அழகான தீர்மானம்

மிகவும் அழகான சிந்தனைகளில் ஒன்று !!!



அன்பார்ந்தவர்களே! நாம் 2025ம் ஆண்டிற்கான திருவருகைக் காலத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம், கிறிஸ்துவின் பிறப்புக்காக எம்மை தயார்படுத்துகின்றோம். இவ்வுலக மீட்பரின் பிறப்பு எமக்கு ஒரு புதிய விடியலைத் தரவேண்டி மன்றாட நாம் கடமைப்பட்டுள்ளோம். இவ்வுலகிலே நாம் காணும் யுத்தங்கள், வன்முறைகள், பட்டினிச்சாவுகள், அணர்த்தங்கள், அரசியல் நெருக்கடிகள், போதைக் கலாசாரம் என்பன எம்மை இன்னும் அதிகமாக இறைவனின் பிறப்பைப் பற்றி சிந்திக்க தூண்டுகின்றது. இவைகள் புதிய துயரங்கள் அல்ல இருப்பினும், இவைகள் எமக்கு புதிய வேண்டுதலாக அமைகின்றன. நாமும் அறியாமையோடு இருக்கக் கூடாது. எனவே எனது சிந்தனையில் உதித்த மிக அழகிய சிந்தனையை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். 

திருத்தந்தை எமக்கு மிக அழகிய சுற்றுமடலை எமது வாழ்வுக்கான உணவாக தந்திருக்கின்றார். "DILEXI TE - நான் உன் மீது அன்பு செலுத்தினேன்." திருத்தந்தை ஏழைகளைப் பற்றியும் இவ்வுலகின் வறுமையைப் பற்றியும் மிக ஆழமாகப் பேசுகின்றார். அதேவேளை திரு அவையின் பொறுப்பையும் உணர்த்துகின்றார். நாம் தொடங்கும் திருவருகைக் காலத்தை இச்சுற்றுமடலோடு பயணிக்க அழைக்கின்றேன். ஏழையாகப் பிறக்கும் கிறிஸ்துவுக்குள் எமது வாழ்வின் நிலைகள் எம்மோடு பேசவேண்டும், எமது ஏழைகளும் எமது வாழ்வில் பேசவேண்டும். இது இக்காலத்தின் தேவையாகின்றது. இதற்காக, நாம் தொடங்கும் திருவருகைக் காலத்தில் ஒவ்வொரு நாளுக்குமான  மறையுரைச் சிந்தனைக்குள் இச்சுற்றுமடலை உள்வாங்க அழைக்கின்றேன்; குறிப்பாக நான்கு ஞாயிறு திருப்பலியின் மறையுரையில் இச்சுற்றுமடலின் உள்ளடக்கத்தைப் பற்றி அழகாக தெளிவுபடுத்தலாம். கிறிஸ்துவின் பிறப்பில் 'கடவுள் ஏழையைத் தேர்ந்தெடுத்தார்' (DT. 16) என்பது மிக அழகிய மறைபொருளாகின்றது. எனவே கிறிஸ்துவை அறிவது எம்மைச் சுற்றியிருக்கும் ஏழைகளிடத்திலே என்பது திருத்தந்தையின் வெளிப்பாடாகவும் அவரது வேண்டுதலாகவும் அமைகின்றது. அவர்கள் இல்லாமல் கிறிஸ்து பிறப்பை கொண்டாட முடியாது. அவர்களின் துயர் அறியாமல் கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது பொருத்தமற்றது. சிந்திப்போம்.  

இதற்கான சில வழிமுறைகளாக: 

1. மறையுரைகளில் போதுமான விளக்கங்களை கொடுத்து எமது சிந்தனைகளில் மாற்றங்களை கொணர முன்வரலாம்;

2. ஏழைகள் பன்முகப்பட்டவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இவரகளை அடையாளம் காண்பதற்கு இச்சுற்றுமடல் உதவுகின்றது. எம்மைச் சுற்றியிருப்பவர்களில் மட்டும் ஏழைகள் வாழ்வதில்லை, எமக்கு தெரியாதவர்கள், அயல் நாடுகளில் இருப்பவரக்ள், இவ்வுலகம் தெரியாதவர்கள் என தொலைவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் ஏழைகளே! இவர்களுக்காக நாம் எமது நிலைகளில் இருந்து இறங்கி வரவேண்டும். 

3. இருப்பவரக்ள் இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்வதே பகிர்வு, சகோதரத்துவம். இதற்காக எமது வாழ்வை பற்றி சீர்தூக்கி பார்த்து சிந்திக்க இச்சுற்றுமடல் அழைக்கின்றது. குழுக்களால ஒன்றுசேர்ந்து இதுபற்றி கலந்தாலோசிக்க வேண்டும். குழுக்களாக தீர்மானம் எடுக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு நாள் உணவு வழங்குவதால் ஏழைகளுக்கான வாழ்வு வந்துவிடாது. ஒவ்வொரு நாள் உணவிலும் ஏழைகளுக்கான பங்கு உண்டு என்பதை உணரும் போது தான் அது வெற்றியளிக்கின்றது. 

4. எமது திரு அவையில் எமது ஆடம்பரங்களை குறைக்க வேண்டும். ஒளிரும் மின்குமிழ்களில், ஒரு நிமிட பட்டாசில், நறுமணம் வீசும் புத்தாடையில் ஒரு நாளும் கிறிஸ்துவின் பிறப்பு இடம்பெறுவதில்லை. அது சிலை வழிபாடு. ஒரு ஏழையின் வாழ்வில் எப்போது நம்பிக்கை பிறக்கின்றதோ அன்று தான் கிறிஸ்து பிறப்பு சாத்தியமாகின்றது. அதற்கு நான் காரணமானால் அவர் என்னில் பிறந்துவிட்டார். 

5. ஏழைகள் பற்றிய எமது எண்ணங்கள் எப்படி இருக்கின்றன? அவர்கள் எங்கள் வாழ்வில் எந்நிலையில் இருக்கின்றார்கள் அல்லது நாம் எங்கே அவர்களை வைத்திருக்கின்றோம்? திரு அவையில் அவர்களுக்குரிய உரிமை கடமை என்ன என்பது பற்றி ஆழமாகச் சிந்திக்க இச்சுற்றுமடல் எம்மை அழைக்கின்றது. 

திருத்தந்தையின் இச்சுற்றுமடல் எம்மை அதிகம் செபிக்க அழைக்கின்றது. எமது செபம் அதிக சக்தி வாய்ந்தது. இவ்வுலகை, அதன் சிந்தனைகளை மாற்ற வல்லது. ஒவ்வொரு மனிதனின் பிறப்பில் இவ்வுலகம் மகிழவேண்டும். ஆனால் அதன் இறப்பிற்கு இவ்வுலகம் காரணமாகக் கூடாது. மனிதப் பிறப்பு மகத்தானது, அதற்குள் வாழும் கடவுளின் திட்டங்கள் இன்னும் மேலானது. மனிதனை அழிக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் போராட செபிக்க வேண்டும். 

இதற்கான ஆயத்தங்கள் இனிதே தொடர இறைவனை வேண்டுகிறேன். 

அருட்தந்தை ச. சுரேந்திரராஜா, அமதி

Comments