பொதுக்காலம் முப்பத்து நான்காம் ஞாயிறு வாரம் - அனைத்துக்கும் அரசராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து - பெருவிழா - 23/11/2025
பொதுக்காலம் முப்பத்து நான்காம் ஞாயிறு வாரம் - அனைத்துக்கும் அரசராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து - பெருவிழா
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் இணைந்திருக்கும் என் இனிய உறவுகளே! இன்றைய கல்வாரிப்பலிக்கு உங்களை நாம் அன்புடன் அழைத்து நிற்கின்றோம். இன்று பொதுக்காலம் முப்பத்து நான்காம் ஞாயிறு வாரத்தைக் கொண்டாடுகின்றோம். அன்னையாம் திரு அவை இன்றைய ஞாயிரை அனைத்துலகின் அரசராம் நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றாள்.
இயேசுவை இவ்வுலகு அரசராக கொண்டாடவேண்டும், ஏனெனில், அவரது ஆட்சி நிலையானது, உண்மையானது, பாவத்திற்கு இடங்கொடாதது, சம நிலைத் தீர்ப்பு அளிக்க வல்லது, பிரிவினைகள் பாராபட்சம், பாகுபாடு காட்டாதது. இவரது அரசு எளிமையானது, அனைவரையும் அரவணைக்கக் கூடியது. உலகிற்காக உயிரை கொடுப்பதுவே தலைவனின் சிறந்த பண்பும் பணியுமாகின்றது. இன்றைய இன்றைய தொடக்கவுரை செபத்திலே, 'நீர் உம்முடைய ஒரே பேறான திருமகன் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அமைதியை வழங்கும் மாசற்ற பலிப்பொருளாகச் சிலுவைப் பீடத்தில் தம்மையே அவர் ஒப்புக்கொடுத்து மனிதருக்கு மீட்பு அளிக்கும் அருளடையாளங்களை நிறுவினார். அவரது ஆட்சி, உண்மையும் வாழ்வும் ஒங்கும் ஆட்சி; புனிதமும் அருளும் நிறைந்த ஆட்சி; அன்பும் அமைதியும் நிலவும் ஆட்சியும் ஆகும்.' என்று கிறிஸ்து இயேசுவின் மாபெரும் மான்புமிகு பணியை குறித்துக் காட்டுகின்றது. எம்மையும் தனது சுவீகார பிள்ளைகளாக மாற்ற தனது இரத்தத்தால் எங்களை கழுவினார். இன்று, இயேசுவின் ஆட்சி போன்று எமது குடும்பமும், சமூகமும் எமது நாடும் மிளிர மன்றாடுவோம். உண்மைக்கு சான்றுபகிரும் சமூகம் உருவாக மன்றாடுவோம், உறவினை கட்டியெழுப்பும் சமூகம் உருவாகிட மன்றாடுவோம். உலகெங்கும் சென்று இயேசுவின் நற்செய்தி பரப்பிட, எமைப் பயன்படுத்தும் இறைவனுக்கு நன்றி கூறி, தொடரும் பலியில் பங்கெடுப்போம்.
வருகைப் பல்லவி - திவெ 5:12; 1:6
கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது. இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, அனைத்துக்கும் அரசரான அன்பார்ந்த உம் திருமகனில் அனைத்தையும் புதுப்பிக்கத் திருவுளமானீர்; அடிமைநிலையிலிருந்து விடுதலை அடைந்த படைப்பு அனைத்தும் மாண்புக்கு உரிய உமக்குப் பணி புரியவும் உம்மை முடிவின்றிப் புகழ்ந்தேத்தவும் அருள்புரிவீராக. உம்மோடு .
முதல் இறைவாக்கு
இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-3
அந்நாள்களில்
இஸ்ரயேலின்அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.”
இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)
பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். -பல்லவி
4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்;
இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க
ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
தந்தையாம் கடவுள் நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-20
சகோதரர் சகோதரிகளே,
தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.
அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன.
திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மாற் 11: 10
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 35-43
அக்காலத்தில்
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்” என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்று எள்ளி நகையாடினர். “இவன் யூதரின் அரசன்” என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு: ஆதாம், விண்ணகம் செல்வதற்கான தடுத்து வைத்த வழியை இயேசு தனது மரணம் உயிர்ப்பு வழியாக திறந்து வைத்தார். பாவிகளுக்கு மீட்பை பெற்றுக் கொடுத்தார். அவரது அரச ஆட்சி உரிமை பெற்றுத்தந்த இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழவும் அவரது அருளையும் ஆசீரையும் பெறவும் அவரிடம் மன்றாடுவோம்:
1. கருணையின் இறைவா! நீர் எமக்கு தந்த திரு அவைக்காக நன்றி கூறுகின்றோம். அதிலே தம்மை தியாகம்செய்து பணியாற்றுகின்ற அனைத்து நிருநிலைப்பணியாளர்கள், பொது நிலைப் பணியாளர்கள் அனைவரையும் உமது ஆசீராலும் அரவணைப்பாலும் வழிநடத்த வேண்டிய அருளைப் பெழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அல்லது
"திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே" எனும் புனித பவுலின் உரைக்கல்லிக்கேற்ப, கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட அனைவரும் தமது திருமுழுக்கால், கிறிஸ்துவின் குருத்துவத்தால், இறைவாக்கு பணியால், நற்செய்திக்கு சான்று பகிர வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. கிறிஸ்து தமது இரத்தம் சிந்தி இவ்வுலகை மீட்டுக்கொண்டார், தனது சிலுவை மரணத்தினால் இவ்வுலகின் பாவம் போக்கி எம் அனைவரையும் தனது பிள்ளைகளாக மாற்றிக்கொண்டார். நாமும் அவரை அரசராக ஏற்றுக்கொண்டு இவ்வுலகை இறைவனின் ஆட்சி நிறைந்த அரசாக மாற்றிட அதற்காக நாமும் உழைத்திட வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. இறந்த ஆன்மாக்களை நினைந்து அவர்களுக்கக செபிக்கும் இந்த மாதத்திலே, எம் பங்கிலே, எமது குடும்பங்களிலே இருந்து இறந்துபோன குருக்கள், துறவிகள், பெற்றோர்கள், உறவுகள், நண்பர்கள் அனைவருக்காகவும் மன்றாடுவோம். திருமுழுக்கினால் அழைக்கப்பெற்று, இயேசுவின் திரு விருந்தினால் ஊட்டம் பெற்று இம்மண்ணுலக வாழ்வுக்கு அர்த்தம் சொன்னவர்கள், விண்ணகத்திலும் இறைவனது பேரின்ப மாட்சி காண வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. 'அனைத்தும் அவர் வழியாய் அவருக்காக படைக்கப்பட்டன' என்று புனித பவுல் கூறுவதைப்போல் இறைவன் அழைப்பை ஏற்று வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரை அரசராக ஏற்று அவர் படைப்பிலே மகிழ்ந்து, அதை பொறுப்புடன் விருத்தி செய்யவும், அதைக் கரம் கொடுத்து பாதுகக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. எமது நாட்டின் தலைவர்கள் தங்களது பொறுப்புமிக்க பணியை ஆழ உணர்ந்தவர்களாய், மக்களின் பொது நலனுக்காய் தங்களை அர்ப்பணிக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: அன்பின் ஆண்டவரே! உமது மரணத்தால் மீட்பை கொண்டுவந்து, பாவிகள் மனந்திரும்பவும், ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெறவும் அருள்கூர்ந்தீரே. உமது உயிர்ப்பினால் எமது அழியக்கூடிய உடலுக்கு மகிமையை தந்து அழியா ஆன்மாவின் தூய்மையை காக்க சித்தம் கொண்டீரே. உம்மை அரசராக ஏற்றுக்கொள்ளும் எமக்கு இந்த வரங்களை எல்லாம் நிறைவாய் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம்மோடு மனிதரை ஒப்புரவாக்கும் இப்பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை மக்களினத்தார் அனைவருக்கும் உம் திருமகனே கொடுத்தருள்வாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
தொடக்கவுரை: அனைத்துக்கும் அரசராம் கிறிஸ்து
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
நீர் உம்முடைய ஒரே பேறான திருமகன்
எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை
என்றென்றும் குருவாகவும் அனைத்துக்கும் அரசராகவும்
அக்களிப்பின் தைலத்தால் அருள்பொழிவு செய்தீர்.
இவ்வாறு அமைதியை வழங்கும் மாசற்ற பலிப்பொருளாகச்
சிலுவைப் பீடத்தில் தம்மையே அவர் ஒப்புக்கொடுத்து
மனிதருக்கு மீட்பு அளிக்கும் அருளடையாளங்களை நிறுவினார்.
படைப்புகள் அனைத்தையும் தமது ஆட்சிக்கு உட்படுத்தி
நிலையான, அனைத்துலக ஆட்சியை
அளவில்லா மாண்புடைய உமக்குக் கையளித்தார்.
அது உண்மையும் வாழ்வும் ஒங்கும் ஆட்சி;
புனிதமும் அருளும் நிறைந்த ஆட்சி;
அன்பும் அமைதியும் நிலவும் ஆட்சியும் ஆகும்.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்களும் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.
திருவிருந்துப் பல்லவி - திபா 28:10-11
ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருப்பார்: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியில் ஆசி வழங்குவார்.
திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு
ஆண்டவரே, சாகா வரம் தரும் உணவை உட்கொண்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அனைத்துக்கும் அரசராம் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் பெருமை கொள்ளும் நாங்கள் அவருடைய விண்ணக ஆட்சியில் அவரோடு என்றென்றும் வாழ ஆற்றல் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
அருட் தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment