திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு வாரம் - 14/12/2025

 திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு வாரம்



(இத்திருப்பலியில் ஊதா அல்லது ரோசா நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்)


திருப்பலி முன்னுரை

இறையே! இயேசுவே! எம் அழகிய அன்பரே! உமக்காகவே உம் வருகைக்காகவே ஏங்கும் எம் விழிகளுக்கு, அணையாத நம்பிக்கை சுடரை ஏற்றும்! இவ்வுலகின் போக்கை மாற்றும் மனித பாவங்களை தகர்த்தெறிந்து, நிலையான உம் வாக்கு எம் இதயத்தில் உயிராக உருவாகிட அருள்புரியும். 

இறை இயேசுவில் அன்புள்ள இறைமக்களே! இன்று திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வாரத்தில் கால் பதிக்கின்றோம். திருவருகை காலம் தரும் அழைப்பு மிக அழகானது. அறைகூவல் விடுக்கும் இறைவாக்கினரோடு இணைந்து பயணிக்கவும், எம்மை முழுவதுமாக மாற்றவும், எமக்குள் உதயமாகும் புதிய அருளை கண்டுகொள்ளவும், இக்காலம் அதிசயம் தரும் காலமாகவும் அமைவதாக. 

நற்செய்தியில், கேள்விகளை விடுக்கும் மக்களுக்கு, பதில்களைத் தரும் இயேசுவின் ஞானம் வியக்கத்தக்கதே. ஒவ்வொரு நிலையில் இருப்பவருக்கும் ஒவ்வொரு பதிலும் பெறுமதியானது. கேள்விகள் இலகுவானது போல தோன்றினும், அதை உண்மையாய் வாழ்வது என்பது இலகுவானது அல்ல. 

நாம் வாழும் இவ்வுலகு, நம்மை மெதுவாக இழக்கின்றது. எம்மைச் சூழ்ந்திருக்கும் நல் விழுமியங்கள் எம்மைவிட்டு அகன்றுபோகின்றது. அநீதியை நியாயப்படுத்தும் போது, பொய்களை உண்மைகளாக்கும் போது, பொறுப்புக்களை தவறவிடும்போது, குடும்பங்களை வெறுத்து ஒதுக்கும் போது, எம்மை சூழ்ந்திருப்போரின் நற்பெயரை கெடுக்கும்போது, எம் வார்த்தைகளால், உணர்வுகளால் பலரின் வெறுப்புக்குள்ளாகும்போது, சிலரின் வாழ்வை நிர்க்கதியாக்கும்போது இதே திருமுழுக்கு யோவானின் கேள்விகள் எமக்கும் கேட்கப்படுகின்றன. 

“மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே” என்னும் இயேசுவின் கூற்று எமக்கான அழைப்பாக மாறுகின்றது. இவற்றை ஆழ சிந்திக்கும் எமக்கு கிறிஸ்துவின் வருகை அர்த்தம் பெருகின்றது. சேர்ந்து பயணிக்கும் எமது வாழ்விலே, இறைவன் தரும் அருள்வளங்களை நிறைவாகப்பெற்று வாழ முயற்சிப்போம். அழகான இவ்வுலகிலே இயேசுவைத் தாங்கும் கருவிகளாக உயரவே ஒளிரும் சுடராக வாழ்ந்துகாட்டுவோம், இதற்கான இறைவரம் கேட்டு இப்பலியிலே மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி - காண். பிலி 4:4-5 - 

ஆண்டவரில் என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், அகமகிழுங்கள்; ஏனெனில், ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, இயேசுவின் பிறப்புப் பெருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உம் மக்களை நீர் கண்ணோக்குகின்றீர்; அதனால் இத்தகைய மாபெரும் மீட்பின் மகிழ்வுக்கு நாங்கள் வந்து சேரவும் இதைப் பெருமகிழ்வோடும் மேலான வேண்டலோடும் என்றுமே கொண்டாடவும் ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-6ய,10

அந்நாள்களில்

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப் படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்;

ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

பதிலுரைப் பாடல் திபா 146: 7. 8. 9-10 (பல்லவி: எசா 35: 4)

பல்லவி: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.

அல்லது: அல்லேலூயா.


7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்;

பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;

சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி


8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;

தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். - பல்லவி


9 ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்;

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;

ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.

10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! - பல்லவி

 

இரண்டாம் இறைவாக்கு

உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்;

ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-10

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடு இருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.


சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எசா 61: 1யஉ

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?

† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 2-11

அக்காலத்தில்

யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு மறுமொழியாக, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.

அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரச மாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரைவிட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

‘இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

 குரு: இம்மானுவேலனாக பிறக்க இருக்கும் எமது இயேசு, எம்மை மீட்கவும், எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கவும் பேரொளியாக துளங்கும் அவரிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 


1. அன்பின் ஆண்டவரே! உமது திருமகனின் பிறப்பிற்காக உமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை ஆயத்தம் செய்யவென உழைக்கும் ஒவ்வொரு திருநிலைப்பணியாளரும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் அன்பு சீடர்களாக மாறிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


2. இறைவா! உமது வருகைக்காக எம்மை தகுந்த முறையில் ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் நாம், உம்மை அறிந்து அறிவிக்கவும், நீர் எம்மை மீட்கவே வந்துள்ளீர் என்று ஏற்றுக்கொண்டு வாழவும் பிறரை வாழ்விக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


3. இறைவா! இவ்வுலகின் ஏழைகள் வறியவர்கள், துன்பப்படுவோர், அநாதைகள், வைத்தியசாலையில், சிறச்சாலையில் தவிப்போர் அனைவருக்கும் உமது பிறப்பின் செய்தி நம்பிக்கையையும், மன மகிழ்வையும், கொண்டுவர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


4. ஆண்டவரே! நீர் படைத்த இந்த அழகான உலகிலே, வரட்சியும், வறுமையும் கொடுமைகளும், துன்பங்களும், கொலைகளும், வன்முறைகளும் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும், நீர் பிறக்கும் போது இவற்றினால் துயருறும் மக்களை கைவிட்டுவிடாமல் உமது பரிவிரக்கத்தினாலும், அன்பாலும் அவர்களை மீட்டருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


5. ஆண்டவரே! ஏமது பங்கு மக்களின் வாழிவிலே நீர் கொண்டுவரும் அமைதியும், மகிழ்ச்சியும், சமாதானமும் நிறைவாய் தங்கிடவும், தாங்கள் நடந்துவந்த பாதையில்; ஏற்பட்ட தவறுகளை மன்னித்து, புதிய உலகம் படைக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


6. அன்பின் இறைவா! நாம் சந்தித்த எணர்த்தங்கள், பேரழிவுகள் மத்தியில் எம்மை வழிநடத்தியதற்காய் உமக்கு நன்றி கூறுகின்றோம். நாம் இழந்த உறவுகளுக்கு நித்திய இளைப்பாற்றியையும், இழப்பினால் தவிப்போருக்கு ஆறுதலையும், வீடுகள் உடமைகளை இழந்தோருக்கு நம்பிக்கையையும், எமக்கு மனித நேயத்தையும் விதைத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


குரு: அன்பின் இறைவா! ஆவலுடன் எதிர்பார்க்கும் உமது பறப்பிற்காக எம்மை தயார்ப்படுத்தியருளும். இருளின் மத்தியில் ஒளியாகவும், தடைகளின் மத்தியில் பாதையாகவும், துயரங்கள் மத்தியில் ஆறுதலாகவும் இருக்கச் செய்தருளும். உம்மை கண்டு வாழ்வதில் மகிழ்ச்சிகொண்டு பிறரையும் உமது கருவியாக மாற்ரியருளும். நாம் ஒப்புக்கொடுக்கும் மன்றாட்டுக்கள் உமதண்டை வந்து சேர்வதாக. என்றேன்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி : காண். எசா 35:4 

உள்ளத்தில் உறுதியற்றோரே! திடன் கொள்ளுங்கள்; அஞ்சாதிருங்கள்; இதோ! நம் கடவுள் வருவார்; நம்மை விடுவிப்பார் எனக் கூறுங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள். 


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments