பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறு -
திருச்சிலுவையின் மாட்சி' விழா
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் இணைந்திடும் அன்பு உள்ளங்களே! இன்று 'திருச்சிலுவையின் மாட்சி' யின் விழாவாகும்.
இஸ்ராயேல் மக்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொண்டு வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்து சென்றது ஒரு வரலாற்று நிகழ்வையும் அதன் ஆழமான இறையியலையும் எமக்கு காட்டுகின்றது. எகிப்தை ஒரு தீமையின் அடையாளமாகவும், வாக்களிக்கப்பட்ட நாட்டை இறைவனின் ஆசீர் நிறைந்த நாடாகவும் ஆசிரியர் காட்டி நிற்கின்றார். செங்கடலை கடந்த நிகழ்வின் ஊடாக: பகைவர்கள் தீர்ப்பிடப்பட்டனர், இறைவனின் மக்கள் மீட்கப்பட்டனர்; பகைவர்கள் கண்டிக்கப்பட்டனர் இஸ்ராயேல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர்; இவர்கள் கடந்து சென்றார்கள், எகிப்தியர் மூழ்கடிக்கப்பட்டார்கள். தீமையினால் முடங்கிப் போயிருந்த மக்களை மீட்பதற்கான வழியை காட்டியது சிலுவை எனலாம்.
இன்று திருச்சபைக்கு தேவையான அருள் ஆசீர்கள் அனைத்தும் அந்த சிலுவையில் இருந்து தான் ஊற்றெடுக்கின்றன. சிலுவையில் காணப்பட்ட பலி வாழ்வு, பணி வாழ்வாகின்றது; சிலுவையின் துன்பங்கள், வலிகள், கைவிடப்பட்ட நிலைகள், இரத்தம் சிந்தும் நிலை கூட ஏன் மரணம் கூட இன்றைய திருச்சபையின் வாழ்வியல் நிலையாகின்றது. அத்தோடு, சிலுவையிலே சொல்லப்பட்ட செபம், திருச்சபைக்கு தேவையாகின்றது; அது சுகமளிக்கும் அருமருந்தாகின்றது. சிலுவையில் இயேசுவின் கண்களோடு ஏழைகளை திருச்சபை பார்க்க வேண்டும், செவிமெடுக்க வேண்டும், ஆறுதல்படுத்த வேண்டும், உருகும் இதயம் கொண்டு வாழ வேண்டும். இதனால் தான் சிலுவையை கண்ட மனிதர்கள் விலகி சென்றனர், ஒதுங்கிச் சென்றனர், வெறுத்தனர், அவமதித்தனர். சிலுவை ஒவ்வொருவரையும் பார்க்க வைத்தது. ஏனெனில், சிலுவையை பார்த்தவர்கள் தங்களை அர்ப்பணித்தனர். இது தான் சிலுவை தரும் பாடம்.
சிலுவையின் மகிமை எனும் மூலம் நாம் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இயேசுவின் கண்களினூடாக இவ்வுலகை ஆழ உற்று நோக்குவோம். இதற்கான வரம் கேட்டு தொடரும் இப்பலியில் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - காண். கலா 6:14
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை பாராட்ட வேண்டும். அவரிலேதான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும் உண்டு. அவர் வழியாகவே நாம் மீட்கப்பெற்றோம்; விடுதலை அடைந்தோம்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, மனிதர் அனைவரின் மீட்புக்காக உம் ஒரே திருமகன் சிலுவையை ஏற்கத் திருவுளமானீரே; இவ்வாறு அச்சிலுவையின் மறைபொருளை இவ்வுலகில் அறிந்திருக்கின்ற நாங்கள் அதன் மீட்பின் பயனை விண்ணுலகில் பரிசாகப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெற அருள்புரிவீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9
அந்நாள்களில்
ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.
உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர்.
அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)
பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.
1 என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்;
என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள்.
2 நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்;
முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். -பல்லவி
34 அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்;
மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.
35 கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும்
அவர்கள் நினைவில் கொண்டனர். -பல்லவி
36 ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்;
தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.
37 அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை;
அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. -பல்லவி
38 அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்;
அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார்.
தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
இயேசு தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11
சகோதரர் சகோதரிகளே,
கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமிடம் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. கருணையின் இறைவா! எமது திரு அவையை பாதுகாத்தருளும். அனைத்து இன்னல்களிலும், நெருக்கீடுகளிலும் உமது தொடர் வழிநடத்தல் இருக்கவேண்டுமென்று, ...
2. கருணையின் இறைவா! எமது பங்குதந்தையை ஆசீர்வதித்தருளும். இப்பங்கின் நல்வாழ்வுக்காக உழைக்கும் இவரை உமது அருளால் நிறைத்துக் காத்தருளவேண்டுமென்று, ...
3. கருணையின் இறைவா! எமது பங்கில் உள்ள பிற சமய உறவுகள் அனைவருக்கும் உமது அருளையும் பாதுகாப்பையும் அளித்தருளும். அவர்களின் அன்பும் புரிந்துணர்வும் எமது வள்ர்ச்சிக்காகவே அமைந்திட வேண்டுமென்று, ...
4. கருணையின் இறைவா! பல்வேறு நாடுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நொந்துபோய்கிடக்கும் அனைத்து உறவுகளின் உணர்வுகளை ஒப்புக்கொடுக்கின்றோம். நீரே அவர்களின் ஆறுதலாக, அரவணைப்பவராக, துன்பத்தில் தாங்குபவராக இருக்கவேண்டுமென்று, ...
5. கருணையின் இறைவா! திருச்சிலுவையின் விழாவைக் கொண்டாடும் நாங்கள் அச்சிலுவை எமக்குச் சொல்லித்தரும் பாடங்களான வெறுமை, தாழ்ச்சி, விட்டுக்கொடுப்பு, சுயநலமற்ற அன்பு போன்ற விழுமியங்களை ஏற்று அவற்றை எமது வாழ்வின் ஆன்மிக வளர்ச்சிக்கு ஏற்றுவாழ அருள்புரிய வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, சிலுவைப் பீடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கை அனைத்துலகப் பாவங்களையும் போக்கியது; இப்பீடத்தில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை குற்றங்கள் அனைத்திலிருந்தும் எங்களைக் கழுவித் தாய்மைப்படுத்த அருள்புரிவீராக. எங்கள்.
தொடக்கவுரை: மாட்சிமிகு சிலுவையின் வெற்றி
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
மனிதர் அனைவரும் சிலுவை மரத்தால்
மீட்பு அடைய வேண்டும் என நியமித்தீர்.
இவ்வாறு எதிலிருந்து சாவு தோன்றியதோ
அதிலிருந்து வாழ்வு புத்துயிர் பெறவும்,
மரத்தினால் வெற்றி கண்டோர் காத்தினாலேயே தோல்வி காணவும் வேண்டும் என இருந்தது.
அவர் வழியாகவே உமது மாண்பை வானதூதர் புகழ்கின்றனர்;
தலைமை தாங்குவோர் உம்மை வழிபடுகின்றனர்;
அதிகாரம் செலுத்துவோர் உம் திருமுன் நடுங்குகின்றனர்;
வானங்களும் அவற்றில் உள்ள ஆற்றல்களும் சேராபீன்களும்
ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்.
அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது:
தூயவர்.
திருவிருந்துப் பல்லவி - யோவா 12:32
நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, உமது புனித உணவால் ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் வாழ்வு தரும் சிலுவை மரத்தால் நீர் மீட்டருளிய எங்களை உயிர்ப்பின் மாட்சிக்கு அழைத்துச் செல்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
.jpeg)
Comments
Post a Comment