புனிதர் அனைவரும் - பெருவிழா
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் இணைந்திருக்கும் என் உறவுகளே! இன்று அன்னையாம் திரு அவை அனைத்து புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றாள்.
"நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்" என்று திருத்தூதர் யோவான் எமக்கு நினைவூட்டுவது எம்மை இறைவன் தமக்குரிய பிள்ளைகளாகவே தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்கின்றார் என்பதாகும். எமது திரு அவையில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளாக அழைக்கப்படுகின்றோம். அதுமட்டுமன்றி நாம் புனிதத்துவப் பாதை காட்டும் வாழ்வுக்கும் அழைக்கப்படுகின்றோம்.
ஒவ்வொரு புனிதனும் இவ்வுலகில் வாழ்ந்து சென்றவர்கள். அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர்கள், அனைத்து சவால்களிலும் இறைவனை வாழ்ந்தவர்கள். நம்பிக்கை வாழ்வுக்கு வரைவிலக்கணம் சொன்னவர்கள். நற்செய்தியில் இயேசுவின் ஒவ்வொரு மலைப்பொழிவு பகிர்வும் இவர்களையே சாரும்.
ஏழைகளைன் உள்ளத்தினராக, துயறுருவோராக, கனிவுடையோராக வாழ்ந்தோர்; நீதிக்காக, உரிமைக்காக போராடியோர்; தூய்மையை அணிகலனாக கொண்டு செயற்பட்டோராக இவர்கள் வாழ்ந்தவர்கள். இன்று திரு அவை இவர்களை நினைந்து இறைவனுக்கு நன்றி சொல்கின்றது. கிறிஸ்துவுக்காய் சான்றுபகரும் அதே சாட்சிய வாழ்வு இன்றும் தொடர்வதற்காய் திரு அவை இவர்களை எமது பரிந்துரையாளர்களாய் உயர்த்துகின்றது.
நாமும் புனித வாழ்வு வாழுவோம். இவ்வுலகின் கொள்கைகள், விழுமியங்கள், ஆன்மாவை மழுங்கடிக்கும் அனைத்துச் செயற்பாடிகளிலிருந்தும் எம்மை விடுவித்து இறைவனுக்காய் வாழும் வரம்கேட்டு பலியில் இணைந்துகொள்வோம். அனைத்துப் புனிதர்களின் பரிந்துரை கேட்டு மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
புனிதர் அனைவரின் புகழ்ச்சிக்காக இன்று பெருவிழாக் கொண்டாடும் நாம் எல்லாரும் ஆண்டவரில் அகமகிழ்வோமாக; அவர்களுடைய பெருவிழாவில் வான தூதரும் மகிழ்ந்து, இறைவனின் திருமகனைப் புகழ்கின்றனர்.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பேறு பயன்கள் நிறைந்த உம் புனிதர் அனைவரையும் நாங்கள் ஒரே விழாவில் வணக்கமுடன் கொண்டாடச் செய்தீரே; எண்ணற்ற புனிதர்களின் பரிந்துரையால் நாங்கள் விரும்பித் தேடும் உமது இரக்கத்தை எங்களுக்கு மிகுதியாகப் பொழிவீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14
கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, “எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார். முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.
இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.
அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்” என்று பாடினார்கள்.
மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார். நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.
அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 24: 1-2. 3- 4ab. 5-6 (பல்லவி: 6)
பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்;
ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. -பல்லவி
3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். -பல்லவி
5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே:
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3
சகோதரர் சகோதரிகளே,
நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-1 2a
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
இறைமக்கள் மன்றாட்டு
1. எமது திரு அவையை அனைத்துத் தீமைகளில் இருந்து பாதுகாத்த இறை பணியாளர்களுக்காய் நன்றி சொல்கின்றோம். இவர்களின் ஞானமிக்க அறிவாலும், எடுத்துக்காட்டான வாழ்வாலும் திரு அவையை ஒளிர்வித்ததற்காய் நன்றி சொல்கின்றோம், மேலும் இன்னும் அதிகமாய் எமது திரு அவைப் பணியாளர்கள் உருவாகவும் திரு அவையை அனைத்து தப்பறையான போதகங்கள், கொள்கைகளில் இருந்து காத்தருள வேண்டுமென்று, ...
2. இறைவா! எமது திரு அவைக்கு நீர் தந்திருக்கும் அனைத்து புனிதர்களுக்காய் நன்றி சொல்கின்றோம். அனைத்துக் காலத்திலும் வாழ்ந்த புனிதர்களுக்காகவும், அவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் உமது சாட்சிகளாக இருந்து, உமது வார்த்தையை வாழ வைத்து, கனி கொடுக்கச் செய்ததற்காய் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் இன்று எமது வாழ்க்கைப் பாதைகளில் உமது நற்செய்தியை தொடர்ந்து வாழ்ந்திட அருள்புரிந்திட வேண்டுமென்று, ...
3. எமது திரு அவையில் புனித விதைகளை விதைத்து உம்மை வாழ்ந்துவிட்டு சென்றவர்களுக்காய் நன்றி சொல்கின்றோம். கிறிஸ்துவின் சீடத்துவ அழைப்பில், மறைபரப்பாளர்களாய் உலகெங்கும் சென்று பணியாற்றி நம்பிக்கை விதையை இதயத்தில் விதையிட்டவர்கள் போல் நாமும் அவ்வழைப்பைப் பெற்று வாழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
4. அன்பின் ஆண்டவரே! வன்முறையின் விளிம்பிலே நின்று அவதியுறும் சூழ்நிலைகள் மத்தியில், பொறுமையான பேச்சுவார்த்தை நடாத்தி, போர் நிறுத்தங்களையும் அமையான ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளும் அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். அவர்களின் முயற்சிகள் மற்றும் விடாமுயற்சியின் பலன்களை இவ்வுலகம் இன்னும் அனுபவிக்க அருள்புரிய வேண்டுமென்று, ...
5. அன்பின் ஆண்டவரே! குடும்பத்திற்காக அதன் நலனுக்காக வாழும் பெற்றோர்கள், சமுக நலனுக்காக வாழும் ஆர்வலர்கள், திரு அவை நலனுக்காக வாழும் பணியாளர்கள், கல்வி நலனுக்காக வாழும் ஆசிரியர்கள், நாட்டுக்காக வாழும் அரசியல் தலைவர்கள், உடல் உள நலனுக்காக வாழும் வைத்தியர்கள் என அனைவரும் இக்காலத்தின் கடமைகளை நன்கறிந்து செயற்படவும் அவர்களின் தியாகமும் அர்ப்பணமும் இன்னும் போற்றப்படவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, புனிதர் அனைவரின் பெருமைக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் இருப்பனவாக; இவ்வாறு அப்புனிதர்கள் ஏற்கெனவே சாகாத்தன்மையைப் பெற்றுவிட்டனர் என்பதை நம்புகின்ற நாங்கள் எங்களது மீட்பில் அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர் என்பதையும் உணரச் செய்வீராக. எங்கள்.
தொடக்கவுரை: நம் அன்னையாம் எருசலேமின் மாட்சி.
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் இன்று உமது அருளால்
எங்கள் அன்னையாகிய விண்ணக எருசலேம் நகரின்
பெருவிழாவைக் கொண்டாட எங்களுக்கு அருளினீரே;
அங்கேதான் எங்கள் சகோதரர் சகோதரிகளாகிய புனிதர்கள்
உம்மைச் சூழ்ந்து நின்று, முடிவின்றிப் போற்றிப் புகழ்கின்றார்கள்.
அந்நகரை நோக்கியே நாங்கள் நம்பிக்கையோடு பயணம் செய்து,
ஆர்வமுடன் விரைகின்றோம்;
அங்கேதான் திரு அவையின் உறுப்பினர் உன்னத நிலையடைந்து,
மாட்சி பெறுகின்றனர் என மகிழ்கின்றோம்;
ஏனெனில் வலுவற்ற எங்களுக்குப்
பேருதவிகளையும் முன் மாதிரியையும்
அவர்கள் வழியாக அருளுகின்றீர்.
ஆகவே அப்புனிதர்களோடும் வானதூதரின் பெருந்திரளோடும்
நாங்கள் ஒன்றுசேர்ந்து உம்மைப் போற்றிப் புகழ்ந்துச் சொல்வதாவது:
தூயவர்.
திருவிருந்துப் பல்லவி - மத் 5:8-10
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
இறைவா, உம் புனிதர் அனைவரிலும் நீரே வியப்புக்கு உரியவர் எனவும் தூயவர் எனவும் உம்மை வழிபட்டு, நாங்கள் உமது அருளை வேண்டுகின்றோம்: உமது அன்பின் நிறைவாகிய புனிதத்தில் பங்குபெறும் நாங்கள் திருப்பயணிகளுக்கான இத்திருவிருந்திலிருந்து விண்ணக வீட்டின் விருந்துக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment