பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
அன்பினில் இணையும் இறை குலமாக, அருளில் நனையும் அவர் உறவாக இன்று நாம் அனைவரும் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். பொதுக்காலம் இருபத்துமூன்றாம் ஞாயிறு வாரத்தில் இணையும் நாம், தொடர்ந்தும் அவர்வழி செல்ல, அவர் அழைப்பை ஏற்று புதிய இஸ்ராயேல் குலமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக வாழ இங்கு கூடி வந்துள்ளோம்.
இன்று கிறிஸ்துவின் சீடனாக இருக்க எமக்கு ஓர் அழைப்பு தருகின்றது இன்றைய இறைவார்த்தைகள். அதுமட்டுமன்றி அவரது சிலுவைய தூக்கிச் சுமந்து செல்லவும் எம்மை அழைக்கின்றன. சிலுவை சுமப்பதன் வழிதான் இயேசுவின் பாடுகளின் மற்றும் துன்பங்களின் பெறுமதி எமக்கு புரியும் என்பதை உணர்த்தி நிற்கின்றன. இதையே புனித பவுலும் தனது மடல்களின் வழியாக உணர்த்தி நிற்கின்றார்.
இன்று நாமும் இயேசுவில் கொண்ட அளவுகடந்த நம்பிக்கையையும் அன்பையும் அதிகரிப்போம், உறுதிசெய்வோம். நாம் காணும் வாழ்வியற் போராட்டங்கள் மேலும் உலகபோக்குக்கள், இறைபற்றற்ற வாழ்வு என அனைத்தும், இயேசுவில் கொண்ட எமது அன்பையும், புரிதலையும் பிரித்துவிடாமல் இருக்க மன்றாடுவோம். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், எம்மை தொட்டுச் செல்லும் ஒவ்வொரு நிகழ்வும், எமக்கு அனுபவமாகும் ஒவ்வொரு மனிதனும் இறைவன் கொடுத்த அதிசயங்களே என்பதை உணர்ந்து கொள்வோம்.
(இம்மாதம் இயற்கையோடு நெருங்கிப் பயணிக்கவும், அதை எமது அன்பால், எமது பாதுகாப்பால், பராமரிப்பால் இன்னும் மேம்படுத்தவேண்டும் என்று திருத்தந்தை எமக்கு அழைப்பு விடுக்கின்றார். அதைக் கருத்திற்கொண்டு இவ் இயற்கையை தாயின் கருவரைபோல நாம் பேணிப்பாதுகாக்க வேண்டும் அதற்காக முயற்சிக்க வேண்டும்.)
இதற்காக, இந்நாளுக்காக மேலும் நாம் பெற இருக்கும் புதிய ஆசீர்வாதங்களுக்காக நன்றிகூறி, எமது வாழ்வின்வழி இறைவனை மகிமைப்படுத்த அவர் வரம் கேட்டு இப்பலியில் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
ஆண்டவரே, நீர் நீதி உள்ளவர்; உமது தீர்ப்பு நேர்மையானது - உமது இரக்கத்துக்கு ஏற்ப உம் ஊழியனை நடத்தியருளும்.
திருக்குழும மன்றாட்டு
எங்களுக்கு மீட்பும் பிள்ளைகளுக்கு உரிய உரிமையும் வழங்கும் இறைவா, உம் அன்புக்கு உரிய மக்களைக் கனிவுடன் கண்ணோக்கும்; அதனால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள உம் மக்களுக்கு உண்மையான விடுதலையையும் நிலையான உரிமைப் பேற்றையும் அளிப்பீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9: 13-18
“கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண்கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.
மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்? நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக் கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும்
இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி
5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்;
அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை?
உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
இனி அவனை நீர் அடிமையாக அல்ல, உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்.
திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9b-10,12-17
அன்பிற்குரியவரே,
கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா119: 135
அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச்செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
உங்களுள் தம் உடைமை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
அக்காலத்தில்
பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: அன்பின் ஆண்டவரே! இவ் இயற்கை உலகை ஓர் அழகிய அதிசயமாகக்கொண்டு, இவ்வுலகின் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, இறை அருளை தமது வாழ்வாலும், அருட்கொடைகளாலும் அளிக்கும் எமது திரு அவை ஊழியர்கள் அனைவரும் உமது ஆவியால் உந்தப்படவும், அவர்களுக்கு தேவையான நிறை கொடைகளை அளித்திட அருள்புரியவேண்டுமென்று, ...
2. எமது திருத்தந்தைக்காக மன்றாடுவோம்: தமது வாழ்வில் கொண்டிருக்கும் இயேசுவின் அழகிய மதிப்பீடுகளை அவர் எடுக்கும் பெறுமதியான முயற்சிகளில் கொணரச் செய்தருளும். இவ்வுலகில் மனிதர்களில் அன்பையும், சமயங்களில் புரிதலையும், அரசியல் தலைமைத்துவத்தில் மனித உரிமையையும் இத்திருத்தந்தை வழியாக நீர் அளித்திட வேண்டுமென்று, ...
3. எமது நாட்டுக்காக மன்றாடுவோம்: புதிய விடியல் நோக்கி செல்லும் எமது நாட்டின் அரசியல் மாற்றங்கள் நிலையானதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற வேண்டுகின்றோம். மக்கள் வாழ்வே எமது இலக்கு என்று தம்மை அர்ப்பணிக்கும் புதிய தலைவர்கள் உருவாகவும், உயரிய எண்ணங்களோடும், வலிமையான விழுமியங்களோடும் இந்நாட்டை தாங்கும் தலைவர்கள் உருவாக அருள்புரிய வேண்டுமென்று, ...
4. எம் பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் ஆண்டவரே! நாம் அமைக்கும் இவ் அழகிய பங்கு சமூகம் உமது திரு அவையின் ஒன்றிப்பை காட்டுவதாக. எமக்குள் மிளிரும் அன்பையும், பகிர்வையும், விட்டுக்கொப்பையும், தெளிவான சிந்தனைகளையும், பிறருக்கான எமது செபங்களையும், உமது ஆவியின் வெளிப்பாடாக கொள்வோமாக. அனைவரையும், அனைத்திலும் நாம் தாங்கிச் செல்லவும் எமது உழைப்பையும் வாழ்வையும் ஆசீர்வதிக்கவும் வேண்டுமென்று, ...
5. எமது இயற்கை உலகிற்காக மன்றாடுவோம்: இவ்வுலகின் மாந்தர்கள் இவ்வுலகை பாதுகாப்பார்களாக. பல்வேறு அழிவுகளால், சமச்சீரற்ற வளங்களின் ஆக்கிரமிப்புக்களால், சுயநலம் கொண்ட பேராசையால், காயப்பட்ட இவ்வுலகிற்கு புது வழி பிறப்பதாக. இவ்வியற்கையை கனிவுடன் பராமரிக்கும் கரங்கள் பெருகவும், எதிர்கால உலகின் மக்களுக்கு அதை தாராள உள்ளத்துடன் பகிரும் ஒழுக்கத்தைக் கற்றிடவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
கலைமான் நீரோடைகளுக்காக ஏங்குவது போல, கடவுளே! என் ஆன் மா உமக்காக ஏங்குகின்றது. வல்லவரான வாழும் கடவுள் மீது என் ஆன் மா தாகம் கொண்டுள்ளது.
அல்லது
யோவா 8:12 உலகின் ஒளி நானே: என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உமது வார்த்தையாலும் விண்ணக விருந்தாலும் உம் நம்பிக்கையாளருக்கு நீர் உணவு அளித்து வாழ்விக்கின்றீர்; இவ்வாறு உம் அன்புத் திருமகன் அளிக்கும் மாபெரும் கொடைகளால் நாங்கள் வளம் பெற்று அவரது வாழ்வில் என்றும் பங்கேற்கும் தகுதி பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment