திருவருகைக் கால முதல் ஞாயிறு - 30/11/2025

  திருவருகைக் கால முதல் ஞாயிறு



திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! 

இன்று நாம் திருவருகைக் காலத்தை ஆரம்பிக்கின்றோம். திரு அவையின் திரு வழிபாட்டுக் காலத்தின் தொடக்கமாகவும் இது அமைகின்றது. இறைமகன் கிறிஸ்து ஒரே ஒருமுறை இவ்வுலகிலே பிறந்தார். அந்த மானிட பிறப்பை நினைவுகூரவும், அவர் வருகைக்காக எம்மை தகுதியான முறையில் ஆயத்தம் செய்யவும் இந்த நான்கு வாரங்களும் எமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் பயணிக்கும் எமக்கு, விழிப்பாய் இருந்து செபிக்கவும், அவர் தரும் மீட்பை சுவைக்கவும் ஓர் உள்ளார்ந்த திருப்பயணத்திற்கான அழைப்பாக இது அமைகின்றது. 

ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்தேறும் காலங்கள் போன்று இத்திருவருகைக் காலம் அமைந்துவிடக் கூடாது. இறைமகனை அதாவது இவ்வுலகின் மீட்பரை வரவேற்க நாமும் தயார் நிலையில் இருக்கவேண்டும். நாம் மட்டும் அல்ல, இவ்வுலகத்தையும்  இயேசுவின் வருகைகாக ஆயத்தம் செய்ய எம்மால் முடியும். 

இவ்வுலகிலே நம்பிக்கை இழந்து, வாழ்விழந்து, பசியிலும், வறுமையிலும், யுத்தத்தின் கொடூர வலைக்குள்ளும் சிக்குண்டு வாழும் பலருக்கு எனது செபம் ஓர் ஆறுதலாக அமையலாம்! உறவுகள் பிழவுபட்டு, உள்ளங்கள் நொந்துண்டு, கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாய் வாழும் பலரின் வாழ்வுக்கு, எனது ஒவ்வொரு முயற்சியும் திருவருகைக் காலமே! எமக்குள் சிக்கிக் கிடக்கும் பிழையான எண்ணங்கள், பிழையான உறவுகள், பிழையான தீர்மானங்கள் அனைத்திற்கு இக்காலம் ஒரு தீர்வாக அமையலாம்! பணத்தினால் அல்ல, மாறாக குடும்ப பிணைப்பினாலும், எம்மால் உருவாக்ககூடிய மகிழ்ச்சியினாலும் தான் கிறிஸ்துவை மீண்டும் பிறக்கச் செய்யமுடியும் எனும் நம்பிக்கையை தரும் காலமாகவும் இதை மாற்றுவோம். 

எனவே, நாம் கால்பதிக்கும் இத் திருவருகைக் காலத்திற்காய் நன்றி சொல்லி, அதன் அர்த்தத்தையும் நோக்கத்தையும் மெய்ப்பிப்போம். இக்காலம் இன்னும் அதிகமான வரங்களையும் அருளையும் எமக்கு தரவேண்டி தொடரும் இக்கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம். 


வருகைப் பல்லவி - காண். திபா 24:1-3 

என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார்.


"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.


திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு மன உறுதியை அளித்தருளும்; அதனால் வரவிருக்கும் உம் கிறிஸ்துவை அவர்கள் நீதிச் செயல்களுடன் எதிர்கொள்ளவும் அவரது வலப் பக்கத்தில் சேர்க்கப்பட்டு விண்ணக அரசைப் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


முதல் இறைவாக்கு

இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, ‘புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கு அரிவாள்களாகவும் அடித்துக்கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.


1 ‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.

2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி


4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்;

இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.

5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி


6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்;

“உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!

7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக!

உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" - பல்லவி


8 “உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும்

என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.

9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால்,

உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14

சகோதரர் சகோதரிகளே,

இறுதிக்காலம் இதுவே என அறிந்துகொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.

இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்துகொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காம வெறி, சண்டைச் சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாயிருங்கள்.

† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 37-44

அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிடமகன் வருகையின் போதும் இருக்கும். வெள்ளப்பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப் படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்."

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

1. வல்லமையின் இறைவா! எமது திரு அவையை ஆசீர்வதியும். நம்பிக்கையிலும், அன்பிலும், தியாகத்திலும் கட்டப்பட்ட இத்திரு அவை, தனது புனிதத்திலும், திருவருட்சாதன அருளிலும் பயணிக்கவும், இதன் உயர்ச்சிக்காக உழைக்கும் அனைவரிலும் உமது அருளும் வல்லமையும் நிறைவாக கிடைக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

அல்லது

வல்லமையின் இறைவா! எமது மறைமாவட்ட ஆயர், பங்குத்தந்தை, குருக்கள் மற்றும் துறவிகள், அனைவரும் உமது தூய ஆவியின் துணையால், நம்பிக்கையின் திருப்பயணிகளாகிய எம்மை வழிநடத்த தேவையான அருளை பொழிந்திட வேண்டுமென்று, ...

2. வல்லமையின் இறைவா! இத் திருவருகைக் காலத்தில், ஒன்றிணைந்த திரு அவையாக, சமத்துவம் நிறைந்த திரு அவையாக, செபிக்கும் திரு அவையாக, மேலும் உறவின் திரு அவையாக நாம் வாழவும் எமது வாழ்வின் வழி, ஒரு புதிய பாதை அமைத்து கிறிஸ்துவின் வருகையில் மகிழ்ந்திட அருள்புரிந்தருள வேண்டும்மென்று, ...

3. அன்பின் இறைவா! எம் கண்முன்னே காணப்படும் ஏழைகள், வறுமையில் வாடுவோர், போராட்டங்களை தங்கள் இதயத்தில் சுமந்து தினமும் கண்ணீர் விடுவோர், கல்வி கற்கமுடியாமல் தவிப்போர், வேலைத்தளங்களில் நசுக்கப்பட்டவர்கள், போதை கலாசாரத்தில் மீளமுடியாதவரகள், நோய்களால் துன்பப்படுபவரகள் என அனைவருக்கும் கிறிஸ்துவின் பிறப்பு நம்பிக்கையை கொடுக்க மன்றாடுவோம். நாமும் எமது நாளாந்த வாழ்வில் இவர்களுக்காக செபிக்கவும், வாழ்வின் தீர்மானங்களை மாற்றியமைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

4. வல்லமையின் இறைவா! இவ்வுலகிலே தீமைகளை ஏற்படுத்துவோர், பகைமைக்கான பாதையை உருவாக்குவோர், மனிதத்தை நசுக்கி, மானத்தை விற்று வாழ்வோர், யுத்தங்களால் உயிர்களை கொன்று தீர்ப்போர் என அனைவரும் தங்களை மாற்றவேண்டி மன்றாடுவோம். இதனால், பாவிகளின் மாற்றங்கள் இயேசுவின் வருகையில் பெருமதியாய் அமைய வரமருள வேண்டுமென்று, ...

5. வல்லமையின் இறைவா! காலநிலை மாற்றங்களால் அவதியுறும் எமது மக்கள் தமது நடைமுறை வாழ்வுக்குத் திரும்புவார்களாக. பிள்ளைகளின் கல்வி மக்களின் பொருளாதார வாழ்வு அனைத்தும் சீர்பெறவும், உதவும் கரங்கள் உயரவும் அருள்புரிய வேண்டும்மென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


திருவிருந்துப் பல்லவி - திபா 84:13 

ஆண்டவர் இரக்கம் அருள்வார்; நமது நிலமும் தனது பலனைத் தரும்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவை மீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


சிறப்பு ஆசி உரைகள்

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவன்,

தம் ஒரே மகனின் வருகையில் நம்பிக்கைகொண்டு

அவரது மறு வருகையை எதிர்பார்த்திருக்கும் உங்களை

அவரது வருகையின் ஒளியால் புனிதப்படுத்தித்

தமது ஆசியால் வளப்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

இம்மை வாழ்வில் உங்களுக்கு நம்பிக்கையில் உறுதியையும்

எதிர்நோக்கில் மகிழ்ச்சியையும் அன்பில் செயல்திறனையும் அவர் அளிப்பாராக.

பதில்: ஆமென்.

என் மீட்பர் மனிதராகி நம்மிடம் வந்ததால் அகமகிழும் நீங்கள்

அவர் மீண்டும் தமது மாட்சியில் வரும்போது

நிலைவாழ்வின் கொடைகளால் வளம் பெறுவீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


அருட் தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments