இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு - 02/11/2025

 இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு



10ம் திகதி ஆவணி மாதம் திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ற் அவர்கள் Incruentum altaris Sacrificium எனும் திருத்தூதுக் கொள்கை விளக்கத்தில் ஒவ்வோர் அருள்பணியாளரும் மூன்று திருப்பலிகளை இந்நாளில் நிறைவேற்றலாம்

திருப்பலி முன்னுரை 

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே! இன்று திரு அவைத் தாயானவள் இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களையும் நினைந்து அவர்களுக்காக பலி ஒப்புக்கொடுக்க இன்று எம்மை அழைத்து நிற்கின்றாள். இறந்தவர்களை நினைத்து அவர்களையும் எமது வழிபாட்டு வாழ்வோடு இணைத்துக் கொள்வது என்பது திரு அவையின் பாரம்பரியங்களில் ஒன்றாகின்றது. மரணம் என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல அது வாழ்வோருக்கான அனுபவமும் கூட. இறைவனோடு சங்கமிக்க அடையும் இறுதி பாதையும்கூட. நாம் வாழ்வது சிறிய காலம் என்றாலும் வாழ்வின் அர்த்தம் தெரிந்து வாழ்வதும் அதன் நோக்கம் நிறைவுற வாழ்வதும் அதன் தேவையாகின்றது. கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்து, மரணத்தை சந்தித்து எமது மீட்புக்காக அவர் உயிர்த்தெழுந்தார். இது அவர் எம்மீது கொண்டிருந்த அன்பின் பிரதிபலிப்பாகின்றது.  அவரின் உயிர்த்தெழுதல் எமக்கு நம்பிக்கையையும் தருகின்றது.

எம்மைக் கடந்து சென்ற ஆயிரம் ஆயிரம் உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம், இருப்பினும் அவர்களின் நினைவுகள் எமக்குள் ஆழமான உணர்வுகளை விட்டுச் செல்கின்றது. மேலும் அசைக்கமுடியாத நம்பிக்கையின் அடையாளமாகவும் அமைகின்றது. விதை மண்ணில் விழுந்தால்தான் அது வளர்ந்து மரமாக முடியும், அது பலன் தர முடியும். இது இறைவார்த்தை இன்று எமக்கு காட்டிநிற்கும் உண்மையே. எம் அன்புக்குரியவர்கள் எம்மை விட்டுச் சென்றாலும், அவர்கள் இன்று விதைக்கப்பட்டுள்ள விதைகளே. நாம் யாராக இருக்கவேண்டும் என்பதை எமக்கு இறை நம்பிக்கை முன் காட்டிச்சென்றவர்கள். 

எனவே, இறந்த எம் உறவுகளுக்காக உருக்கமாக மன்றாடுவோம். வாழ்வு எனும் கொடையை கொடுத்த இறைவன் இவர்களுக்கு இறை ஒளியில் உரிமை கொண்டாட வரம் கேட்போம். நாமும் ஒரு நாள் அவ் இறை மாட்சியைக் காணும் நாளுக்காக எம்மையும் தயார்செய்வோம். எந்த சூழ்நிலையிலும் கிறிஸ்துவை விட்டுவிடாத உறுதியான மனநிலை கொண்டு வாழவும், இறுதிவரை அவரே எம் மூச்சு அவரே எம் வாழ்வு என்று அவரைப் பற்றிக்கொண்டு வாழும் வரத்தைக் கேட்டு இப்பலியில் இணைந்துகொள்வோம். 

முதல் திருப்பலி 

வருகைப் பல்லவி - காண்.1 தெச 4:14; 1 கொரி 15:22 :8-10 

இயேசு இறந்து உயிர்த்தெழுந்தது போல, இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்கு உள்ளானது போல, கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகன் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் எனும் எங்கள் நம்பிக்கை எழுச்சியுறுவது போல உம் அடியார்களும் உயிர்த்தெழுவார்கள் எனக் காத்திருக்கும் எங்களது எதிர்நோக்கும் உறுதி பெறுவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்; அதனால் உம் திருமகனுடைய பரிவிரக்கத்தின் மாபெரும் அருளடையாளத்தில் ஒன்றுபடும் இறந்த உம் அடியார்கள் உம் திருமகனோடு மாட்சிக்கு உயர்த்தப்பெறுவார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி - காண். யோவா 11:25, 26 . 

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்கிறார் ஆண்டவர்; சனிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இறந்த உம் அடியார்கள் நாங்கள் கொண்டாடும் பாஸ்கா மறைநிகழ்வால், ஒளியும் அமைதியும் நிறைந்த விண்ணக வீட்டுக்கு வந்து சேர்வார்களாக, எங்கள்.


இரண்டாம் திருப்பலி

வருகைப் பல்லவி - காண். 4 எஸ் 2:34-35 

நிலையான இளைப்பாறுதலை அவர்களுக்கு அளித்தருளும், ஆண்டவரே, முடிவில்லாத ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையாளரின் மாட்சியும், நேர்மையாளரின் வாழ்வுமானவரே, உம் திருமகனின் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் நாங்கள் மீட்கப்பெற்றுள்ளோம்; எமது உயிர்ப்பின் மறைபொருளை அறிந்து கொண்ட இறந்த உம் அடியார்கள் உமது இரக்கத்தால் நிலையான பேற்றின் மகிழ்ச்சியைச் சுவைக்கத் தகுதி பெறுவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, இறந்த உம் அடியார்களை இப்பலியின் வழியாக, கிறிஸ்துவின் இரத்தத்தால் அவர்களின் பாவங்களிலிருந்து கழுவிப் போக்கிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் திருமுழுக்குத் தண்ணீரால் கழுவப்பட்ட அவர்களை எ ங்க ள், நீர் பரிவிரக்கத்துடன் மன்னித்து இடையறாது தூய்மைப்படுத்துவீராக.

திருவிருந்துப் பல்லவி

நிலையான ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக; ஆண்டவரே, என்றும் உம் புனிதரோடு ஒளிர்வதாக: ஏனெனில் நீர் இரக்கம் உள்ளவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்காகப் பலியாகி மாட்சியுடன் உயிர்த்தெழுந்த உம் ஒரே திருமகனின் திரு உணவை உட்கொண்ட நாங்கள், இறந்த உம் அடியார்களுக்காக உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா மறைநிகழ்ச்சிகளால் அவர்கள் தூய்மை பெற்று, வரவிருக்கும் உயிர்ப்பின் கொடையால் மாட்சியுறுவார்களாக. எங்கள்.


மூன்றாம் திருப்பலி

வருகைப் பல்லவி - -காண். உரோ 8:11 

இறந்தோரிடமிருந்து இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுள், நம்முள் குடிகொண்டிருக்கும் ஆவியார் வழியாக, சாவுக்கு உரிய நம் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் ஒரே திருமகன் சாவை வென்று விண்ணுலகுக்குக் கடந்து செல்லச் செய்தீரே; அதனால் இறந்த உம் அடியார்கள் இம்மை வாழ்வுக்கு உரிய இறக்கும் தன்மைமீது வெற்றி கொண்டு தம்மைப் படைத்தவர் எனவும் மீட்பவர் எனவும் உம்மை முடிவின்றிக் கண்டுகளித்திட அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கிறிஸ்துவில் துயில்கொண்ட உம் அடியார்கள் அனைவருக்காகவும் 'நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருளைக் கனிவுடன் ஏற்றருளும்; அதனால் ஒப்பற்ற இப்பலியின் வழியாக அவர்கள் சாவின் தளைகளிலிருந்து விடுபட்டு நிலைவாழ்வு பெறத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி - காண். பிலி 3:20-21 

சாவுக்குரிய நம் உடலை மாட்சிக்கு உரிய தம் தாழ்வுக்கு உரிய தமது உடலின் சாயலாக உருமாற்றும் மீட்பரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவை நாம் எதிர்நோக்குவோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியை ஏற்றுக்கொண்டு, இறந்த உம் அடியார்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிவீராக; நீர் திருமுழுக்கின் அருளை வழங்கியுள்ள அவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியின் முழுநிறைவையும் அளிப்பீராக. எங்கள்.


முதல் இறைவார்த்தை 

பழைய ஏற்பாட்டிலிருந்து

1. மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 43-46

உயிர்த்தெழுதலை மனத்தில் கொண்டு, நன்முறையில் மேன்மையாக நடந்துகொண்டார்.

2. யோபு நூலிலிருந்து வாசகம் 19: 1,23-27a

என் மீட்பர் வாழ்கின்றார் என்று நான் அறிவேன்.

3. சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 1-9

எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.

4. சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 4: 7-15

குற்றமற்ற வாழ்க்கையே உண்மையான பழுத்த முதுமை.

5. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6a, 7-9

என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்.

6. புலம்பல் நூலிலிருந்து வாசகம் 3: 17-26

ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

7. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3

இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்.


பதிலுரைப் பாடல்கள்

1. திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2. திபா 25: 6-7bc, 17-18, 20-21 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.

அல்லது: (3a): ஆண்டவரே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை.

3. திபா 27: 1. 4. 7,8b,9a. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

அல்லது: (13): வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.

4. திபா 42: 1. 2. 4ab; 43: 3. 4. 5 (பல்லவி: 42: 2a)

பல்லவி: என் நெஞ்சம் உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டுள்ளது.

5. திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1b)

பல்லவி: என் இறைவா! என் உயிர் உம் மீது தாகம் கொண்டுள்ளது.

6. திபா 103: 8,10. 13-14. 15-16. 17-18 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

அல்லது: (திபா 37: 39a): நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடம் இருந்தே வருகின்றது.

7. திபா 116: 5-6. 10-11. 15-16 (பல்லவி: 9)

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

அல்லது: அல்லேலூயா.

8. திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: "ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பில் நான் அகமகிழ்ந்தேன்.

அல்லது: (1 காண்க): அகமகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்.

9. திபா 130: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1)

பல்லவி: ஆழ்ந்த துயரத்தில் ஆண்டவரே, உம்மை நோக்கி நான் வேண்டுகிறேன்.

அல்லது: (5a): ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்.

10. திபா 143: 1-2. 5-6. 7ab,8ab. 10 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்.


இரண்டாம் இறைவார்த்தை

புதிய ஏற்பாட்டிலிருந்து

1. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-11

நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம்.

2. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 17-21

பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.

3. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-9

புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழ்வோமாக.

4. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-23

நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கியுள்ளோம்.

5. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31-35, 37-39

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது?

6. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-9, 10c-12

வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம்.

7. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-24a,25-28

கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.

8. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 51-57

சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது.

9. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14 - 5: 1

காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.

10. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1, 6-10

நிலையான வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு.

11. திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 20-21

தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்.

12. திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18

எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.

13. திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-13

நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்.

14. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2

அவர் இருப்பது போல் அவரைக் காண்போம்.

15. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-16

நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம் என அறிந்துள்ளோம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிகள்

1 மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

2 மத் 25: 34

அல்லேலூயா, அல்லேலூயா! என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

3 யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.

4 யோவா 6: 39

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழியவிடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

5 யோவா 6: 40

அல்லேலூயா, அல்லேலூயா! மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

6 யோவா 6: 51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

7 யோவா 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

8 பிலி 3: 20 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவார் எனக் காத்திருக்கிறோம். அல்லேலூயா.

9 2 திமொ 2: 11-12

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்; அல்லேலூயா.

10 திவெ 1: 5-6 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. அல்லேலூயா.

11 திவெ 14: 13

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்; ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும். அல்லேலூயா.


நற்செய்தி இறைவார்த்தை

1. மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

2. மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

3. மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

4. மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்.

5. மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 33-39; 16: 1-6

சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்.

6. லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17

இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு.

7. லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-40

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

8. லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 33,39-43

நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்.

9. லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 44-46,50,52-53; 24: 1-6a

தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.

10. லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35

மெசியா தாம் மாட்சியடைவதற்கு முன் இத்துன்பங்களைப் படவேண்டும் அல்லவா!

11. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 24-29

என் வார்த்தையைக் கேட்டு சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள்.

12. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 37-40

மகனில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.

13. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58

இந்த உணவை உண்போர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

14. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 17-27

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.

15. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 32-45

இலாசரே, வெளியே வா.

16. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 23-28

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

17. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.

18. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 24-26

அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

19. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 17-18, 25-39

தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.


நம்பிக்கையாளர் மன்றாட்டு

முன்னுரை: 

சகோதர சகோதரிகளே! இறந்த அனித்து ஆன்மாக்களையும் நினைந்து அவர்களுக்காக செபிக்கும் இந்நாளில் இறைவன் தனது கருணையாளும் இரக்கத்தாலும் இவர்களை தமது வான்வீட்டில் அழைத்திட வேண்டுமென்று மன்றாடுவோம். 


1. கருணையின் இறைவா! திரு அவையில் பணியாற்றி இறந்துபோன அனைத்து மறை பணியாளர்களையும் நன்றியோடு நினைத்து அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம். குறிப்பாக எமது மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்துபோன ஆயர்கள், குருக்கள் துறவிகள் பொதுநிலைப் பணியாளர்கள் அனைவருக்கும் உமது இறை சந்நிதானத்தில் இடமளித்திட வேண்டுமென்று, ...

2. கருணையின் இறைவா! எம்மை விட்டுப் பிரிந்துபோன அனைவருக்காகவும் மன்றாடுவோம். குறிப்பாக எமது குடும்பத்திலிருந்து இறந்துபோனவர்களை நினைத்துக்கொள்வோம். அவர்களின் வாழ்வை ஓர் அழகிய அற்புதமாக காட்டிநின்றீர். அவர்களின் நம்பிக்கையின் அடையாளத்தை எமக்குள்ளே விதைத்தீரே. அவ்வான்மாக்கள் ஏங்கும் நிலைவாழ்வை அவர்களுக்கு அளித்திடவேண்டுமென்று, ...

3. கருணையின் இறைவா! இன்று பிரிவின் துயரிலும், வேதனையிலும் அதன் போராட்டத்தின் இருளிலும் இருப்பவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு பலமாக இருந்தருளும். ஆறுதலையும், தைரியத்தையும் கொடுத்தருளும். நம்பிக்கையின் ஒளியை நோக்கி இவர்களை வழிநடத்த வேண்டுமென்று, ...

4. கருணையின் இறைவா! இவ்வுலகின் போர்கள், விபத்துக்கள் மற்றும் தாகுதல்கள், மனிதர்களின் அகோர தனத்தால் தமது உயிரை இழந்தவர்கள், எமக்குத் தெரிந்தவர்கள், மற்றும் தெரியாத ஆன்மாக்கள் அனைவரும் இறைவனின் மாட்சியில் வந்துசேரும் அருளைத் தந்தருள வேண்டுமென்று, ...

இறுதியில்: 

இறைவா! எமக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். இன்று நாம் பலைரை இழந்து வேதனையில் இருப்பினும், அவர்களை நினைத்து நாம் உம்மிடம் மன்றாடுகின்றோம். எங்கள் வாழ்க்கையைக் கடந்து வந்தவர்கள், எங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவர்கள், எமக்காக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள், எதிர்பாராத நேரத்தில் இறந்தவர்கள் என அனைவருக்காகவும் உம்மிடம் வருகின்றோம். அவர்கள் அனைவரையும் நீர் உமது பேரின்ப ராட்சியத்தில் வரவேற்றருளும்; ஆன்ம இளைப்பாற்றியையும், நித்திய சமாதானத்தையும் அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments