவுடனே வானம் திறக்கப்பட்டது; புறா வடிவில் ஆவியார் அவர் மீது தங்கினார்; என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று தந்தையின் குரல் ஒலித்தது.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்துவின் மீது தூய ஆவி இறங்கி வர, அவரை உம் அன்பார்ந்த மைந்தர் எனச் சிறந்த முறையில் அறிக்கையிட்டீரே; தண்ணீராலும் தூய ஆவியாலும் புதுப் பிறப்பு அடைந்துள்ள மக்களை உமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட நீர் அவர்கள் உமக்கு ஏற்புடையவர்களாக என்றும் நிலைத்திருக்க அருள்வீராக. உம்மோடு.
அல்லது
இறைவா, உம் ஒரே திருமகன் எங்களது மனித உடலின் தன்மையில் தோன்றினார்; இவ்வாறு தோற்றத்தில் எங்களைப் போன்று இருக்கும் அவரை நாங்கள் கண்டுணர்ந்து அவர் வழியாக அகத்தில் மாற்றம் பெறத் தகுதி அடைந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு
முதல் இறைவாக்கு
இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4,6-7
ஆண்டவர் கூறுவது:
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 29: 1a, 2. 3ac-4. 9b-10 (பல்லவி: 11b)
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!
1a இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.
2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்;
தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். - பல்லவி
3ac ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது;
ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.
4 ஆண்டவர் குரல் வலிமைமிக்கது;
ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. - பல்லவி
9b ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது;
அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்;
ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். - பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கடவுள் இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38
கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.
இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மாற் 9: 7
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17
அக்காலத்தில்
இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார். இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.
இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
இறைமக்கள் மன்றாட்டு
1. பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.
அன்பின் இறைவா! இவ்வுலகின் மக்களை உமது அரியணை காணச் செய்ய, திருவருட்சாதனங்களால் அலங்கரிக்கும் அனைத்து திரு நிலைப் பணியாளர்களும், தங்கள் பணியை நிறைவாகச் செய்ய அருள்புரிய வேண்டுமென்று, ...
2. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.
அன்பின் இறைவா! திருமுழுக்கு எனும் அருட்சாதனத்தால் நாம் இறைவனை முழுமையாக அனுபவிக்கவும் அவரின் அன்பை நிறைவாக சுவைத்திடவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
3. ஆண்டவரே, உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
அன்பின் இறைவா! திருமுழுக்கின் வழியாக நீர் தந்த தூய ஆவிக்காக நன்றி சொல்கின்றோம். இவ்வுலகத்தை தமது அதிகாரத்தால், வல்லமையால் ஆளும் தலைவர்கள், இறை ஏவுதலின் வழியாக தமது தீர்மானங்கள புடமிடவும், மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து செயலாற்றவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
4. இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.
அன்பின் இறைவா! பல்வேறு காரணங்களால் நாளும் இறந்துகொண்டிருக்கும் உம் மக்களை கண்ணோக்கும். எமது பாவங்களை அல்ல, உமது இரக்கத்தினால் எம்மை தூய்மைப்படுத்தி நீர் தரும் மீட்பை அனுபவிக்கவும், இவ்வுலகின் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவும் வரமருள வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம் அன்புத் திருமகனுடைய வெளிப்பாட்டைக் கொண்டாடும் நாங்கள் கொண்டுவந்துள்ள இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அவர் மனமிரங்கி உலகின் பாவங்களைக் கழுவத் திருவுளம் கொண்டதால் உம் நம்பிக்கையாளரின் காணிக்கை அவரது பலியாக மாறுவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
தொடக்கவுரை: ஆண்டவருடைய திருமுழுக்கு.
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
வியத்தகு மறைநிகழ்வுகளால் யோர்தான் ஆற்றில்
புதிய முழுக்கினை நீர் குறித்துக் காட்டினீர்;
அதனால் விண்ணிலிருந்து வந்த குரல் வழியாக
உம்முடைய வார்த்தை மனிதரிடையே குடி கொண்டு இருப்பதை நாங்கள் நம்பச் செய்தீர்;
மேலும் தூய ஆவியார் புறா வடிவில் இறங்கியதன் வழியாக
உம் ஊழியர் கிறிஸ்துவை மகிழ்ச்சியின் எண்ணெயால் பூசி
அவரை ஏழைகளுக்கு நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பியதை அறியச் செய்தீர்.
ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து
நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:
தூயவர்.
திருவிருந்துப் பல்லவி - யோவா 1:32, 34
இதோ! நான் கண்டேன்; சான்று பகர்ந்தேன்; ஏனெனில் இவரே இறைமகன் என்று யோவான் இவரைப் பற்றிக் கூறினார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் ஒரே திருமகனுக்கு நம்பிக்கையோடு செவிமடுக்கும் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக உண்மையில் அழைக்கப்பட்டு அதற்கு ஏற்ப வாழ்வோமாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment