பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு வாரம் - 16/11/2025

  பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவின் கல்வாரிப் பலிக்கு அன்பின் மக்களாக குழுமிவந்துள்ள என் அன்பு இறைமக்களே! பொதுக்காலம் முப்பது மூன்றாம் ஞாயிறு வாரம் எமக்கு புதிய வலிமையையும், புதிய தைரியத்தையும் தருகின்றது. இக் கல்வாரிப் பலியில் இணைந்து, அனைத்தையும் வாரி வழங்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம், அவர் கல்வாரி அனுபவத்தை சொந்தமாக்குவோம், அவரின் பாதை சென்று அவ் அன்பை பிறரோடு பகிர்ந்துகொள்வோம். 

இறைவார்த்தைகளின் அனுபவம் அழகானது. நீதியுடன் ஆண்டவர் ஆட்சி செய்வார், நீதியின் கதிர்களை எம்மேல் உதிக்கச்செய்வார் எனவே நாமும் அவரின் பாதையில் நேரிய மனதுடனும், உண்மை வழியிலும் நடக்க அழைக்கப்படுகின்றோம். இயேசுவே எமது வழி, எமது மீட்பர், எமது இலக்கும், நோக்கமும் அவரே என்பதை கற்றுக்கொண்டு வழி நடக்க அழைக்கப்படுகின்றோம். இதையே இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு தெளிவுபடுத்துகின்றன. 

இன்றைய திருப்பலியிலே நாம் பல்வேறு விண்ணப்பங்களோடு வந்திருந்தாலும், இவ்வுலகின் தேவைகளில் சற்று கவனத்தை திருப்பி, துன்பப்படும் மக்களுக்காக, பட்டினியில் வாடும் மக்களுக்காக, உலகத்தின் ஒவ்வொரு கோணத்திலும் நடைபெறும் யுத்தங்கள் நிறைவுக்கு வரவேண்டுமென்றும், இயற்கை அனர்த்தங்களால் நாளும் துன்பப்படும் மக்களுக்காகவும் மன்றாட இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இவ்வுலகத்திலே அனைத்து மக்களும் இறைவனின் பிள்ளைகளே! அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களையும் எமது உறவுகளாக இணைத்து, அவர்களின் நல்வாழ்வுக்காகவும் செபிக்க கடமைப்பட்டுள்ளோம். அத்தோடு எமது திரு அவை முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும், நாமும் ஆர்வமுள்ளவர்களாகவும், அத் திரு அவையின் வாழ்வுக்காக உழைப்பவர்களாகவும் திகழ வரம்வேண்டுவோம். 

நாம் அனைவரும் சேர்ந்து ஒப்புக்கொடுக்கும் இவ் உன்னதப்பலியில் இணைந்து, நாம் கேட்ட அனைத்து விண்ணப்பங்களையும் இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து இறை அருள் வேண்டி இப் பலிதனிலே கலந்திட்டுவோம். 


வருகைப் பல்லவி - எரே 29:11-12,14 

ஆண்டவர் கூறுகிறார்: நான் துன்பங்களின் எண்ணங்களை அல்ல, அமைதியின் எண்ணங்களை எண்ணுகிறேன். நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். எல்லா இடங்களினின்றும் உங்களது அடிமைத்தனத்திலிருந்து உங்களை மீண்டும் அழைத்து வருவேன்.


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 4: 1-2a

“இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

“ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 98: 5-6. 7-8. 9 (பல்லவி: 9d)

பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.


5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;

யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.

6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி

கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். -பல்லவி


7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!

8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். -பல்லவி


9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்;

ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;

பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;

மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-12

சகோதரர் சகோதரிகளே,

எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.

‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.

இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19

அக்காலத்தில்

கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.

மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.

இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


இறைமக்கள் மன்றாட்டு


1. புனித திரு அவைக்காக மன்றாடுவோம்: 

இறைவா! நீர் தந்த இந்த திரு அவையை பாதுகாரும். தீமைகள் அனைத்திலும் இருந்தும், போலி பேதகங்களில் இருந்தும் வழிநடத்தும். தேவ அழைத்தலை தாரும், அதன் புனிதத்தை வளர்த்திட உழைக்கும் அனைவரையும் காத்திட வரமருள வேண்டுமென்று, ...


2. இந்நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுவோம்:

இறைவா! நீர் கொடுத்த இந்த அழகிய திரு நாட்டிற்காக நன்றி சொல்கின்றோம். பல்-சமய உறவுகளையும், பல்-மொழி உணர்வுகளையும்  மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி அபிவிருத்தியிலும் எம் நாட்டை முதன்மைப்படுத்த  நீர் எமக்கு தந்த தலைவர்களுக்காக நன்றி கூறுகின்றோம். இவர்களை வாழிநடத்தும், ஆற்றலைக் கொடும், விவேகத்தினால் நாட்டின் தீர்மானங்களை பகுப்பாய்வுசெய்து அதன் உயர்ச்சியில் பங்களிக்க அருள்புரிய வேண்டுமென்று, ...


3. எமது குடும்பங்களில் இறந்துபோனவர்களுக்காக மன்றாடுவோம்: 

இறைவா! நீர் எமக்கு தந்த அனைத்து உறவுகள், நண்பர்கள், சொந்தங்கள், நன்கொடையாளிகள், குருக்கள், துறவிகள் அனைவருக்காகவும் நன்றி சொல்கின்றோம். இவர்களில் சிலர் இன்று எம்முடன் இல்லை. இவர்களின் வாழ்வுக்காக, வார்த்தைகளுக்காக, நல்ல செயல்களுக்காக, புரிந்துகொண்ட உயரிய உறவுக்காக, செய்த கொடைகளுக்காக நன்றி சொல்லி, இவர்களின் ஆன்மாவை ஏற்று, வான்வீட்டில் இடமளித்திட வேண்டுமென்று, ...


4. யுத்தங்கள் நிறைவுற மன்றாடுவோம்: 

இறைவா! நாடுகளுக்கு நாடு நடைபெறும் யுத்தங்கள் நிறைவுறவேண்டி உருக்கமாக மன்றாடுகின்றோம். அதிகாரமும், ஆட்சியும், வல்லமையும், ஆற்றலும் நீர் ஒருவரே என்பதை இவர்கள்  புரிந்துகொள்வார்களாக. இதன் விளைவாக பாதிப்புறும் குடும்பங்கள், பிள்ளைகளின் கல்வி, எதிர்கால சுபிட்சம் அனைத்தையும் இந்நாட்டு தலைவர்கள் விளங்கிக்கொள்வார்களாக. அமைதியும், மகிழ்ச்சியும், சமத்துவமும் மிக விரைவில் கனிகளாக மலர்ந்திட அருள்புரியவேண்டுமென்று, ...


5. புதிய எதிர்காலத்தை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்:

இறைவா! பணமோக்கத்தாலும், வியாபார மோகத்தாலும், போதைவஸ்தாலும், சினிமாவாலும் சிதைவுறும் எமது இளைஞர்களின் எதிர்காலத்தை ஒப்புக்கொடுக்கின்றோம். நல்ல விழுமியங்களை எம் மனங்களில் விதைத்திடும் புதிய முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டு, கல்வியிலும், உயரிய துறைகளிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்த அருள்புரிய வேண்டுமென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மாண்புக்கு உரிய உமது திருமுன் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை இறைப்பற்றின் அருளையும் நிலையான பேரின்பத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தருவதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - திபா 72:28

கடவுளின் அண்மையே எனக்கு நலம். ஆண்டவராகிய கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.


அல்லது - மாற் 11:23-24

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். கேட்டபடியே உங்களுக்கு நடக்கும், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா

Comments