பொதுக்காலம் இருபத்தி இரண்டாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் பிரியமான என் உறவுகளே! இயேசுவின் பொன்மொழி கேட்டு, அவரின் உணர்வுகளில் உடனிருந்து, எம் ஐம்புலன்களால் அவரை அநுதினம் அனுபவித்திடவும், நாம் வாழும் இவ்வுலகத்தை, இயேசுவின் கண்களினூடாக காணவும், அவரை இவ்வுலகிற்கு எடுத்தியம்பவும் இன்று நாம் கூடிவந்துள்ளோம். பொதுக்காலம் இருபத்தி இரண்டாம் ஞாயிறு வாரம் இன்று எங்களுக்கு புதிய அர்த்தங்கள் தரும் வாழ்வையும், செல்லும் பாதைக்கான தெளிவையும் எமக்கு தர இருக்கின்றது.
இன்றைய இறைவார்த்தைகள் எமது சிந்தனைக்கு அப்பால், நாளாந்த வாழ்வுக்கு அப்பால், எமக்கு முன்னால் கிடக்கும் பல்வேறு தடைகளுக்கு அப்பால் சிந்திக்க அழைக்கின்றது. ஒரு மனிதனாக, முழுமையான கிறிஸ்தவனாக, புனிதனாக நாம் வாழும் வாழ்வை எமக்கு சொல்லித் தரும் இன்றைய இறைவார்த்தைகள் எமக்குள் ஆழமாக ஊடுருவவேண்டும். நாம் காணும் யுத்தங்கள், அழிவுகள், சுயநல வாழ்வு, அரசியல் மந்தநிலை, பொருளாதார பின்னடைவுகள் அனைத்துமே இவ் வெளிவேடக்காரர்களின் வெளிச்சமே. இந்நிழலில் நாம் வாழ்ந்து எம்மையும் காத்துக்கொள்ளவேண்டுமா என்பது இன்றைய கேள்வியே. ஆசைகள் மேலோங்கி, உரிமைகளை விலங்கிடும் அதிகாரம் பெருகி, பணவெறியில் வாழும் எம் சமுகம் இவ்வெளிவேடக்கார்களே. நாம் மாறவேண்டி எமக்காக சிலுவையில் தொங்கும் இயேசுவின் தியாகம் மிகப் பெரியதே. இதை அதிகமாக உணர்ந்துகொள்வோம். இப்பலியில் நாம் உட்கொள்ளும் அவரின் உடலும் இரத்தமும் எம் வாழ்வை மாற்றவேண்டி மன்றாடுவோம். எம்மையும் இணைத்து எமக்காகவும், இவ்வுலகத்திற்காகவும் தொடர்ந்து மன்றாடுவோம். எம்மை அழைத்த இறைவன் எம்மை தொடர்ந்தும் வழிநடத்துவாராக. இச் சிந்தனைகளோடு இப்பலியில் இணைந்திடுவோம்.
வருகைப் பல்லவி
ஆண்டவரே, என்மேல் இரக்கமாயிரும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டேன். ஏனெனில் ஆண்டவரே, நீர் இனியவர், பரிவுள்ளவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
திருக்குழும மன்றாட்டு
ஆற்றல் வாய்ந்த இறைவா, சிறந்தவை அனைத்தும் நிறைந்தவரே, உம்மீது நாங்கள் உள்ளார்ந்த அன்புகொள்ளச் செய்தருளும்; அதனால் எங்களது சமயப்பற்றை வளர்த்து நன்மைகளைப் பெருகச் செய்து நீர் எங்களில் கருத்துடன் உருவாக்கியதைப் பராமரித்துக் காத்தருள்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 17-18, 20,28-29
குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.
இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது. நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்து கொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 68: 3-4aஉ. 5-6ab. 9-10 (பல்லவி: 10a)
பல்லவி: ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்.
3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்;
கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்.
4aஉ கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்;
‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். -பல்லவி
5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர்,
தூயகத்தில் உறையும் கடவுள்!
6ab தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்;
சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். -பல்லவி
9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்;
வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.
10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன;
கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை, வாழும் கடவுளின் நகர்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 18-19, 22-24a
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள் சூழ்ந்த, மந்தாரமான, சுழல் காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக்கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவு பெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 11: 29ab
அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-14
அக்காலத்தில்
ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.”
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! கிறிஸ்துவின் விழுமியங்களை இவ்வுலகமெங்கும் கொண்டுசெல்லும் எம் பணியாளர்கள் தமது குருத்துவ அர்ப்பணத்தின் வழியாக அவருக்கு முழுமையாக சான்றுபகர வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எமது மறைமாவட்டத்திற்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! எமது மறைமாவட்ட ஆயர், அவருடன் உடன் பணியாற்றும் அனைத்து குருக்கள் துறவிகள் அனைவரும் நற்செய்தியின் ஒளியில் இவ்வுலகை தாங்கிக்கொள்ளவும், திரு அவையின் உயர்வுக்காக தம்மை அர்ப்பணிக்கவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! ஒன்றிப்பை உயர்ந்த பண்பாக எமக்கு தந்தருளினீரே. எமது குடும்பத்தில் உள்ள அனைவரும் இவ்வொன்றிப்பை தமது இதயத்தில் எற்று, அனைவரையும் அன்பு செய்து வாழவும், குடும்ப செபத்தில் ஒருவரை ஒருவர் தாங்கிவாழும் வரத்தை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. திரு அவையில் துன்புறும் உறவுகளுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! பல்வேறு காரணங்களால் தமது உடலிலும் உள்ளத்திலும் துன்பங்களை தாங்கி சாட்சிய வாழ்வு வாழும் அனைவரையும் நீர் அரவணைத்து, அவர்களின் துன்பப் பாதையில் நீர் உடனிருந்து செயற்பட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. எமக்கு முன் இறந்தவர்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! இவ்வுலகில் வாழ்ந்து, எம் வாழ்வுக்கான வழியைக் காட்டிசென்ற பலநூறு உறவுகளை நன்றியோடு நினைவிற்கொண்டு, அவர்களுக்கு உமது விண்ணக பரிசை அளித்திடவும், புனிதர்களின் வரிசையில் சேர்த்திடவும் அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
6. எமது அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுவோம்: அன்பின் இறைவா! பிறருக்காக பணிபுரிந்து அவர்களுக்காகவே வாழும் நற்பணியை அவர்களுக்கு கொடுத்திருக்கின்றீர். தமது வாழ்விலே இதை மிக அதிகமாகவே உணரும் வலிமையை அவர்களுக்கு கொடுக்கவும், தூய்மையான தலைமைத்துவத்தை எமக்கு தந்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, என்றும் புனிதமான இக்காணிக்கை மீட்பு அளிக்கும் ஆசியை எங்கள் மீது பொழிவதாக; இவ்வாறு அருளடையாள முறையில் நிகழும் இப்பலி உமது ஆற்றலால் நிறைவு பெறுவதாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
திபா 30:20 உமது அருள் எத்துணை ஆண்டவரே, உமக்கு அஞ்சுவோருக்கு நீர் சேர்த்து வைத்திருக்கும் மிகுதி.
அல்லது மத் 5:9-10
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இந்த அன்பின் உணவு எங்கள் இதயங்களை உறுதிப்படுத்தி எங்கள் சகோதரர் சகோதரிகளில் உமக்குப் பணிபுரிய எங்களைத் தூண்டியெழுப்புவதாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
.jpeg)
Comments
Post a Comment