பொதுக்காலம் இருபத்து எட்டாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறைவனின் உறவில் இணைந்து, இதயத்தில் அவரை புகழ்ந்து, உயிரிலும் உணர்விலும் எம் உறவோடு கலந்து, அழகுதரும் இயற்கையின் அரவணைப்பில் ஆனந்தம்கொண்டு, அன்பைக் கொண்டாட, அருளை சுவைக்க இன்றைய நாளில் ஒன்றுகூடியுள்ளோம். பொதுக்காலம் இருபத்து எட்டாம் ஞாயிறுவாரத்தில் இணைந்திருக்கின்றோம். இப் புதிய, அழகுதரும் நாட்களும் வாரமும் எமது வாழ்வின் உயர்ச்சிப் படிகளை புடமிடுவதாக.
இறைவனின் வார்த்தைகள் இன்று எமக்கு ஒரு புதிய செய்தியை தருகின்றன. நாம் இறைவனில் நம்பிக்கை கொள்ள வேண்டும் அத்தோடு நன்றியுடையவராகவும் இருக்க வேண்டும். "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது" அதாவது நாம் எதுவுமே செய்யாதபோது, நமக்காக ஒருவர் உதவிசெய்யும் போது அதற்குக் கைமாறாக வையகத்தையும் மண்ணகத்தையும் கொடுத்தாலும் இணையாகாது என்பதுபோல், இறைவன் செய்த அரும்பெரும் உதவிகளுக்கு இறைவனுக்கு நாம் இணையாகக் கொடுக்கும் நன்றியின் பரிசுதான் என்ன? என்பது பற்றி இன்று அதிகம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.
பொருள்தேடும் புகழ்தேடும் இவ்வுலகிலே நாம் ஒரு புதிய இலக்கியம் வரையவேண்டும். இறைவனின் வார்த்தையே நல்ல செய்தியாக, ஞானத்தின் உறைவிடமாக, மீட்பு தரும் பாதையாக, எமது இருள் நிறைந்த வாழ்வுக்கான விடியலாக அமையவேண்டும். இந்த ஞானத்தின் வார்த்தையே கருவாகி, மனுவுருவாகி, எம் அனைவரின் உறவாகி இவ்வுலகத்தின் ஒளியாகி உதித்தவர். படைப்பாகி இருந்தவர் படைப்பிற்குள்ளே தன்னைத் தந்து எமக்கு தம்மை வெளிப்படுத்தினார். இதை மகிழ்வோடு ஏற்று வாழுவோம். இயேசுவை புதிதாய் காணுவோம். நாம் அவரின் சீடராக வாழுவோம், இறுதிவரை அவரையே பற்றிக்கொண்டு அவருக்காக அனைத்திலும் அனைத்துமாக வாழ்வோம்.
இந்த சிந்தனைகளோடு தொடரும் பலியில் இணைந்துகொள்வோம்.
வருகைப் பல்லவி திபா 129:3-4
ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளே, உம்மிடமே மன்னிப்பு உள்ளது.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, உமது அருள் என்றும் எங்கள் முன் செல்லவும் எங்களைத் தொடர்ந்து வரவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நற்செயல் புரிவதில் என்றும் கருத்தாய் இருக்கச் செய்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
நாமான் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 14-17
அந்நாள்களில்
நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப் போல் மாறினது.
பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து,“இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்” என்றார்.
அதற்கு எலிசா, “நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்” என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்பொழுது நாமான் அவரை நோக்கி, “சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர வேறு தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒருபோதும் செலுத்தமாட்டேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2-3a. 3b-4 (பல்லவி: 2 காண்க)
பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்
உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி
3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கிறிஸ்துவோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-13
அன்பிற்குரியவரே,
தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர் பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.
பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: ‘நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத் தகாதவரெனினும் அவர் நம்பத் தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.’ இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 1 தெச 5: 18
அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19
அக்காலத்தில்
இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. இறை பணியே தமது வாழ்வு என்றும், இறைமக்களே தாம் காணும் மறு இயேசு கிறிஸ்து என்றும் தம்மை அர்ப்பணித்து செயலாற்றும் அனைத்து திரு அவைப் பணியாளர்களையும் இறை அருளால் நிறைத்து வழிநடத்தவும், இறை ஞானத்தால் தமது வாழ்வை கொண்டுசெல்லவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
2. உலகத்தின் பல்வேறு கோணங்களில் நடந்தேறிக்கொண்டிருக்கும் யுத்தத்தால் அவதியுறும் மக்களுக்கு ஒரு விடிவைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம். அமைதியும் பரஸ்பர ஒன்றிப்பும் பிறர்நல அக்கறையும் இவ்வுலகத்தின் மக்களை மதித்து நேசித்து செல்லக்கூடிய வழிகள் எனக் கண்டுகொண்டு அதற்காக உழைக்கும் வரத்தை அனைத்து தலைவர்களுக்கும் அளித்திட வேண்டுமென்று, ...
அல்லது
உலகில் நடைபெறும் பாரிய யுத்தங்கள் நிறைவுக்கு வரவும், அரசியல் மாற்றங்கள் அனைத்துமே மக்களுக்கு சாதகமானதாக அமையவும், ஒவ்வொரு நாட்டின் இறைமைக்கு களங்கம் விளைவிக்காமல் அதை பாதுகாத்திட உழைக்கும் அனைத்து தலைவர்களையும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...
3. எமது நாட்டின் புதிய பரிணாம வளர்ச்சியில், பாடுபடும் அனைத்து தலைவர்களும் எம் நாட்டுக்கான ஒளியாக உப்பாக திகழ்வார்களாக. தீமையின் கொடுக்களில் இருந்து எம் மக்களை பாதுகாத்து, நாம் அனைவரும் விரும்பித்தேடும் அன்பின், அமைதியின், நீதியின் பாதையை காட்டியருள வேண்டுமென்று, ...
4. கிறிஸ்தவ நம்பிக்கை இழந்து, வாழ்வை இவ்வுலகப் போக்கோடு தொடர்புகொண்டு வாழும் அனைவரும், இயேசுவை அறியும் அவா பெறுவார்களாக. இயேசுவை மறுதளிப்பவர்கள், விலகிச் செல்பவர்கள், வாழ விருப்பமில்லாதவர்கள், அருள் இழந்து போனவார்கள் அனைவரும் தூய ஆவியின் வல்லமை பெற்று இயேசுவை பறைசாற்றும் வாஞ்சை பெற வேண்டும்மென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி - காண். திபா 33:11
நன்மை செல்வர் வறுமையுற்றனர், பசியுற்றனர்; ஆண்டவரை நாடுவோருக்கு ஏதும் குறைவுபடாது.
அல்லது 1 யோவா 3:2
ஆண்டவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பது போல் நாம் அவரைக் காண்போம்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனிதமிக்க உடலாலும் இரத்தத்தாலும் எங்களுக்கு உணவு அளிப்பது போல எங் கள். எங்களை அவரது இறை இயல்பிலும் பங்குபெறச் செய்வீராக.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment