கிறிஸ்து பிறப்பு திருவிழா
திருவிழிப்புத் திருப்பலி
திருவிழிப்புத் திருப்பலி - 24ம் திகதி மாலை ஆறு மணிக்கு பின் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும். (Solemnities are counted among the most important days, whose celebration begins with First Vespers (Evening Prayer I) on the preceding day. Some Solemnities are also endowed with their own Vigil Mass, which is to be used on the evening of the preceding day, if an evening Mass is celebrated: Universal Norms on the Liturgical Year and the Calendar: 11)
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5 - ஆண்டவர் உங்களில் பேருவகை கொள்கிறார்.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 16-17,21-25 - தாவீதின் மகனான கிறிஸ்து பற்றிப் பவுலின் சான்று.
நற்செய்தி இறைவாக்கு
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-25 : தாவீதின் மகனான இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.
இரவில் திருப்பலி
24ம் திகதி மாலை நல்லிரவில் அதாவது 24ம் திகதி மாலை பன்னிரண்டு மணிக்கு முன் ஆரம்பமாகி ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும்.
வருகைப் பல்லவி
திபா 2:7 ஆண்டவர் என்னிடம் உரைத்தார்: "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்."
அல்லது
நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோம்; ஏனெனில் நம் மீட்பர் உலகில் பிறந்துள்ளார்; இன்று நமக்கு விண்ணகத்திலிருந்து உண்மையான அமைதி இறங்கி வந்தது.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, உண்மை ஒளியின் சுடரால் இப்புனிதமிக்க இரவை ஒளிரச் செய்தீர்; அதனால் இம்மண்ணகத்தில் அவரது ஒளியின் மறைநிகழ்வுகளை அறிந்திருக்கும் நாங்கள் விண்ணகத்திலும் அவரது மகிழ்ச்சியை அனுபவிக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4,6-7 : ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14 : மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.
நற்செய்தி இறைவாக்கு
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14 : இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இன்றைய திருநாளின் காணிக்கை உமக்கு உகந்ததாய் அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்புனிதமிக்க உறவுப் பரிமாற்றத்தின் வழியாக கிறிஸ்துவின் சாயலில் நாங்கள் காணப்படவும் எங்கள் இயல்பு அவரில் உம்மோடு இணையவும் அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
தொடக்கவுரை : ஒளியாம் கிறிஸ்து.
இசையில்லாப் பாடங்கள்: ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை 1,
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவ ரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல
இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும்,
நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது,
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்,
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில், வாக்கு மனிதர் ஆனார் என்னும்
மறைநிகழ்வின் வாயிலாக உமது மாட்சியின் பேரொளி எங்கள்
மனக் கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது.
எனவே, அவரில் நாங்கள் கடவுளைக் கண்கூடாய்க் காண் கின்றோம்;
அவர் வழியாகவே கண் காணாதவைமீதுள்ள அன்பினால் நாங்கள் ஆட்கொள்ளப்படுகின்றோம்.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்,
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.
திருவிருந்துப் பல்லவி - யோவா 1:14
வாக்கு மனிதர் ஆனார்; அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே எங்கள் இறைவா, எங்கள் மீட்பரின் பிறப்பு விழாவைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்; இவ்வாறு மேன்மையான உறவுகளால் நாங்கள் அவரது விண்ணகத் தோழமைக்கு வந்து சேரும் தகுதி பெற்றிட எங்களுக்கு அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
விடியற்காலைத் திருப்பலி
25ம் திகதி அதிகாலையில் அல்லது காலையில் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும்.
வருகைப் பல்லவி - காண். எசா 9:1,5; லூக் 1:33
இன்று நம்மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ 'வியப்பம் உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை' என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, மனித உடல் எடுத்த உம் வார்த்தையின் புதிய ஒளியால் நிரப்பப்பட்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இது எங்கள் செயலில் சுடர்விட்டு எங்கள் மனதில் நம்பிக்கை வழியாய் ஒளிர்வதாக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 11-12 : இதோ, உன் மீட்பர் வருகின்றார்.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-7 : கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு நம்மை மீட்டார்.
நற்செய்தி இறைவாக்கு
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20 : இடையர் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள்.
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எங்கள் காணிக்கைகள் இன்றைய பிறப்பு விழாவின் மறைநிகழ்வுகளுக்கு ஏற்றவையாக அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனிதராகப் பிறந்த அவரே கடவுளாகவும் ஒளிர்வது போல இம்மண்ணகக் கொடைகள் விண்ணகத்துக்கு உரியவற்றை எங்களுக்கு வழங்குவனவாக. எங்கள்.
ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III
திருவிருந்துப் பல்லவி - காண். செக் 9:9
மகளே சீயோன், மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம், ஆர்ப்பரி; இதோ! உன் அரசர் வருகிறார். அவர் தூயவர்; உலகின் மீட்பர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே, உம் திருமகனின் பிறப்பினை மகிழ்ச்சி நிறைந்த இறைப்பற்றுடன் நாங்கள் கொண்டாடுகின்றோம்; ஆழமான பொருளுள்ள இம் மறைநிகழ்வுகளை முழு நம்பிக்கையுடன் கண்டுணரவும் மிகுந்த அன்பு ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளவும் அருள்வீராக. எங்கள்.
பகலில் திருப்பலி
மதியம் பன்னிரண்டு மணிக்கு முன்னோ அல்லது பின்னோ ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும்.
வருகைப் பல்லவி - காண். எசா 3:5
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; அவரது ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் உள்ளது. அவரது பெயர் மாண்புறு மன்றத்தின் தூதர் என அழைக்கப்படும். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, மனிதத்தன்மையின் மாண்பினை வியத்தகு முறையில் படைத்து, அதனினும் வியத்தகு முறையில் சீர்படுத்தினீர்; எங்களது மனித இயல்பில் பங்குகொள்ள அருள்கூர்ந்த அவரது இறை இயல்பில், நாங்கள் பங்கு பெற அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10 : மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இரண்டாம் இறைவாக்கு
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6 : கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.
நற்செய்தி இறைவாக்கு
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18: வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.முன்னுரை (வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இன்றைய பெருவிழாவின் காணிக்கையிலிருந்து வெளிப்படும் உமது மன்னிப்பு, எம்மை உம்மோடு ஒப்புரவாக்கி, முழுமையான இறைவழிபாட்டுக்கு எங்களை இட்டுச் செல்வதாக; எனவே இக்காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் விளங்கச் செய்வீராக. எங்கள்.
ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III
திருவிருந்துப் பல்லவி - 'காண். திபா 97:3
உலகின் எல்லைகள் அனைத்தும் நம் கடவுளின் மீட்பைக் காணும்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
இரக்கமுள்ள இறைவா, இன்று உலகின் மீட்பர் பிறந்துள்ளார்; அதனால் எங்கள் இறைப் பிறப்புக்கு ஊற்றாக அவர் இருப்பது போல எங்களுக்கு அழியா வாழ்வை அளிப்பவராகவும் இருப்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
திருப்பலி முன்னுரை - 1
'ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்'
இறை இயேசுவில் என் அன்புக்கினிய இறைமக்களே!
விண்ணிலே தோன்றியதோர் விடிவெள்ளி, அற்புத விடிவெள்ளி, மண்ணிலே இறைவனின் அருள் பெற மகிமையின் அடையாளமாய் தோன்றியதே இந்த விடிவெள்ளி, இதோ இன்று தோன்றுகின்றது. ஒரு புதிய சரித்திரம் படைக்க இவ்வுலகில் இறைவன் தோன்றிவிட்டார். படைத்தவர், தன்னை படைப்புக்குள்ளே கொண்டுவந்துவிட்டார், இறைவன் இன்று மனிதனாக பிறந்துவிட்டார். கபிரியேல் தூதர் சொன்ன இறைவனின் வார்த்தை இன்று நிறைவேறுகின்றது. அன்னையின் 'ஆகட்டும்' எனும் வார்த்தையால் மனிதர் அனைவருக்கும் வாழ்வு கிடைத்துவிட்டது, பாவம் உடைக்கப்பட்டுவிட்டது. விண்ணவர் தூதர் அணிகளோடு சேர்ந்து நாமும், 'உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை உண்டாகுக, பூவுலகில் நல் மனம் உடையோருக்கு அமைதியும் ஆகுக' என்று புகழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் பாடுகின்றோம். ஏனெனில் கிறிஸ்து இயேசு எனும் மெசியா தாவின் ஊரில் இன்று பிறந்துள்ளார். இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
இயேசுவின் பிறப்பில் இருந்து அவரது ஒவ்வொரு அசைவும் முன்குறிக்கப்பட்டவை, வரலாற்றில் எழுதப்பட்டவை. அவர் தடம் பதித்துச் சென்றவைகள் வரலாற்றையே விழித்தெழச் செய்தவை. இவரே எமக்கு வழிகாட்டும் விளக்கு, அர்த்தம் தரும் ஆன்ம மருந்து. இவர் பிறப்பில் இருந்து நாம் வாழ்வைக் கற்றுக்கொள்ளவேண்டும். எளிமை வாழ்வில் இறைவன் இருக்கிறார், ஏழைகளில் இறைவன் தெரிகின்றார், உண்மையே இயேசுவின் மறு பெயர். இன்று உலகம் எடுத்துச் சொல்லும் நற்செய்தியை எம் உள்ளங்களில் தருகின்றார். தொலைந்தவர்கள், துவண்டுபோனவர்கள், வறுமையில் இருப்பவர்கள், உறவை இழந்தவர்கள், நொந்துபோனவர்கள், நிலைமாறி போனவர்கள் இவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையை தரும் விதையாகின்றார் எம் பாலன் இயேசு.
பாலன் இயேசுவுக்காய் வாழுவோம், பாவம் தொலைத்து அவர் பாதம் வழி செல்வோம். நற்செய்தியை அறிவிப்போம், நல்ல கிறிஸ்தவராக மாறுவோம். இதற்கான வரம் கேட்டு தொடரும் இப்புனிதபலியிலே கலந்துகொள்வோம்.
நம்பிக்கையாளர் மன்றாட்டு - 1
குரு: காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது, என்ற எசாயாவின் குரல் எம்மையும் நம்பிக்கையின் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. இயேசுவின் பிறப்பு எமக்கு ஒரு புதிய வாழ்வின் அத்தியாயத்தை எழுதவேண்டும். தூய்மை வாழ்வுக்கான ஏணிப்படியாக அமையவேண்டும். இவரே எமது மீட்பர், இவரே எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து மீட்க பிறந்துள்ளார் எனும் நம்பிக்கையில் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. ஆண்டவரே, உமது மகன் இயேசுக்கிறிஸ்துவை இவ்வுலகு அறிந்து அன்புசெய்ய சித்தம் கொண்டீரே, உமக்கு நன்றி சொல்கின்றோம். அத்திருமகனை உலகறிய நற்செய்தியாக எடுத்தியம்பும் திரு அவைப் பணியாளர்களை கரம்பிடித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ஆண்டவரே! உமது திரு மகன் இயேசு வழியாக இவ்வுலகு உம்மை யார் என்று கண்டுகொள்ளச் செய்தீரே உமக்கு நன்றிசொல்கின்றோம். ஒன்றிக்கும் ஒரே திரு அவையாக நாம் பயணிக்கும் எமது வாழ்விலும் இயேசு பாலனின் பிறப்பு செய்தி நம்பிக்கையையும், மகிழ்வையும், பிறரோடு உள்ள கூட்டுறவையும் வளர்ப்பதாக. இவ்வுலகம் தரமுடியாத வாழ்வின் விழுமியங்கள், பண்புகள் இயேசுவின் பிறப்பின் கனிகளாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின் ஆண்டவரே! யுத்தத்தினால், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் இவ்வுலகின் மக்கள் அனைவருக்கும் இயேசு பாலனின் பிறப்புச் செய்தி, வெறுமையில் நிறைவைத் தருவதாக. உயர்ந்து போகும் கோபுரங்களை கட்டவல்ல, மாறாக மனித உள்ளத்தை உயர்த்திக் காட்டவும், உயரவே நிற்கும் போதைக் கலாசாரத்தை தாங்கவல்ல, மாறாக அன்பின் வெகுமதியை உணர்த்திக்கொள்ளவும், உண்மையை உடைக்கும் வன்முறைகளை அல்ல மாறாக பாசத்தை எண்பிக்கும் உறைவுகளை தளைத்திடச் செய்யவும் இயேசுவின் பிறப்பு வழிசெய்யவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இன்றைய கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவை அமையச் செய்த தந்தையே இறைவா! ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்திற்கு அடையாளமாய் இருப்பது போல, இயேசுவின் பிறப்பு எமது குடும்பங்களுக்கு அடையாளமாய் இருப்பதாக. அக்குழந்தையின் மகிழ்விலே எம்மிலுள்ள பிரிவினைகள் களைந்து, பிறழ்வுகள் தகர்த்தெறிந்து, கோபமும் கவலையும் விட்டொழிந்து, கண்ணீரும் ஏக்கமும் துடைத்து, புதிய உறவுகள் அமைக்கவும், பாலகனின் ஆசி நிறைவாய் தங்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு. எம்மை அதிகம் அன்பு செய்யும் தந்தையே! இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், எமது கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியலாக எம்மை தேடிவந்தீரே. எமக்கும் எமது வாழ்வுக்கும் நிறைவைத் தர வந்தீரே. நம்மைத் தேடி வந்த விடியல் நீர் தான் இயேசுவே. எமது குறை நீக்க எம்மை தேடிவந்தீரே. உம்மிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், உம் அன்பை விட்டு பிரியாமல் இருக்கவும், எமது இயலாமையிலும், பலவீனங்களிலும் எமக்கு தோல்கொடுத்து உதவியருளும். நாம் மனமுவந்து கேட்கும் இந்த விண்ணப்பங்கள் உமதண்டை வந்து சேர்வதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
திருப்பலி முன்னுரை - 2
உன்னத தேவன் உலகத்தின் ஒளியாய் உறவின் பாலமாய் எம்முள் பிறக்க நாம் காத்திருக்கின்றோம், மழலையின் சிரிப்புடன் மன்னவன் பிறக்கின்றார், வாருங்கள் அகமகிழ்வோம், அவரை புகழ்ந்து பாடுவோம். இறை இயேசுவில் அன்புள்ள உறவுகளே! இயேசு பாலகனின் பிறப்பின் பெருவிழாவில் ஒன்று கூடி வந்திருக்கும் உங்களை நாம் அன்புடன் வரவேற்கின்றோம்.
“அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" எனும் அழகிய நற்செய்தி இன்று, இப்பொழுது எமக்கும் அறிவிக்கப்படுகின்றது. "அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்று முன்மொழியப்பட்ட வார்த்தைகள் இன்று நிறைவேறுகின்றது. உலகமே திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரு தனி மனிதனின் பிறப்பு, இவ்வுலகத்தின் மாந்தர்களுக்கு கொடுக்கப்படும் புதிய செய்தியே.
இயேசுவின் பிறப்பில் நாம் மகிழவேண்டும். அவர் பிறப்பிற்காய் இவ்வுலகத்தையே கடவுள் ஆயத்தம் செய்தார். ஒவ்வொரு மனிதனையும் அழைத்து அவர்கள் வழியாக எம்மை தயார்ப்படுத்தினார், எம்மை தூய்மைப்ப்டுத்தினார், எமது பாவ வாழ்வை களையச் செய்தார், உறவுகளை மேம்படுத்தினார், உண்மையை உரக்கச்சொன்னார். இதே வல்லமையோடும், அருளோடும் நாமும் இப்பலியில் இணைந்து அம்மகிழ்வை சுவீகரித்துக் கொள்வோம். இந்நிரந்தர மகிழ்வில் இவ்வுலகம் தேடி நிற்கும் உன்னத ஒளி பிறக்க மன்றாடுவோம். கடவுளாய் இருந்தவர் மனிதனாய் பிறந்தார், மனிதனாய் இருக்கும் நாம் கடவுளின் அருளை இயேசுவின் பிறப்பின் வழியாக வரம் கேட்டு மன்றாடுவோம்.
இறைமக்கள் மன்றாட்டு - 2
1. "ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்"
நிறை மகிழ்வை எமக்கு தரும் அன்பின் ஆண்டவரே! உமது வருகைக்காய் நன்றி சொல்கின்றோம். கடவுளாய் இருந்த நீர், கட்புலனாகாதவராய், படைப்பு அனைத்திலும் மேலானவராய் இருந்த நீர், இன்று படைப்பிற்குள்ளையே உம்மை கொணர்ந்து எமக்கு விடுதலையை வழங்கவும், விண்ணக மாட்சியில் நாம் பங்குபெறும் பாக்கியத்தை அளித்தருள வேண்டுமென்று, ...
2. "இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்"
நிறை மகிழ்வை எமக்கு தரும் அன்பின் ஆண்டவரே! உமது நற்செய்தியை உலகமெங்கும் எடுத்துரைத்து, உண்மை வாழ்வுக்காய் மக்களை வழிநடத்தும் பணியாளர்களை ஆசீர்வதித்து, அம்மீட்புப் பணியில் இயேசு கொண்டுவந்த நீதியையும் நேர்மையையும் நிலை நாட்ட அருள்புரிய வேண்டுமென்று, ...
3. "நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது"
நிறை மகிழ்வை எமக்கு தரும் அன்பின் ஆண்டவரே! எமது நாட்டின் வாழ்வுக்காக வளர்ச்சிக்காக உழைக்கும் அனைத்து பணியாளர்கள், மற்றும் ஊழியர்களை ஆசீர் வதித்தருளும். கால நிலை சீர்கேட்டின் மத்தியிலும் தம்மை தியாகம் செய்து உழைக்கும் இவர்களுக்கு தேவையான வரங்களை அளித்தருள வேண்டுமென்று, ...
4. இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.
நிறை மகிழ்வை எமக்கு தரும் அன்பின் ஆண்டவரே! அன்புக்காக, அமைதிக்காக, வாழ்வுக்காக ஏங்கும் பலருக்கு இயேசுவின் பிறப்பு, நற்செய்தியை உள்ளங்களில் விதைப்பதாக. இழப்பில் ஆறுதலாகவும், பிரிவில் வாழ்வாகவும், அழுகையில் அணைப்பவராகவும், ஆபத்தில் ஆலோசகாரகவும் இருந்தருள வேண்டுமென்று, ...
திருப்பலி முன்னுரை - 3
விழித்திருந்து காத்திருந்து, வீணான நேரமெல்லாம் களைந்துவிட்டு, வெண்பனி போல் உளத்தூய்மை பெற்று, வாழ்வுப் பாதையில் அருளையும், ஆசீரையும் அதிகமாக பெற, பிறக்கும் அந்த இயேசுவின் பொன்முகம் காண இன்று எத்திசையிலிருந்தும் கூடிவந்திருக்கின்றோம். இக் கிறிஸ்து பிறப்பின் மாலைத் திருப்பலிக்கு நாம் உங்களை அழைத்து நிற்கின்றோம். நாம் காத்திருந்த நேரம் கனிந்துவிட்டது.
நாம் இன்று கொண்டாடும் கிறிஸ்துவின் பிறப்பு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருந்தாலும், அது மனித வரலாற்றில் ஒரு புனித பாதையை அமைத்துக் கொடுத்தது என்பது கண்கூடு. இவ்வுலகின் பாவம், இறை மகிமையை, அதன் முழுமையை எம்மில் இழக்கச்செய்தாலும், இவ் இறைமகனின் பிறப்பு அதை மீண்டும் புதுப்பித்து விட்டது. இது எமக்கு கிடைத்த பாக்கியமே. அவர் இறைவனாக இருந்தும், மனிதனானார், அவர் படைத்தவராக இருந்தும், தம்மை படைப்புக்குள்ளே கொணர்ந்தார், அவர் உயர்ந்தவராக இருந்தும், தம்மைத் தாழ்த்திக்கொண்டார், அவர் மறைபொருளாய் இருந்தும், தம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார். இதுவே அவர் காட்டும் சிறந்த அன்பு.
நமது இயேசுவின் பிறப்பு இன்றும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டே! அவரது ஏழ்மை நிறை பிறப்பு எமக்கு ஒரு பாடமே! பணமும், செல்வமும், பட்டங்களும் மனிதனை உயர உயர கொண்டுசென்றாலும், அடிப்படையில் மனிதனின் இதயத்தில் இடம் தரும் மகிழ்ச்சியும், அமைதியும் இயேசுவின் பிறப்பில் இருந்தே ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய எமக்கு இயேசுவின் பிறப்பு ஒரு வரலாறு அல்ல, அது ஒரு வாழ்வு.
எனவே, இறை முகம் காண, தன்னை இம் மனித இதயத்தில் பொறித்த இயேசுவின் வருகைக்காய் நன்றிசொல்வோம். எம்மைச் சுற்றியிருக்கும் அனைவரிலும் இப் பெருமகிழ்ச்சியை எடுத்துரைப்போம், ஒரு குழந்தையின் பிறப்பில் மகிழும் தாய் போல, கிறிஸ்துவின் பிறப்பில் நாமும் மகிழவேண்டும். எம்மையும் இம்மனுக்குலத்தில் உயர்த்தி, மானுட உறவில் மகிழ்ந்து, மனிதத்திற்கு புதிய வரைவிலக்கணம் தரும் இந்நிகழ்வு எம்மையும் தாங்கிச் செல்வதாக.
இத்தனை வரங்களையும் நிறைவாகப் பெறவும், இவ்வுலகின் அமைதிக்காகவும், மனித நீதிக்காகவும் எமது செபங்களை உயர்த்தி தொடரும் இப்பலியில் கலந்துகொள்வோம்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment