இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமுள்ள இறை உறவுகளே! இன்று தாய்த் திரு அவையானவள் திருக்குடும்ப திரு விழாவைக் கொண்டாடுகின்றாள். ஆதியிலே இறைவன் ஆதவனாய் தோன்றி, பாரினைப் படைத்து, படைத்ததைக் கொடுத்து, பாசமாய், பண்பாய், தன்னையே தன் உயிர் மூச்சையே தாணமாய் கொடுத்தானே! மனிதனே அம்மாண்பினை மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு பெற்று, குடும்பத்தின் உயர்ச்சியை கொடையாக பெற்றானே. அக் குடும்பத்தின் கொடைக்காக நன்றி கூறும் நாள் இது..
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும்" என்று அவ்வுயர்ந்த இறை அன்பை மனிதனின் இதயத்தில் விதைத்து, குடும்பத்தில் பகிர்ந்துகொள்ள, புரிந்துகொள்ள, அதை உணர்ந்துகொள்ள எம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குடும்பத்தைக் கொடுத்து ஆசீர்வதித்ததை நினைந்து நன்றி சொல்லும் நாள். கடவுள் அமைத்த எம் குடும்பம் அழகானது, உன்னதமானது, அதுவே புனிதமானது.
அன்னை மரியாவின் வளர்ப்பும், புனித யோசேப்பின் முன்மாதிரியும், இயேசுவை அதிகமாக ஈர்ந்தது, அவரது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் செல்வாக்கு செலுத்தியது. தந்தை, தாய்க்குரிய பாசமும், பெற்றோர் பிள்ளைகளுக்குரிய அன்புறவுமே இவ்வுலகின் உயர்வுக்கும், நாம் கொள்ளும் இறை-மனித நம்பிக்கைக்கும் அத்திவாரம். குடும்பம் என்பது அர்ப்பணம், தியாகம், சகிப்புத் தன்மை, பொறுமை, பகிர்வு என பல்வேறு குடும்ப விழுமியங்களால் கட்டப்பட்டது.
இன்று எமது குடும்பங்களுக்காக இன்று மன்றாடுவோம். பல்வேறு காரணங்களால், காயப்பட்டுபோன, அருளை இழந்துபோன, அன்பை தொலைத்துப்போன, உறவுகளை பிரிந்துபோன குடும்பங்களாக மன்றாடுவோம். இவைகள் இன்று மாறவேண்டும். ஒரு சமூகம் உருவாக, ஒரு புனிதன் உருவாக, ஒரு குடும்பத்தில் திருக்குடும்பத்தின் சாயல் இருக்கவேண்டும், அன்னை மரியாளினதும் புனித சூசையினதும் பரிந்துரை இருக்கவேண்டும், இயேசுவின் அன்பும், அவர் மறைபொருளைக் கொண்டாடும் வாஞ்சையும் இருக்கவேண்டும். இதற்கான இறைவரம் கேட்டு இவ்வழகான பலியிலே மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - லூக் 2:16
இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையம் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, எங்களுக்குத் திருக்குடும்பத்தின் சிறந்த எடுத்துக்காட்டை அளிக்கத் திருவுள மான உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: குடும்பப் பண்புகளிலும் அன்பின் பிணைப்புகளிலும் நாங்கள் அதைப் பின்பற்றி, உமது இல்லத்தின் நிலையான பரிசை மகிழ்வுடன் பெறச் செய்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் தாய் தந்தையரை மதிக்கிறான்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3:2-7, 12-14ய
பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப் படுத்தியுள்ளார்; பிள்ளைகள்மீது அன்னையர்க்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார். தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டிவைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்; அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்; ஆண்ட வருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். தலைவர்கள் கீழ்ப் பணியாளர்கள்போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்.
குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு; அவரது வாழ்நாளெல்லாம் அவரது உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி; நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறு பெற்றோர்!
1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். - பல்லவி
3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனி தரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்;
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!
உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. - பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கை.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-21
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கு இசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.
கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும்.
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி கொலோ 3: 15a, 16a
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு
எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-15,19-23
ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.
ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்” என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு, அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, “ ‘நசரேயன்’ என அழைக்கப்படுவார்” என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
இறைமக்கள் மன்றாட்டு
குரு: அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன் எனும் ஆபிரகாமுக்கு இறைவன் கொடுத்த உறுதியான வாக்கு எமது குடும்பங்களுக்கு ஒளிவிளக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டவர்களாக, எமது தேவைகள் விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. அன்புள்ள ஆண்டவரே! நீர் எமக்கு அளித்த உன்னத கொடையாகிய திரு அவையை கறையின்றி பாதுகாக்கவும், தவறான பேதகங்கள், போதனைகளிலிருந்து அதன் ஏகம், பரிசுத்தம், கத்தோலிக்கம் மாசுபடாமல் காக்கவென உழைக்கும் திரு அவை பணியாளர்கள் அனைவரையும் நீரே வழிநடத்திக் காத்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்புள்ள ஆண்டவரே! இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடி எமக்காக செபித்து நிறையாசீர்வேண்டி நின்று, எமது குடும்பங்களுக்காக உழைக்கும் எமது மறை மாநில ஆயர், பங்குதந்தை, மேலும் குருக்கள் துறவிகள் அனைவரையும் உமது அன்பின் கரங்களால் வழிநடத்தி ஆசீர்வதிக்கவும், ஒவ்வொரு ஆன்மாவின் இடேற்றத்திற்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் வஞ்சையை அளித்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்புள்ள ஆண்டவரே! இங்கு கூடியிருக்கும் எம் அனைவரையும் உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். பண்புகள் நிறைந்த குடும்பங்கள் உருவாகவும், பாசத்தை விதைக்கும் உறவுகள் உருவாகவும், அன்பினால் அடித்தளமாகும் அழகான சமூகம் உருவாகவும், அனைவரையும் அரவணைக்கும் மனங்கள் பெருகவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்புள்ள ஆண்டவரே! எம்மை சுற்றியுள்ள துன்பப்படுவோர், வேதனைப்படுவோர், கைவிடப்பட்டோர், புறம்தள்ளப்பட்டோர், அடிமை வாழ்வில் அகப்பட்டோர் என பலவீனமாக்கப்பாட்டுள்ள பலர் வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். இவர்களின் இயலாமையில், அறியாமையில், பலவீனத்தில் ஆண்டவரே நீரே இவர்களோடு இருந்து பயணிக்கவும், இந்நிலைக்குரிய காரணிகளை அறிந்து துணிவோடும், தெளிவோடும் பயணிக்கவேண்டிய ஆற்றலையும் வல்லமையையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5.அன்புள்ள ஆண்டவரே! உம்மை உதரத்திலே பெற்று இதயத்தில் சுமந்து, கரங்களிலே தாங்கிச் சென்ற தாய் அன்னை மரியாவைப் போல நாமும் திருக்குடும்பமாக, எமது திரு அவைக்காக, எமது சமூகத்திற்காக, எமது குடும்பங்களுக்காக வாஞ்சையோடு உழைக்கும் உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
6. அன்புள்ள ஆண்டவரே! இயற்கையின் சீற்றத்தால் குடும்பங்களை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், அன்பைத் தொலைத்தவர்கள் என அனைவருக்கும் இத்திருக்குடும்பம் அழகிய வழ்வின் பாதையைக் காட்டவும், இழந்ததை மீண்டும் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளையும், சந்தர்ப்பங்களையும் அளித்திட வேண்டுமென்று, ...
குரு: எம்மை எல்லாம் வாழ்வித்து வழிநடத்தும் அன்பின் ஆண்டவரே! நீர் எமக்கு அமைத்துத் தந்த அழகிய குடும்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இக்குடும்பத்தில் இணைதிருக்கும் எமது தாய், தந்தை, பிள்ளைகள் உறவுகள் மற்ரும் சொந்தங்கள் அனைவரையும் இன்றைய பலியிலே ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். எம்மை ஆசீர்வதித்து, அரவணைத்து, வழிநடத்திக் காத்தருளும். ஒரே குடும்ப உணர்வோடு நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து, நிறைவாழ்வுக்கான ஆசீரைப் பெற்றுத்தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுக்கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, மகிழ்வின் பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் கடவுளின் கன்னித் தாய், புனித யோசேப்பு ஆகியோருடைய பரிந்துரையின் உதவியால் எம் குடும்பங்களை உம் அருளிலும் அமைதியிலும் உறுதியாய் நிலைநிறுத்துவீராக. எங்கள்.
ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, II
திருவிருந்துப் பல்லவி - பாரூ 3:38
நம் கடவுள் மண்ணுலகில் தோன்றினார்; மனிதர் நடுவே குடிகொண்டார்
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
கனிவுமிக்க தந்தையே, விண்ணக அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை இடையறாது பின்பற்றச் செய்தருளும் அதனால் இவர்கள் இவ்வுலக இன்னல்களுக்குப் பிறகு அதன் நிலையான தோழமையைப் பெறுவார்களாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment