பெந்தக்கோஸ்து ஞாயிறு
திருப்பலி முன்னுரை
தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இறை அன்பில் நிலைத்திருந்து, நாளும் பொழுதும் அவர் புகழ்பாடவும், அவர் அருள்தனை பெற்று, தூய உள்ளத்தினராய் அவரோடு வாழவும், இறைவரம் வேண்டி, வந்திருக்கும் என் அன்பு உறவுகளே! உங்கள் அனைவரையும் இக்கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்று பெந்தக்கோஸ்து ஞாயிறு தினமாகும். தூய ஆவியின் வருகைதான் எமது திரு அவையின் பிறந்ததினமாகும். இன்றைய நாளை நாம் பெருமகிழ்வுடன் வரவேற்போம்.
திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய தூய ஆவி, இன்று உலகமெல்லாம் வியாபித்து, திரு அவைக்கும் இவ்வுலக மாந்தருக்கும் தேவையான அருளையும், கொடைகளையும் கொடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். திரு அருட்கொடைகளை எமக்கு அளித்து, அதன் வழி, உலகை புனிதப்படுத்தியும், அபிஷேகித்தும், இன்றும் என்றும் எமக்கு வல்லமை அளித்துக்கொண்டிருக்கின்றார். நாம் பலராயினும், பல மொழியினராயினும், நாம் நம்பும் தூய ஆவி ஒன்றே, அவர் அருளும் வல்லமையும், கொடைகளும் ஒன்றே. தூய ஆவியைப் பெற்றே, திருத்தூரத்கள் துணிந்து சென்றனர், தூய ஆவியினாலே பல தீமைகளை வென்றனர், பல தீயவர்களை துணிந்து எதிர்த்தனர்.
இன்று தூய ஆவியைப் பெற்ற இறைமக்களாக இங்கே ஒன்று கூடியிருக்கின்றோம். நாம் தூயோராய் வாழ்ந்து, இறை நம்பிக்கையின் தூண்களாய் மிளிர்ந்து, திரு அவையின் புனிதம் காத்து வாழ்ந்திட மன்றாடுவோம். அக்கினியின் வல்லமை எல்லார் மேலும் பொழியப்பட்டு புது உலகம் படைத்திட மன்றாடுவோம், நாம் செல்லும் பாதைகள் தெளிவற்றதாயினும், பொருளற்றதாயினும், பண்பற்றதாயினும், உறவற்றதாயினும், இயேசு ஒருவருக்கே சான்றுபகரும் பணியில், உயிருள்ள ஆற்றல் தரும் தூய ஆவி எமக்கு துணை நிற்க மன்றாடுவோம். உலகெங்கும் போரிடும் படைகளுக்கு ஆயுதங்கள் பலமாயினும், எமது நம்பிக்கையின் வாழ்வுப் போராட்டத்திற்கு துணை நிற்கும் தூய ஆவி எம்மை தாங்கி, வழி நடத்த இப்பலி வழியாக வரங்கேட்டு மன்றாடுவோம்.
விருப்பமானால் இதை முன்னுரையோடு இணைத்துக்கொள்ளலாம் ...
2025ம் ஆண்டு ஜுபிலி ஆண்டாகும். இவ்வாண்டு எமது கிறிஸ்தவ வாழ்வுக்கும், கத்தோலிக்க திரு அவைக்கும், ஏன் இவ்வுலகிற்குமே கொடுக்கப்படும் ஒரு சவாலாகும். மாறுபட்ட விசுவாச விழுமியக் கொள்கைகள் மத்தியில், போதை கலாசாரம் மற்றும் பொய்மையான வாழ்க்கை மத்தியிலும், இயற்கைக்கு எதிரான மனித சிந்தனைகள் மத்தியிலும், அரசியல் சுயலாபங்களுக்காக நடத்தப்படும் போர்கள் மத்தியிலும், வேலையற்ற, அமைதி, நீதி தேடி அலையும் நிலமை மத்தியிலும், நாடு விட்டு நாடு செல்லும் புலம்பெயர் அகதிகள் மத்தியிலும், தொலைத்தொடர்பு சாதனங்களின் வன்முறையான மனிதப்பண்பு படுகொலை மத்தியிலும், இந்த ஜுபிலி ஆண்டு ஓர் அழகிய பாடத்தை இவ்வுலகிற்கு கற்றுத்தர இருக்கின்றது. இவைகள் மாற்றங்காண திருத்தந்தை எடுக்கும் இவ்வழகிய முயற்சியை வரவேற்று அதற்காக இப்பலியின் வழியாக மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - சாஞா 1:7
ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது, அல்லேலூயா.
அல்லது
உரோ 5:5; காண். 8:11
அவருடைய ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது, அல்லேலூயா.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, இன்றைய பெருவிழாவின் மறைபொருளால் எல்லா மக்களிலும் நாடுகளிலும் உள்ள உமது அனைத்துலகத் திரு அவையைப் புனிதப்படுத்துகின்றீர்; உலகின் எத்திக்கிலும் தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்து, நற்செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்ட காலத்தில் நீர் செய்தது போல இக்காலத்திலும் தூய ஆவியாரின் அருளால் நம்பிக்கையாளரின் இதயங்களை நிரப்புவீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.
அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 104: 1ab,24ac. 29bc-30. 31,34 (பல்லவி: 30)
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
அல்லது: அல்லேலூயா.
1ab என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!
24ac ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை!
பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. -பல்லவி
29bc நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி
31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக!
அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3b-7. 12-13
சகோதரர் சகோதரிகளே,
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.
உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
தொடர் பாடல்
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு. இறை இயேசுவில் என் அன்பு பிள்ளைகளே! இன்று நாம் பெரு மகிழ்வோடு இத் தூய ஆவியின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியின் அருளினால் நாம் அவர் பிள்ளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, சீடர்களாக அழைக்கப்பட்டுள்ளோம். அவர் தூண்டுதலால், நாம் அவரின் உரிமைப் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுள்ளோம். எனவே, நாம் அவரிடம் எமது விண்ணப்பங்கள் வழியாக இறைவரம் கேட்டு மன்றாடுவோம்.
1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். தூய ஆவியால் பிறந்திருக்கும் எமது திரு அவை இன்று மகிழ்கின்றாள். இது கடந்துவந்த பல பேதகங்கள் மத்தியிலும், போர்கள் மத்தியிலும், பல அரசியல் கெடுபிடிகள் மத்தியிலும், அழிவுகள் மத்தியிலும் இன்றும் அதன் புனிதம், மகிமை குன்றா, தொடர்ந்தும் வழிநடத்தி வரும் இறை ஆவிக்கு நன்றி கூறுகின்றோம். தொடர்ந்தும், இவ் இறைபணி இத்திரு அவையில் வளர்ச்சிகாணவும், அதற்காக பலர் தம்மை அர்ப்பணிக்கவும் வரம்வேண்டி, ...
2. எமது கிறிஸ்தவ வாழ்வுக்காக மன்றாடுவோம். தூய ஆவியால் புதுப்படைப்பாக பிறந்துள்ள நாம், அவர் ஞானம் நிறைந்த வார்த்தைகளால் தூண்டப்பெற்று, அமைதியும் மகிழ்ச்சியும் தரும் அவர் உடனிருப்பால் ஆறுதல்பெற்று, வாழ்வின் அதிசயங்கள் தரும் பாடங்களாக அவர் கொடைகள் மாற்றம் பெற்று, தெய்வபயம் என்றும் எப்பொழுது எமக்குள் ஊற்றெடுத்து இறைவனையே பற்றிக்கொண்டு அவரை விட்டு விலகிடா மனம் தர வேண்டுமென்று, ...
3. எமது பங்கிற்காக மன்றாடுவோம். படைப்பிலே மூவொரு கடவுளாய் ஒன்றித்து செயற்பட்டது போல, உலகம் முடிவுவரை எந்நாளும் உங்களுடன் இருப்பேன் என்று உறுதிமொழி அளித்து தூய ஆவியை பொழிந்தது போல, எமது பங்கிலும் உமது வல்லமை பெருகட்டும். பிளவுகள் அகன்று, தவறுகள் களைந்து, வேறுபாடுகளும், பாகுபாடுகளும் இல்லாதொழிந்து, பகைமையை தகர்த்தெறிந்து புதிய வழி காணும் மக்களாக எமை மாற்றும். நாம் திருமுழுக்கிலே கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாக இருந்து தொடர்ந்தும் செயற்பட அருள்புரியவேண்டுமென்று, ...
4. ஜுபிலி ஆண்டுக்காக மன்றாடுவோம். திருத்தந்தையோடு இணைந்து, ஜுபிபி ஆண்டை முன்னோக்கி செல்லும் எமது திரு அவை, குறிப்பாக எமது மறைமாவட்டம் முன்னெடுக்கும் பல்வேறு முயற்சிகளை ஆசீர்வதியும். ஏழைகள் இனங்காணப்படவும், அடிமைகள் தகர்த்தேறியப்படவும், அமைதியற்ற சூழல் மாற்றம் பெறவும், வன்முறைகள் ஒழியவும், சமத்துவம் எங்கும் எப்பொழுதும் வியாபித்திருக்கவும், தூய ஆவியின் துணை எம் அனைவருக்கும் கிடைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
குரு: எல்லாம் வல்ல இறைவா, நீர் வாக்களித்தபடியே உமது ஆவியை எமக்கு அளித்து எம்மை உமது சுவிகார பிள்ளைகளாக, அரச, குருத்துவ திருக்கூட்டமாக மாற்றினீரே. உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். நாம் எப்பொழுதும் தூய ஆவியால் வரம்பெற்று, அவர் தரும் வார்த்தைக்கு அடிபணிந்து செயற்படுவோமாக. எமது உள்ளத்தில் இருப்பவை, எமக்கு முன் வைக்கப்படும் தேவைகள் அனைத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீரே அவற்றை ஏற்று, உமது உல்லமையால் எம்மை நிறைத்தருள்வீராக. எங்கள்.
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம் திருமகனின் வாக்குறுதிக்கு ஏற்ப தூய ஆவியார் இப்பலியின் மறையுண்மைகளை எங்களுக்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவரே எங்களை நிறையுண்மையை நோக்கி வழிநடத்துவாராக. எங்கள்.
தொடக்கவுரை: பெந்தக்கோஸ்து பெருவிழாவின் மறைபொருள்.
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் நீர் பாஸ்கா மறைபொருளை நிறைவுறச் செய்கின்றீர்.
உம் ஒரே திருமகனோடு உறவு கொள்வதால்
உரிமைப்பேறான மக்களாக நீர் ஏற்றுக்கொண்டவர்களுக்கு
இன்று தூய ஆவியாரை வழங்கினீர்.
திரு அவை பிறந்த அந்த நாளிலேயே
அதே ஆவியார் எல்லா மக்களுக்கும் இறை அறிவை ஊட்டினார்;
பல்வேறு மொழி பேசும் மக்களை ஒன்றுசேர்த்து
ஒரே நம்பிக்கையை அவரே அறிக்கையிடச் செய்தார்.
ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க
அனைத்துலக மனிதர் அனைவரும் அக்களிக்கின்றனர்;
அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும்
உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.
திருவிருந்துப் பல்லவி - திப 2:4,11
காள்ளப்பட்டனர்; கடவுளின் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர், மாபெரும் செயல்களைப் பேசினர், அல்லேலூயா.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
விண்ணகக் கொடைகளை உமது திரு அவைக்கு தாராளமாய் வழங்கும் இறைவா, நீர் எமக்கு அளித்துள்ள அருளை எம்மில் பாதுகாத்தருளும்; இவ்வாறு தூய ஆவியார் பொழிந்துள்ள கொடை என்றும் வலிமை பெறுவதாக; இந்த ஆன்மீக உணவால் நிலையான மீட்பு எங்களில் வளர்வதாக. எங்கள்.
அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment