கிறிஸ்து பிறப்பு கவிதை - 2025

உயர்ந்திடு சூரியனே



தோன்றிடும் உலகத்தின் முன் தோன்றி 

உன்னத படைப்பாய் தனைக் கொடுத்து 

மண்ணிலும் தம் மூச்சிலும் மாந்தர் உயிர் பெற்று 

மானுடன் வாழ்வையே மண்ணகம் உயர்த்திட

மானுடனாய் பிறந்து மண்ணகம் ஒளிர்ந்திடும் பாலனே!


உயர்ந்திடு சூரியனே உலகமே உனைப் பார்க்க 

உயர்ந்திடும் உம் ஒளி உலகினில் மிளிர்வாயே 


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஆன்றோர் சான்றோர் 

அன்பராய் இறை தூதராய் இறை குரல் தந்தவர்கள்

வல்லராய் இறை வார்த்தையாய் உலகறிய உரைத்தவர்கள்

உண்மையாய் மெய்மையை இதயத்தில் விதைத்தவர்கள்

விண்ணகத்தின் ஒளியை மண்ணகத்தில் காண பாக்கியம் பெற்றோமே


உயர்ந்திடு சூரியனே உலகமே உனைப் பார்க்க 

உயர்ந்திடும் உம் ஒளி உலகினில் மிளிர்வாயே 


படைப்புக்களை வார்த்தையாய் வனைந்தவர் - அப்

படைப்பிற்குள்ளே தன்னைக் கொணர்ந்ததேன்? 

ஆயிரம் அழுகுரல் கேட்டதலால், ஆண்டவர் இதயம் கனிந்ததுபோல்

செங்கடல் கடந்துசென்று தம் மக்களை விடுவித்தவர் 

காலத்தின் தேவையிலே தன்னையே இவ்வுலகம் தந்தது ஏன்? 


உயர்ந்திடு சூரியனே உலகமே உனைப் பார்க்க 

உயர்ந்திடும் உம் ஒளி உலகினில் மிளிர்வாயே  


அமல உற்பவ அன்னை மரியின் கறையில்லா கருவரையை

கவனமாய் தேர்ந்தெடுத்து தூய்மையின் மகனாய் உதித்தாயே! 

இயேசுவே எம் அன்பரே! இன்று உம்மைக் காண்கின்றோம் 

எம் உடலாய் என் இரத்தமாய் உம்மை நாம் உணர்கின்றோம்

உலகத்தின் உயர்ந்திடும் ஒளியாய் உதித்திடுவாயே. 


உயர்ந்திடு சூரியனே உலகமே உனைப் பார்க்க 

உயர்ந்திடும் உம் ஒளி உலகினில் மிளிர்வாயே  


பசியென்னும் விதியோடு பலர் வாழ்வு மாண்டதே

போரெனும் புரட்சியில் பல நாடு தோற்றதே 

கடலும், மழையும், காற்றும், நிலமும் கண்ணீர் விடும் அவலம் என்ன! 

கைமீறிப் போகும் உலகில் காக்கும் வேந்தனாய் 

கரம் தந்து வரம் தந்து எம் கல்மனம் கரைந்திட வரம் தாராய்  


உயர்ந்திடு சூரியனே உலகமே உனைப் பார்க்க 

உயர்ந்திடும் உம் ஒளி உலகினில் மிளிர்வாயே  


அன்பெனும் இலக்கியம் இன்று நீ வரைந்துவிட்டாய் 

வானவர் பாடிடும் கீதத்தில் எம்மையும் இணைத்துவிட்டாய்

எத்துணை இன்பம் எத்துணை அமைதி அத்தனையும் - இன்று

ஓசான்னா புகழ் பாடி உறவினில் மகிழ்கின்றோம்

உலகமே உயர்ந்து உம் ஒளி காண ...


உயர்ந்திடு சூரியனே உலகமே உனைப் பார்க்க 

உயர்ந்திடும் உம் ஒளி உலகினில் மிளிர்வாயே 

ச. சுரேன், அமதி

Comments