Thursday, 19 June 2025

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா - 22/06/2025

 கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா 

திருப்பலி முன்னுரை   

 'அவர் பலியாகப் படைத்த இரத்தம், அவரது சொந்த இரத்தமே. இதனால் கிறிஸ்து, நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார்.'

இன்று நாம் அனைவரும் நற்கருணைக்கு விழா எடுக்கின்றோம். கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.  இயேசுவின் வல்லமையுள்ள பிரசன்னம், வெந்நிற அப்பத்தில் அவரது உடலாகவும், திராட்சை இரசத்தில் அவரது இரத்தமாகவும் காணப்படுவது உண்மையே. இந்த உலகத்திலே, நாம் வழிபடும் ஒரே கடவுளை, எமது ஐம்புலன்களால் அறியமுடியும் என்றால் அது கிறிஸ்து எமக்கு தந்த இந்த நற்கருணையிலேயே. கிறிஸ்துவின் உறுதிதரும், நம்பிக்கைதரும் வார்த்தைகளான,  'இது என் உடல், இது என் இரத்தம்; இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்பது சர்வ சாதாரண வார்த்தைகள் அல்ல. அதுவே எம்மை தெய்வீகத்தோடு இணைக்கும் வார்த்தைகள், உறவிலே உறுதிதரும் வார்த்தைகள், இறைவனை எமது இதயத்தில் தினமும் தாங்கும் வார்த்தைகள். திரு அவை வழியாக கிறிஸ்து தரும் இவ் அற்புதமான அனுபவத்திற்காக நன்றி கூறுவோம். எம்மாவுஸ் பயணத்தில், கிறிஸ்து அப்பத்தை உடைத்து கொடுத்தபோது, சீடர்களின் அகக் கண்களை இயேசு திறந்தார். ஒவ்வொரு முறையும் அப்பத்தை உடைத்துக் கொடுக்கும்போது கிறிஸ்துவின் பிரசன்னம் எப்பொழுதும் இருக்கும் எனும் உறுதிமொழியையும் விட்டுச் சென்றார்.

இதுவே எமது நம்பிக்கை. இதை மெய்பிக்கவே இன்று நாம் இந்த நற்கருணைக்கு பெருவிழா கொண்டாடுகின்றோம்.

இன்று உலகின் பல்வேறு மெய்ஞானத்தின், அறிவியலின், விஞ்ஞானத்தின், கலாசாரமயமாக்கல் மற்றும் பிரிவினைசபைகளின் வளர்ச்சிப் போக்கில் இவ்வெந்நிற அப்பத்தில் கிறிஸ்துவின் பிரசன்னம் மறுக்கப்பட்டு, மறக்கப்பட்டு, அறியாமையின் விதைகள் விதைக்கப்பட்டும் மக்களின் மனங்கள் வளர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. எமக்கிடையே காணப்படும் பல்வேறு வகையான பிரிவுகள், பிளவுகள், போலி வாழ்க்கை, எரிச்சல், பொறாமை, அடிமைத்தனம் என அனைத்துமே இன்று உருவாக்கியிருக்கும் விபச்சார கலாசாரமும், கிறிஸ்துவின் இவ்வுண்மை பிரசன்னத்திற்கு தடைகளே, தூய்மை வாழ்வுக்கு எதிரானவையே. 

இன்று நாம் பயணிக்கும் இவ் ஆபத்தான உலகத்திலே, இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் தாங்கும் இதயங்களை உருவாக்குவோம். அன்பும், தியாகமும் இதன் இரு துருவங்களாக ஏற்று வாழ்வோம். நம்மைச் சுற்றியிருக்கும் அவநம்பிக்கை தரும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து, கிறிஸ்துவின் நற்கருணைக்கு சான்றுபகரும் புதிய நற்கருணைப் பேளையாக மாறுவோம், இதற்கான இறைவரம் வேண்டி மன்றாடுவோம்.


வருகைப் பல்லவி - காண். திபா 80:17 

கோதுமையின் கொழுமையால் அவர் அவர்களுக்கு உணவளித்தார்; மலைத் தேனால் அவர்களுக்கு நிறைவளித்தார்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, இந்த வியப்புக்கு உரிய அருளடையாளத்திலே உம்முடைய பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச் சென்றீர்; உம் திரு உடல், திரு இரத்தம் ஆகியவற்றின் தூய மறைபொருளை வணங்கும் நாங்கள், உமது மீட்பின் பயனை இடைவிடாமல் துய்த்து உணர்ந்து மகிழ அருள்வீராக. தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.


முதலாம் இறைவாக்கு

தொடக்க நூலிலிருந்து வாசகம் 14: 18-20

அந்நாள்களில்

சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘ உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!” என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)

பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.


1 ஆண்டவர் என் தலைவரிடம், ‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை

நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். -பல்லவி


2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்;

உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! -பல்லவி


3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில்

தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்;

வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். -பல்லவி


4 ‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’

என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்;

அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

நீங்கள் உண்டு பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

அனைவரும் வயிறார உண்டனர்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 11b-17

அக்காலத்தில்

இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்” என்றார்கள்.

ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, “இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்” என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


இறைமக்கள் மன்றாட்டு

குரு. கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், கிறிஸ்துவை உடலோடும், ஆன்மாவோடும் உண்டு பருக கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்காகவும் நன்றி கூறுவோம். எமது ஆன்மாவை அன்புசெய்யும் கிறிஸ்து தன்னை தமது மெய்யான உணவாகத் தருகின்றார். அவரிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.    

1. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! உமது திரு அவையை ஆசீர்வதியும். இத் திரு அவையின் வழியாக பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், இவ்வுலகை புனிதப்படுத்தும் தமது பணியில், உமது முழுமையான அன்பையும், தியாகத்தையும், பரிசுத்தத்தையும் தமது வாழ்வின் ஒளிரும் விளக்காக்கிட அருள்புரிய வேண்டுமென்று, ...

2. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! ஆயுதக் கலாசாரத்தால் வெற்றி நடைபோடும் பல நாடுகளில், அன்பை விதைக்கும் உணர்வுகளைக் கற்றுக்கொடும். பட்டினியால், பஞ்சத்தால் இறந்துகொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக, உதவும் கரங்களைக் கற்றுக்கொடும். மனிதனை மனிதன் மதியாது, மான்பிழக்க வழிதேடும் பொய்க் கலாசாரத்தில், பண்பை, விழுமியங்களை விதைக்கக் கற்றுக்கொடும். இதனால் அவர்கள் என்றும் உம்மை பிரதிபலிக்க அருள்புரியவேண்டுமென்று, ...

3. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! ஜிபிலி ஆண்டில் பயணிக்கும் எம் அனைவரையும் ஒப்புக்கொடுக்கின்றோம். பாவத்தால், அறியாமையால், தீண்டாமையால், அதீதகோபங்களால் மூழ்கிக்கிடக்கும் எமது பூமியில், நாம் காத்திருக்கும் அமைதியும், சந்தோஷமும், நிறை ஆசீரும் இவ் ஜுபிலி ஆண்டு எமக்கு பெற்றுத்தர வேண்டுமென்று, ...

4. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! எமது நாட்டிலே, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், எமது கலை, கலாசார, பண்புகளை பெருமையோடும் வலிமையோடும், உரிமையோடும் தாங்கும் கருவிகளாக உருவாகுவார்களாக. தமது ஞானத்தால் உணமையை எடுத்துரைப்பார்களாக, தமது அறிவால் புதுமை தேடுவார்களாக, தமது நம்பிக்கையால் கிறிஸ்துவை என்றும் தாங்கவேண்டுமென்று, ...

5. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! நாம் உம்மை அதிகம் அன்பு செய்யும் பிள்ளைகளாக மாறுவோமாக. உமது உடலும் இரத்தமும் தரும் ஆன்ம சக்தி எம்மை இறுதிவரை உமது சீடராக உருவாக்குவதாக. நம் வாழ்வில் சம்பாதிக்கும் அனைத்து நன்மைகளும் உம்மை நிலைநிருத்தச் செய்யவேண்டுமென்று, ...

குரு. நற்கருணையின் ஆண்டவரே! இன்று நாம் பெருமகிழ்வோடு, நற்கருணையில் உமது உண்மைப் பிரசன்னத்தை போற்றிப் புகழ்கின்றோம். உம்மை உடலாகவும், இரத்தமாகவும் உண்னும் அரிய வாய்ப்பை எமக்கு தருவதையிட்டு பெருமைகொள்கின்றோம். நாம் உம்மை திருப்பலியில் பெற்று, உண்டு மகிழ எமக்குள் வாஞ்சையையும் ஆன்ம தாகத்தையும் தாரும். இறைவா, உண்மை உள்ளத்தோடு நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் ஏற்று நிறைவுசெய்வீராக. உமது அன்பு பொங்கிவரும் ஆறாய் எம்மில் பாய்வதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமது மீட்பின் மறைபொருளைக் குறித்துக்காட்டுகின்றன் அதனால் உமது திரு அவைக்கு ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளைக் கனிவுடன் தந்தருள்வீராக. 


திருவிருந்துப் பல்லவி - யோவா 6:57 

எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார். நானும் அவரோடு இணைந்திருப்பேன், என் கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உயர்மதிப்புள்ள உம் திரு உடலையும் திரு இரத்தத்தையும் நாங்கள் இவ்வுலகில் உட்கொள்வது உமது இறைத்தன்மையைச் சுவைத்து இன்புறுவதன் முன்னடையாள மாய்த் திகழ்கின்றது; அதனால் நாங்கள் அப்பேரின்பத்தில் என்றென்றும் மகிழ்ந்திருக்க அருள் புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...