திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
கிறிஸ்து இயேசுவில் அன்பு நிறை உள்ளங்களே! திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்றோம். திருவருகைக் காலத்தின் இறுதி ஞாயிறு வாரமாகிய இவ்வாரம் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அர்த்தமும் நோக்கமும் எமக்குக் கொடுக்கப்படுகின்றது. இயேசுவின் பிறப்பு தூய ஆவியால் நடந்தது என்றும், அக்குழந்தை இவ்வுலகின் பாவங்களைப் போக்கும் பலியாக இவ்வுலகிற்குக் கொடுக்கப்படுவார் என்று வாக்குரைத்தது எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது.
இம்மண்ணுலகில் இறைமகன் பிறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் தாய் கொண்டிருந்த மகிழ்ச்சி, அவளின் நம்பிக்கை அனைத்தையும் நாமும் எமது வாழ்வில் கொண்டிருக்க அழைக்கப்படுகின்றோம். அவள் திருவயிற்றில் சுமந்தது இயேசுவை மட்டும் அல்ல, இவ்வுலகம் காத்திருந்த விடுதலையையுமே. இந்த காத்திருப்பு அவள் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையிலும், அவர் கொடுத்த செய்தியை மதித்து, கீழ்படிந்ததிலுமே முழுமை பெறுகின்றது.
நாம் எதைக் குறித்து காத்திருக்கின்றோம் என்பதை விட கிறிஸ்துவும் எம்மைக் குறித்து காத்திருக்கின்றார் என்பதை உணர்ந்துகொள்வோம். அவரை எம் இதயத்தில் சுமந்து இவ்வுலகிற்காக ஈன்று கொடுக்க அழைக்கின்றார். அன்னை மரியாள் பகிர்ந்துகொண்ட மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்துகொள்வோம். வாழ்வை இழக்கவோ, வாழ்வை அழிக்கவோ அல்ல, மாறாக வாழ்வை கொடுக்கும் இதயங்களாக மாறுவோம்.
இவ்வுலகிலே பல்வேறு காரணிகளால், நம்பிக்கை இழந்து இருளடந்து போன ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் மீண்டும் உயிர்பெற மன்றாடுவோம். காலையில் தோன்றும் விடிவெள்ளி போன்று, கிறிஸ்துவின் பிறப்பு இவ்வுலகின் அனைத்து மாந்தருக்கும் அர்த்தம் தரவேண்டியும் இப்பலியில் இறைவரம் வேண்டி மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - காண். எசா 45:8
வானங்கள் மேலிருந்து பொழியட்டும்; மேகங்கள் நீதிமானைப் பொழியட்டும்; நிலம் திறக்க மீட்பர் தோன்றட்டும்.
"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, உமது அருளை எங்கள் மனங்களில் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகன் மனிதர் ஆனதை வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்; அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மாட்சி பெற நீர் எங்களை அழைத்துச் செல்வீராக. உம்மோடு.
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
முதல் இறைவாக்கு
இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14
அந்நாள்களில்
ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, “நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார்.
அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 24: 1-2. 3-4ab . 5-6 (பல்லவி: 7c, 10b)
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.
1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2 ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்;
ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி
3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி
5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
தாவீதின் மரபினரான இயேசு கிறிஸ்து கடவுளின் மகன்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7
கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது:
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழிமரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக் கொண்டோம். பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 1: 23
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான
மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்:
அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. வார்த்தை மனுவுருவாகி எம்மிலே குடுகொள்ள சித்தம்கொண்ட இறைவா! உமது வார்த்தையையும் வாழ்வையும் உடைத்துக் கொடுக்கும் அனைத்து நற்செய்தி பணியாளர்களையும் அசீர்வதித்து காத்தருள வேண்டுமென்று, ...
2. நம்பிக்கையால் இறைவனை தம் உதரத்தில் தாங்கிய அன்னையைப் போல், ஏழைகளாய், பிணியில் வாடும் நோயாளிகளாய், பாசத்திற்காக தவிக்கும் பிள்ளைகளாய், உறவை இழந்த அநாதைகளாய் தவிப்போருக்கு நாம் ஆறுதலாய், அரவணைக்கும் கரங்களாய் மாறிட அருள்புரிய வேண்டுமென்று, ...
3. கிறிஸ்துவின் பிறப்பிற்காய் ஆயத்தம் செய்யும் நாம், அதிக ஆடம்பரங்களை தவிர்த்து, களியாட்டங்களை இல்லாமல் செய்து, உறவை இழந்தவர்களுடனும், அணர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுடனும், வறுமையில் வாடுவோர்களுடனும் நாமும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள எம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று, ...
4. இவ்வுலகிற்காக இறை சித்தம் ஏற்ற அன்னை மரியைப் போல், எம்மிலே இறைவனின் சித்தத்தை கண்டுணர்ந்துகொள்வோம். எமது குடும்ப வாழ்விலும், தொழில்துறைகளிலும், கல்வி வாழ்விலும் எமக்கான அழைப்பை ஏற்று அதில் பிரமாணிக்கமாகவும், பொறுப்புள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் வாழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
5. இன்று இப்பலியை நிறைவேற்றும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். அன்னை மரியா கொண்டிருந்த மகிழ்வை அயலவரோடு பகிர்ந்து, இறை மகிமையை வெளிப்படுத்த சித்தம்கொண்டது போல, நாமும் எமது மகிழ்ச்சியை நிறைவுள்ளதாக்கும், உண்மை வாழ்வு வாழவும், அன்புசெய்வதிலும் பகிர்ந்து கொடுப்பதிலும் நாம் எம்மை முழுமையாக அர்ப்பணிக்கவும் வரம் தனை அருளவேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, புனித மரியாவின் திருவயிற்றைத் தூய ஆவியார் தமது வல்லமையால் நிரப்பினார்; உமது பீடத்தின்மேல் வைக்கப்பட்டுள்ள இக்காணிக்கையையும் அவரே புனிதப்படுத்துவாராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி - எசா 7:14
இதோ! கன்னி கருவுறுவார்; ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவர் பெயர் "இம்மானுவேல்" என அழைக்கப்படும்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, நிலையான மீட்பின் உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: மீட்பு அளிக்கும் திருநாள் நெருங்கி வரும் இவ்வேளையில் நாங்கள் மேன்மேலும் இறைப்பற்றுடன் உம் திருமகனுடைய பிறப்பின் மறைநிகழ்வைத் தகுதியான முறையில் கொண்டாட முன்னேறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment