வருட இறுதி நாள் நன்றி வழிபாடு - 2025
முன்னுரை
கிறிஸ்துவின் பிறப்பில் அகமகிழ்ந்து, புதிய உறவில் புதுமை கண்டு இன்று தொடங்கும் புதிய வருடத்திற்காக இறைவரம் வேண்ட கூடி வந்திருக்கும் இனிய உறவுகளே! இவ் இறுதி நாள் வழிபாட்டுக்காக உங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
2025ம் ஆண்டு எங்களை கடந்துசெல்கின்றது. விடைபெரும் இவ்வாண்டு எமக்கு காட்டிய வாழ்வுப் பாதைக்காக, கற்றுக்கொண்ட உயரிய விழுமியங்களுக்காக நன்றி கூறுவோம். மேலும் சந்தித்த தோல்விகளில், பிரிந்துசென்ற உறவுகளில், உள்ளத்தில் சுமந்த வலிகளில் இறைவனின் தாங்கும் வலிமைக்காகவும், எம்மை அணைத்துச்சென்ற பொழுதுகளுக்காகவும், சுகம்தந்து, திடம்தந்து காத்த நேரங்களுக்காகவும் நன்றி கூறவும் கூடிவந்துள்ளோம்.
நேற்று எம்மோடு இருந்தவர்கள் இன்று எம்முடன் இல்லை. இருப்பினும் நேற்று சுமந்த அனுபவங்கள் இன்று வாழ்வின் பாடமாக மாறிவிட்டன, எம்மை உருவாக்கிவிட்டன. நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை புடமிடும் வாழ்வின் எடுகோல்கள் எம்மை முன் நகர்த்திக்கொண்டே செல்கின்றன. அரசியல் நகர்வுகள் ஒருபுரம், கலாசார சீர்கேடுகள் மறுபுரம், போதைக் கும்பல்களோடு போராடி போராடி பிள்ளைகளையும் அவர்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்க படும்பாடுதான் என்ன! இயற்கை நுண்னறிவு என்று அறிவியலோடும், விஞ்ஞானத்தோடும் போராடும் புதிய காலம் பிறந்துவிட்டது. இருப்பினும் ஞானம் தொலைந்துவிட்டதா என்பது இன்று விடுக்கப்படும் புதிய கேள்வியே. இன்று ஆடம்பரங்களும், கொண்டாட்டங்களும் எச்சூழ்நிலையிலும், எச்சந்தர்ப்பத்திலும் குறையவே இல்லை. யோவான் நற்செய்தியில் 'ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவா:1:10-11' எமது பாகுபாடுகள், நாம் உருவாக்கிய பிரிவினைகள் இயேசுவை அறிந்துகொள்ளாமலும், அவரை ஏற்றுக்கொள்ளாமலுமே அவரின் பிறப்பில் மகிழ அழைக்கின்றது. இது முரண்பாடானதே. கேள்விகளை தொடுத்துக்கொண்டு போனால், நம்பிக்கைக்கும் இடமில்லையே!
கிறிஸ்துவை வரவேற்கும் புதிய யுகம் பிறக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்து பிறந்துகொண்டு தான் இருக்கின்றார், இருப்பினும் இதயத்தில் அவர் பிறக்கவில்லையெனின் அவர் இன்னும் எம்மில் பிறக்கவே இல்லையே! இன்று எமது வழிபாடு நாம் யார் எம்பதையும், நான் யார் என்பதையும் அறிய, ஆராய அழைக்கின்றது. 2025ம் ஆண்டு எம்மை புடமிட்டிருக்கின்றது.
'எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே' 1தெச: 5:16-18. புனித பவுலின் இவ் அழைப்போடு எமது வாழ்வைக் குறித்து நன்றி சொல்லி, நாம் தொடங்கவிருக்கும் புதிய ஆண்டு எமக்கு புதிய ஆசீர்களைத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.
பாடல்
உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
எந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும் (2)
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா (2)
1. பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் (2)
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் (2)
2. வலையினில் விழுகின்ற பறவை
அன்று இழந்தது அழகிய சிறகை (2)
வானதன் அருள் மழை பொழிந்தே
நீ வளர்த்திடு அன்பதன் உறவை (2)
இறைவார்த்தையுடன் ஆண்டவரை புகழ்வோம், ஆராதிப்போம், அவரை மகிமைப் படுத்துவோம்.
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! (திபா:8:9)
(எசா: 12:4,5) - ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
(1கொரி: 1:4-5) - கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
(பிலி:1:3-7) உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்; உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடிவருகிறேன். ஏனெனில், தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன். நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்.
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
(கொலோ:1: 21-23) - முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்ச் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது.
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
(உரோ:8:18-19) - இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
(1:திமோ: 1: 12-14) - எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரை பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
(திபா: 103:1-4) - என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
பாடல்
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2)
1. உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2
2. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2
திருத்தந்தை பதின்னான்காம் லியோன் அவர்களின் சுற்றுமடலில் இருந்து. 'நான் உன்னை அன்பு செய்தேன்' எனும் தலைப்பில் எமது வறுமை, எமது ஏழ்மைத்தன்மை பற்றிய தெளிவு எமக்கு இருக்கவேண்டும் என்றும், மேலும் எம்மைச் சுற்றிக் காணப்படும் ஏழைகளைப் பற்றிய எமது கடமைகளையும் தெளிவாக எடுத்தியம்பிய திருத்தந்தை எமக்கு தரும் அழகிய வார்த்தைகள் இவை...
ஏழைகளைப் பராமரிப்பதை நம்பிக்கையின் நேர்மையின் உறுதியான சான்றாகக் அருளின் மருத்துவர் கண்டார். கடவுளை அன்புசெய்கிறேன் என்றும், ஏழைகளுக்கு இரக்கம் காட்டவில்லை என்றும் கூறும் எவரும் பொய் சொல்கிறார்கள் (காண். 1 யோவான் 4:20). பணக்கார இளைஞனை இயேசு சந்தித்ததையும், ஏழைகளுக்கு தங்கள் உடைமைகளைக் கொடுப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'விண்ணக செல்வத்தை' (காண். மத்தேயு 19:21) பற்றி கருத்து தெரிவிக்கையில், ஒகஸ்டின் கடவுளின் நாவில் பின்வரும் வார்த்தைகளை வைக்கிறார்: 'நான் பூமியைப் பெற்றேன், இதனால் நான் சொர்க்கத்தைக் கொடுப்பேன்; நான் தற்காலிக நன்மைகளைப் பெற்றேன், இதனால் நான் நிரந்தர நன்மைகளைத் திருப்பித் தருவேன்; நான் அப்பத்தைப் பெற்றேன், இதனால் நான் உயிரைக் கொடுப்பேன்... எனக்கு விருந்தோம்பல் கொடுக்கப்பட்டது, ஆனால் நான் ஒரு வீட்டைக் கொடுப்பேன்; நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னைச் சந்தித்தீர்கள், ஆனால் நான் ஆரோக்கியத்தைக் கொடுப்பேன்; நான் சிறையில் இருந்தபோது என்னைச் சந்தித்தீர்கள், ஆனால் நான் சுதந்திரத்தைக் கொடுப்பேன். நீங்கள் என் ஏழைகளுக்குக் கொடுத்த அப்பம் உண்ணப்பட்டது, ஆனால் நான் கொடுக்கும் அப்பம் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல், அது ஒருபோதும் தீர்ந்து போகாது.' மிகவும் தேவையில் இருப்போருக்காக பணி செய்பவர்களுக்கு தாராள மனப்பான்மையில் எல்லாம் வல்லவரை மிஞ்ச முடியாதே. ஏழைகள் மீது அன்பு அதிகமாக இருந்தால், கடவுளிடமிருந்து வரும் வெகுமதி அதிகமாகும்.
சிந்திப்போம். (இல: 45)
இறை மன்னிப்பை ஏங்கி நிற்போம்.
பதிலுரையாக: என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்
1. எனது நம்பிக்கையின்மை
இறைவா என்னை மன்னியும் ஏனெனில் நான் வேற்றுத் தெய்வங்களை நாடிச் சென்றிருந்தேன். அது எவ்வளவு பெரிய பாவம் என அறியாமல் செய்துவிட்டேன். நாட்கள் பார்ப்பது, குறி கேட்பது, சூனியம் வைப்பது, தேவையற்ற சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என நான் அறியாது செய்துவிட்டேன். என்னைப் படைத்தவர் நீர் அல்லவா! எனக்கு வாழ்வு கொடுப்பதும் நீர் அல்லவா! ஆண்டவரே! என்னை மன்னியும்.
பதிலுரையாக: என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்
2. எனது மன்னிப்பின்மை
இறைவா என்னை மன்னியும் ஏனெனில் நான் என் உறவுகளை மன்னிக்க தவறிவிட்டேன். மன்னிப்பது எவ்வளவு கடினமானது என நான் அவர்கள் உறவை முறிக்கும்போது தான் எனக்கு தெரிந்தது. என் கடுமையான வார்த்தைகள், எனது பிடிவாதக் குணம், எனக்குள் புதிதாக முளைத்த கர்வம், என்னை வளரவிடாமல் செய்த பொறாமை, இவைகள் எல்லாமே என்னை முடக்கிவிட்டனவே. தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை. மனநோகப்பண்ணியது நான் அல்லவா! உனது துன்பத்தின் உச்சத்திலும் அச்சிலுவையில் உன் எதிரியை மன்னித்து ஏற்றது நீ அல்லவா! ஆண்டவரே என்னை மன்னியும்.
பதிலுரையாக: என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்
3. எனது காட்டிக்கொடுப்பு
இறைவா என்னை மன்னியும் ஏனெனில் நான் பிரமாணிக்கமாய் இருக்கவில்லையே. என் குடும்ப வாழ்வில் நம்பிக்கை இழந்த சந்தர்ப்பங்கள்; எனது சண்டைகள், எனது வார்த்தைப் பிரயோகங்கள், பொய்யான அன்பு, எனது வாழ்வை குறுகச் செய்யும் காம எண்ணங்கள், சந்தர்ப்பத்திற்கு ஏற்றால்போல் என்னை நான் மாற்றிக்கொண்டு பிறரைப் பற்றி பேசும் புறழிகள். நாட்ப்பட்ட காயங்கள்போல், துர்நாற்றம் அடிக்கும் வாழ்வாக மாறிவிட்டதே. ஐயோ ஆண்டவரே, நீர் பிறந்ததும் எனக்காகவே, கடவுளாய் இருந்தும் எமக்காய் எம்மைப் போல் உதித்தவதும் எனக்காகவே, அவமானங்கள் பட்டு, சிலுவைச் சாவை ஏற்றதும் எனக்காகவே. ஆண்டவரே என்னை மன்னியும்.
பதிலுரையாக: என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்
4. எனது கோபம்
இறைவா என்னை மன்னியும் ஏனெனில் நான் மனிதத் தன்மையையே இழந்துவிட்டேன். எனக்குள் இருக்கும் கோபம் எனது தாழ்ச்சியை, எனது பொறுமையை எனது விட்டுக்கொடுப்பை இல்லமலே செய்துவிட்டது. பலரின் கண்ணீருக்கு நான் ஆளாகிவிட்டேன். இந்த கோபம் தரும் ஆணவத்தால் நான் என்ன தான் சாதித்துவிட்டேன்? உறவுகளை இழந்தேன், பாசத்தை இழந்தேன், எனக்கும் அமைதியையே இழந்துவிட்டேன். இக்குற்ற உணர்வாலேயே தினம் தினம் செத்து மடிகின்றேன். ஆண்டவரே! உம்மை அவமானப் படுத்தும் போதெல்லாம் நீர் அமைதியாக இருந்தீர், அவர்களுக்காக செபித்தீர், அவர்களின் பலவீனங்களை ஏற்றுக்கொண்டீர். உம்மை நான் அவமதித்துவிட்டேன், ஆண்டவரே என்னை மன்னியும்.
பதிலுரையாக: என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்
5. எனது சுயநல ஆசைகள்
இறைவா என்னை மன்னியும் ஏனெனில் நான் சுயநலமாய் வாழ்ந்துவிட்டேன். எனக்காக எனக்காக என்று சொத்துக்களை, செல்வங்களை, பதவிகளை அபகரித்துக்கொண்டேன், உறவுகளை, என் சொந்த உறவுகளை காலால் மிதித்தேனே! இந்த சொத்துக்களுக்காய் என் உறவுகளையே ஏமாற்றிவிட்டேனே. எனது ஆசைகளுக்காக நான் வாழ்ந்த வாழ்வு, என்னைச் சுற்றியிருந்த ஏழைகளை மறந்துவிட்டேனே. ஒரு நேரம் உணவுக்காக என்னிடம் கையேந்தி கேட்டபோதும் கூட என்னால் கொடுக்க முடியவில்லை, ஆபத்தில் இருக்கும் நண்பர்கள் என்னிடம் உதவிகளை கேட்டும்போதும் கூட எனது மனம் கனியவில்லையே! நான் அவ்வளவு தூரம் சுயநலமாகிவிட்டேனா? ஆண்டவரே! நீர் கொடுப்பதில் வல்லவரே! அன்பைக் கொடுத்தீர், ஏழை வாழ்வின் அழகைக் கொடுத்தீர், பரிவுகொண்டு உணவு கொடுத்தீர், முடவனை நடக்கச்செய்தீர், குருடனை பார்வைபெறச் செய்தீர் ஆனால், என்னால் எதையும் செய்ய முடியவில்லையே! ஆண்டவரே என்னை மன்னியும்.
பதிலுரையாக: என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்
6. ஞானம் அற்ற வாழ்க்கை
இறைவா என்னை மன்னியும் ஏனெனில் நான் மதிப்பிழந்துவிட்டேன், வாய் தடுமாறிப் பேசிவிட்டேன். வார்த்தைகள் கடுமையாக இருந்தனவே! அவைகள் கத்திபோல பிறரின் வாழ்வை கிழித்துவிட்டதே. தாழ்ச்சியும், மதிப்பும், எளியான வாழ்வும், இறைவன் மேற்கொண்ட பயமும்தான் ஞானத்தின் வழிகள் என தெரியாமல் வாழ்ந்துவிட்டேன். நான் பெரியவரை, பணிசெய்கின்ற ஊளியர்களை, ஏன் எனது தாய் தந்தையையே மதிப்பதில்லையே. அவர்கள் வார்த்தைக்கு அடிபணிவதில்லையே. எனது சுயநலத்துக்காக அவர்களைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசியிருக்கின்றேன். இது எனது வாழ்வுக்குக் கிடைத்த சாபம் அல்லவா! நேர்மையாக வாழத் தெரியவில்லை, உண்மை பேசத் தெரியவில்லை, அமைதி காக்கத் தெரியவில்லை, பணிந்துபோகத் தெரியவில்லை, அன்பை கொடுக்கக் கூடத் தெரியவில்லை. இது எனது பலவீனம் அல்லவா! ஆண்டவரே உம்மிடம் பேச ஆசைப்படும்போது, அது எவ்வளவு ஆனந்தமாய் இருக்கின்றது. மனதுக்கு இனிமை தருகின்றது. கவலைகள் மறக்கத் தோணுகின்றது. ஆனால் நான் அப்ப்டி இருக்க தவறிவிட்டனே! என்னை மன்னியும்.
பதிலுரையாக: என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்
பாடல்
என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும் - 2
1. உமக்கெதிராய் பாவம் செய்தேன்
உம்மை பிரிந்து துரோகம் செய்தேன்
2. உம்மை எதிர்தேன் முணுமுணுத்தேன்
உம் குரலை கேட்க மறுத்தேன்
3. சொத்து சுகம்தேடி அலைந்துவந்தேன்
பத்துபாசம் நாடி சென்றேன் நான்
4. தீமைகளை நான் நினைத்தேன்
வேதனையில் உம்மை வெறுத்தேன்
லூக்கா எழுதிய நற்செய்தி: 12: 22-27
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: 'ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா? கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? ஆதலால், மிகச் சிறிய ஒரு செயலைக் கூடச் செய்யமுடியாத நீங்கள் மற்றவை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை; ஆனால், சாலமோன்கூடத் தம் மேன்மையிலெல்லாம் அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மறையுரை
இறைமக்கள் மன்றாட்டு
1. நாம் வாழ எம்மை வழிநடத்தும் இறைவா! நாம் கடந்துபோகும் 2025ம் ஆண்டிற்காக உமக்கு நன்றிகூறுகின்றோம். இந்த நிறை ஆண்டின் வழியாக நீர் எம்மை உருவாகியிருக்கின்றீர், எம்மை புடமிட்டிருக்கின்றீர், நீர் எம்மை உமது கருணையால் காத்திருக்கின்றிர். உள்ளத்தின் ஆழத்தில் இருந்து னாம் உமக்கு நன்றி சொல்கின்றோம். பிறக்க இருக்கும் புதிய ஆண்டில் உமது வல்லமையும், பாதுகாப்பும், வழிநடத்தலும் நிறைவாகக் கிடைக்க அருள்புரிய வேண்டுமென்று, ...
2. நாம் வாழ எம்மை வழிநடத்தும் இறைவா! நீர் எமக்கு தந்த அழகிய குடும்பத்திற்காக, உறவுகளுக்காக, எமது பங்கிற்காக, இறை பணியாளர்களுக்காக, நல்ல கல்விக்காக, தொழில்துறைக்காக நாம் உமக்கு நன்றி சொல்கின்றோம். இவற்றை ஒன்றிணைத்து பிறக்கும் புதிய ஆண்டில் புதிய வரங்களாய் எமக்கு அளித்தருள வேண்டுமென்று, ...
3. நாம் வாழ எம்மை வழிநடத்தும் இறைவா! இவ்வாண்டிலே, பல்வேறுபட்ட துன்பங்களால், இன்னல்களால் மற்றும் இழப்புக்களால் வலியை நெஞ்சில் சுமந்து வாழும் உம் பிள்ளைகளின் கண்ணீருக்கு செவிசாய்த்தருளும். கலக்கங்களும், காரிருளும் எம்மை சூழ்ந்தாலும், எம்மை கைவிட்டு விடாமல், கண்ணின் மணியைப் போல் தொடர்ந்தும் எம்மை அரவணைத்து காத்தருள வேண்டுமென்று, ...
4. நாம் வாழ எம்மை வழிநடத்தும் இறைவா! பல்வேறு அரசியல் நகர்வுகளால் எமது நாடு பெறும் நன்மைகளுக்காக நன்றி கூறுகின்றோம். மக்களை அதிகம் அன்புசெய்து அவர்களின் உரிமையை மதித்து எம்மை உயர்த்தி வைக்கும் நல்ல தலைவர்கள் உருவாகவும், பசியின்றி, அநீதி இன்றி, இனபாகுபாடின்றி, சமத்துவம் தேடும் எமது நாட்டு மக்களுக்கு நல்ல சுபீட்சம் கிடைக்க அருள்புரிய வேண்டுமென்று,...
5. நாம் வாழ எம்மை வழிநடத்தும் இறைவா! எமது குடும்பங்கள் உமது ஒளியின் கருவியாக வேண்டி மன்றாடுகின்றோம். ஒருவரை ஒருவர் மதிக்கவும், புரிந்துணர்வில் ஒன்றிப்பில் தொடர்ந்து பயணிக்கவும், அன்பை அடிப்படையாகக் கொண்டு உறவை விருத்திசெய்யும் நல்ல குடும்பங்கள் உருவாக அருள்புரிய வேண்டுமென்று, ...
குரு: மன்றாடுவோமாக
எம்மை எல்லாம் வழிநடத்தும் பரம்பொருளே இறைவா!
எம்மைக் கடந்துசெல்லும் 2025ம் ஆண்டை ஒரு கருவியாக எமக்கு தந்து
உமது மீட்பின் திட்டத்தில் எம்மை அதிகமாக இணைத்துக்கொண்டீரே!
நாம் சந்தித்த அனைத்து அனுபவங்களும் வாழ்வின் படிக்கற்களாக அமைவதாக.
எமது வாழ்வில் இணைந்துகொண்ட அனைத்து உறவுகளும்
எமது உயர்வுக்கான வழிகளாக அமைவார்களாக.
அன்னை மரியா இயேசுவை தனது உதரத்தில் சுமந்துகொண்டு
'எனது ஆன்மா இறைவனை ஏந்தி போற்றுகின்றது' என்று
தனது உள்ளத்தின் ஆழ்ந்த உண்மை அனுபவத்தை உலகறிய உரைத்தது போல,
எச்சந்தர்ப்பத்திலும், எச்சூழ்நிலையிலும், நாமும் எமது இறைவனை
உளமாற போற்றும் அருளையும் வல்லமையையும் கேட்போம்.
எமக்காக காத்திருக்கும் புதிய ஆண்டில், கால்பதிக்கும் ஒவ்வொரு நாளும்
இறைவனின் ஆசீரால் நிறைத்திருக்க வேண்டுவோம்.
எமக்கு முன் நிற்கும் சவால்களை எதிர்கொள்ள மனத்திடமும், உறுதியும் கேட்போம்.
தீமைகளை வென்று நன்மைகளை நிலைநாட்ட ஞானமும் அருளும் கேட்போம்.
இத்தனை நாட்களாக எம்மை வழிநடத்திய இறைவன் எம்மை தொடர்ந்தும் வழிநடத்துவாராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment