பொதுக் காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு 06/10/2025

 பொதுக் காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு 



திருப்பலி முன்னுரை 

 “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” 

இறை இயேசுவில் அன்புள்ள என் உறவுகளே! இயேசுவின் பெயரால் நாம் உங்களை இக்கல்வாரிப் பலிக்கு அழைக்கின்றோம். பொதுக்காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு வாரத்தில் இணைகின்றோம். மகிழ்வோடு தொடங்கும் இன்றைய நாளில், இறை அன்பும் இறை வல்லமையும் எம்மை ஊக்கப்படுத்துவதாக, திடப்படுத்துவதாக எம்மை நிறைவாழ்வுக்கு அழைத்துச் செல்வதாக. 

இன்றைய வார்த்தை வழிபாடு இறை-மனித உறவின் மேன்மையையும் இறைவனில் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையையும் எடுத்தியம்புகின்றது.  உடலும் உயிரும் உறவிலே இணையும் போது, உண்மையும், மெய்மையும் உள்ளத்தால் உணரும் போது, படைத்த இறைவன் எம்மில் படைப்பாய், பண்பாய், அன்பாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அன்பை தரும் அழகிய இறைவன், தன்னை எம்மில் ஒருவராக்கி இன்னும் வியாபித்துக்கொண்டிருக்கிறார். இதுவே இன்றைய இறை வார்த்தைகளின் மெய்பொருளாய் அமைகின்றது. 

நாம் கடந்து செல்லும் இந்த உலக வாழ்க்கை எமது நம்பிக்கைக்கு சவாலாகவே அமைகின்றது. எம்மைச் சுற்றியிருக்கும் எம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துமே நம்பிக்கையை மழுங்கடிக்கின்றது. உலக அறிவை செயற்கை அறிவுக்குள் கொண்டுவந்த மனிதன் இன்று அதைக் கொண்டாடுகின்றான். இதுவே எமது அறிவை வெறுமையாக்கி அதை பொய்மையாக்கி, இறைவன் தங்கும் இதயத்தில் குப்பைகளையும், குறைகளையும் சேர்த்துவைக்கும் பொருளாக மாற்றுகின்றது. ஆயினும் எம்மை இயக்குவது இறைவனே எனும் ஆழமான நம்பிக்கையில் நாம் சம்பாதிக்கும் கிறிஸ்த விழிமியங்களை வாழ்வாக்க இறைவரம் வேண்டுவோம். நாம் செல்லும் பாதை நம்பிக்கைக்கான விதையாகிய தூய ஆவி எம்மை வழினடத்த வேண்டுமென்று இறைவரம் கேட்டு இப்பலியில் இணைந்து மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - காண். எஸ் 4:17 

ஆண்டவரே, அனைத்து ம் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன; உமது திருவுளத்தை எவராலும் எதிர்த்து நிற்க முடியாது. விண்ணையும் மண்ணையும் விண்ணின் கீழ் உள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே. நீரே அனைத்துக்கும் ஆண்டவர்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் தகுதிக்கும் நாங்கள் விரும்பிக் கேட்பதற்கும் மேலாகவே உமது மிகுதியான பரிவிரக்கத்தால் எங்களுக்கு அருளுகின்றீர்; அதனால் எங்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிந்து மனச்சான்றுக்கு அச்சம் விளைவிப்பவற்றை மன்னித்து, நாங்கள் கேட்கத் தயங்கும் மன்றாட்டை நிறைவேற்றுவீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 2-3; 2: 2-4

ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணைவேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?

நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன.

ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: “காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரே உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.


1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.

2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;

புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி


6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;

நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.

7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;

நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.

இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி


8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல்,

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்;

என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்து வெட்கமடையத் தேவை இல்லை.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-8, 13-14

அன்பிற்குரியவரே,

உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 1 பேது 1: 25

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.  இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்...

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 5-10

அக்காலத்தில்

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. என்றும் வாழும் இறைவா! உமது திரு அவைக்காக நன்றி கூறுகின்றோம். உலமெல்லாம் சென்று பல வழிகளில், பல துறைகளின் மூலம், பல்வேறு பணிகள் ஊடாக உமது நற்செய்தியை பரப்பிடும் அனைத்து உள்ளங்களையும் நிறைவாக ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

2. என்றும் வாழும் இறைவா! உமது ஆசீரால் அமையப்பெற்ற எமது குடும்பங்களுக்காக நன்றி கூறுகின்றோம். நாளும் நாம் வாழும் சூழலில், இடையூறுகள் மத்தியில், உமது அன்பையும், திரித்துவ ஒன்றிப்பையும் வெளிப்படுத்தும் நல்ல குடும்பங்களாக இவைகள் மாற்றம் பெற்றிட வேண்டுமென்று, ...

3. என்றும் வாழும் இறைவா! எமது நாட்டுக்காக நன்றி சொல்லி மன்றாடுகின்றோம். நாம் எதிர்பார்ர்க்கும் அடிப்படை மாற்றங்கள் அரசியல் தலைவர்கள் ஊடாக நிகழ்ந்தேறவும், எமது நாட்டிலே மகிழ்வுடனும் அமைதியுடனும் வாழும் வரத்தை எம் மக்களுக்கு அளித்திடவேண்டுமென்று, ...

4. என்றும் வாழும் இறைவா! எமது வாழ்வின் வளர்ச்சிக்காக மனம் நிறைந்து துணைபுரியும் அனைவருக்காகவும் நன்றி சொல்லி மன்றாடுகின்றோம். நாம் முன்னோக்கிச் செல்லும் பாதையில் உடன்சென்று, உதவிகள் பல புரிந்து, கரம்கொடுத்து தூக்கிவிடும் அனைவருக்கும் உமது ஆசீரைக் கொடுத்தருள வேண்டுமென்று, ...

5. என்றும் வாழும் இறைவா! எமது பங்கில் நோய்வாய்ப்பட்டிருப்போருக்காக மன்றாடுகின்றோம். பல்வேறு அக, புறக் காரணிகளால் நோய்வாய்ப்பட்டு தினமும் வேதனையுறும் அனைவருக்கும் கரங்கொடுக்கும் இறைவனாக, உதவிபுரியும் நண்பனாக, குணமளிக்கும் மருத்துவனாக இருந்தருள வேண்டுமென்று, ...

6, என்றும் வாழும் எல்லாம் வ்ல்ல இறைவா! எமது பங்கில் மற்றும் எமது மறைமாவட்டத்தில் தங்களை தியாகம் செய்து பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்கள், பணியாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்காகவும் நன்றி சொல்லி  அவர்களின் தாராள உள்ளம் எமக்கு ஓரு முன் உதாரணமாக இருந்திட அருள்புரிந்திட வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் கட்டளைகளாலும் தூய மறைநிகழ்வுகளாலும் நிறுவப்பட்ட பலிகளை நீர் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: உமக்கு ஏற்ற ஊழியம் புரிந்து நாங்கள் கொண்டாடும் இப்பணியால் தூய்மையாக்கப்பட்டு, உமது மீட்பின் நிறைவைப் பெறத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

ஆண் டவரில் நம்பிக்கை வைப்போருக்கும் அவரைத் தேடுவோருக்கும் அவர் நல்லவர்!

காண். 1 கொரி 10:17

அல்லது

அப்பம் ஒன்றே. நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் பங்குகொள்கிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் பெற்றுக்கொண்ட கிறிஸ்துவின் அருளடையாளத்தால் புத்துணர்வும் ஊட்டமும் பெறுகின்றோம்; இவ்வாறு நாங்கள் அவராகவே மாறிட எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments