பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
பகலின் பனியில் பசுமைகண்டு, பறக்கும் பறவைகளின் புதிய ஒலியைக் கேட்டு, மறைந்த சூரியனின் புதிய உதயம் கண்டு, புதிய நாளில் இதயம் நிறைந்த மகிழ்விலும், உரிமைகொள்ளும் நிறைந்த உறவிலும் இன்று இப் பலிப்பீடம் தேடி வந்திருக்கின்றோம். பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் ஞாயிறுவாரத்தில் இணைந்து இறைவனின் அருளையும், அவர் ஆசீரையும் பெற வந்திருக்கின்றோம்.
இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு நம்பிக்கையை கற்றுத்தருகின்றன. விடாமுயற்சியுடன் கூடிய செப வாழ்வு எம்மை இறைவனின் பக்கம் திருப்புகின்றது. எம்மை அன்பு செய்து உருவாக்கிய இயேசுவிடம் எமக்குண்டான உன்னத உறவுப் பரிமாற்றம் இருக்கின்றது. அதை நாம் மறக்கக் கூடாது.
நாம் பின்பற்றும் இயேசு, அனைத்து மக்களுக்குமான ஓர் உன்னத அடையாளமே. தனது வார்த்தைகளால் மாத்திரம் அல்ல, தனது உணர்வுகளின், சிந்தனைகளின் வெளிப்பாடாக தன்னை செயலாக்கி, தன்னை கருவியாக்கி, தன்னை இவ்வுலகம் உற்றுநோக்கும் வெளிச்சமாக்கி, வாழ்வைக் கொடுக்கும் உணவாக மாறுகின்றார் இயேசு. நாம் வாழ்வைத் தொலைத்தாலும் இயேசுவில் எம்மை மீண்டும் பெற்றுக்கொள்வோம்; நாம் நிலை தடுமாறி போனாலும், இயேசுவில் எம்மை சீர் செய்துகொள்வோம்; இதுவே எமது நம்பிக்கை, இதுவே எமது தெரிவு. இந்த ஆழ்ந்த சிந்தனைகளை எமது மனதிலே இருத்தியவர்களாக தொடரும் இக்கல்வாரிப் பலியில் இணைந்துகொள்வோம்.
விரும்பினால் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்:
இன்று திரு அவையினராகிய நாம் மறைபரப்பு ஞாயிரைக் கொண்டாடுகின்றோம். திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் செய்தியை அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். நாம் அவரின் கருவியாக இருந்து அந்நற்செய்தி தரும் மகிழ்வில் எம்மையும் இவ்வுலகத்தையும் இணைக்கக் கடமைப்பட்டுள்ளோம். இன்று அப்பணியைச் செய்யும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. குறிப்பாக துன்பப்படும் மக்கள் மத்தியில், வலுவிழந்தோர் மத்தியில், உரிமைக்காக போராடும் மக்கள் மத்தியில், யுத்தத்தினால் நம்பிக்கை அழந்து தவிப்போர் மத்தியில் கிறிஸ்துவின் ஒளியாக நம்பிக்கையாக பணியாற்றுவோருக்காக நாம் செபிப்போம். இறைவன் விரும்பும் நிறைவாழ்வும், அவர் எமக்குக் கொணரும் அமைதியும் நிலைத்து திற்க வேண்டுமென்றும் மன்றாடி இப்பலியில் இணைந்துகொள்வோம்.
வருகைப் பல்லவி - காண். திபா 16:6,8
இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும். ஆண்டவரே, கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னைப் பாதுகாத்தருளும்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் எப்போதும் உமது திருவுளத்துக்கு ஏற்ப வாழச் செய்தருளும்; அதனால் மாண்புக்கு உரிய உமக்கு நேர்மையான இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரியச் செய்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 17: 8-13
அந்நாள்களில்
அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். மோசே யோசுவாவை நோக்கி, “நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்” என்றார். அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே, ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றனர்.
மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக் கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும்வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 121: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 2)
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி.
1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்!
எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். -பல்லவி
3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்;
உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார்.
4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை;
உறங்குவதும் இல்லை. -பல்லவி
5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;
அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;
அவரே உமக்கு நிழல் ஆவார்!
6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;
இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. -பல்லவி
7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;
அவர் உம் உயிரைக் காத்திடுவார்.
8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14 - 4: 2
அன்பிற்குரியவரே,
நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில்
சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”
பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.
இறைமக்கள் மன்றாட்டு
1. உயிரின் ஊற்றே இறைவா! எமது பங்குத் திரு அவையின் வளர்ச்சிக்காக உழைக்கும் எமது பங்கு தந்தையை ஆசீர்வதியும். கிறிஸ்தவ நம்பிக்கையை எமது மனங்களில் பதித்து, கிறிஸ்துவை எமக்கு திருப்பலி வழியாக உணவாகத் தரும் இவரின் வாழ்வு உயர்ந்திடவும், அன்பிலும் அருளிலும் சிறந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...
அல்லது
உயிரின் ஊற்றே இறைவா! எமது திரு அவையில் பணியாற்றும் அனைத்து மறை பணியாளர்களையும் ஆசீர்வதியும். தங்களது வாழ்வால் திரு அவைக்கு அணிசேர்க்கவும், தமது அர்ப்பணம் மிக்க தெரிவுகளால் இயேசுவுக்கு சாட்சிய வாழ்வு வாழ அருள்புரிய வேண்டுமென்று, ...
2. உயிரின் ஊற்றே இறைவா! இன்று உலகின் அனைத்து கோணங்களிலும் யுத்தத்தினால் அவதியுற்று, பட்டினியால் மடிந்துகொண்டிருக்கும் எமது மக்களுக்கு நம்பிக்கையும், துணியைவும் அமைதியையும் எடுத்துரைக்கும் மறைபரப்பாளர்கள் உமது கருவிகளாக செயற்பட வேண்டுமென்று, ...
அல்லது
உயிரின் ஊற்றே இறைவா! இயற்கையின் அழிவுக்குள் அகப்பட்டு வாழும் எமது மக்களை பாதுகாரும். மழையிலும், மண்சரிவிலும் அச்சத்தில் விழித்தெழ முடியாமல் இருக்கும் எமது மக்கள், விரைவில் தமது அன்றாட வாழ்விற்கும் கால்பதித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
3. உயிரின் ஊற்றே இறைவா! கல்வி எனும் காலத்தால் அழியாத கலையை கற்கும் எமது பிள்ளைகள் அதன் மெய்பொருள் உணர்ந்து தம்மை அர்ப்பணிப்பார்களாக. எமது நாட்டின், இவ்வுலகத்தின் உயர்ர்ந்த, சிறந்த தலைவர்களை உருவாக்கவும், மாறிவரும் உலகின் சிந்தனைகளுக்கு எதிர்கொண்டு செல்லத் தகுந்த தகுதியாளர்களாக தம்மை உருவாக்கிட அருள்புரியவேண்டுமென்று, ...
4. உயிரின் ஊற்றே இறைவா! இவ்வுலகின் தீமைகளுக்கு அடிபணியும் அனைத்து தலைவர்கள், மக்களின் வாழ்வுக்காக தம்மை மாற்றிக்கொள்வார்களாக. பணத்துக்காகவும், பதவிக்காகவும் அடிமை வாழ்வை, போலி வாழ்வை உருவாக்கும் அனைவரும், நிலையானவற்றில் தம்மை செலுத்தி, நீதியையும், சமத்துவத்தையும் சமமாக வாழும் வாழ்வைக் கற்றுக்கொள்ள அருள்புரியவேண்டுமென்று, ...
5. உயிரின் ஊற்றே இறைவா! எமது பங்கில் வாழும் அனைத்து பிறமதத்தினருக்காக மன்றாடுகின்றோம். அன்பை அணிகலனாகக் கொண்டு, ஒன்றிணைந்து பங்கேற்கும் புதிய சந்தர்ப்பங்கள் உருவாகி, நன்மைகள் பரவும் நல்லுறவுகள் மிளிர்ந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்த கொடைகளையே நாங்கள் உமக்கு மனம் உவந்து அளிக்க அருள்புரியுமாறு உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது அருள் எங்களைத் தூய்மையாக்கி, நாங்கள் நிறைவேற்றும் அதே மறைநிகழ்வுகள் வழியாக உமது புனிதப்படுத்தும் அருளைப் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி - காண். திபா 32:18-19
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன் பில் நம்பிக்கை கொள்வோரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்; அதனால் அவர்கள் ஆன்மாவைச் சாவினின்று காக்கின்றார்; பஞ்சத்தில் அவர்களுக்கு உணவளிக்கின்றார்.
அல்லது மாற் 10:45
பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு மானிட மகன் வந்துள்ளார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, விண்ணகப் பலியில் நாங்கள் அடிக்கடி பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இவ்வுலக நலன்களின் உதவியால் மறுவுலக நலன்களை நாடக் கற்றுக்கொள்வோமாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment