புனிதர்கள் பேதுரு, பவுல்: திருத்தூதர்கள் - பெருவிழா
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் இணைந்திருக்கும் நல் உறவுகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றேன்.
தேனியும் மலரும் இணையும்போது தேன் உருவாவதுபோல், காலையும் மாலையும் இணையும்போது நாளின் முழுமை அடைவதுபோல், மூங்கிலும் காற்றும் இணையும்போது இசை உருவாவதுபோல், மனிதனும் இறைவனும் இணையும்போது இவ் உலகின் புதுமை உருவாகின்றது, மறைபொருள் தெளிவாகின்றது, இறையருள் பெருகுகின்றது. இவ் அதிசயம் தேடி இன்று இப்பலியில் நாம் இணைந்திருக்கின்றோம். பொதுக்காலம் 13ம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கும் நாம் இன்று புனிதர்களான பேதுறு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.
திரு அவையின் இரு பெரும் தூண்களான இவர்கள் தங்களது அழைத்தலுக்கு பிரமாணிக்கமாய் இருந்து, வாழ்வின் தெரிவுகளால் இறைவனை அலங்கரித்தவர்கள். திரு அவையின் நம்பிக்கை வாழ்வுக்கு தமது அறிவாலும், ஞானத்தாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் இயேசுவுக்கு சாட்சிய வாழ்வு வாழ்ந்தவர்கள். புனித பேதுறு, திரு அவையின் தலைவராக இருந்து அதை வழிநடத்தினார். புனித பவுல், மறை தூதுப்பயணங்கள் செய்து இறைமகன் இயேசுவை புற இனத்தவர்களுக்கு எடுத்துச் சென்றார்.
இவர்களால் எமது நம்பிக்கை ஆழப்படுத்தப்பட வேண்டும்; வெறுமனே கண்களால் காணும், காதுகளால் கேட்கும் உலகத்தின் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் சான்றுபகரும் நம்பிக்கையற்ற பக்தர்களாக அல்லாமல், உள்ளத்து உணர்வுகளுக்கு செவிசாய்த்து, உயரிய விழுமியங்களுக்கு இடங்கொடுத்து வாழும் இயேசுவின் சீடர்களாக மாறவேண்டும். வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் மக்களாக அல்லாமல், இயேசுவின் பார்வையில் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம்கொடுக்கும் அன்பர்களாக மாறவேண்டும். இயேசுவுக்காக வாழ்ந்த இப்பெரும் தூண்களான புனித பேதுறு மற்றும் புனித பவுலைப் போல் நாமும் கிறிஸ்துவுக்காய் வாழும் வரம்கேட்டு தொடரும் இப்பலியில் மன்றாடுவோமாக.
வருகைப் பல்லவி
ஊனுடலில் வாழ்ந்தபோது தமது இரத்தம் சிந்தித் திரு அவையை நிறுவியவர்கள் இவர்களே. ஆண்டவரின் கிண்ணத்தில் பருகி, இறைவனின் நண்பர்களானவர்களும் இவர்களே,
உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரின் வணக்கமும் புனிதமும் நிறைந்த பெருவிழாவில் எங்களுக்குப் பேரின்பம் தந்துள்ளீரே; அவர்களிடமிருந்தே உமது திரு அவை சமய வாழ்வைத் தொடக்கத்தில் பெற்றுக்கொண்டது போல அவர்களின் படிப்பினைகளை எல்லாவற்றிலும் கடைப்பிடிக்க அருள்புரிவீராக. உம்மோடு.
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
முதல் இறைவாக்கு
என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10
ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் ‘அழகு வாயில்’ என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.
பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.
பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்.
உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்கள் அனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)
பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி
3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது,
இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கி வைத்துத் தமது அருளால் என்னைக் கடவுள் அழைத்தார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11-20
சகோதரர் சகோதரிகளே,
உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடம் இருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது. நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரை விட யூத நெறியில் சிறந்து விளங்கினேன்.
ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கி வைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவும் இல்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை. நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 21: 17d
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர். என் ஆடுகளைப் பேணி வளர்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களோடு உணவருந்தியபின் சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார்.
இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார்.
இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார்.
இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு: “நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” எனும் இயேசுவின் அழகிய வார்த்தைகள் எமது வலுவின்மையில், இயலாமையில், நம்பிக்கையற்ற நிலையில், வல்லமையாக, புதிய சக்தியாக எமக்கு வலுவளிக்கின்றது. இறைவன் மேல் கொண்ட அன்பை அதிகரிக்கின்றது. அவரது வார்த்தைக்கு செவிமெடுத்தவர்களாக எமது தேவைகளை ஒப்பூக்கொடுத்து மன்றாடுவோம்.
1. அன்பின் இறைவா! திரு அவை வழியாக எமக்கு ஆன்மிக ஊட்டத்தையும், வழிகாட்டலையும், நம்பிக்கையில் நிறைவையும் தருகின்றீர். இதற்காக உழைக்கும் அனைத்து கரங்களையும் ஆசீர்வதியும், எமக்காக செபிக்கும் நல் உள்ளங்களை ஆசீர்வதியும், இதனால், திரு அவை பணியாளர்கள் அனைவரும் உம்மை அன்பு செய்வதன் வழியாக எம்மை நேரிய பாதையில் நடத்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
2. அன்பின் இறைவா! எமக்கு முன்மாதிரிகையாக நீர் தந்த இப்பெரும் புனிதர்களுக்காக நன்றி கூறுகின்றோம். இவர்களிடம் காணப்பட்ட ஞானத்தைப்போலவும், மெய்யான அன்பின் வழி உம்மை உலகிற்கு அறிவிக்கும் ஆற்றலைப் போலவும் நாமும் என்றும் எப்பொழுதும் உமக்காகவே வாழ்ந்து உமக்காகவே மரிக்கும் வரத்தை தந்தருள அருள்புரிய வேண்டுமென்று, ...
3. அன்பின் இறைவா! இவ் அழகிய நாளுக்காக நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். புனித பேதுறு மற்றும் புனித பவுலைப் போல் நாமும் எமது வாழ்விலே நாம், உமது மகன் இயேசுவில் முழு நம்பிக்கை கொள்ளவும், எமது அழகிய குடும்பங்களில் அவரை வாழ்விக்கவும், நன்மைகள் அதிகம் புரிந்து, சொந்தங்கள் அதிகம் சேர்த்து, பஞ்சமும், வஞ்சகமும் வாழ்வில் தொலைத்து புதிய பாதை அமைத்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
4. அன்பின் இறைவா! பாதுகாபிற்காக, அமைதிக்காக, அன்பிற்காக ஏங்கும் எமது நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் நடைமுறைகள் வழியாக, எடுக்கும் புதிய முயற்சிகள் வழியாக புதிய ஆரம்பத்தை கண்டடைவார்களாக. எமது தலைவர்கள் எப்பொழுதும், மக்களை நேரிய பாதையில் வழி நடத்தவும், தியாகத்தாலும், கடின உழைப்பாலும் நல் எதிர்காலத்தை உருவாக்க அருள்புரிய வேண்டுமென்று, ...
5. அன்பின் இறைவா! உலகெங்கும் நடைபெறும் யுத்தங்கள் நிறுத்தப்பெற்று, இழப்பினால், கவலையினால், விரக்தியினால் மற்றும் பஞ்சத்தினால் அவதியுறும் மக்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்து காத்திட வரமருள வேண்டுமன்று, ...
குரு. அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளைகள் நாம் உமது சாயலாக பாவனையாக படைக்கப்பட்டு எப்பொழுதும் உம்மை எமது இதயத்திலும், உணர்விலும் சுமந்துகொண்டே இருக்கின்றோம். உம்மில்கொண்ட நம்பிக்கையால் எமது வாழ்வை உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். இவ் நம்பிக்கையால் உம்மிடம் நாம் கொண்டுவந்த அனைத்து தேவைகளுக்கும் செவிசாய்த்து உமது அருளை பொழிந்திடுவீராக. எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, நாங்கள் உமது திருப்பெயருக்கு ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருளோடு திருத்தூதர்களின் மன்றாட்டும் இணைந்து உம்மிடம் எழுவதாக; அவர்களின் வேண்டலால் நாங்கள் இறைப்பற்றுடன் இப்பலியை ஒப்புக்கொடுக்கச் செய்வீராக. எங்கள்.
தொடக்கவுரை: திரு அவையில் புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் இரு வகைப் பணிகள்.
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் உமது திருவுளப்படி,
திருத்தூதர்களான புனித பேதுருவும் புனித பவுலும் எங்களை மகிழ்விக்கின்றனர்:
பேதுரு நம்பிக்கையை அறிக்கையிடுவதில் முதன்மையானவராகத் திகழ்ந்து,
இஸ்ரயேலில் எஞ்சினோரைக் கொண்டு
தொடக்கத் திரு அவையை ஏற்படுத்தினார்;
பவுல் அந்நம்பிக்கையை உய்த்துணர்ந்து தெளிவாகப் போதித்து
அழைக்கப்பட்ட பிற இனத்தாருக்கு
ஆசிரியராகவும் போதகராகவும் விளங்கினார்.
இவ்வாறு வெவ்வேறு முறையில்
கிறிஸ்துவின் ஒரே குடும்பத்தை உருவாக்கிய அவர்கள்
ஒன்றாக வெற்றி வாகை சூடி, உலகம் எங்கும் வணக்கம் பெறுகின்றார்கள்.
ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி
முடிவின்றிச் சொல்வதாவது:
தூயவர்.
திருவிருந்துப் பல்லவி - காண். மத் 16:16,18
பேதுரு இயேசுவிடம், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் " என்று உரைத்தார். அதற்கு இயேசு, "நீ பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டு வேன்" என்று மறுமொழி
கூறினார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, இத்திரு உணவால் நாங்கள் ஊட்டம் பெற்றுள்ளோம்; அதனால் அப்பம் பிடு வதிலும் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நிலைத்து நின்று, உமது அன்பால் உறுதி பெற்று ஒரே இதயமும் ஒரே ஆன்மாவும் கொண்டவர்களாய் உமது திரு அவையில் வாழ்வோமாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment