பொதுக் கால 14-ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் என் அன்பார்ந்த இறைமக்களே. இயேசுவின் அன்புக் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றேன். பொதுக்காலம் பதின் நான்காம் ஞாயிறு வாரத்தில் நுழையும் எமக்கு இயேசுவின் அழகிய வார்த்தைகள் வாழ்வின் ஆழத்தை தொடுவதோடு மட்டும் அல்லாமல், எமது வாழ்வுக்கான படிப்பினையாகவும் அமைகின்றது. "தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்" என்று எமக்கு அன்பு மொழி கூறும் இறைவன் எம்மை பாதுகாக்கின்றார், எம்மை வழிநடத்துகின்றார். நற்செய்தியில் இயேசு சீடர்களை பணி வாழ்வுக்கு அனுப்புகின்றார். அழைப்பின் பெறுமதியை உணர்த்தி அதன் வரைவிலக்கனத்தை தெளிவுபடுத்துகின்றார்.
இயேசுவின் அழைப்பும் அதற்கான மனிதனின் பதில்களும் இலகுவானதல்ல. அப்பதில்களில் எமது பிரமாணிக்கம் இன்று ஒரு சவாலே. “என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.” எனும் பவுலின் வார்த்தைகள் எமது அழைப்பின் அன்பின் மேன்மையை உணர்த்துகின்றன, எமது அழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான உரைக்கல்லாகவும் அமைகின்றன.
நாம் பயணிக்கும் இவ்வுலகம் பாதைமாறி செல்கின்றது - பாதைகளை நாம் உருவாக்குவோம்.
எமது சிந்தனைகள் தெளிவற்றதாய் அமைகின்றன - சிந்தனைகளை நாம் ஒன்றிணைப்போம்.
எமது பகைமைகள் ஆழமாக செல்கின்றன - அன்பை நாம் விதைகளாக்குவோம்.
குற்றங்கள் பெருகி, குற்ற உணர்வுகள் அதிகரித்து பிரிவினைகள் பெருகின்றன - புதுமைகளை நாம் உருவாக்குவோம்.
சீடர்களாக, குருக்களாக, இறைவாக்கினர்களாக அழைக்கப்பட்ட நாம் இயேசுவை புதிதாக படைப்போம், அவரைத் தாங்கும் இதயத்தில் இவ்வுலகை புதுப்பிப்போம். இதற்கான வரங்களைக் கேட்டு இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
கடவுளே! உமது கோவிலின் நடுவில் நாங்கள் உமது இரக்கக்கைப் பெற்றுக்கொண்டோம்; கடவுளே! உமது பெயருக்கு ஏற்ப, உமது புகழும் உலகின் எல்லைவரை எட்டுவதாக. உமது வலக்கை நீதியால் நிறைந்துள்ளது.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, வீழ்ச்சியுற்ற உலகை உம் திருமகனின் தாழ்ச்சியினால் மீண்டும் நிலைநிறுத்தினீரே; அதனால் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து நீர் விடுவித்த உம் நம்பிக்கையாளருக்குப் புனிதப் பேரின்பத்தைத் தந்து அவர்கள் என்றும் நிலையான மகிழ்ச்சி அடைந்திடச் செய்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14c
எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.
அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.
ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்.
நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 (பல்லவி: 1)
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3a கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். -பல்லவி
4 ‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;
அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;
உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள்.
5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!
அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. -பல்லவி
6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;
ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.
7a அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! -பல்லவி
16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்!
கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி!
தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-18
சகோதரர் சகோதரிகளே,
நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது.
இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!
இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி கொலோ 3: 15a,16a
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி இல்லத்தாரிடம் தங்கும்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12, 17-20
அக்காலத்தில்
இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது:
“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர்.
அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
அல்லது குறுகிய வாசகம்
நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி இல்லத்தாரிடம் தங்கும்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9
அக்காலத்தில்
இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது:
“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு: இயேசுவின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள் இயேசுவை இவ்வுலகிற்கு சாட்சிகளாக எடுத்துரைப்பவர்களே. இச்சாட்சிய வாழ்வில் நாம் எடுத்துரைக்கும் எமது விண்ணப்பங்கள் வழியாக இவ்வுலகிற்காக, எமது அயலவர்களுக்காக எமது திரு அவைக்காக மன்றாடுவோம்.
1. வல்லமையின் ஆண்டவரே! உமது திரு அவையை வழிநடத்தும், ஆசீர்வதியும், பகைமைகளில் இருந்து பாதுகாரும், எதிர்ப்புக்கள் மத்தியில் வல்லமையைக் கொடும். திரு அவைக்கான எமது செபங்கள் உயரசெல்லவும், அதற்காக உழைக்கும் அனைத்து பணியாளர்களும் தமது தியாகத்தால், கடின உழைப்பினால், அர்ப்பணத்தினால் திரு அவைக்கு அணிசேர்க்க வேண்டுமென்று, ...
2. வல்லமையின் ஆண்டவரே! உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட அனைத்து பணியாளர்களும் உமது பாதையில் பயணிக்கவும், உமது வார்த்தையை சொல்லவும், உமது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவும், உமது அன்பை உலகெல்லாம் பகிரவும் உமது கருவிகளாய் இவர்களை பயன்படுத்த அருள்புரிய வேண்டுமென்று, ...
3. வல்லமையின் ஆண்டவரே! இன்றைய திருப்பலிக்கு பிரசன்னமாயிருக்கும் குடும்பங்கள் அனைத்தையும் ஆசீர்வதியும். இவர்களின் சாட்சிய வாழ்வினூடாக, சிறந்த திருக்குடும்ப பண்புகளை இவ்வுலகிற்கு கொண்டுசெல்லவும் இவர்களை வழிநடத்த வேண்டும்மென்று, ...
4. வல்லமையின் ஆண்டவரே! கலாசார நவின மயமாக்களுக்குள்ளே நலிவுற்ற சமூகமாக பயணிக்கும் எமது வாழ்வை வழிநடத்தும். நன்மைகள் தீமைகளை தீர்மானிக்கும் நல் அறிவைக்கொடும், பசித்தவர்க்காய் கரம் கொடுக்கும் தாராளமனதைக் கொடும், அதிக பணத்தால் ஆன்மாவை தொலைத்திடா நல் ஆன்மீகத்தைக் கொடும், இதனால் உம்மை என்றும் பற்றிக்கொண்டு வாழ வரமருள வேண்டுமென்று, ...
குரு. இறைவா இன்றைய நாளுக்காக நன்றி சொல்கின்றோம். இன்று எம்மோடு பேசியதற்காய் நன்றி சொல்கின்றோம். இவ்வுலகின் தீமைகளை எதிர்த்திடும் தூய கருவியாய் நீர் தேர்ந்த இறைவாக்கினர்கள், அப்போஸ்தலர்கள் வழியாக நாம் பெற்றுக்கொண்ட அனைத்து தூண்டுதல்களுக்காகவும் நன்றி சொல்கின்றோம். எம்மோடு பயணித்தருளும், நாளும் நாம் எடுக்கும் தீர்மானங்களை வழிநடத்தும். நாம் ஒரே குடும்ப உணர்வோடு உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து வேண்டுதல்களுக்கும் செவிசாய்த்து அவற்றை நிறைவுசெய்வீராக. எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் நேர்ந்தளிக்கும் இக்காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்துவதாக; விண்ணக வாழ்வுக்கு உரிய நற்செயல் புரிவதில் நாங்கள் நாளுக்குநாள் முன்னேறிச் செல்வோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி - திருப்பாடல்: 34:8-9
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் ; அவரில் நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர்.
அல்லது - மத் 12: 8
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, மாண்புக்கு உரிய கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மீட்பு அளிக்கும் கொடைகளை நாங்கள் என்றும் பெற்றுக்கொள்ளவும் உம்மை இடையறாது புகழ்ந்தேத்தவும் அருள்வீராக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி