Wednesday, 7 May 2025

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு வாரம் - 11/05/2025 - நல்லாயன் ஞாயிறு

 பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு வாரம் -  நல்லாயன் ஞாயிறு



திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! மலரும் இவ் இளங்காலை வேளையில் எமது உள்ளங்களை இறைவன்பால் திருப்பி, அவர் புகழ்பாடவும், அவர் அன்பை தினமும் சுவைக்கவும் நாம் இக்கல்வாரி பீடம் நோக்கி கூடிவந்துள்ளோம். இன்று பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறாகும், அத்தோடு உலக இறை அழைத்தலின் தினத்தையும் நாம் கொண்டாடுகின்றோம். 

இறைவன் எம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார், தனது பணியை நேர்மையோடும் ஆர்வத்தோடும் வாஞ்சையோடும் ஆற்ற இன்றும் பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றார். நல்ல ஆயன் நானே என்று இயேசு தன்னை ஓர் வழிகாட்டியாக, தலைவனாக, ஆசானாக, அரவணைப்பவராக, உடன் பயணிப்பாவராக எண்பிக்கின்றார். அனைவரையும் அறிந்து, தேர்ந்தெடுத்து அவர்களை அழைப்பவரே இறைவன். 

இன்று நாம் எமது திருநிலைப் பணியாளர்களுக்காக மன்றாட அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக எமது மறைமாநில ஆயர், குருக்கள், துறவிகள் அனைவருக்காகவும் இப்பலியிலே மன்றாடுவோம். இவர்களின் அர்ப்பண வாழ்வுக்காக மன்றாடுவோம். தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பான இயேசுவின் தாழ்ச்சியை, தியாகத்தை, வெறுமையை தமது வாழ்வின் பண்புகளாக்கிட மன்றாடுவோம். ஒப்படைக்கப்பட்ட மந்தைகளின் உரிமைக்காக போராடும், ஆன்மாவுக்காக செபிக்கும், உறவுகளை ஒன்றிணைக்கும் நல் இதயம்கொண்டிருக்க மன்றாடுவோம். இயேசுவே தம் வாழ்வின் தொடக்கமும் முடிவுமாகிட மன்றாடுவோம். அவரின் சாயல் இப்பணியாளர்களின் வாழ்நாள் முழுவதும் செழித்தோங்கிடவும் தொடர்ந்தும் இறை அழைத்தல் பெருகிடவும் தொடரும் இப்பலியில் இவர்களை இணைத்து மன்றாடுவோம். 

குறிப்பாக எமது திரு அவையின் புதிய தலைமைத்துவத்தை ஏற்கும் திருத்தந்தைக்கு நிறை ஞானத்தையும், இவ்வுலக அரசியல், பொருளாதார, சமுக நெருக்கடிகள் மத்தியில் மக்களின் இதயத்தை அறிந்து பணியாற்றக் கூடிய ஆற்றலையும் அளித்திட வேண்டுமென்றும் இப்பலியிலே மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி - காண். திபா 32:5-6 

ஆண்டவரது இரக்கத்தால் பூவுலகு நிறைந்துள்ளது ; ஆண்ட வாக்கினால் வானங்கள் நிலைபெற்றுள்ளன, அல்லேலூயா

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணவரின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்குகொள்ள எங்களை அழைத்துச் செல்கின்றீர்; அதனால் நல்ல ஆயராகிய கிறிஸ்து துணிவோடு முன்னரே சென்றுள்ள இடத்துக்குப் பணிவுள்ள மந்தையாகிய நாங்களும் வந்து சேர்வோமாக. உம்மோடு. 


முதல் இறைவார்த்தை

நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 14, 43-52

அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும் பர்னபாவையும் பின்தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர்.

அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித்தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள்.

இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு, இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)

பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

அல்லது: அல்லேலூயா.


1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!

மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி


3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!

அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி


5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;

என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;

தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி


இரண்டாம் இறைவார்த்தை

அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 9, 14b-17

யோவான் நான் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

மூப்பர்களுள் ஒருவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்று கொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டு வருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு. 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 10: 14-15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவார்த்தை

நான் என் ஆடுகளுக்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 27-30

அக்காலத்தில்

இயேசு கூறியது: “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு. அழைத்தலின் ஞாயிறு தினத்திலே, எம்மை தம் பெயர்சொல்லி அழைக்கும் இயேசுவிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 


1. அழைத்தலின் ஆண்டவரே, எமது திரு அவையிலே பணியாற்றும் அனைத்து திரு நிலைப் பணியாளர்களும் உமது அன்பையும், உம்மேல் வைத்திருக்கும் பிரமாணிக்கத்தையும் தொடர்ந்து பறைசாற்றிட அருளபுரிய வேண்டுமென்று...

2. அழைத்தலின் ஆண்டவரே, எமது மறைமாநில ஆயருக்காக மன்றாடுவோம். உமது பாதையில் தொடர்ந்து பயணிக்கும் இவர், தமது ஞானத்தால், அறிவால், வல்லமையால், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இம்மறை மாவட்டத்தையும், அதிலே பணியாற்றும் அனைத்து குருக்கள் துறவிகளையும், மேலும் இறைமக்களையும் வழிநடத்த தேவையான அருளை பொழிந்தருள வேண்டுமென்று...

3. அழைத்தலின் ஆண்டவரே, இவ்வுலகிலே நாம் சந்திக்கும் புதிய புதிய சவாலகள், போராட்டங்கள் மத்தியில், அதை முகங்கொடுத்து, முன்செல்லவும், திரு அவையை எவ்வித கலக்கமின்றி, கறையின்றி வழிநடத்த தேவையான பணியாளர்களை அளித்தருள வேண்டுமென்று...

4. அழைத்தலின் ஆண்டவரே, எமது மறைமாவட்டத்தில் பணியாற்றி உமதண்டை சேர்ந்திருக்கும் எமது பணியாளர்கள் அனைவரும், விண்ணக பேரின்பத்தை அடையவும், புனிதர்காளின் கூட்டத்தில் சேர்த்தருள வேண்டுமென்று...

5. அழைத்தலின் ஆண்டவரே, உமது அழைப்பை ஏற்று, வெவ்வேறு நாடுகளில் மறைபோதகர்களாக பணியாற்றும் அனைவருக்கும் உமது வல்லமையையும் ஆற்றலையும், பணியார்வத்தையும் அளித்திடவேண்டுமென்று...


குரு: அன்பின் இறைவா, உமது அழைப்பு மிக மகத்தானது, சிறந்தது, எம்மை தொடர்ந்தும் மக்களோடு இணைக்கின்றது. ஒவ்வொரு ஆன்மாவையும் உம்மிடம் கொண்டுசேர்க்கும் பாரிய பணியை எமக்கு அளித்திருக்கின்றீர். எமது திறமையோடும், பலவீனத்தோடும் நாம் அவற்றில் திறம்பட செயாலாற்ற தேவையான அருளை பொழிந்தருளும். மிக தாழ்மையோடும் பணிவோடும் உம்மிடம் ஒப்படைக்கும் எமது தேவைகளுக்கு நீர் செவிசாய்த்து அவற்றை பெற்றுத் தந்தருள்வீராக. எங்கள். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாக அமைவதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

தம் ஆடு களுக்காக உயிரைக் கொடுத்து, தமது மந்தைக்காக உளம் கனிந்து உயிரைக் கொடுத்த நல்லாயன் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

நல்ல ஆயரே, உமது மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; உம் திருமகனின் உயர் மதிப்புள்ள இரத்தத்தால் மீட்ட உம் ஆடுகளை நிலையான பசும்புல் வெளியில் கூட்டிச் சேர்க்க அருள்வீராக. எங்கள்...

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...